Saturday, January 28, 2006

சுட்ட அப்பளம்

A47ல் வந்து அடையாறு ஸிக்னலில் இறங்கி பத்து நிமிடமாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் வீடு வந்து சேரவில்லை. மற்ற பஸ்களில் ஏறினால் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள நிறுத்தத்தில் இறங்கலாம். இருந்தாலும், குறைந்த இடங்களிலேயே இந்தப் பஸ் நிற்பதனால் அண்ணாநகரிலில் நான் வேலை செய்யும் வங்கியிலிருந்து வீட்டிற்கு அரை மணியில் வந்து சேர முடிகின்றது.

நான் குடியிருக்கும் நேருநகர் 3ஆம் தெரு முனையில் இருக்கும் காலி மனையினைத் தாண்டி வரும் போது இன்றும் அந்த வாசனை அடித்தது. வாசனை என்று சொல்லலாமா? இல்லை. நாற்றம் என்றே சொல்லலாமா? எதோ ஒன்று. அப்பளம் சுடும் போது வருமே, அதே வாசனைதான். இப்போதெல்லாம் வீட்டில் அப்பளம், வடாம் செய்வதேயில்ல. அண்ணாவுக்கு கொலஸ்ட்ரால் என்று சொல்லி எண்ணெய்ச் செலவையும் கட்டுப்படுத்திவிட்டோம். சின்ன வயதில் அம்மா அடிக்கடி அப்பளம் பொரிப்பாள். சுடுவாள். அப்போது கூட எதுவும் தோன்றியதில்லை.

ஆனால், ஒரு வாரம் முன்பு, இதே வழியாக, சந்துருவுடன் நடந்து வரும் போது அவன் சொன்னது இந்த வழியில் வரும் ஒவ்வொரு முறையும் நினவுக்கு வருகின்றது.

"இந்த இடத்தில் பாம்புகள் நிறைய உள்ளன. அதனால்தான் இந்த வாசனை" என்றான் சந்துரு.

"அப்படியா! நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்கோர்ஸ் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் குவார்ட்டர்ஸ் பக்கம். அங்கேயெல்லாம் நாங்கள் பாம்பே பார்த்ததில்லை."

"நம்ம ஏரியாவிலே கூட இத்தனை நாளே இல்லை. இப்பத்தான் கொஞ்ச நாளா."

"சந்துரு, நாம யாராவது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து இந்தப் புதரையெல்லாம் வெட்டிப் பாம்பை அடிச்சா என்ன?"

"நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். வேகன்ட் லான்ட் ஓனர், ட்ரெஸ் பாஸிங்னு சொல்லிக் கேஸ் போட்டுட்டான்னா; இரண்டாவது நாம வம்புக்குப் போகாத வரைக்கும் பாம்பு நம்மை ஒண்ணும் பண்ணாது. நாமளா வெணும்னே அதை அடிச்சா பாவம். அந்தப் பாவம் நம்மளோட போகாது. தலைமுறை, தலைமுறையா வருமாம்."

"இருந்தாலும் இந்தத் தெருவிலே எத்தனை குழந்தைங்க இங்கெல்லாம் வந்து விளையாடறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லையே!"

"கல்யாண். எனக்குத் தெரிஞ்சு ஆறு மாசமா இங்கே பாம்புகள் இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கி ஒண்ணும் ஆகாது. சும்மா கண்டதுக்கெல்லாம் பயப்படாதே."

சந்துருவின் வார்த்தைகளால் தற்காலிகமாக சமாதானம் ஏற்பட்டாலும், ஒவ்வொரு முறை இந்தத் தெருவைக் கடக்கும் போதும், ஒவ்வொரு முறை இந்த வாசனை வரும் போதும் எனக்கு மனக்கலக்கம் ஏற்படும்.

இன்று ஏதெனும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். பொதுவாகவே, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டது என்றாலோ, புகார் கொடுக்கக் கூடிய முதல் பொது சேவகனாக எங்கள் தெருவில் இருந்து வந்தேன். இந்தப் பாம்பு விவகாரத்தில், யாரிடம் போய், என்ன புகார் கொடுப்பது என்று தெரியவில்லை. பாம்பைக் கொல்வது வேறு தலைமுறை பாவம் என்று சந்துரு சொன்னதும் நினவுக்கு வந்தது.

என்னதான் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு யோசனை தோன்றியது. பாம்புப் பண்ணைக்குத் தொடர்பு கொண்டால் என்ன. அவர்கள் ஆட்களை அனுப்பி பிடித்துச் செல்வார்கள் அல்லவா என்று தோன்றியது. நாளை ஆபீஸிலிருந்து போன் செய்து விட வேண்டும். அப்படியே அவர்கள் ஒத்துக் கொண்டாலும், வந்து பிடித்துச் செல்லும் வரை பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது?

"நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டுகள் பார்த்திருப்பீர்கள். அதைப் போல "பாம்புகள் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்தால் என்ன? என்று தோன்றியது. சனிக்கிழமை காலை ஓய்வாக இருக்கும் போது "பாம்புகள் ஜாக்கிரதை" என்று ஒரு பெரிய அட்டையில் எழுதி, அந்த மனைக்கு அருகே உள்ள விளக்குக் கம்பத்தில் மாட்டி விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வெள்ளிக் கிழமை மாலையின் சந்தடிகளை மீறி, அடையாறுக்குள் நுழைய மணி ஆறாகி விட்டது.

தெருவில் நுழையும்போதே மௌனமான பரபரப்பு ஒன்று தென்பட்டது. எதிரில் கணேசன் ஸ்கூட்டரில் வந்த்தார். என்னைப் பார்த்தவுடனே வேகத்தைக் குறைத்தார்.

"என்ன சார் கூட்டம்? ஏதாவது விசேஷம்?"

"அந்தக் கோரத்தை ஏன் சார் கேக்கறீங்க. நம்ம ப்ளாட்டுக்கு எதிரிலே இருக்கும் ஒர் சின்ன வீடு.

அங்கே புதுசா குடி வந்தாரே எலெட்ரிசிடி போர்டு ஏ.இ. அவரோட பொண்ணு தவறிடுச்சு"

"யாரு ரம்யாவா?"

"இல்ல சார். லதான்னுட்டு ஒரு சின்னக் குழந்தை. நாலு வயசிருக்கும். லதாக்குட்டின்னு சொல்வாங்களே. பாவம். மூணு மணிக்கு சைக்கிள் விளையாடிக்கிட்டே வந்துருக்கு போல இருக்கு. திடீர்னு ரோட்ல மய்க்கமா கிடக்கான்னனு பசங்க வந்து சொன்னாங்க. நம்ம செக்ரட்டரி, வாட்ச்மேன் எல்லோரும் ஒடிப் போய்ப் பார்த்தாங்க. அதுக்குள்ளே உடம்பு நீலமா மாறி, வாயிலே நுரை தள்ளிருச்சு. கட்டு விரியனோ. நல்ல பாம்போ தீண்டியிருக்கு போல இருக்கு. வி.எச்.எஸ்ஸ¤க்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. அப்படியே கே.கே.நகருக்குப் பாடியை அவங்க தாத்தா வீட்டுக்கு எடுத்திட்டுப் போயிட்டாங்க. விதி பாருங்க. எப்படி வருது."

"சரி வர்றேன் சார். பையனை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வரணும்"

நான் எதனைத் தடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது.

அபார்ட்மென்டில் நுழைந்த்தவுடன் ஒவ்வொருவரும் சோகமாய் தங்கள் அனுதாபங்களையும், அனுபவங்களையும் பறிமாறிக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் ஒரே அமைதிதான். டி.வி கூட ய¡ரும் போடவில்லை. இதே எண்ணங்களே நினைவுக்கு வரும் என்பதால், ஒன்பது மணிக்கே சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையை விரித்தோம்.

அஞ்சு நிமிஷம் கூட ஆகியிருக்காது. காலிங் பெல் அடித்தது. வியூ பைண்டரில் எட்டிப் பார்த்தேன். விஜியும், அத்திம்பேரும் தெரிந்த்தனர்.

கதவைத் திறந்து, "வாங்கோ அத்திம்பேர்", என்றேன். களைப்பாய் நுழைந்தனர் இருவரும்.

"மாப்ளை வாங்கோ! என்னடி திடீர்னு" என்றாள் அம்மா.

"இல்லம்மா. மஹாபலிபுரம் போயிட்டு வர்றோம். நேரமாய்டுத்து. இங்கே தங்கிட்டு, கார்த்தால ஆத்துக்கு வர்றோம்னு போன் பண்ணிட்டோம்."

படுக்கைகள் மூலையில் ஒதுக்கப்ட்டன. அத்திம்பேருக்கு ஈஸிசேரைப் போட்டுவிட்டு, வேஷ்டி எடுத்துத் தர உள்ளே சென்றேன்.

"சாம்பார் கொஞ்சமா இருக்கு; நிமிஷத்லே அதைப் பெருக்கிடறேன். உருளக் கிழங்குக்கறியும் ஒடனே பண்ணிடறேன்."

"சாம்பார் இது போதும்மா. கறிகிறியெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு நாலு அப்பளத்தச் சுட்டுப் போடு. எங்களுக்கு ஒண்ணும் அவ்வளாப் பசியில்லே." என்றாள் விஜி.

எங்கள் ப்ளாட்டில் பால்கனி பின்புறம். பால்கனிக்குச் சென்றாள் அம்மா. பக்கத்து வீட்டு சாந்தா மாமியிடம், பால்கனி வழியாகவே கிசுகிசுத்தார். பின்னர் புடவைத் தலைப்பில் என்னவோ மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அத்திம்பேரிடம் வேஷ்டியை நீட்டினேன்.

சில நிடங்களில் சமையலறையிலிருந்து, அப்பளம் சுடும் வாசனை வரத் தொடங்கியது.

-------000-------

- (சிமுலேஷன்)