Saturday, December 04, 2010

கவிஞர் கண்ணதாசனும் களிமண்ணும்

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிறது.)

வீட்டு சுவர்களில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சுவிட்ச் பாயிண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுகளும் பொருத்தும் பழக்கம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. குளிப்பதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண்டிருந்த கவிஞர், அப்போதுதான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த்தார்; பார்த்ததும் திகைத்தார்.

"இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண்ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயிண்ட்டுக்குள் விரலை விட்டுவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே அல்லவா உலை வைத்துவிடும்?" கவிஞர் உலவியபடியே சிந்தித்தார்.

தோட்டத்திலிருந்து கொஞ்சம் களிமண்ணை எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்து நன்றாக உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். பின்னர் அதை அப்படியே ப்ளக் பாயிண்டில் இருந்த ஓட்டைக்குள் திணிக்க முயன்றார்.

அவ்வளவுதான்...

"அம்மா" என்று ஒரு அலறல். கண்ணதாசன் அலறினார்.

மின்சாரம் 'சப்ளை'யாகிக் கொண்டிருந்த ப்ளக் பாயிண்ட், ஈரக் களிமண்ணை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளே திணித்த கவிஞருக்கு "ஷாக்" கொடுத்து தூக்கி எறிந்துவிட்டது.

கவிஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, கவிஞர் ஹலில் மல்லாந்து மயங்கிக்கிடந்தார்.

நல்லவேளை! கவிஞரின் உயிருக்கொன்றும் ஆபத்து ஏற்படவில்லை.

சொல்லும் 'பொருளின்' மீது நொடியில் பாட்டெழுதும் புலமை பெற்ற அந்தப் பிறவிக் கலைஞருக்கு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்போது, அதில் தண்ணீர் பட்டால் "ஷாக்" அடிக்கும் என்ற சாதாரண விஷயம் அந்தச் சூழலில் ஞாபகம் வராதது ஆச்சரியம்தான்.

தகவல் - சுபாசுந்தரத்தின் "ஆல்பம்"

- சிமுலேஷன்