Wednesday, June 20, 2012

இதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா? - 01

நம் நாட்டில் பலவேறு தலைவர்களும், பிரபலங்களும் இருந்தார்கள். அனவரிடம் உள்ள நிறைகளைப் போலவே,  மனிதர்களுக்கே உண்டான குறைகளும் இருந்தன. அவற்றைப் பெரிதுபடுத்தாமல் போவதில் தவறில்லை. ஆனால் ஹீரோ வொர்ஷிப் செய்தே பழக்கப்பட்ட நமக்கு இந்தப் பிரபலங்கள் செய்த எல்லா விஷயங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோமே! இது சரிதானா? இது குறித்து என்னுள் எப்போதுமே நெருடிக் கொண்டிருக்கும் சில கேள்விகள் இங்கே:-

 

ஒவ்வொரு முறையும் ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்களின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார் ஸாஸ்திரி. ஆனால், பிரதமர் நேருவோ அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். மீண்டும் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஸாஸ்திரி மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் அதனை ஏற்றுக் கொள்கின்றார்.

லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணம் என்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியா? சரியோ, தவறோ, இதற்காகப் போய் அவரை நாம் பாராட்டுவதும் சரிதானா?


காமராஜர் இந்திய அரசியலில் ஒரு முன்னுதாரணமாக, எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கல்வித் துறையிலும், தொழிற்துறையிலும் உண்மையாகவே மாபெரும் சாதனைகள் படைத்தவர். எத்தனையோ காரணங்களுக்காக அவரிப் புகழ்ந்து கொண்டே போகலாம்.

இருந்த போதும், அவரை King Maker என்று புகழுவது சரிதானா? ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும்? இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா? நேருவின் மகள் என்பதற்காக மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கு காமராஜர் பரிந்துரை செய்திருந்தால், அதற்காக காமராஜர் King Maker என்று புகழப்படத்தான் வேண்டுமா?


மது தண்டவதே சிறந்த பொருளாதார அறிஞர். மொரார்ஜி அமச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ரயில்வே அமைச்சராக இருந்த போது நல்ல பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். வாழ்வின் இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர்.

மது தண்டவதேயைப் பற்றி ஊடகங்களில் எழுதும் போதெல்லாம், அவர் கலர் டி.வி.கூட வைத்துக் கொள்ளாதவர் என்று பெருமையாக எழுதுவார்கள். எளிமையாக இருப்பது நல்லதுதான். அதற்காக கலர் டி.வி தொழில் நுட்பம் வந்த பின்பு கூட 'கருப்பு-வெள்ளை' டி.வி.தான் பார்ப்ப்பேன் என்று சொன்னால் அதில் என்ன பெருமை? மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா? இந்த ஒரு விஷயத்திற்காக மது தண்டவதே அவர்களைப் போற்றிப் புகழ்வது சரிதானா?

 

ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கள்ளுக் கடை மறியல் போராட்டம் எற்பட்ட போது அவருக்குச் சொந்தமான தென்னந் தோப்பிலிருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார் என்று பெருமையாகச் சொல்வார்கள். கள் வேண்டாமென்றால் தென்னை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதனை நிறுத்தினால் போதுமே! எதற்காக காய்த்துக் குலுங்கும் மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக ஈ.வெ.ரா அவர்களைப் புகவது சரிதானா?

மேலும் வரும்...

- சிமுலேஷன்