Saturday, February 12, 2011

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் – நூல் விமர்சனம்


இ.பா என்றழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதியின் கதைகளில் ஒன்றான் “ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன” படித்த பின்பு, அதனைப் பர்றி ஒரு பதிவு இடவேண்டுமென்று எண்ணி இதுநாள் வரை அது நிறைவேறவில்லை. ஆனால் சமீபத்தில் படித்த “இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்” படித்தவுடன் அவை குறித்து உடனே பதிவு இடவேண்டுமென்ற வகையில் அவை சுவாராசியமானவை.

இவரது கட்டுரைகளில், சங்க இலக்கியம் மற்றும் தமிழரின் தற்கால வாழ்க்கை முறைகள் பற்றி அதிகம் பேசுகின்றார். அடுத்ததாக மார்க்ஸிசம் பற்றிப் பேசுகின்றார். கட்டுரைகளின் தலைப்புகள் அழகாகவும், அதில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு பொருத்தமாகவும் உள்ளன. இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டம் தொண்ணூறுகளின் இறுதியாக இருந்திருக்கலாம். புத்தகத்தின் முதற்ப் பதிப்பு 2000ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதனால். எல்லாக் கட்டுரைகளிலும் தற்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த எரிச்சலைத் தெரிவித்தாலும், இ.பா போன்ற ஒரு சிலராவது இது போன்ற கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார்களே என்று மெத்த  மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 

“பாரத வர்ஷே; பரத கண்டே” என்ற இந்தக் கட்டுரையில் ‘தேசபக்தி’ என்ற சொல்லாடலே இந்தியாவில் இருந்ததில்லை என்றும் , அது ஒரு உருவாக்கப்பட்ட ‘சொல்லாடல்’ என்றும் குறிப்பிடுகின்றார். ‘தேசபக்தி’ என்று ஜல்லியடிப்பவர்களைப் பார்த்து இ.பா பெரிதும் கடுப்பானவர் போலத் தெரிகின்றது. தாய்நாடு, தாய்மொழி என்ற கருத்துக்கள் யாவும் மேல் நாட்டிலிருந்து இறக்குமதியானவை என்கிறார்.  ‘மாத்ருபூமி’ அல்லது ‘தாய்நாடு’ என்ற சொல்லாட்சி, மேல் நாட்டுப் பாதிப்புக்கு முன்னால் இந்தியாவில் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. தேசப்பற்று என்ற பிரக்ஞை அக்கால மக்களுக்கு அரசியல் அடிப்படையில் இல்லை என்றாலும், ‘ஊர்ப்பற்று’ இருந்திருக்கிறது. அதாவது ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவரோ அந்த ஊரின் பால் உணர்ச்சிகரமான ஈடுபாடு நம்நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றது, என்றும் சொல்லுகின்றார். அளவுக்கு மீறிய இந்த ‘ஊர்ப் பற்றை’ச் சாடுவதற்காகவே ‘கணியன் பூங்குன்றனார்’, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, என்று பாடினோரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கட்டுரையில் ஆரிய, திராவிடப் பிரச்னையைச் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எழுப்பிக் கொண்டிருப்பது, இ.பாவுக்கு ‘டான் குயோட்ட்டோ’வை (Don Quixote) நினவூட்டுகின்றதாம். கடந்து போன பொற்க்காலக் கதாநாயகனாகத் தன்னைப் பார்த்துக் கொண்டு, காற்றாலை இயந்திரங்களை எதிரிகளாக நினைத்து, அவற்றுடன் போரிடுவத்து டான் குயோட்டின் பொழுதுபோக்கு.  இந்தக் கட்டுரையில்  ‘மகாபலிபுரம், தஞ்சைப்பெரிய கோயில், தாராசுரம், சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்” எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கின்றதே என்று அங்கலாய்க்கின்றார். ‘தரம் தாழ்ந்த திரைப்படம், அரசியல், வழிபாட்டுணர்வு’ ஆகிய மூன்றின் கலவையே தமிழர்களின் சமுதாய நெறிகளாக மாறிவிட்டது என்று சொல்லும்  இ.பாவின் குரல் எனக்கு ஜெயகாந்தனின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுகின்றது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற இந்தக் கட்டுரையில் பரத நாட்டியத்தையும், கர்நாடக இசையையும், ஓர் உயர்தர ரசனை நிலையிலிருந்து அனுபவிக்கும் தமிழ்ப் புரவல மேட்டுக் குடியினர் எத்தனை பேர் நடனத்துக்கும், இசைக்கும் அவர்கள் பயன்படுத்தும் அளவுகோல்களை வைத்துக் கொண்டு இக்காலத் தமிழிலக்கியம் படிக்கைன்றார்கள்?” என்பது போன்ற நமது பல ரசனைக் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் இ.பா, பிரச்னைக்குத் தீர்வும் நம் கையிலேதான் உள்ளது என்கிறார். “என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்” என்ற தலைப்பில் “பேசும் தமிழ் மொழிக்கும், எழுதும் மொழிக்கும் பெரிய இடைவெளி இருப்பதனால், செந்தமிழ், நவீனத் தமிழ் என்று இரண்டு வகைத் தமிழும் தேவை”, என்று வலியுறுத்துகின்றார். “என்று தணியும் இந்த அடிமையின் மோகம்” என்ற தலைப்பில் ‘நூற்றைம்பது ரூபாய் கொடுத்து ஆர்தர் ஹெய்லி வாங்குவோமே தவிர, முப்பது ரூபாய் கொடுத்து ஜெயகாந்தன் வாங்குவோமா?’ என்று வினவும், இ.பா, காலனி ஆதிக்கத்தின் எச்சமாகிய மொழி அடிமை உணர்வு நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை என்றும் கூறுகின்றார். அடுத்து வரும் “வேரில்லா அற்புதங்கள்” என்ற கட்டுரையில் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் மகள் கான்வெண்டிட்டில் படித்து வந்ததாகவும், அவள் ஒரு முறை எதிர்வீட்டுப் பஞ்சாபி பெண்ணுடன் சண்டை போடும்போது, அமெரிக்கன்  “ஸ்லாங் டிக்ஷனரி” கூட போடுவதற்குக் கூச்சப்படும், ‘பசுமையான சொற்களை’ப் பயன்படுத்தும்போது, திகைத்துப் போய் நிற்கின்றார்.  ‘வரலாற்றின் நகைச்சுவை என்ற கட்டுரை படிக்கும்போது பல புதிய தகவல்கள் தெரிகின்றன. அதாவது தொழில்கள் பரம்பரை வழியனவாக இருந்தனவாக ஆரம்ப ரிக் வேதத்தில் கூறப்படவில்லையாம். ஒரு ரிஷி தாம் கவிஞரென்றும், தம் தந்தை மருத்துவரென்றும், தாய்வழிப் பாட்டனார் ‘கல் உடைப்பவர்’ என்றும் கூறுகின்றாராம்.  வரலாற்று கதாநாயகர்களைப் பற்றி ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதியபோது, அவர்களின் பலங்களையும், பலகீனங்களையும் சொல்லியிருப்பது போல, நம்நாட்டு வரலாற்றுக் கதாநாயகர்களைப் பற்றி நம் கதாசிரியர்கள்  கூற முடியுமா? ராஜ ராஜன் காலத்தில் தேவதாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? (எனக்குத் தெரியவில்லை). மாமன்னர் அக்பர் ஒரு சின்னப் பெட்டியில் விஷம் தோய்ந்த இனிப்புப் பண்டங்களையும், இன்னொரு பெட்டியில் நல்ல இனிப்புப் பண்டங்களையும் வைத்து, (வேலைக்காரர்களை?) பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்து உண்ணச் சொல்லுவாராம். அதிர்ஷ்டமிருந்தால் நல்ல பெட்டியிலிருந்த்து தேர்ந்தெடுப்பான். இல்லாவிட்டால் மரணம். இது அக்பருக்கு ஒரு விளையாட்டாம். ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்ற கட்டுரையில் பெண் விடுதையைப் பற்றிப் பேசும்போது, பாரதி கூட ‘பெட்டைப் புலம்பல்’ என்று அவரையறியாமல் கூருகின்றான் என்கிறார். பாரதிதாசன் காணும் பெண்ணோ, தமிழ் ஆண்கள் சுயநலத்தின் காரணமாக மத்தில் உருவகிக்கும் பெண்ணின் படிவம்தான். ஔவையாரைப் பற்றிக் கூறும்போது, முதுமையை வலிந்து ஏற்றுக் கொண்ட நிலையில்தான் ஆண்களாகிய அரசர்களுடன் தோழமை கொண்டாட முடிகிறதென்றும், அழகிய இளம் பெண்ணாகவே தொடர்ந்திருந்தால், ஏதாவ்து ஒர்ர் அரசரின் அந்தப்புரத்தை அலங்கரிக்க நேர்ந்திருக்கும். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் முதலிலும், முடிவிலும் தீர்மானமாக இ.பா சொல்வது, ‘பெண்களைக் கண்டு அஞ்சும் ஆண்கள் ஒன்று அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள் அல்லது தெய்வமாக்க விரும்புகிறார்கள். ‘படமாடும் கோயில்களும் நடமாடும் நம்பர்களும்’  என்ற தலைப்பில்  கோயில்களின் தூய்மை பற்றியும், பொதுவாகவே இந்து ஆலயங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் சொல்லுகின்றார்.

மேற்கண்ட கட்டுரைகள் போல இந்தப் புத்தகத்தில் பல்வேறு தைஅலூகளில் மொத்தம் 27 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் போஸ்டர் கலாசாரம், சாதிப் பாகுபாடுகள். சினிமாக் கவர்ச்சி, உள்வட்டக் கண்ணோட்டம் (Elitism), நாடகங்கள், கபிலரின் கவிதை, கண்ணகியின் கற்பு  போன்ற பல்வேறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றார்.

200 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பினை வாசித்த பின், பல புதிய விஷயங்களும் , பல புதிய  கண்ணோட்டங்களும் கிடைத்துள்ளன. இ.பாவின் மற்றைய ஆக்கங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுள்ளன இந்தக் கட்டுரைகள்.

பெயர்:       இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு:      அருந்ததி நிலையம் – 2000
விலை:      Rs.55

-      - சிமுலேஷன்