Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்



சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம்.

அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம் விஸ்வநாதன் இந்த நாடகத்தை ஏற்று நடித்தாரா, இல்லை, பூர்ணத்தை மனதில் வைத்து, சுஜாதா நாடகம் எழுதினாரா என்று தெரியாது. அவ்வளவு நல்ல பாத்திரப் பொருத்தம்.

ஐம்பத்தெட்டு வயதுடைய வரதராஜன்தான் கதையின் நாயகர். அவருடைய மகள் கல்யாணியின் சம்பளத்தில் ஜீவனம் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவியிடம் அவ்வப்போது பாட்டு வாங்கிக் கொண்டிருகின்றார். தற்காலத்தால் உதானீசப்படுத்தபடும் ஒரு பழங்காலத்து மனிதர் அவர். தனது புரோட்டோடைப் ஒருநாள் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கனவுலக மனிதர். ஆனால், கையில் காசில்லை. கால் பாக்கட் சிகரெட்டுக்குக் கூட, கல்யாணியின் கையை எதிர்பார்த்திருப்பவர். இந்த லட்சணத்தில் மகளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்? தன்னிடம் கை கட்டி  வேலை பார்த்த மதிவதனம் அவருக்கென்று ஒரு வேலை போட்டுக் கொடுத்தவுடன், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நிம்மதி ஏற்படுகின்றது. ஆனால் அந்த நிம்மதி அதிக நேரம் நீடிப்பதில்லை.  

எப்போதும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு பழமைக்கால நினவுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த ஊஞ்சலும் அவரும் ஒன்றுதான் என்பது சுஜாதா இறுதிக் காட்சியில் தெரியப்ப்டுத்துகின்றார்.

சிறுகதைகளிலேயே பேச்சுத் தமிழைப் பயன்படுத்துபவர், நாடகம் என்றால் கேட்கவே வேண்டாம்.

"அப்பா: ஆமா...நீ பாங்க்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லாடிரா நீ!"


"நேரா வந்து வுயுந்தான்யா..."

"பாவம் டைவரு. எவ்வளளோ சாலாக்காத்தான் ப்ரேக் போட்டாரு."

பேச்சுத் தமிழ் தவிர, பங்க்சுவேஷன்ஸும் அங்கங்கே தேவையான அளவில் இருந்து, படிப்பவர்களுக்கு என்ன சூழ்நிலை என்பதனை எளிதில் புரிய வைக்கும். மேலும் அடைப்புக் குறிக்குள் காட்சியில்  என்ன நடக்கின்றது என்பதனையும் விளக்குகிறார். இந்த அடைப்புக்குறிக் குறிப்புகளைப் படிக்கும்போது, மேடையிலே ஏற்ற வேண்டிய நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட்தான் இது என்று தெரிகின்றது. 

வரதாராஜன், அவரது மனைவி, மகள் கல்யாணி, கிரி, மதிவதனன், என்று கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களுமே, நாடகம் தானே இது என்றுப் பேசிப் பேசி அறுக்காமல், சொல்லின் செல்வர்களாக அளவாகப் பேசுகின்றார்கள். எனவே சுஜாதாவின் சிறுகதையினை எப்படி ரசிக்கின்றோமோ அப்படியே, இந்த ஊஞ்சல் நாடகத்தினையும் ரசிக்க முடிகின்றது. வரதராஜன் தற்கால நிலைமையும், முடிவும் படிப்பவர்ககள் மனதை அசைக்கும் என்பது உண்மை. அதுவே சுஜாதாவின் வெற்றி.


தலைப்பு:    ஊஞ்சல்  / உங்களில் ஒரு கணேஷ் 
பதிப்பாண்டு: 1989 
வெளியீடு:   விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை:      Rs.55

- சிமுலேஷன்