Tuesday, October 02, 2012

கொலு வைப்பது எப்படி? - ஒரு மீள் பதிவு

கடந்த வருடம் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதன் மீள் பதிவு இங்கே:-


முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்

Wednesday, June 20, 2012

இதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா? - 01

நம் நாட்டில் பலவேறு தலைவர்களும், பிரபலங்களும் இருந்தார்கள். அனவரிடம் உள்ள நிறைகளைப் போலவே,  மனிதர்களுக்கே உண்டான குறைகளும் இருந்தன. அவற்றைப் பெரிதுபடுத்தாமல் போவதில் தவறில்லை. ஆனால் ஹீரோ வொர்ஷிப் செய்தே பழக்கப்பட்ட நமக்கு இந்தப் பிரபலங்கள் செய்த எல்லா விஷயங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோமே! இது சரிதானா? இது குறித்து என்னுள் எப்போதுமே நெருடிக் கொண்டிருக்கும் சில கேள்விகள் இங்கே:-

 

ஒவ்வொரு முறையும் ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்களின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார் ஸாஸ்திரி. ஆனால், பிரதமர் நேருவோ அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். மீண்டும் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஸாஸ்திரி மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் அதனை ஏற்றுக் கொள்கின்றார்.

லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணம் என்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியா? சரியோ, தவறோ, இதற்காகப் போய் அவரை நாம் பாராட்டுவதும் சரிதானா?


காமராஜர் இந்திய அரசியலில் ஒரு முன்னுதாரணமாக, எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கல்வித் துறையிலும், தொழிற்துறையிலும் உண்மையாகவே மாபெரும் சாதனைகள் படைத்தவர். எத்தனையோ காரணங்களுக்காக அவரிப் புகழ்ந்து கொண்டே போகலாம்.

இருந்த போதும், அவரை King Maker என்று புகழுவது சரிதானா? ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும்? இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா? நேருவின் மகள் என்பதற்காக மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கு காமராஜர் பரிந்துரை செய்திருந்தால், அதற்காக காமராஜர் King Maker என்று புகழப்படத்தான் வேண்டுமா?


மது தண்டவதே சிறந்த பொருளாதார அறிஞர். மொரார்ஜி அமச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ரயில்வே அமைச்சராக இருந்த போது நல்ல பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். வாழ்வின் இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர்.

மது தண்டவதேயைப் பற்றி ஊடகங்களில் எழுதும் போதெல்லாம், அவர் கலர் டி.வி.கூட வைத்துக் கொள்ளாதவர் என்று பெருமையாக எழுதுவார்கள். எளிமையாக இருப்பது நல்லதுதான். அதற்காக கலர் டி.வி தொழில் நுட்பம் வந்த பின்பு கூட 'கருப்பு-வெள்ளை' டி.வி.தான் பார்ப்ப்பேன் என்று சொன்னால் அதில் என்ன பெருமை? மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா? இந்த ஒரு விஷயத்திற்காக மது தண்டவதே அவர்களைப் போற்றிப் புகழ்வது சரிதானா?

 

ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கள்ளுக் கடை மறியல் போராட்டம் எற்பட்ட போது அவருக்குச் சொந்தமான தென்னந் தோப்பிலிருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார் என்று பெருமையாகச் சொல்வார்கள். கள் வேண்டாமென்றால் தென்னை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதனை நிறுத்தினால் போதுமே! எதற்காக காய்த்துக் குலுங்கும் மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக ஈ.வெ.ரா அவர்களைப் புகவது சரிதானா?

மேலும் வரும்...

- சிமுலேஷன்

Wednesday, June 06, 2012

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - நூல் விமர்சனம்க.நா.சு. அவர்களின் மாப்பிளையான பாரதி மணி, பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தகப்பனாரான சின்னசாமி ஐயராக நடித்தவர். அவரை ஞானியின் "கேணி" சந்திப்பில் ஒரு முறை சந்தித்தேன். பின்னர் பல பதிவுகளில் அவர் சுவாரசியமான அனுபவத் தகவல்களைப் பின்னூட்டமாக இடுவதையும் பார்த்துள்ளேன். அவர் தனது அனுபவங்களையெல்லாம் தொகுத்து "பல நேரங்களில் பல மனிதர்கள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றார் என்று தெரிந்த போதே அதனை உடனே படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தற்போதுதான் கிடைத்தது.

S.K.S மணி எனப்படும் பாரதி மணி நாடக மற்றும் திரைப்படக் கலைஞர் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்திடம் சென்று அனைத்தயும் முடிக்கும் ஆற்றல் பெற்ற ஒரு பலமான தொடர்பாளர் ஆவார். கார்ப்பொரேட் நிறுவனங்களை பொறுத்த வரையில் ஒரு நினைததை முடிப்பவன். (நாமெல்லாம் நீரா ராடியா டேப் விவகாரங்களை ஊடகத்தில் பார்த்து  அதிர்ச்சி அடைந்த போது, கண்டிப்பாக மணி புன்முவலித்துக் கொண்டிருப்பார்). சுஜாதா, இந்திரா பார்த்த சாரதி, பூரணம் விஸ்வநாதன், கடுகு, சுப்புடு போன்ற டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களுடன் பழகி வந்தவர். கர்நாடக இசை, சமையல் போன்ற கலைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர்.

இப்பேர்ப்பட்டவர் தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினால் சுவாரசியதிற்குப் பஞ்சம் இருக்குமா என்ன? சும்மா, விறு,விறுவெனறு த்ரில்லர் நாவல் போலச் செல்கின்றது "பல நேரங்களில் பல மனிதர்கள்".  நாஞ்சில் நாடன், ஜெயமோகன், டெல்லி கணேஷ், லால்குடி ஜெயராமன் போன்ற பிரபலங்கள் பலரும் மணியைப் பற்றி எழுதியதிலிருந்தே இவருடைய நட்பு வட்டாரம் எவ்வளவு பெரியது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தில் 18 கட்டுரைகள் உள்ளன. இதில் 'டில்லி திகம்போத் சுடுகாடு' குறித்த கட்டுரை, சுஜாதா உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்ட கட்டுரை. பிரதிபலன் எதிர்பார்க்காது மனித நேயத்துடன் எப்படி அடுதவருக்கு எப்படி உதவியுள்ளார் என்பதனைத்  தம்பட்டம் இல்லாமல் சொன்னது மட்டுமல்லாமல், எத்தனை விஷ்யங்களச் சுவாரசியமாகச் தருகின்றார் இந்த மனுஷன்.  

அடுத்தது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் புதல்வர் காந்தி தேசாயுடனான அனுபவம், ஒரு கிரம் த்ரில்லர் ரேஞ்சுக்குக் செல்கின்றது. 'இப்படிக் கூட இருந்தார்களா இந்தப் பசுத் தோல் போர்த்திய புலிகள்?', என்று பதைக்க வைக்கின்றது. காந்தி தேசாய் பற்றிக் கூறிய மணி, மற்ற பிரபல பிரமுகர்களின் மறுமுகத்தையும் காட்டுவார் என்று ஆவலோடு எதிர்பாரத்தால், உஷாராகப் பதுங்கி விடுகின்றார். அமைச்சர் கமல்நாத் பற்றி ம்ட்டும் ஒரு விஷயம் பேசப்படுகின்றது.

பங்களாதேஷ அகதிகள், இந்தியாவுக்குள் நுழையும் சமபவம், பாஸ்மதி அரிசிக்கான விதை நெல் பாகிஸ்தானிலிருந்து வரவழைக்கப்படுவது, செம்மீன் படத்திற்கு  தேசிய விருது கிடைத்த பின்னணி போன்ற சுவையான விஷயங்கள தவிர, சுஜாதா, சுப்புடு, பூரணம் விஸ்வநாதன் ஆகிய ந்ணபர்களுக்கென்று தனித்தனி அத்தியாயங்களே ஒதுக்கியுள்ளார்.   சுப்புடுவின் மறு பக்கத்தினை நட்புணர்வு குறையாமல் லாகவத்துடன் எழுதியுள்ளார். மேலும் கொசுவர்த்திகளாக தான் வாழ்ந்த திருவிதாங்கூர், சாப்பிட்ட டில்லி ஹோட்டல்கள், பணி புரிந்த பங்களா தேஷ, பயணம் செய்த டில்லி-சென்னை கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ஆகியவை குறித்து எழுதும் போது ஒரு தேர்ந்த எழுத்து தெரிகின்ற்து.

குடிப்பது குறித்து தனக்கு எந்த விதத் தயக்கமும் இருந்ததில்லை என்று ப்ல்வேறு இடங்களிலும் இவர் கூறும் போது பாசாங்கு இல்லாத எழுத்து இவருடையது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இவ்வளவு தூரம் குடியின் மகிமையப் பற்றிப் பேசினவர் குடியினை விட்டொழித்ததன் காரணம் என்ன? என்றும் எப்படி அப்பழக்கத்தின விட்டார் என்றும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

சினிமா, நாடகம், அதிகாரத் தொடர்பு, கார்ப்பொரேட் பணி என்று பன்முகம் கொண்ட இவர், எழுபது வயதுக்கு மேலேதான் எழுத ஆரம்பித்துள்ளார். நடையில், நகைச்சுவை, அங்கதம், விறுவிறுப்பு, தகவல்கள என்ற பல பரிணாமங்களையும்  அளவான விகிதத்தில் கலந்து கொடுத்து படிப்பவர்களை பர்வசப்படுத்துகின்றார். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் எழுத ஆரம்பித்திருந்தால், க.நா.சுவை, பாரதி மணியின் மாமனார் என்று அறிமுகப்படுத்தியிருப்பார்களோ என்னவோ!

நூல்: பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்: பாரதி மணி
பதிப்பு: உயிர்மை பதிப்பகம், 2008
பக்கங்கள்: 192
விலை: Rs.100

- சிமுலேஷன்

Thursday, May 31, 2012

நீங்கள் 1960-1970க்குள் பிறந்தவரா? அப்படியென்றால்...


நீங்கள் 1960-1970க்குள் பிறந்தவரா? அப்படியென்றால்...
 • உங்களது பள்ளிக் கால ஞாயிற்றுக் கிழமை எண்டர்டெய்ன்மெண்ட் - ஒலிச் சித்திரம் - ஆல் இண்டியா ரேடியோ.
 • பரபரப்பான செய்திகளுக்குக் காத்திருந்து நீங்கள் கேட்ட குரல்கள் -  - ஜெயா பாலாஜி, பத்மனாபன், செல்வராஜ், சரோஜ் நாராயணஸ்வாமி - ஆல் இண்டியா ரேடியோ / ஆகாசவாணி செய்தி வாசிப்பாளர்கள்.
 • நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகர் என்றால் சிசாஜியை விரோதியாகவும், சிவாஜி ரசிகராக இருந்தால், எம்.ஜி.ஆரை விரோதியாகவும் பார்த்திருப்பீர்கள்.
 
 • உங்களுக்குப் பிடித்த ஆக்ஷன் ஹீரோ - தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர்.
 
 • கல்யாணத்துக்கு அப்புறம் நீங்கள் போட்டுக் கொண்ட ஆபரணம் - LIC மோதிரம்.

 • தமிழ்த் திரை வரலாற்றில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படம் - ஒரு தலை ராகம்.
 
 • தெரிந்த மூன்று மோட்டார் பைக்குகள் - ராஜ்தூத், புல்லட், யெஸ்டி.
 • தெரிந்த ஸ்கூட்டர்கள் - வெஸ்பா, லாம்பரெட்டா.
 • பார்த்த ஒரே தொலைக்காட்சி சானல் - தூர்தர்ஷன்.
 • தெரிந்த ஒரே ஹிந்தி சீரியல் - ஜுனூன்.
 • உங்களது வெள்ளிக் கிழமை இரவு எண்டர்டெய்ன்மெண்ட் - ஒளியும் ஒலியும் - தூர்தர்ஷன். 
 • கல்லூரி கால பேவரைட் ட்ரெஸ் - பெல்பாட்டம் பேண்ட் - பாபி காலர் ஷர்ட், பட்டை பெல்ட்.
 
 • பெரிதும் பயப்பட்டது - டெலி கிராம். (Start Immediately)
 • எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் பார்த்தது - மாலை முரசு.
 
 • எஸ்.எஸ்.எல்.சி விடுமுறையில் சேர்ந்தது - டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட். 


 • கல்லூரி வாழ்வில் செய்த புரட்சி - பஸ் டே (Bus Day)  கொண்டாடினது. மற்ற கல்லூரிகளுக்குக் கூட்டமாகச் சென்று அவர்கள் கல்லூரிகள் மூடச் செய்தது.
 • குடும்பத்துடன் செய்த பெரிய தேசிய கடமை - சினிமா முடிவில் "ஜனகனமண" தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றது.
 • போட்டோ எடுத்தால் கொடுக்கும் போஸ் - கால்களை அகட்டி நின்று கொண்டு கைகளைக் கட்டிக் கொள்வது.
 • முணுமுணுத்த தெய்வீகப் பாடல்கள் - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயர்பாடி மாளிகையில் மாயக்கண்ணன்.

வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

Sunday, April 15, 2012

85 வயது ராஜமாணிக்கத்தின் பாடல்கள்

ஓரிரு வருடங்கள் முன்பு, மார்கழி மாதம் முதல் நாள், விடியற் காலை 5 மணியளவில் பூஜை மணி சத்தம் கேட்டு எழுந்தேன். மணியோசையுடன் தெள்ளு தமிழில் அழகான பாட்டு!

யார் என்று எட்டிப் பார்க்க, எங்கள் அபார்ட்மெண்டில் காவல் வேலை செய்யும் ராஜமாணிக்கம்தான் அது. குளித்து விட்டு, அழகாக விபூதி இட்டுக் கொண்டு வாசலில் உள்ள ஒரு மரத்தினடியில் சாமி படம் ஒன்றினை வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் தங்கு தடையில்லாமல் வேறு பாடிக் கொண்டிருந்தார்.

மறுநாளும் அதே போல். அவரது பாட்டைக் கேட்கவும், அடுத்தடுத்த நாட்களில் அவர் செய்யும் பூஜையினைப் பார்க்கவுமே விடியற் காலையிலேயே எழுந்து விட்டேன். இது மார்கழி மாதம் முழுவது தொடரும் போல என்று எண்ணியிருந்த போது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு எதனையும் கேட்க முடியவில்லை. என்னெவென்று கூப்பிட்டு விசாரித்ததில், எங்கள் அபார்ட்மெண்ட்டில் குடியிருந்த மற்றொரு நபர், இவரைக் கூப்பிட்டு இந்த விடியற்காலை பூஜை சமாச்சாரமெல்லாம் கூடாது என்று கூறி விட்டார்களாம். அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் தனது பூஜைகளை நிறுத்திக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அவர் என்ன பாடல் பாடினார் என்று தெரியவில்லை. ஆனால் 85 வயது கொண்ட அவர், மனப்பாடமாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பாடியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பாடிய பாடல்களை எழுதியது யாராக வேறு இருக்கும் அன்று ஆவல் வேறு. அவர் பற்றிய தகவல்களையும், அவர்தம் பாடல்களையும் ஆவணைப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஓரிரு வருடங்களுக்கு முன்னாலேயே இதற்கான முயற்சி எடுத்தாலும், இப்போதுதான் ஒரிரு வாரங்களுக்கு முன்பாக அது சாத்தியமாயிற்று.

அவரது பேட்டியும், அவர் பாடிய பாடல்களும் இங்கே:-- சிமுலேஷன்

Saturday, April 07, 2012

மாசில் வீணையும் மாலை மதியமும்....


மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ;

வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை, வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .

 

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - பாடல் எண் - 1

ராகம் - மலயமாருதம்

மெட்டமைத்தவர் - நெய்வேலி கணேஷ்

 - சிமுலேஷன்

Friday, April 06, 2012

குயிலாய் இருக்கும் - அபிராமி அந்தாதி


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

 விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய். அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.

மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா? "அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே.... "கடம்பாடவியிடை " "குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்... "இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.

 அபிராமி அந்தாதி - பாடல் - 99


பாடலுக்கு மெட்டுப் போட்டவர் - திரு. அலெப்பி வெங்கடேசன்.

ராகம் - ஜசம்ஹோதினி

- சிமுலேஷன்

Monday, April 02, 2012

சினிமா நிஜமா? - லெனின் - நூல் விமர்சனம்


"என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச் சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே மகனுக்கும் 'சிங்' ஒட்டிக் கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாசாரங்களும் சங்கமித்ததின் 'கரு' நான். இப்போதைக்கு நான் தமிழன்... எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்." இப்படித்தான் தன்னைப் பற்றி "சினிமா நிஜமா" என்ற நூலின் பின்னட்டையில் அறிமுகம் செய்து கொள்கிறார் புகழ் பெற்ற எடிட்டரும் இயக்குநருமான பி.லெனின்.

நக்கீரன் இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகள் "சினிமா நிஜமா?" என்ற் தலைப்பில் நூலாக வந்துள்ளது. சுய அறிமுகத்தில் செய்து கொண்டது போலவே, சினிமா சம்பத்தப்பட்ட சகல தொழிலாளர்கள் குறித்தும், அவர்களது பிரச்னைகள் குறித்தும் பரிவுணர்ச்சியுடன் மிகுந்த கவலையுடன் இந்தக் கட்டுரைகளில் உரத்துச் சிந்திக்கின்றார். இந்தத் தொழிலின் கடைநிலை ஊழியர்களான் டச்சப் பாய்ஸ், லைட் பாய்ஸ், புரடக்ஷன் பாய்ஸ், செட் அஸிஸ்டெண்ட் ஆகியோரைப் பற்றியெல்லாம் அவரது அன்புள்ளம் ஆழ யோசிக்கிறது என்பதற்கு அடையாளமே இந்தக் கட்டுரைகளின் சாரம்.

கனவுத் தொழிற்சாலை மனிதர்களை பற்றிய சுவாரசியமான இந்தக் கட்டுரைகளிலிருந்து சாம்பிளுக்கு ஒரே ஒரு கட்டுரையை மட்டும் இங்கு பார்ப்போம்.

 ---------0--------------

 சினிமா படப்பிடிப்புத் தளத்தை வாசகர்கள் பார்த்திருக்ககூடும். 60 அடி உயரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் ஆன கூரையுடன், காற்று கூடப் புக முடியாத அமைப்புக் கொண்டது. பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இவ்வாறுதான் இருக்கும். இதனுயரத்தில் அதாவது 60 அடி உயரத்தில் நின்று கொண்டுதான் லைட் பாய்ஸ் (பாய்கள் என்றாலும் பெரும்பாலும் வயதானவர்கள்) சினிமா நட்சத்திரங்கள் மேல் வெளிச்சங்கள் அடித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த உயர்ந்த கூரை மீது ஏறிய லைட்பாய்கள் காலை 9 மணி கால்ஷீட் ஆரம்பித்து, மதியம் டைரக்டர் லஞ்ச் பிரேக் அறிவித்தவுடன்தான் கீழே இறங்குவார்கள். அதுவரை இவர்கள் சஞ்சாரமெல்லாம் இந்த இருட்டு மற்றும் புழுக்கமான மேற்கூரையின் மேல்தான். இடையிடயே தங்களுக்குத் தேவையான தண்ணீர், தேனீர் போன்றவைகளை இவர்கள் மேலே இருந்து கம்பிக் கயிறு கட்டி கீழே இருந்து இழுத்துக் கொள்வார்கள். அன்று இரு தெலுங்கு ப்ட ஷூட்டிங்...! அந்தப் படத்தின் கதாநாயகி காணும் கனவுப் பாடலை இயக்குநர் கொஞ்ச்ம் வித்தியாசமாக...? கற்பனை செய்திருந்தார். கதாநாயகன், கதாநாயகியை சுற்றிலும் ஏராளமான இனிப்புப் பலகாரங்கள். படபிடிப்பு தளம் முழுக்க அடுக்கப்பட்டு இருந்தன. ஏராளமான ஜாங்கிரி வகைகள், மைசூர் பாகு, அதிரசம், குலோப் ஜாமூன் என்று ஒரு லாலா கடையே அங்கு பரப்பப்ட்டு இருந்தது. இந்த இனிப்பு வகைகளுக்கு இடையே கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் புரண்டு காதலித்துக் கொண்டு இருந்தார்கள். இது என்ன கனவோ...? இயக்குநர்களுக்கு இந்தக் 'கெட்ட கனவுகள்' எங்கிருந்துதான் வந்ததோ, இந்திய கமர்ஷியல் சினிமா டைரக்டர்களுக்கெல்லாம் ஒரே மாதிரி. நாயகனும், நாயகியும் ஊட்டி மலையின் அடிவாரத்தில் பாடினாலும், மலை மீது இருந்து நீர் வீழ்ச்சி போல ஆப்பிள்களும், ஆரஞ்சு பழங்களும் உருண்டு வரும்.

இப்படிப்போன்ற கனவுக் காட்சிகளள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இத்தைகய இயக்குநர்கள் கவனிக்கிறார்களா? கணக்கில் எடுத்துக் கொள்கின்றார்களா? எனபது ஒரு புரியாத புதிர். நான் விசாரித்த வரையில் மக்கள் இத்தைகய கனவுகளைக் கண்டு அருவருப்பே அடைகிறார்கள். ஆப்பிள் தின்பதற்காக ஆசைப்பட்டு கடையில் விசாரித்த போது, விலை கட்டுபடியாகமல் போன நிகழ்ச்சிகள்தான் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது...! இயக்குநர்களைப் பொறுத்த வரையில் பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தால் லாரி, லாரியா பூக்களைக் கொட்டுவது, அதைவிடப் பெரிய நிறுவனம் கிடைத்தால் லாரி, லாரியாக சாத்துக்குடி, அதற்கும் மேலே ஆப்பிள்களாக கதாநாயகி மேலே வருகிறது. இன்னும் சண்டைக் காட்சி என்றால் ஏராளமான முட்டைகள் உடைய வேண்டும். காய்கறிகள் பறக்க வேண்டும். இது போலத்தான் அந்தத் தெலுங்குப் படப்பிடிப்பிலும் (இதில் தெலுங்கு, தமிழ் வித்தியாசமில்லை)இனிப்பு வகைகள் கலர் கலராக... படப்பிடிப்புத் தளத்தின் மேலே இருந்து பார்த்த லைட் பாய்களுக்கு இது கண்ணண உறுத்தியது. நாக்கில் எச்சில் ஊறியது... விளைவு...! கொஞ்சம் கொஞ்சமாக ஜாங்கிரிகளும், பாதுஷாக்களும் கயிற்றின் வழியாக மேலே ஏறிக் கொண்டு இருந்தன. இதைச் சிறிது நேரத்துக்குள் மேனேஜர் ஒருவர் பார்த்து விட்டார். உடனே பரபரப்பானார். வேக, வேகமாக வெளியேறினார். சிறிது நேரத்திற்குள் இரண்டு, மூன்று வேர் கையில் 'மருந்து தெளிக்கும் பம்புடன்' உள்ளே வந்தார்கள். இருக்கிற இனிப்புப் பலகாரங்கள் அனைத்தின் மேலும் வேக வேகமாகப் 'பூச்சி மருந்து' அடிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வண்ண வண்ணமான் அந்த இனிப்பு வகைகளின் மேல் ஈ கூட மொய்க்காத காரநெடி சூழ்த்து கொள்ள... அவன் பாடினான்... அவள் ஆடினாள்... நீங்கள் பார்த்த திரைப்படங்களில், சாப்பாட்டு அறையின் மேஜைகளில் அடுக்கடுக்காய் இருக்கும் பழ வகைகளிலும், தின்பண்டங்களிலும் உங்களின் புலன்களுக்கு எட்டாத பூச்சி மருந்தின் நெடி பரவியிருக்கிறது. உங்களுக்கு அந்தப் பழங்கள் நிஜம்... எங்களுக்கு அவை பழங்கள் அல்ல, விஷங்கள் என்பது நிஜம்...சில மனிதர்களைப் போலவே!

 நூல் பெயர்" சினிமா நிஜமா? ஆசிரியர்: B.லெனின் பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பு: 2002 பக்கங்கள்: 224 விலை: Rs. 75.00 - சிமுலேஷன்

Friday, January 20, 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும் புதுமையான போட்டிகளும்

சென்னை நகரில் பலமுறை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. நானும் சில முறை கலந்து கொண்டுள்ளேன். பெரும்பாலான சமயங்களில் இந்தச் சந்திப்பின் போது என்ன பேசுவது, யார் வழி நடத்துவது என்று புரியாமல் ஒரு மொக்கையான நிகழ்வாக இருக்கும். அப்படியில்லாமல் ஒரு பதிவர்கள் சந்திப்பினை  சுவாரஸ்யமான நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஒரு ஆவல். அதன் விளைவே இந்தப் பதிவு. டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சியினை நடத்தலாமாவெனவுள்ளோம்.

நாள் & நேரம்- இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு ஞாயிறுக் கிழமை காலை 9-11 மணியளவிலோ அல்லது 10-12 மணியளவிலோ நடத்த உத்தேசம். பெரும்பாலானோர் மதியம் நடத்த விரூப்பம் தெரிவித்தால் அதற்கேற்ப.

இடம்: இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நிகழ்ச்சி அடையாறிலோ, கோட்டுர்புரத்திலோ அல்லது மயிலாப்பூரிலோ இருக்கும். வருகின்ற உறுப்பினர்களின் பங்களிப்பைப் பொறுத்து வ்சதிய்யான ஹால் புக் செய்யப்படும்.

கட்டணம்: நிகழ்வு நடக்கும் ஹாலின் வாடகை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வாங்க வேண்டிய செலவுகள் இருப்பதனால் பங்கு பெறும் பதிவர்கள் 50-100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பங்கு பெற்றும் பதிவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த்தக் கட்டணம் கூடவோ, குறையவோ செய்யும்.

தமிழ்ப் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் யார் யார் என்னென்ன செய்யப் போகின்றார்கள்?

மேடைப் பேச்சுப் போட்டியில் பங்கு கொள்ளும் மேடைப் பேச்சாளார்கள் 
பல எழுத்தாளர்களுக்கு நன்றாக எழுதத் தெரிந்தாலும், பேச வராது. குறிப்பாக மேடைப்பேச்சில் திணறுவார்கள். உதாரணாமாக, எந்தத் தலைப்பிலும், எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வந்த வாத்யார் சுஜாதாவே மேடையில் பேசும்போது திணறுவார். எழுதிய கருத்துக்களை நாலு பேர் முன்னால் செம்மையாகப் பேசுதல் என்பது ஒரு கலையாகும். இந்தப் பேச்சுக் கலையினை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த மேடைப் பேச்சுப் போட்டி.  முன்னரே தயாரித்து வந்த தலைப்பில் ஒருவர்
4-6 நிமிடங்கள் பேசலாம். மொத்தம் 8 மட்டுமே பேச நேரம் இருக்கும். ஆகையால் பேச விருப்பம் தெரிவித்தவர்களில்  8 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டுப் பேச அழைக்கப்படுவார்கள்.
அரசியல், பாலியல், மதம், ஜாதி ஆகிய தலைப்புகள் தவிர எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம். குறைந்த பட்சம் 3-30 நிமிடங்களோ, அதிக பட்சம் 6.30 நிமிடங்களோ பேச வேண்டும். 3.30 நிமிடங்களுக்குக் குறைவாகப் பேசியவர்களும், 6.30 நிமிடங்களுக்கு மேல் பேசியவர்களும் பரிசுத் தேர்வுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

மேசைப் பேச்ச்சுப் போட்டியில் பங்கு கொள்ளும் மேசைப் பேச்சாளர்கள்
மேசைப்பேச்சு  நடத்துநர் முந்தைய போட்டிகளில் கலந்து கொள்ளாத மற்றவர்களைஒவ்வொருவராக அழைப்பார். மேடைக்கு வந்தவரிடம் ஒரு தலைப்பு (பழமொழி, சொலவடை, பஞ்ச் டயலாக் போன்ற எதுவானாலும்) கொடுப்பார். தலைப்பு கொடுக்கப்பட்ட 30 வினாடிகளுக்குள் மேசைப் பேச்சாளர் பேசத் துவங்க வேண்டும். இந்தப் போட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கால அவாகாசம்
1-2 நிமிடங்கள் மட்டுமே. இங்கு குறைந்தபட்ச கால அளவான  30 வினாடிகளுக்கு குறைவாகவும், அதிகபட்ச கால அளவான 2.30 நிமிடங்களுக்கு அதிகமாகாவும் பேசியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். 8 முதல் 10 பேர் வரை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மேடைப் பேச்சு விமர்சனப் போட்டியில் பங்கு கொள்ளும் மேடைப் பேச்சு மதிப்பீட்டாளர்கள் 
முதல் நிகழ்வாகத் துவங்கிய மேடைப் பேச்சுக்களை மதிப்பீடு செய்யும் போட்டி இது. சுறுக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்க வேண்டும் மதிப்பீடுகள். கொடுக்கப்படும் கால் அளவு 2-3 நிமிடங்கள். இங்கு குறைந்தபட்ச கால அளவான  1.30 வினாடிகளுக்கு குறைவாகவும், அதிகபட்ச கால அளவான 3.30 நிமிடங்களுக்கு அதிகமாகாவும் பேசியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேடைப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 8 பேர் என்பதனால் அந்த 8 பேரின் பேச்சுக்களை மதிப்பீடு செய்ய 8 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். யார் யார் பேச்சை யார் யார் விமர்சனம் செய்வார்கள்  என்பது நிகழ்ச்சிக்கு முன்பாக முடிவு செய்யப்படும்.

கூட்டத்தின் தொகுப்பாளர்
கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர். பல சுவையான கதைகளும், துணுக்குகளும் சொல்லி கூட்டத்தின் சுவாரசியம் கெடாமல் பாதுகாப்பவர். ஒவ்வொருபேச்சாளரையும் அறிமுகப்படுதுபவர் இவரே. மேலும் "கூட்டதிற்குண்டான வார்த்தையையும்" (Word of the Day) அறிமுகம் செய்வது இவரே. இவற்றை பேச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.

பொது மதிப்பீட்டாளர் -  கூட்டம் துவங்கியது முதல் இறுதி வரை கூட்டம் எப்படி நடந்தது என்று கூட்டத்தின் முடிவில் நிறை-குறைகளை அழகுறப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும். இவருக்கு உதவி செய்வதற்கென்று மூவர் அடங்கிய குழு ஒன்று இருக்கும். அவர்களது பணி வருமாறு:-

நேரக் குறிப்பளர் -  ஒவ்வொரு பேச்சாளருக்கும் அவர் பேச வேண்டிய மணித்துளிகள் ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேர வரையறை பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல. மதிப்பீட்டளர்களுக்குமுண்டு. பேச்சாளர்களும், மதிப்பீட்டாளர்களும் குறைந்த பட்ச நேரம் பேசாமலிருந்தாலோ, அதிக பட்ச நேரத்தை மீறிப் பேசினாலோ தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். நேரக் குறிப்பாளரிடம் நேரம் காட்டும் விளக்குகள் அடங்கிய கருவி (Timer Device) ஒன்றும் உண்டு. இதன் துணை கொண்ம்டு பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை முறையே ஒளிர வைத்து பேசுபவருக்கு நேரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். கூட்டத்தின் முடிவில் யார், யார் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்றும், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு யார், யார் தகுதி பெற்றார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவிப்பார்.

இலக்கணவாணர் - ஒவ்வொரு பேச்சாளரும் Word of the Day ஐயையும் எவ்வளவு முறை பயன்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவிப்பார். மேலும் பேச்சின்போது, பயன் படுத்தப்பட்ட அழகிய சொல்லாடல்களையும், இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டுவார். இதன் மூலம் பேச்சாளர் மட்டுமின்றி, அனைவரும், தவறுகளை திருத்திக் கொள்வதும், நல்ல வார்த்தைகளைப் பேச்சின் போது பயன்படுத்தும் எண்ணமும் ஏற்படும்.


அ-உ-எண்ணி - ஒவ்வொரு பேச்சாளரும், சரியான ஒத்திகை செய்து வரவில்லையென்றாலோ, வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதனை மறைப்பதற்காக சில நிரப்பு வார்த்தைகள் கொண்டு சமாளிப்பதுவும் வழக்கம். தமிழிம் சிலர் பேசும் போது "வந்து, வந்து", "கேட்டியா? கேட்டியா?" போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு வாக்கியத்திலும் காரணமின்றிப் பலமுறை பயன்படுத்துவார்கள். பேச்சாளர் எத்தன முறை நிரப்பு வார்த்தைகளப் பயன்படுத்தினார் என்றும், எத்தனை முறை பேசாமல் மவுனம் சாதித்தார் என்றும் அ-உ எண்ணீ தனது அறிக்கையில் கூறுவார்.

கூட்டத்தின் பொது விதிகள்

முதல் விதி: கூட்டத்தில் பங்கு பெருவோரின்  ஆடை (Dress Code) குறித்தது. கூட்டத்திற்ககு வரும் அனைவரும் கண்ணியமான உடையில்  வரவேண்டும்.

இரண்டாம் விதி: கூட்டத்தின் அமைதி (Code of Silence) குறித்தது. கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும். யாராவது மேடையில் பேசிக் கொண்டிருந்தால் இடையிலே எழுந்து செல்லக் கூடாது. ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், துண்டுத் தாளில் எழுதி, அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும்.

மூன்றாம் விதி: தவிர்க்க வேண்டிய தலைப்புகள்  (Taboo Topics) குறித்தது. பாலியல் (Sex), மதம் (Religion), அரசியல் (Politcs) போன்ற பிரச்னை தரும் 3 தலைப்புகளில் யாரும் பேசக் கூடாது.

கூட்டத்தின் முடிவில் பேச்சுப் போட்டி மற்றும் மதிப்பீட்டுப் போட்டியில் கலந்து கொண்டவர்களும், எந்த வித பங்களிப்புப் செய்யாமல் வெறுமனே பார்வையாளர்களாக இருந்த அனவரும் "சிறந்த மேடைப் பேச்சாளர்", "சிறந்த மேசைப் பேச்சாளர்", "சிறந்த மதிப்பீட்டாளர்" என்ற வகையில் மூன்று பேருக்கு வாக்கு அளிக்க வேண்டு. ஒவ்வொரு பிரிவிலும் யார் அதிக வாக்குகள் பெறுகின்றார்களோ அவர்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளரால் பரிசுகள் அளிக்கப்படும். ஆக கூட்டத்தி முடிவில் மூன்று பேர் பரிசுகள் பெறுவார்கள். மற்றவர்களுக்கு என்ன கிடைக்கும்?

- மேடைப் பேச்சுக்கு எப்படி தயார் செய்து பேசுவது/
- மேசைப் பேச்சு எனப்படும் போட்டி மூலம் உடனடியாக ஒரு தலைப்பில் எப்படிக் கோர்வையாகப் பேசுவது?
- எப்படி ஒரு பேச்சின மதிப்பீடு செய்வது?
- குறித்த நேரத்தில் எப்படி பேச்சினை முடித்துக் கொள்வது?
- கண்ணியமாகவும், சூவைய்யாஅக்கவூம் ஒரு நிகழ்ச்சியினை எப்பாடி நடத்துவது? 

 இவை போன்ற பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வது.

இது தவிர கூட்டத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் ஒருவரோடு ஒருவர் அளவளாவது போன்ற வழக்கமான நிகழ்வுகள் இருக்கும். மேற்கண்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்களிக்கும் வண்ணம் ஒரு கூட்டத்தின நடத்திட, கிட்டத்தட்ட 20 முதல் 30 பேர் வரை தேவை. எனவே 30 பேரிடமிருந்து விருப்பம் வந்த பின்பே கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். விரவில்

இந்தச் சந்த்திப்பு நடக்க வேண்டுமென்றால், விரைவில் உங்கள் விருப்பத்தினை மறுமொழியில் தெரிவியுங்கள். என்ன போட்டியில் என்ன பங்களிப்பு செய்ய விருப்புகின்றீர்கள் என்றும் மறக்காமல் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

Tuesday, January 17, 2012

வனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்

"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதாசனின் சுயவாழ்க்கை வரலாறான் "வனவாசம்". வாழ்க்கை வரலாறு என்பதனால், சிறுவயது பள்ளி அனுபங்கள் மற்றும் வீட்டை விட்டுப் பட்டினத்திற்கு ஓடி வந்த அனுபவங்கள் என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில்     இரு(ண்ட)ந்த தன பத்தாண்டு அனுவங்களையே வனவாசம் என்று குறிப்பிடுகின்றார் கண்ணதாசன்.

இதனை கண்ணதாசான் எழுதிய ஆண்டு 1965. வானதி பதிப்பகத்தால் கிட்டத்தட்ட 37 பதிப்புகள் கண்ட இந்தப் புத்தகம், தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரு காலத்தில் குமுதம் பத்திரிகை தனது இதழில் வனவாசத்திலிருந்து குறிப்ப்பிட்ட சில பகுதிகளைப் பிரசுரித்து வந்தது. அதற்கும் காரணம் இல்லாமலில்லை!

சிறு வயது முதலே அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையுடன் படைப்புலகில் நுழையும் கண்ணதாசன் எத்தனையெத்தனையோ பத்திரிகைகளிலும் பணிபுரிகின்றார். அங்குதான் எத்தனை மனிதர்கள், எத்தனை அனுபவங்கள் அவருக்கு.

முதன் முதலாக கோம்புத்தூர் லாட்ஜில் கருணாநிதியைச் சந்த்தித்த போது ஏற்பட்ட பரவசத்தினை அவரால் விவரிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு காதலியைக் காணும் உணர்ச்சி ஏற்ப்பட்டதாகக் கூறுகின்றார். சில சமயங்களில் கருணாநிதியென்று பட்டவர்த்தானமாகாப் பெயர் சொல்லும் கண்ணதாசன், சில சமயங்களில் 'கலை நண்பர்' என்று சொல்லி அடக்கி வாசிக்கின்றார். இருவரும் ஒரு முறை ரயிலில் பசியுடன் பயணம் செய்யும் போது, சக பயணியான ஒரு முதியவரிடம் இருந்து பழம் திருடலாமாவெனா திட்டம் போட்டதாகத் தெரிகின்றது. ஒரு முறை வேசிகளிடம் சென்று காமக்கடலில் எழுந்து, அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வந்தது, சில பெண்களை அனுபவித்து விட்டு, அவர்களிடம் மிரட்டி பணத்தைத் திருப்பி வாங்கியது போன்ற சம்பவங்களைப் போட்டு உடைக்கின்றார். குமுதம் பத்திரிகை ஏன் வனவாசம் பகுதிகளை பிரசுரித்தது என்று இப்போது புரிந்த்திருக்கும்.

கருணாநிதி தான் எழுதிய "வாழ முடியாதவர்கள்" என்ற கதையினைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார். வறுமையின் காரணமாக தந்தையே பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த அந்தக் கதையினைப் படித்து விட்டுக் காறித் துப்புகின்றார் கண்ணதாசன். மேலும் அவரது குமரிக் கோட்டம், ரோமாபுரி ராணிகள், கபோதிபுரத்துக் காதல் போன்ற கதைகளைப் படித்து விட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தினை வெளிப்படுத்துகின்றார். இதற்குப் பிறகு, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதிய எதனையும் படிப்பதில்ல என்றும் முடிவு செய்கின்றார்.

தான் அறிய, மனமறிய தன்னை இயக்கிக் கொள்ளாமல், இழுப்பவர் இழுப்புக்கு வந்து உணர்ச்சி வேகத்தில், "கல்லக்குடி போராட்டத்தில்" ஈடுபடுகின்றார். இதன் காரணமாகக் கிடைத்த சிறை வாசத்தில் படும் அவஸ்தைகளுயும், அந்தச் சமயத்தில் கட்சிப் பிரமுகர்கள் நடந்து கொண்ட விதமும் அவரைத் தீவிர மன உளைச்சலுக்குள்ளாக்குகின்றதூ. குறிப்பாகக்க் "கல்லக்குடி வழக்கு நிதி" என்ற பெயரில் நிதி சேர்த்த சி.பி.சிற்றரசு, அந்த நிதியிலிருந்து காலணா கூட வழக்கு நடத்தவோ, கைதிகளின் பசியினைப் போக்கவோ செலவழிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றார். மேலும் சிறையிலிருக்கும் போது அவர் எழுதிய "இல்லற ஜோதி" படத்தின் வசனத்தின் பெரும்பகுதியினைத் தான் எழுதியதாக "கலை நண்பர்" பத்திரிகையில் எழுதியது கண்டு ஆத்திரம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்.

மேடையில் தமிழர் பண்பாடு என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அரசியல் தலவரைக் குஷிப்படுத்த, அர்த்த சாமத்தில் ஆண் வாடத்தில் வந்த பெண்ணொருத்தி, "சுந்தரகோஷ்" என்று குறிப்ப்பிடப்படுகின்றாள். இந்தத் தலைவர் யார் என்று புரிந்து கொள்வது கடினமல்ல. சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட கண்ணதாசன் ஒரு முறை அண்ணாத்துரையின் பேச்சைக் கேட்டு மயங்கி, திராவிடச் சித்தாந்தத்திலும், பின்னர் தீவிர அரசியால்வாதியாகவும் மாறுகின்றார். அண்ணவை ஒரு தேவதூதன் போலப் பார்க்கின்றார். ஆனால் காலம் செல்லச் செல்ல மதிப்பீடுகள் மாறூகின்றன.

சென்னை மாமான்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்க்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்க்படும் போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, "என்ன அண்ணா! இப்படி சதி செய்து விட்டீர்கள்?" என்று கேட்க, அவரோ, "அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்" என்று சொல்ல, 'இதென்ன தில்லாலங்கடி' என்று திகைத்து நிற்கின்றார்.

பத்தாண்டுகளில் அண்ணாவின் அரசியல் அணுகுமுறை கண்டு வெறுத்துப் போய், அவரை "சாதி வெறியர்" என்ரும், "சந்தர்ப்பவாதி" என்றும் அடையாளப்படுத்துகின்றார். குறிப்பாகக், கட்சியில் பெரும் செல்வாக்குப் பெற்ற்றிருந்த ஈ.வெ.கி.சமபத் எப்படி ஓரங் கட்டப்படுகின்றார் என்று அறிந்த போதும், கட்சிப் பொதுக் குழுவில் வேண்டுமென்றே வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போது மனம் வெறுக்கின்றார். இது நாள் வாரை பட்ட அவமானங்களைப் பற்றி யோசித்து, enough is enough என்ற முடிவுக்கு வந்து, ஒரு வழியாக திமுகவிலிருந்து ராஜினாமாச் செய்கின்றார். அப்போது,

- கண்மூடித்தனமான அரசியல் வனவாசம் முடிந்து விட்டது
- காட்டுக் குரங்குகளிடமிருந்து விடுதலை கிடைத்தது
- சபலத்திற்கும், சலனத்திற்கும் ஆட்பட்ட கோழை மனிதர்களை "தலைவர்கள்" என்று போற்றிப் பாடிய பாட்டு முடிந்து விட்டது

என்றெல்லாம் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகின்றார்.

திமுகவிலிருந்து ராஜினாமா செய்த நாளான 9.4.1961 ஆம் தேதியை மறக்க முடியாத நாளென்றும், அன்றோடு தனது பத்தாணடு வனவாசம் முடிந்து விட்டதாகவும் பராவசப்படுகின்றார்.

நூல்: வனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்
பதிப்பு: கண்ணதாசன் பதிப்பகம் - நாலாம் பதிப்பு - 2011
பக்கங்கள்: 424
விலை: Rs. 120

- சிமுலேஷன்

Friday, January 13, 2012

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 09 - ஹமீர் கல்யாணி

சாரங்கா என்ற கர்நாடக ராகத்தினை போலவே இருக்கும் ஹிந்துஸ்தானி ராகம் ஹமீர் கல்யாணியாகும். இது கல்யாணி ராகத்தின் ஜன்ய ராகமாகும்.  மெல்லிய உணர்வுளை வெளிப்படுத்த அமைந்த அருமையான ராகம் இது. இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் இது வெளிப்படையாகப் புலப்படும்.

ஆரோகணம்: ஸ் ப ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 ம1 க3 ப ம1 ரி2 ஸ்


முதலில் நாம் கேட்க இருப்பாது "சந்திரோதயம்" என்ற படத்தில் அமைந்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" என்ற பாடல். சுத்தமான ஹமீர் கல்யாணியில்   துவங்கும் இந்தப் பாடலில், பின்னர் சில அன்னிய ஸ்வரங்கள் கலக்கின்றது. இருந்த போதும் ஹமீர் கல்யாணியில் அமைந்த ஒரு அருமையான பழைய பாடல் என்பதனால் இத்துடன் துவங்குகின்றோம்.அடுத்து கேட்க இருப்பது "கர்ணன்" படத்தில் இடம் பெரும் "என்னுயிர் தோழி" என்ற பாடல். எளிதில் பொருள் புரியும் இந்தப் பாடலுக்கு ஒரு அருமையான கோரியோக்ரபி. சிவாஜியும் அசோகனும் ஓரிரு கணங்களே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கின்றார்கள்.திரையிசைப் பாடல்களுக்கே உரிய சுதந்திரத்துடன் ஒரு ராகத்தில் (ஹமீர் கல்யாணியில்) ஆரம்பித்து மற்ற சில பல ராகங்களுக்குள் சஞ்சாரம் செய்து விட்டு, மீண்டும் அரம்பித்த ராகத்துக்கே வரும் சில பாடல்களை இப்போது பார்போம்.

"காயத்ரி" படத்தில் இடம் பெறும் "காலைப் பனி" என்ற பாடல்."கல்யாண அகதிகள்" என்ற படத்தி வரும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்" என்ற பாடல் இங்கே.அடுத்து "தெனாலி" படத்தில் இடம் பெறும் "ஸ்வாசமே என் ஸ்வாசமே" என்ற பாடல்.நிறிவாக "லவ் பேர்ட்ஸ்" படத்தில் இடம் பெரும் "மலர்களே, மலர்களே"' என்ற பாடல்.