Sunday, February 28, 2010

இந்தியப் பாரம்பரிய நடனங்கள்
- சிமுலேஷன்

Saturday, February 27, 2010

அபூர்வ ராகங்கள்-05 - பட்தீப் (Patdeep)

பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: N2 S G2 M1 P N2

அவரோகணம்: S N2 D2 P M1 G2 R2 S N

இதன் ஆரோகணம், அவரோகணம் நிஷாதத்தில் தொடங்கி, நிஷாதத்தில் முடிவதால், இதனை "நிஷாதாந்திய" ராகம் என்றும் சொல்லலாம்.

வட இந்திய இசையில் இந்த ராகம் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது என்பதனை இங்கே கேட்கலாம்.

அப்புறம், நம்ம உன்னிகிருஷ்ணன் பட்தீப் ராகத்தில் ஒரு அஷ்டபதி பாடியிருக்கார். இங்கே போய் அந்த 8ஆவது பாட்டைக் கேட்கலாம். அதே மியூசிக் இண்டியா தளத்தில் பட்தீப் என்று தேட லால்குடி மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம் அவர்களின் மீராபஜனும் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் பட்தீப்புக்கும் இந்த மீராபஜனுக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிந்துபைரவியினை யாரோ புண்ணியவான் தவறாகப் பட்தீப் என்று tag பண்ணிவிட்டார்கள் போலத் தெரிகின்றது. விபரம் தெரிந்தவர்கள் நான் சொல்வது சரியா என்று சொல்ல வேண்டும்.

தமிழ்த் திரையுலகினை எடுத்துக் கொண்டால், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு, என்று ஒரே ஒரு பாடல்தான் பட்தீப் ராகத்தில். அதுவும் 1956ஆம் ஆண்டு வெளிவந்த "ரம்பையின் காதல்' படத்தில் வந்த "சமரசம் உலாவுமிடமே" என்ற சுடுகாட்டினைப் பற்றிய ஒரு  அருமையான பாடல். அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உணர்ச்சியுடன் பாடியது. ஒரிஜினல் பாடலின் சுட்டி கிடைக்கவில்லை. ஜெயா டி.வியில் பாலாஜி என்ற இளைஞர் பாடியதை இங்கே போட்டுள்ளேன். நல்ல முயற்சி!பட்தீப் ராகத்தில் வேறு ஏதெனும் பாடல் தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்தத் தொகுப்பினிலே சேர்த்து விடுகின்றேன்.

- சிமுலேஷன்

Friday, February 26, 2010

நாணயவியல் (Numismatics)

நியூமிஸ்மேடிக்ஸ் (Numismatics) எனப்படும் "நாணயவியல்" ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல. உலக அறிவினை மேம்படுத்தும் ஒரு நல்ல கலையாகும். இந்தக் கலையினில் எந்த வயதினரும் ஈடுபடலாம்.

நான் சிறிய வயதில் இருக்கும்போது, என அப்பா சில பழைய கால நாணயங்கள் வைத்திருப்பது பார்த்திருக்கின்றேன். அவற்றில் சில கிழக்கிந்தியக் கம்பெனியுடையதும் கூட. அவருக்குப் பிறகு, நான் அந்த நாணயங்களை பத்திரமாக வைத்திருந்தாலும், மேலும் நாணயங்கள் சேர்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சில வருடங்கள் முன்பு எங்கள் கம்பெனியில் ஸ்ரீகாந்த் சேர்ந்த போது, அவருடய புரஃபைல் சுற்றுக்கு வரும்போது அவருடைய பொழுதுபோக்குகளில் நாணயவியலும் ஒன்று என்று தெரிய வந்தது. அவருடன் பேச்சுக் கொடுக்கும்போது இந்தக் கலையினைப்பற்றி சுவாரசியமான பல விஷயங்களைச் சொன்னார். அவரது நாணயங்களின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேல் என்று கேட்டபோது எனது ஆச்சரியம் பல மடங்கு கூடியது.

எனது அப்பா விட்டுச் சென்ற நாணயங்களைத் தவிர, நானும் பல நாணயங்கள் வைத்திருந்தேன். எப்படியென்றால், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும், அந்த நாட்டில் மீந்த கரன்சி நோட்டுக்களை எக்ஸ்சேஞ்ச் கவுண்டரில் கொடுத்து மாற்றுவது வழக்கம். ஆனால் நாணயங்களை மட்டும் மாற்றுவதற்கு  பெரிய சோம்பேறித்தனம். இப்படியாகவே பல நாணயங்கள் என்னிடம் என்னையறியாமலே சேர்ந்து விட்டன. ஸ்ரீகாந்தைப் பார்த்த பின்பு, இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தி விட்டேன். இப்போது "நானும் ஒரு நியூமிஸ்மேடிஸ்ட்; நானும் ஒரு நியூமிஸ்மேடிஸ்ட்", என்று சொல்லிக் கொள்ளும் ரேஞ்சுக்கு வந்துவிட்டேன். இப்ப அடுத்ததா என்ன? அடுத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா? அதனாலதான் இந்தப் பதிவு.

முதலில் நாணயங்களை சேகரியுங்கள். எப்படி? யாரிடமிருந்து? உங்களைப் போலவே இந்தக் கலையில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து. பழைய நாணயங்களைப் பத்திரமாக வைத்திருக்கும் பெரியவர்களிடமிருந்து. ஏன்? இதற்காகவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமிருந்தும், நாணயக் கண்காட்சிகளிலும் காசு கொடுத்துக்கூட வாங்கலாம். ஆனால் கிடைத்தற்கரிய அஞ்சு பைசா கண் முன்னாடி இருக்கிறதே என்று யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட வேண்டாம். நாணயங்களை நாணயமாகவே சேகரியுங்கள்.


அடுத்ததாக, இந்த நாணயங்களை ஆராயுங்கள். எந்த நாட்டினுடையது? எந்த வருடம் வெளியிடப்பட்டது? எவ்வளவு மதிப்பு கொண்டது. யாருடைய நினவாகவேனும் வெளியிடப்பட்டதா? என்ன உலோகத்தால் ஆனது? ஒன்றுக்கும் மேற்பட்ட உலோகங்கள் உண்டா? இப்போதுதான் இந்தக் கலையில் ஆர்வம் கொண்டிருக்கின்றீகளென்றால் இந்தத் தீவிர ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். "இல்லை நானயத்தின் விட்டம் எவ்வளவு? தடிமன் எவ்வளவு? அதன் வரந்தைகளில் பூ வேலைப்படுகள் உள்ளனவா?" என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி செய்துதான் தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தால் பூதக் கண்ணாடிகளின் உதவி தேவையாயிருக்கும். 

நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் மதிப்பு உண்டு. குறிப்பாக பழைய புராதன நாணயங்கள் மற்றும் புத்தம் புதிதாக வெளியிடப்பட்டுப் புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள். இத்தகைய நாணயங்கள் கீறல் எதுவும் விழாமல் பத்திரமாகக் கையாளப்பட வேண்டும். (தவறாக வெளிடப்பட்ட நாணயங்கள்  மற்றும் தவறாக அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் விலை மதிப்பற்றவை). எனவே அதற்குண்டான உறைகளை (Coin Holders) வாங்கிக் கொள்ள வேண்டும். இவை 1ஆம் நம்பரிலிருந்து 10ஆம் நம்பர் வரை என்று பல்வேறு அளவுகளில் மூர்மார்க்கெட் போன்ற இடங்களில் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
 
இந்த ஹோல்டரில் அளவு பார்த்து ஒவ்வொரு நாணயமாகப் போட்டு, நாணயம் வெளியில் வராதபடி, ஸ்டேப்பிளர் துணை கொண்டு ஸ்டேப்பிள் செய்து விடுங்கள்.

அடுத்து, எந்த நாடு, எந்த வருடம் போன்ற ஒவ்வொரு நாணயத்திற்குமுண்டான தகவல்களை இந்த ஹோல்டரின் மேல் தெளிவாக எழுதிவிடலாம்.

ஹோல்டரில் போட்டாலும், இந்த நாணயங்களை அப்படியே கையாளுவது சற்று கஷ்டம்தான், எனவே இந்த ஹோடர்களை நாணயங்களுக்கான ப்ரத்யேக ப்ளாஸ்டிக் கவரினில் செருகி வையுங்கள். இந்த ப்ளாஸ்டிக் கவர் நல்ல தரமானதாக இருப்பது அவசியம். மட்டமான pvc கவராக இருந்தால், அதிலிருந்த்து வெளியாகும் கெமிக்கல்கள் உங்களின் மதிப்பு மிக்க நாணயங்களைப் பாழாக்கலாம்.

அடுத்ததாக, இந்த ப்ளாஸ்டிக் கவர்களை அதற்குண்டான ஆல்பத்தில் வரிசயாகத் தொகுத்து வைக்க வேண்டும், 
பெரும்பாலோனோர் நாடு வாரியாக, வருட வரிசையில் (chronological order) வைப்பது வழக்கம். நீங்கள் உங்களுக்குப் பிடித்த themeனைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தலாம். உதாரணமாக, தலைவர்கள் படம் பொறித்த நாணயங்கள், விலங்குகள் படம் பொறித்தவை, பறவைகள் படம் பொறித்தவை என்று. சில சமயம் இத்தகைய themeன் அடிப்படையிலேயெ ஆல்பங்கள்கூடக் கிடைக்கக் கூடும். உதாரணமாக அமெரிக்கவில் பில் கிளிண்டன் அதிபராக இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் நினைவாக, "கால் டாலர்" மதிப்புள்ள நாணயங்களை வெளியிடலாமென்று அனுமதியளித்தார். இதன் விளைவாக இன்று அமெரிக்கவின் 50 மாநிலங்களும் இத்தகைய "கால் டாலர்" நாணயங்களை வெளியுட்டுள்ளன. இந்த நாணயங்களைச் சேகரித்துப் பத்திரபடுத்துவதறகாகவே ஆல்பங்கள் கிடைக்கின்றன. அதைத்தான் இங்கே பார்க்கின்றீர்கள்.

இத்தகைய ஆல்பங்களில் நாணயங்கள் வைப்பதற்கென்றே ப்ரத்யேகக் குழிகள் இருப்பதனால் பெரிதும் கஷ்டப்படத் தேவையில்லை. அப்படியே பதிக்கலாம். நான அமெரிக்காவிலுள்ள உறவினர்கள் குழந்தைகளுக்கு இத்தகைய ஆல்பங்களைப் பரிசாக அளிப்பது வழக்கம். தங்கள் மாநிலம் தவர வேறேதும் தெரிந்திராத இந்த குழந்தைகள், இந்த பொழுதுபோக்கின் காரணமாக பல வேறு மாநிலங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளுகிறார்கள். அம்மா, அப்பா பாடுதான் திண்டாட்டம். பின்னே தினமும் கால் டாலர் கேட்டு நச்சரித்தால்.

நாணயவியல் என்றால் உலோகத்தினால் ஆன நாணயங்களைப்பற்றி மட்டுமல்ல. அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களும் இதில் உண்டு. ஆனால் சிலர் உலோக நாணயங்களை மட்டும் சேகரிப்பர்கள். சிலர் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களை மட்டுமே சேகரிப்பார்கள். சிலர் இரண்டிலும் ஆர்வம் காட்டுவர்.


அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களை அதற்குண்டான ஆல்பத்தில் எளிதாக வைத்துக் கையாள முடியும். ஆனால் அடிக்கடி வெளியே எடுக்கக் கூடாது. கிழிந்துவிடும் வாய்ப்புக்கள உண்டு.


நாணயவியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரும் ஈடுபடக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் தற்காலத்தில் இதில் பலரும் ஈடுபட, நாணயங்களின் மதிப்பு எங்கோ போய்விட்டது. அதிலும் குறிப்பாக ebay போன்ற ஆன்லைன் வர்த்தகம் வந்தபின், யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் விற்கலாம் என்றான பின், நாணயங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. என்னிடம் உள்ள நாணயங்களின் மதிப்பு என்ன தெரியுமா? வேண்டாம். அப்புறம் சொல்றேனே. 

வலைப்பதிவர்களே. நாணயவியலில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தாலோ, மேலும் தகவல் ஏதேனும் என்னிடமிருந்து பெற விரும்பினாலோ பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

- சிமுலேஷன்

Coin Collecting For Dummies

Wednesday, February 24, 2010

தலைகீழ் சங்கீதமும் "Constantinople" RTPயும்


கடலூர் சுப்ரமணியம் என்ற இசைக்கலைஞர் ஒரு வாக்கேயக்காரரும் கூட. அதாவது பாடல்களெல்லாம் இயற்றி, அதனைக் கச்சேரியில் பாடுவதிலும் புலமை பெற்றவர். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்களை இயற்றிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். மோஹரஞ்சனி, ஹம்ஸவாகினி, த்வைத சிந்தாமணி, மனேஹம், மேச காந்தாரி, வர்ணப்ரியா, கதரமு போன்ற அபூர்வ ராகங்களிலும், மேலும் மற்றைய ராகங்களிலும் 500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பாடலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெயரைக் கொண்டு 'பாடலீச' என்ற முத்திரையை இவர்தம் கீர்த்தனைகளில் வைத்துள்ளார்.கடலூர் சுப்ரமணியம் அவர்கள் எனது தந்தையாருடன் அண்ணமலைப் பல்கலைகழகத்தில் ஒன்றாகப் படித்தவர். இருவரும் சேர்ந்து ஒரு முறை "தலைகீழ் சங்கீதம்" என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தினார்கள். பிறகு "Constantinople" என்ற பதத்தினை எடுத்துக் கொண்டு, அதனை RTP ஆகவும் பாடி கரகோஷம் வாங்கினார்களாம். இதனை அவரே தமது "இசைத் தென்றல்" என்ற புத்தகத்தில் எடுத்துக் குறியுள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கும் மேலான அந்தப் புத்தகத்தினை பார்க்கும்போது அப்பாவின் நினைவு வருகின்றது.

 
- சிமுலேஷன்

எங்கும் நிறை நாதப்ரம்மம்


இசையரசி எம்.எஸ் அவர்களைப்பற்றிப் பல கட்டுரைகள் வந்துள்ளன. படிதுள்ளேன். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு, அதுவும் தமிழில் சமீபத்தில்தான் படித்தேன். எம்.எஸ் அவர்களது குடும்ப்ப நண்பர் சங்கர் வெங்கட்ராமன் எழுதியது. இவர் 'ஸரிகமபதநி' என்ற இசையிதழுக்கும் ஆசிரியராகவும் உள்ளார்.


எம்.எஸ் அவர்களைப்பற்றி மட்டுமல்லாது, அவரது தாயார் வீணை சண்முகவடிவு அவர்களின் ஆரம்பகால நாட்களிலிருந்தே துவங்குகின்றது புத்தகம். தனது மகளை ஒரு பெயர்பெற்ற இசைக் கலைஞராக்க வேண்டுமென்ற ஒரு வித வைராக்கியத்துடன் அவரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னிறுத்துகின்றார். அவர் மிகவும் எளிய பின்புலத்திலிருந்து வாழ்க்கையைத் துவக்கியதாகத் தெரிகின்றது. காலை எழுந்தவுடன் நாட்டுச் சக்கரை கலந்த கொத்தமல்லிவிதை காப்பிதான். நிதி நிலைமையைப் பொருத்த மட்டில், பொங்கி வழியாவிட்டாலும், அந்த வீட்டில் இசை வெள்ளம் சதாசர்வ காலமும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டுதான் இருந்ததாம்.


குஞ்சம்மாள் என்று இளமையில் அழைக்கப்பட்டவர், கோணவகிடு எடுத்துத் தலை சீவியிருப்பதனையும், மற்றைய அலங்காரங்களையும் சுயவர்ணனையாக எம்.எஸ்ஸே சொல்வதாக இருப்பது ஒரு சுவையான பத்தியாகும்.


எளிமையாக இசை வாழ்வத் துவக்கிய எம்.எஸ் அவர்கள் இன்று உலகப் புகழ்பெற்ற கலைஞராக மாறியதில் பெரிதும் பங்கு வகித்தவர் அவரது கணவர் டி.சதாசிவம் அவர்கள். அவரைப்பற்றியும் இந்தத் தம்பதியினர் "கல்கி" இதழ் உருவாக எவ்வளவு பாடுபட்டனர் என்பதனையும் "கல்கி பிறந்த கதை" என்ற அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கின்றது."சேவாசதனம்" "சகுந்தலை", "சாவித்ரி", "மீரா" ஆகிய படங்கள் இவரது பாடல்லுக்காக எப்படி வெற்றிகரமாக ஓடின என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. (1945ல் தீபாவளி ரிலீசாக வெளிவந்திருந்த "மீரா" படத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கும் தகவல் ஒரு புது விஷயம்.) சாவித்ரி படப்பாடல்களை கேட்பதற்காகவே தாம் பலமுறை அப்படத்தினைத் தியேட்டரில் பார்க்கப் போனதாகச் சொன்னவர் ஸர்.சி.வி.ராமன் அவர்கள்.தனது வசீகரக் குரலால் மக்கள் மனதை மட்டும் மயக்கவில்லை. மக்கள் பயனுறும் வகையிலே பல்வேறு நிதிக் கச்சேரிகள் நடத்தி அதில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியினை சமூகத் தேவைகளுக்காக நன்கொடையாக அளித்துள்ளது பற்றி பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்த சேவைகளுக்காக இவர் பெற்ற விருதுக்களும் (மாக்சேசே போன்ற) மீண்டும் சமூகத்திற்கே திருப்பிவிடப்பட்டதாகத் தெரிகின்றது.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், கல்கி, சதாசிவம், ரசிகமணி டி.கே.சி ஆதரவுடன் துவக்கப்பட்ட த்மிழிசை இயக்கத்துக்கு இவர் ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. கல்கியின் தமிழிசைக்கு ஆதரவான் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து, 'சங்கீத யோகம்' எனும் தலைப்பில் சின்ன அண்ணாமலை அவர்கள் தமது 'தமிழ் பண்ணை'ப் புத்த்கமாக வெளியிட்டார். அதிலிருந்து சில துளிகள் இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

"தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவு தந்து உதவி புரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள் எனினும், தமிழிசை இயக்கம் மிகத் தீவிரமான் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தபோது, அது அடியோடு விழுந்துவிடாமல் தாங்கி நின்று நிலை நாட்டியவர்கள் யார் என்பதை உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய நண்பர் ஸ்ரீ.சதாசிவமும், அவருடைய மனைவி ஸ்ரீமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும்தான் என்று சொல்ல வேண்டும்."
எம்.எஸ் அவர்களின் இசையுலகப் பணிகள், ஐ.நா உள்பட மற்றைய வெளிநாட்டுப் பயணங்கள், அவர் பெற்ற விருதுகள், அவரைப் பற்றிய மற்ற புகழ் வாய்ந்த வித்தகர்களின் பாராட்டுரைகள், அரிய புகைப்படங்கள்  அடங்கிய சங்கர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதியுள்ள எம்.எஸ் அவர்களின் இந்த வாழ்க்கை வரலாறு இசைப்பிரியர்களைப் பெரிதும் மகிழ்விக்கும்.


தலைப்பு:         எங்கும் நிறை நாதப்பிரம்மம்
ஆசிரியர்:        சங்கர் வெங்கட்ராமன்
பதிப்பாண்டு: 2006
வெளியீடு:      ஸரிகமபதநி ஃபவுண்டேஷன், சென்னை - 600015
பக்கங்கள்:      168
விலை:             Rs.150

- சிமுலேஷன்

Monday, February 22, 2010

ஸத்குரு தியாகராஜரும் கோபாலகிருஷ்ண பாரதியும்


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் முன்பு, (1985) "ஸத்குரு தியாகராஜரும் கோபாலகிருஷ்ண பாரதியும்" என்ற தலைப்பில் என் அப்பா கோவை வானொலி நிலையத்தில் ஆற்றிய உரைச்சித்திரம் இங்கே.

Get this widget | Track details | eSnips Social DNA

- சிமுலேஷன்

Friday, February 19, 2010

அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)

ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:      S G3 M1 P N2 S

அவரோகணம்:  S N2 P M1 G3 R3 S

இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.

ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.அடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் "ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.

இந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.தமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன?

1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி

இந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.

திரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே? ஆமாம். "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" என்ற அருமையான படம்தான் அது. "ப்ரம்மதவனம் வேண்டும்" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.- சிமுலேஷன்

Saturday, February 13, 2010

அபூர்வ ராகங்கள்-03-மஹதி

மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகாணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:    S G3 PA N2 S
அவரோகண்ம்: S N2 PA G3 S

இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு.


சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்ததாகத் தெரிகின்றது. இந்தக் கச்சேரியிலிருந்து பாடிய "மஹதி" ராகப் பாடலான "மஹனீய மதுர மூர்த்தே" என்ற பாடலைக் கேட்போமா?

'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. அதிசய ராகத்தினைக் கேளுங்கள் இங்கே.

 

கொசுறுச் செய்தி: மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

- சிமுலேஷன் 

Friday, February 12, 2010

அபூர்வ ராகங்கள்-02-சாவித்ரி

சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும்.. இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 S

இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. ஏன்? விருத்தம், RTP போன்ற வகையறாக்களைக் கூட யாரும் பாடுவதாகத் தெரியவில்லை. நினைவுக்குத் தெரிந்த வரையில் எல்.சங்கர் மட்டுமே வயலினில் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். அதுகூட சாவித்ரியில் தொடங்கிப் பின்னர் ஒர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. இந்த சாவித்ரி ராகமாலிகையைக் கேட்க வேண்டுமென்றால் இங்கே சென்று கேட்கலாம்.

தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. இவற்றில் முதன்மையானது எது என்றால் இசைஞானி இளையராஜா இசையமைத்து ஜெயச்சந்திரன் தனது குழுவினரோடு பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலாகும். இது, 'காற்றினிலே வரும் கீதம்' என்ற திரைப்படத்தில் அமைந்துள்ளது. இடையிடையே 'தையரத் தையா; தையரத் தையா' என்று வரு கோரஸை கேட்கும்போது நாமும் அந்தப் படகில் சவாரி செய்வது போலவே இருக்கும். இன்டர்லூடாக வரும் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. என்னுடைய பேவரைட் பாடல்களில் இதுவும் ஒன்று. எனது மனைவிக்கும்கூட. இந்தப் பாடலைப் பாடித்தான் அவளைப் பதின்ம வயதில் மயக்கினேனாம். (பிப்ரவரி 14ஐ நெருங்கும்போது தானாக இதையெல்லாம் எழுதக் தோன்றுகின்றது). இப்போது இந்தப் பாடலைக் கேட்போமா?அடுத்தாக 'புன்னகை மான்னன்' படத்தில் வரும் "கவிதை கேளுங்கள்" என்ற பாடல். இதுவும் சாவித்ரி ராகத்தில் அமைந்ததுதான். மூன்றாவது பாடல், நம்ம டி.ஆர் இசையமைத்த "வசந்தக் காலங்கள்" என்ற பாடல். இடம் பெற்ற திரைப்படம் 'ரயில் பயணங்களில்". இதுவும் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் என்று தெரியும்போது, ஒரு வேளை சாவித்ரி ராகம் மளையாளத்தில் பரவலாகப் பாடப்படும் ராகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.நிறைவாக 'அழகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி" என்ற பாடல். சிறுவர், சிறுமியர் கோரஸாகப் பாடிய பாடல். பாடலின் அமைந்துள்ள தாளக்கட்டினைக் கவனித்தால் காட்சியமைப்புக்குப் பொருத்தமாக இசையமைத்திருப்பது தெரிய வரும்.இன்னொமொரு சாவித்ரி தெலுங்குத் திரையுலகிலிருந்து. பாடியவர் மனோ.மேலே கண்ட எல்லாப் பாடல்களுமே வெவ்வேறு மெட்டுக்களில் அமைந்திருப்பதனால் வெவ்வேறு ராகங்களில் அமைந்திருப்பது போலத் தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் அவற்றினிடையே இழையோடும் "சாவித்ரி" ராகத்தினை அறிந்து ரசிக்கலாம்.


- சிமுலேஷன்

Thursday, February 11, 2010

Tuesday, February 09, 2010

கமல் ஹாசனும், நானும், ராகசிந்தாமணியும்


சமீபத்தில் 'முத்துமீனாள்' எழுதிய "முள்" என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் (என் மனைவியின் தோழி சுபா மொழி பெயர்த்தது) வெளியீட்டு விழா புக் பாயிண்ட் அரங்கினில் நடைபெற்றது. கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர். விழா துவங்க சற்று நேரம் முன்பாகவே வந்திருந்த கமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் பரிசளித்தேன். ஒரிரு பக்கங்களைப் புரட்டிய பின், கர்நாடக இசை குறித்து சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டார். பின்னர் விழா துவங்கும் வரை எனது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். விழாவின் முடிவில் பதிவர்கள் துளசி கோபால், மதுமிதா, கவிஞர்கள் இன்பா சுப்ரமணியம், புதிய பார்வை கல்யாண்குமார் ஆகியோருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தேன்.

- சிமுலேஷன்

Sunday, February 07, 2010

அபூர்வ ராகங்கள்-01-ஸ்ரோதஸ்வனி

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S

இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.
இரண்டாவது பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும். இதன் சுட்டி கிடைக்கவில்லை.

கர்நாடக இசையில் இந்த ராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.
இந்த ராகத்தில் மேலும் பாடல்கள் இருப்பதாகத் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

- சிமுலேஷன்

Tuesday, February 02, 2010

அம்பா பாட்டி

தனது பாட்டியைப்பற்றி ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் என் அம்மா. இசைத் துறையில் அவருக்குள்ள ஈடுபாடும், உறவினருக்கு அதனைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் அலாதியானதாம். தனது சொந்தக் காலிலேயே நிற்க வேண்டுமென்ற அவரது வைராக்கியமும் பெரியது. எனது கொள்ளுப் பாட்டியான அம்பா பாட்டியின் கதையினை என் அம்மாவின் வாயிலாகவே படிக்கலாமே!

- சிமுலேஷன்