Friday, February 26, 2010

நாணயவியல் (Numismatics)

நியூமிஸ்மேடிக்ஸ் (Numismatics) எனப்படும் "நாணயவியல்" ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல. உலக அறிவினை மேம்படுத்தும் ஒரு நல்ல கலையாகும். இந்தக் கலையினில் எந்த வயதினரும் ஈடுபடலாம்.

நான் சிறிய வயதில் இருக்கும்போது, என அப்பா சில பழைய கால நாணயங்கள் வைத்திருப்பது பார்த்திருக்கின்றேன். அவற்றில் சில கிழக்கிந்தியக் கம்பெனியுடையதும் கூட. அவருக்குப் பிறகு, நான் அந்த நாணயங்களை பத்திரமாக வைத்திருந்தாலும், மேலும் நாணயங்கள் சேர்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சில வருடங்கள் முன்பு எங்கள் கம்பெனியில் ஸ்ரீகாந்த் சேர்ந்த போது, அவருடய புரஃபைல் சுற்றுக்கு வரும்போது அவருடைய பொழுதுபோக்குகளில் நாணயவியலும் ஒன்று என்று தெரிய வந்தது. அவருடன் பேச்சுக் கொடுக்கும்போது இந்தக் கலையினைப்பற்றி சுவாரசியமான பல விஷயங்களைச் சொன்னார். அவரது நாணயங்களின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேல் என்று கேட்டபோது எனது ஆச்சரியம் பல மடங்கு கூடியது.

எனது அப்பா விட்டுச் சென்ற நாணயங்களைத் தவிர, நானும் பல நாணயங்கள் வைத்திருந்தேன். எப்படியென்றால், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும், அந்த நாட்டில் மீந்த கரன்சி நோட்டுக்களை எக்ஸ்சேஞ்ச் கவுண்டரில் கொடுத்து மாற்றுவது வழக்கம். ஆனால் நாணயங்களை மட்டும் மாற்றுவதற்கு  பெரிய சோம்பேறித்தனம். இப்படியாகவே பல நாணயங்கள் என்னிடம் என்னையறியாமலே சேர்ந்து விட்டன. ஸ்ரீகாந்தைப் பார்த்த பின்பு, இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தி விட்டேன். இப்போது "நானும் ஒரு நியூமிஸ்மேடிஸ்ட்; நானும் ஒரு நியூமிஸ்மேடிஸ்ட்", என்று சொல்லிக் கொள்ளும் ரேஞ்சுக்கு வந்துவிட்டேன். இப்ப அடுத்ததா என்ன? அடுத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா? அதனாலதான் இந்தப் பதிவு.

முதலில் நாணயங்களை சேகரியுங்கள். எப்படி? யாரிடமிருந்து? உங்களைப் போலவே இந்தக் கலையில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து. பழைய நாணயங்களைப் பத்திரமாக வைத்திருக்கும் பெரியவர்களிடமிருந்து. ஏன்? இதற்காகவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமிருந்தும், நாணயக் கண்காட்சிகளிலும் காசு கொடுத்துக்கூட வாங்கலாம். ஆனால் கிடைத்தற்கரிய அஞ்சு பைசா கண் முன்னாடி இருக்கிறதே என்று யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட வேண்டாம். நாணயங்களை நாணயமாகவே சேகரியுங்கள்.


அடுத்ததாக, இந்த நாணயங்களை ஆராயுங்கள். எந்த நாட்டினுடையது? எந்த வருடம் வெளியிடப்பட்டது? எவ்வளவு மதிப்பு கொண்டது. யாருடைய நினவாகவேனும் வெளியிடப்பட்டதா? என்ன உலோகத்தால் ஆனது? ஒன்றுக்கும் மேற்பட்ட உலோகங்கள் உண்டா? இப்போதுதான் இந்தக் கலையில் ஆர்வம் கொண்டிருக்கின்றீகளென்றால் இந்தத் தீவிர ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். "இல்லை நானயத்தின் விட்டம் எவ்வளவு? தடிமன் எவ்வளவு? அதன் வரந்தைகளில் பூ வேலைப்படுகள் உள்ளனவா?" என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி செய்துதான் தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தால் பூதக் கண்ணாடிகளின் உதவி தேவையாயிருக்கும். 

நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் மதிப்பு உண்டு. குறிப்பாக பழைய புராதன நாணயங்கள் மற்றும் புத்தம் புதிதாக வெளியிடப்பட்டுப் புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள். இத்தகைய நாணயங்கள் கீறல் எதுவும் விழாமல் பத்திரமாகக் கையாளப்பட வேண்டும். (தவறாக வெளிடப்பட்ட நாணயங்கள்  மற்றும் தவறாக அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் விலை மதிப்பற்றவை). எனவே அதற்குண்டான உறைகளை (Coin Holders) வாங்கிக் கொள்ள வேண்டும். இவை 1ஆம் நம்பரிலிருந்து 10ஆம் நம்பர் வரை என்று பல்வேறு அளவுகளில் மூர்மார்க்கெட் போன்ற இடங்களில் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
 
இந்த ஹோல்டரில் அளவு பார்த்து ஒவ்வொரு நாணயமாகப் போட்டு, நாணயம் வெளியில் வராதபடி, ஸ்டேப்பிளர் துணை கொண்டு ஸ்டேப்பிள் செய்து விடுங்கள்.

அடுத்து, எந்த நாடு, எந்த வருடம் போன்ற ஒவ்வொரு நாணயத்திற்குமுண்டான தகவல்களை இந்த ஹோல்டரின் மேல் தெளிவாக எழுதிவிடலாம்.

ஹோல்டரில் போட்டாலும், இந்த நாணயங்களை அப்படியே கையாளுவது சற்று கஷ்டம்தான், எனவே இந்த ஹோடர்களை நாணயங்களுக்கான ப்ரத்யேக ப்ளாஸ்டிக் கவரினில் செருகி வையுங்கள். இந்த ப்ளாஸ்டிக் கவர் நல்ல தரமானதாக இருப்பது அவசியம். மட்டமான pvc கவராக இருந்தால், அதிலிருந்த்து வெளியாகும் கெமிக்கல்கள் உங்களின் மதிப்பு மிக்க நாணயங்களைப் பாழாக்கலாம்.

அடுத்ததாக, இந்த ப்ளாஸ்டிக் கவர்களை அதற்குண்டான ஆல்பத்தில் வரிசயாகத் தொகுத்து வைக்க வேண்டும், 
பெரும்பாலோனோர் நாடு வாரியாக, வருட வரிசையில் (chronological order) வைப்பது வழக்கம். நீங்கள் உங்களுக்குப் பிடித்த themeனைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தலாம். உதாரணமாக, தலைவர்கள் படம் பொறித்த நாணயங்கள், விலங்குகள் படம் பொறித்தவை, பறவைகள் படம் பொறித்தவை என்று. சில சமயம் இத்தகைய themeன் அடிப்படையிலேயெ ஆல்பங்கள்கூடக் கிடைக்கக் கூடும். உதாரணமாக அமெரிக்கவில் பில் கிளிண்டன் அதிபராக இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் நினைவாக, "கால் டாலர்" மதிப்புள்ள நாணயங்களை வெளியிடலாமென்று அனுமதியளித்தார். இதன் விளைவாக இன்று அமெரிக்கவின் 50 மாநிலங்களும் இத்தகைய "கால் டாலர்" நாணயங்களை வெளியுட்டுள்ளன. இந்த நாணயங்களைச் சேகரித்துப் பத்திரபடுத்துவதறகாகவே ஆல்பங்கள் கிடைக்கின்றன. அதைத்தான் இங்கே பார்க்கின்றீர்கள்.

இத்தகைய ஆல்பங்களில் நாணயங்கள் வைப்பதற்கென்றே ப்ரத்யேகக் குழிகள் இருப்பதனால் பெரிதும் கஷ்டப்படத் தேவையில்லை. அப்படியே பதிக்கலாம். நான அமெரிக்காவிலுள்ள உறவினர்கள் குழந்தைகளுக்கு இத்தகைய ஆல்பங்களைப் பரிசாக அளிப்பது வழக்கம். தங்கள் மாநிலம் தவர வேறேதும் தெரிந்திராத இந்த குழந்தைகள், இந்த பொழுதுபோக்கின் காரணமாக பல வேறு மாநிலங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளுகிறார்கள். அம்மா, அப்பா பாடுதான் திண்டாட்டம். பின்னே தினமும் கால் டாலர் கேட்டு நச்சரித்தால்.

நாணயவியல் என்றால் உலோகத்தினால் ஆன நாணயங்களைப்பற்றி மட்டுமல்ல. அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களும் இதில் உண்டு. ஆனால் சிலர் உலோக நாணயங்களை மட்டும் சேகரிப்பர்கள். சிலர் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களை மட்டுமே சேகரிப்பார்கள். சிலர் இரண்டிலும் ஆர்வம் காட்டுவர்.


அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களை அதற்குண்டான ஆல்பத்தில் எளிதாக வைத்துக் கையாள முடியும். ஆனால் அடிக்கடி வெளியே எடுக்கக் கூடாது. கிழிந்துவிடும் வாய்ப்புக்கள உண்டு.


நாணயவியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரும் ஈடுபடக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் தற்காலத்தில் இதில் பலரும் ஈடுபட, நாணயங்களின் மதிப்பு எங்கோ போய்விட்டது. அதிலும் குறிப்பாக ebay போன்ற ஆன்லைன் வர்த்தகம் வந்தபின், யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் விற்கலாம் என்றான பின், நாணயங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. என்னிடம் உள்ள நாணயங்களின் மதிப்பு என்ன தெரியுமா? வேண்டாம். அப்புறம் சொல்றேனே. 

வலைப்பதிவர்களே. நாணயவியலில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தாலோ, மேலும் தகவல் ஏதேனும் என்னிடமிருந்து பெற விரும்பினாலோ பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

- சிமுலேஷன்

Coin Collecting For Dummies