Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 01


நவராத்திரிப் பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்களில் ஒன்று. குறிப்பாக இந்தப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா” என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம். இதே போல ஜப்பான் நாட்டினரும் பொம்மைகளை வைத்து விழா எடுப்பதாக அறியப்படுகின்றது.

நவராத்திரிப் பண்டிகைக்கும்  மற்ற பண்டிகைக்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன். மற்ற பண்டிககள் ஒன்று அல்லது இரண்டு நாடகள்தான் கொண்டாடப்ப்டும். ஆனால் நவராத்திரியோ ஒன்பது அல்லது பத்து நாட்கள தொடர்ச்சியாக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். மற்ற பண்டிகைகளில் ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நவராத்திரிப் பண்டிகையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பங்கு கொள்ளூம் வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் நவராத்திரிப் பண்டிகையானது பதினான்கு நாட்கள் கூட விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடு நிறையக் கொலு வைத்து ஊரில் உள்ள அனைவரையும் தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பார்கள். மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற சமஸ்தானங்களில் நவராத்திரி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தன. பொதுவாகக் கலைகள் எங்கு கொண்டாடப்பட்டதோ அங்கெல்லாம் நவராத்திரிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொலு வைப்பதில் வீட்டுப் பெண்களும் ஆண்களும் மும்முரமாக இருக்க, கொலுவுக்கு அக்கப் பக்கத்தில் இருப்பவர்களை அழைக்க வீட்டில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணர், ராதை போன்ற வேடமிட்டுச் சென்று அழைப்பதும் வழக்கம்.

பாரம்பரியமாகக் கொலு வைப்பவர்கள் தங்கள் முன்னோர்களின் வழியிலேயே கொலு வைப்பார்கள. அப்படியல்லாமல் சிலருக்கு புதிதாகக் கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதுண்டு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம் அனுமதியளிக்குமோ என்று குழம்புவார்கள். ஒரு நல்ல விஷயத்தைத் துவக்குவத்தில் தயக்கமே தேவையில்லை. இது தவிர, தற்காலத்தில் பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில், கொலு வைப்பது என்பது சற்று சிக்கல் நிறைந்தது தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சரியான திட்டமிடலுடன், குடும்பத்தினரின் ஒத்துழப்பும் கிடைக்கக் கொலு வைப்பது என்பது எளிதான வேலையாகும். அதற்கான எளிய முயற்சியே இந்தப் பதிவுத் தொடராகும்.

தொடரும்…
- சிமுலேஷன்
-


0 comments: