Monday, May 10, 2010

புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.

கதை இலாகாவில் ஒரு முக்கியப் புள்ளியாகிய சர்மாவும், இவரும் ஒரு நாள் ஸ்டுடியோவில் தனியே அமர்ந்திருக்கும்போதுதான் "டகர் பாயிட் காதர்" வருகின்றான். வெள்ளை என்ற ஏஜெண்ட் சொல்லி அனுப்பியதாகச் சொல்லி வந்து வேலை கேட்கின்றான். அவனுக்குக் கொடுப்பதற்கு தோதாக ஒரு பாத்திரமும் இல்லை என்று திருப்பி அனுப்ப எண்ணுகிறார்கள். ஆனால் அவன் இடத்தைக் காலி பண்ணுவதாக இல்லை.


"டகர் பாய்ட் வரும்க; என் பேரே டகர் பாய்ட் காதர்தானுங்க" என்கிறான் காதர். கதையின் பெயர் "புலிக்க்கலைஞன்" என்றிருப்பதால், "டகர் பாய்ட்" என்றால் "டைகர் ஃபைட்" என்று புரிந்துகொள்ள முடிகின்றது. டகர் பாய்ட்டிலே சுவாரசியம் செலுத்தாமலே இருப்பவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்ய எண்ணுகின்றான் காதர்.


தான் கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து, புலித்தலை ஒன்றினை எடுத்துத் தலையில் மாட்டிக் கொள்கிறான். அதற்கப்புறம் அவன் செய்யும் சாகசங்களை விலாவாரியாக விவரிக்கின்றார் அசோகமித்திரன். அங்கேதான் அ.மி ஒரு கை தேர்ந்த கதை சொல்லி என்று புரிய வைக்கின்றார்.


புலிக்கலைஞனின் சாகசங்களால் கவரப்பட்ட சர்மாவும், மற்றவர்களும் அவனுக்கு ஒர் வாய்ப்பு கொடுப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் கதையில் ஒர் இடைச்செருகல் செய்யத் தீர்மனிக்கிறார்கள்.சில நாட்கள் கழித்து காதர் கொடுத்திருந்த விலாசத்திற்குக் ஒர் கடிதமும் போடுகிறார்கள். ஆனால் கடிதம் திரும்பி வந்து விடுகின்றது. எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. அவன் அகப்பட்டிருந்தாலும் பயன் இருந்திருக்காது. கமர்சியல் சினிமாவின் காரணிகள் அப்படி.


இந்தக் கதையில் புலிக்கலைஞனான டகர் பாய்ட் காதர்தான் கதாநாயகன். அனால் வில்லன்கள் என்று யாருமே இல்லை. சிறுகதைகளின் இலக்கணப்படி முதல் பாராவிலேயே வாசகர்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அதிரடி வாக்கியங்கள் ஏதுமில்ல. ஆனால், வாசகனுக்குத் தனது கூர்ந்த கவனிப்பின் மூலம், புலிக்கலைஞன் என்றால் எப்படி இருப்பானென்றும், இந்த மாதிரி விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்றும் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகின்றார் அசோகமித்திரன்.


- சிமுலேஷன்