Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Sunday, October 16, 2011

மெரினா - சுஜாதா - நூல் விமர்சனம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது.

கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா கடற்கறையின் மற்றொரு புறம் பணக்கார இளந்தாரிப் பையன்கள் அடிக்கும் கூத்துடன் ஆரம்பித்து, அதில் ஒரு குறிப்பிட்ட முயற்சி எப்படி 'விவகார'மாய் முடிகின்றது என்று துவங்குகின்றது. போதை மருந்து இன்ன பிற கெட்ட சகவாசங்கள் இருக்கும் ஒரு அயோக்கினாய் இருந்தாலும், நாயகன் திலீப் எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டானா என்று வாசகர்களை ஏங்க வைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம். இதற்கு உதவ கணேஷ், வசந்த்தும் வருகின்றார்கள். இருவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் செய்யாததால் மனதில் நிற்பதில்லை. ஆனால் கணேஷ் அப்சர்வ் பண்ணும் ஒரு சிறிய விஷயமான ஒரு சின்னஞ்சிறு முடிச்சினை வைத்துக் கொண்டு நூறு பக்கங்களுக்கு மேல் சுவாரசியமாக எழுதும் சுஜாதாவும் அவரது நடையும் மனதை விட்டு நீங்குவதில்லை.

கதை: மெரினா - குறுநாவல்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பு: விசா பப்ளிகேஷன்ஸ் - 1999
பக்கங்கள் - 112
விலை - Rs. 35

- சிமுலேஷன்

Sunday, September 11, 2011

6961 - சுஜாதா - நூல் விமர்சனம்


இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத்  தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு.   இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் இதனை.

ரசனையற்ற ராஜேஷிடன் பந்தம் ஏற்பட, சலிப்பூட்டும் மணவாழ்க்கையில் ஈடுபடும் விமலாவின் மனப்போராட்டத்தினை வருணித்து, அந்த மனப் போராட்டத்திற்கு ஆதாரமாக நடந்த ஒரு நிகழ்ச்சினையே கதைக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளார் சுஜாதா.  இந்த ஆதார நிகழ்ச்சியினை உற்றுக் கவனித்தால் அது, சுஜாதாவின் "அடிமைகள்" என்ற நாடகத்தில் ஏற்படும் முக்கிய சம்பவத்துடன் ஒத்திருப்பதனைக் கவனிக்கலாம்.  தமிழ்க் கதை படிக்கும் வாசகர்களுக்கு, வட இந்தியக் கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட கதை, ஒரு போதும் சோர்வை ஏற்படுத்தாமலும் அன்னியப்படுத்தாமலும் எழுதப்பட்டதில் சுஜாதாவின் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. 50களில் எழுதப்பட்டு கதை என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டே படித்தால், "அப்போதும், இப்போதும், எப்போதும் வாத்யார், வாத்யார்தான்", என்பதை வாய்விட்டுக் கூறிக் கொண்டேயிருக்கலாம்.

முன்பே கூறியது போல இதே தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற இரு கதைகள் "ரோஜா" மற்றும் :ஜோதி". ரோஜா கதையில் ஒரு அப்பாவிப் பெண் , அரசியல் வியாதியான மிருகத்திடம் பலியாகிறாள். பலிஆனது யார் (லட்சுமி)? பலி வாங்கியது யார் (துரை)? என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் கூறிவிட,  இப்போது கதையினை எப்படி நகார்த்திச் செல்லப் போகின்றார் என்பதுதான் வாசகர்களுக்கு விருந்து.

அடுத்து வரும் ஜோதியில் மீண்டுமொரு பெண் பலியாகின்றாள். இம்முறை குற்றவாளி யார் என்று புரிந்தாலூம் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.    நமக்கு மட்டுமல்ல. இன்ஸ்பெக்க்டருக்கும் கூடத்தான். க்ளைமேக்ஸை அறிய ஆவல் கொண்டு பக்கத்தை புரட்ட, அடுத்த கதை ஆரம்பித்து விட நாம் பல்பு வாங்க்குகின்றோம்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மூன்றிலுமே உள்ள பொது அம்சம், அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதுதான். அந்த்க் கால கட்டத்தில் இந்த வகைக் கதைகள் மூலம் சுஜாதா பரபரப்பாகப் பேசப்பட்டிருப்பார். Poetic Justice எனப்படும் 'கவித்துவாமான நீதி' வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தாலும், நடைமுறை வாழ்க்கையில்  அப்படி ஒன்றும் நல்லவர்கள்  எப்போதும் வாழ்ந்ததாகவும், கெட்டவர்கள் எப்போதும் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லையே! எனவே நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு சாராருமே  வாழ்வதும், வீழ்வதும் சகஜமே என்ற நடைமுறை யதார்த்தினை உணர்த்துகின்றன இந்த மூன்று கதைகளுமே.

கதை:            6961
ஆசிரியர்:  சுஜாதா
பதிப்பு:         விசா பப்ளிகேஎஷன்ஸ், 1989-2004
பக்கங்கள்: 120
விலை:        Rs.52

- சிமுலேஷன்

Tuesday, November 09, 2010

கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா - நூல் விமர்சனம்





இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார். 



நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ச்சி செய்யும்  பொருட்டு, “திருநிலம்” என்ற கிராமத்திற்கு வருகின்றான் கல்யாணராமன். அங்கு சந்த்திக்கும் வெள்ளி என்ற கிராமத்துப் பெண் மீது அவனுக்கு ஒரு கிரஷ். அவளுக்கோ பரிசம் போட்ட மருத்முத்து மேலே ஒரே பைத்தியம். இதனிடையே ஸ்நேக் எனப்படும் சிநேகலதா என்ற பட்டணத்துப் பெண் வேறு வருகின்றாள். மருதமுத்துவின் கவனம் ‘சிநேகம்மா’வின் மீது விழுகிறது. சிநேகம்மா மருதமுத்துவுடனும் சிநேகமாக இருந்துகொண்டு, கல்யாணராமனுக்கும் ரூட்டுப் போடுகின்றாள். இவர்கள் உறவுகளுக்கிடையே நடக்கும் பல மர்மச் சம்பவங்கள், வாசகர்களின் அடுத்து என்ன எண்ரு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன். நாவலாக இல்லாமல் தொடர்கதையாக இருக்கும்போது இன்னம் கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருந்து அடுத்த வெள்ளி எப்போது வருமோ? என்றெண்ணத் தூண்டியது.

நா.வானமாமலை அவர்கள் அழகாகத் தொகுத்து NCBH நிறுவனம் வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள்” புத்தகத்திலிருந்து பல பாடல்களை சுஜாதா இடத்திற்கேற்றாற் போல கையாண்டிருக்கின்றார். மேலும் “பழையனூர் நீலியம்மன் கதை” கதை வேறு இடம் பெருகின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளன் கதை சொல்லும்போது, முக்கியமாகச் சொல்ல வேண்டியவை, கதை நடக்கும் களன் பற்றிய விவரணைகள், கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனைகள் ஆகியவைதான். அப்போதுதான், வாசகனை அந்தக் களத்திற்குக் கூட்டிச் செல்ல முடியும். அதற்கு எந்தக் குறையும் வைக்காத சுஜாதா, நம்மையெல்லாம் ‘திருநிலத்திற்கே’ கூட்டிச் சென்றுவிடுகின்றார். கல்யாணராமன், வெள்ளி, மருதமுத்து, சிநேகலதா, தங்கராசு ஆகியோர் எப்படி இருப்பார்கள் என்று வாசகர்கள் நன்றாகவே கற்பனை செய்து கொள்ள முடிகின்றது.  ரசித்த சில இடங்கள்:-

“கிராம நாய்களின் பொதுப்பெயர் கொண்ட ‘மணி’ வாலாட்டிக்கொண்டு வந்தது.”

“பயந்து போயிட்டீங்களா? டவுசர் எல்லாம் ஈரமாக இருக்குது?”

“இல்லே! அந்தக் கான் ஒழுகறது” என்றான் எரிச்சலுடன்.

வழக்கம் போல சுஜாதா கதை வெளியாகிக் கொண்டிருக்கும்போதே அதனை படமாக்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்து கடைசியாக ஜி.என்.ரங்கராஜன், பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, சுமலதா, மனோரமா ஆகியோரைப் போட்டுப் படம் எடுத்தார். இந்தப் படம் நான் பார்த்த நினைவில்லை. அபிப்ராயம் சொல்ல முடியவில்லை. சுஜாதா ஓரளவு சந்த்தோஷப்பட்டார் போல. வெள்ளி பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவும், சிநேகலதா பாத்திரத்திற்கு சுமலதாவும், நாட்டுப் பாடல் கிளவிக்கு மனோரமாவும் பொருந்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் பிரதாப் போத்தன் பெரும்பாலான படங்களில் லூஸு கேரக்டர் பண்ணியதாலோ என்னவோ, கல்யாணராமன் பாத்திரத்திற்கு பொருந்தினாராவென்று தெரியவில்லை. மேலும் இந்தக் கதை திரைப்படமாக வந்ததிற்குப் பதிலாக, தொலைக்காட்சிட் தொடராக வந்த்திருந்திருக்கலாம். ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் சஸ்பென்ஸ் வைக்கத் தோதான கதை.

தலைப்பு: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்:சுஜாதா
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு: 1993 (முதல்) 1997 (இரண்டாவது)
பக்கங்கள்: 224
விலை: Rs. 39.00

-       சிமுலேஷன்

Sunday, October 24, 2010

பாரதி இருந்த வீடு - சுஜாதா- நாடகம் - நூல் விமர்சனம்

தலைமுறை இடைவெளி கொண்ட தாத்தாக்களின் கதையென்றால் சுஜாதாவுக்கு அல்வா. அதில் ஒன்றுதான் "பாரதி இருந்த வீடு்". இதில் ஓய்வு பெற்ற சுப்ரமண்ய அய்யர்தான் கதாநாயகர். இரண்டு மருமகள்களிடமிருந்தும், 'அம்மா, தாயே!' என்று அவர்கள் பின்னே செல்லும் பையன்களிடமிருந்தும்  படாதபாடுபடுகின்றார். திருவல்லி்க்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஒரு வீடு மட்டுமதான் அவருக்குச் சொந்தம். அதில் ஒரு டைலர் 22 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு 22 வருடமாகக் குடியிருந்துகொண்டிருக்கின்றான். பாரதியார் கூட இந்த வீட்டில் ஒரு மாசம் இருந்திருக்கின்றாராம்.

பேரன் பேத்திகளின் நடவடிக்கைகள் கூட தாத்தாவுக்குப் பிடிக்கவில்லை. அத்னை அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்கின்றார். ஒரு பைசாவுக்கும் வக்கிலாமல், ஆனால் சதா காலமும் தனது குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டேயிருப்பது மருமகளுக்க்குப் பிடிக்காத காரணத்தால் அவரை டில்லியிலிருக்கும் இன்னொரு பையன் வீட்டிற்கு அனுப்பத் திட்டம் போடுகின்றாள். இரண்டு பையன்கள் வீடுமே நரகமாக இருப்பதாக எண்ணுவதால், வேறு என்ன செய்யாலாமென்று திகைத்துக் கொண்டிருக்கும் சுப்ரமண்ய அய்யருக்கு நண்பர் மணி உதவுகின்றார்.

இதற்கிடையில் 'பாரதி' தங்கியிருந்த காரணத்தால் தாத்தாவின் வீடு நினௌச் சின்னமாக அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகத் தகவல் வருகின்றது. அதற்குப் பிறகு அவருக்குக் கிடக்கும் ராஜ மரியாதைதான், தற்கால சமூகத்தின் மேல்  சுஜாதா வைக்கும் பார்வை. மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்ப்ட்ட இந்த நாடகத்தை அரங்கேற்றினால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் போல. அவ்வளவு சிறிய கதை. ஆனால் அவ்வளவு சிறிய கதைக்குள்ளாக, சமூகத்தின் மேலே உள்ள எள்ளல், அங்கதம், சின்னச் சின்ன நகைச்சுவை ஆகியவற்றை வெளிப்படுத்த்துகின்றார். கதை எண்பதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஜுனூன் (பிடிவாதம்) போன்ற தமிழாக்கக்கத் தொடர்கள் மீது சுஜாதவுள்ள கடுப்பு பல இடங்களில் வெளிப்படுகின்றது. மனமுதிர்ச்சி சற்றே குன்றியுள்ள சுவேதாவை கட்டாயத்தின் பேரில் பெண்பார்க்க வந்த ரவியிடம், "ப்ரபவ, விபவ" என்று தமிழ் வருடப் பெயர்கள அடுக்கும் போதும், தொண்ணூதொம்பது, தொண்ணூத்தெட்டு என்று நூறிலிருந்து தலைகீழாக எண்ணும்போது, ரவி பிடிக்கின்றான் ஒரு ஓட்டம். நாடக அரங்கினில் பார்வையாளர்களிடமிருந்து பலத்த சிரிப்பைப் கட்டாயம் பெற்றிருக்கும் இந்தக் காட்சி.

கருத்து பொதிந்துள்ள 60 பக்கங்களுக்கும் குறைவான "பாரதி இருந்த வீடு" சுஜாதாவின் ஒரு சுவையான நாடகம்.

குமரிப்பதிப்பகத்தின் இந்த வெளிய்யீட்டில், "ஆகாயம்" என்ற விஞ்ஞானக் கதையும், உலகப் பிரசித்தி பெற்ற டெலிவிஷன் நாடகங்களில் ஒன்றான "Rabbit Trap" என்கிற ஜே.பி.மில்லரின் நாடகத்தை ஒட்டி எழுத்தப்பட்ட "முயல்" என்கின்ற மத்யமர் ரகக் கதையும் அடக்கம். "ஆகாயம்" அவ்வளவாக என்னைக் கவரவில்லை. ஆனால்,  "முயல்" என்னை பெரிதும் கவர்ந்தது. பின்னர் ஒரு நாளில அதனைப்பற்றி எழுதுகின்றேன்.

தலைப்பு: பாரதி இருந்த வீடு  (நாடகம்)
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: குமரிப் பதிப்பகம்

Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்



சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம்.

அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம் விஸ்வநாதன் இந்த நாடகத்தை ஏற்று நடித்தாரா, இல்லை, பூர்ணத்தை மனதில் வைத்து, சுஜாதா நாடகம் எழுதினாரா என்று தெரியாது. அவ்வளவு நல்ல பாத்திரப் பொருத்தம்.

ஐம்பத்தெட்டு வயதுடைய வரதராஜன்தான் கதையின் நாயகர். அவருடைய மகள் கல்யாணியின் சம்பளத்தில் ஜீவனம் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவியிடம் அவ்வப்போது பாட்டு வாங்கிக் கொண்டிருகின்றார். தற்காலத்தால் உதானீசப்படுத்தபடும் ஒரு பழங்காலத்து மனிதர் அவர். தனது புரோட்டோடைப் ஒருநாள் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கனவுலக மனிதர். ஆனால், கையில் காசில்லை. கால் பாக்கட் சிகரெட்டுக்குக் கூட, கல்யாணியின் கையை எதிர்பார்த்திருப்பவர். இந்த லட்சணத்தில் மகளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்? தன்னிடம் கை கட்டி  வேலை பார்த்த மதிவதனம் அவருக்கென்று ஒரு வேலை போட்டுக் கொடுத்தவுடன், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நிம்மதி ஏற்படுகின்றது. ஆனால் அந்த நிம்மதி அதிக நேரம் நீடிப்பதில்லை.  

எப்போதும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு பழமைக்கால நினவுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த ஊஞ்சலும் அவரும் ஒன்றுதான் என்பது சுஜாதா இறுதிக் காட்சியில் தெரியப்ப்டுத்துகின்றார்.

சிறுகதைகளிலேயே பேச்சுத் தமிழைப் பயன்படுத்துபவர், நாடகம் என்றால் கேட்கவே வேண்டாம்.

"அப்பா: ஆமா...நீ பாங்க்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லாடிரா நீ!"


"நேரா வந்து வுயுந்தான்யா..."

"பாவம் டைவரு. எவ்வளளோ சாலாக்காத்தான் ப்ரேக் போட்டாரு."

பேச்சுத் தமிழ் தவிர, பங்க்சுவேஷன்ஸும் அங்கங்கே தேவையான அளவில் இருந்து, படிப்பவர்களுக்கு என்ன சூழ்நிலை என்பதனை எளிதில் புரிய வைக்கும். மேலும் அடைப்புக் குறிக்குள் காட்சியில்  என்ன நடக்கின்றது என்பதனையும் விளக்குகிறார். இந்த அடைப்புக்குறிக் குறிப்புகளைப் படிக்கும்போது, மேடையிலே ஏற்ற வேண்டிய நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட்தான் இது என்று தெரிகின்றது. 

வரதாராஜன், அவரது மனைவி, மகள் கல்யாணி, கிரி, மதிவதனன், என்று கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களுமே, நாடகம் தானே இது என்றுப் பேசிப் பேசி அறுக்காமல், சொல்லின் செல்வர்களாக அளவாகப் பேசுகின்றார்கள். எனவே சுஜாதாவின் சிறுகதையினை எப்படி ரசிக்கின்றோமோ அப்படியே, இந்த ஊஞ்சல் நாடகத்தினையும் ரசிக்க முடிகின்றது. வரதராஜன் தற்கால நிலைமையும், முடிவும் படிப்பவர்ககள் மனதை அசைக்கும் என்பது உண்மை. அதுவே சுஜாதாவின் வெற்றி.


தலைப்பு:    ஊஞ்சல்  / உங்களில் ஒரு கணேஷ் 
பதிப்பாண்டு: 1989 
வெளியீடு:   விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை:      Rs.55

- சிமுலேஷன்
     

Friday, March 12, 2010

வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா - நூல் விமர்சனம்


1984ல் சுஜாதா ஆனந்த விகடனில் "வாய்மையே வெல்லும்" என்று ஒரு தொடர்கதை எழுதினார். அது பின்னர் தூர்தர்ஷனில் சீரியலாக் வரத் தொடங்கியது. யாவரும் நலம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன் சுஜாதவுக்குப் போன் செய்கிறார் அவசரமாக. அந்தச் சீரியலுக்கு சில மாதர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே அவர் உடனே நிலையத்திற்கு வர வேண்டுமென்றும் சொல்கிறார்.


தொடரை உடனே நிறுத்த வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதமோ அல்லது சாலை மறியலோ செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் தூர்தர்ஷன் அலுவலகத்தில் வீற்றிருந்த மாதரசிகள். சுஜாதாவை கண்ணகி பார்வை பார்க்கிறாரகள்.

"இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்று, அதன்பின் புத்தகமாக நான்கு பதிப்புகள் வந்துவிட்டது. இதுவரை யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!" சொல்லியிருக்கிறார் வாத்யார். அவர்கள் கவலைப்படவில்லை. கதை நிறுத்தப்பட வேண்டும். இல்லை திருத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். பீரியட்!

நடராஜன் ஓர் அரசாங்க அதிகாரியின் சாமர்த்தியத்துடன் தீர்ப்பளித்தார். "இதை நான் டில்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்புகின்றேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கலாம்," என்றார். டில்லிக்குப் போய் திரும்பி வருவதற்குள் அந்த சீரியலின் குறுகிய வாழ் நாளான பதிமூன்று வாரம் முடிந்து விட்டது. அதன்பின் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேற்கண்ட விஷயத்தை சுஜாதாவின் 2ஆம் ஆண்டு நினைவுநாளில் நம்மோடு பகிர்ந்து கொண்டவர், மேற்படி தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜனேதான்.

இப்படி பல எதிர்ப்புகளை மீறி தூர்தர்ஷனில் வந்தது சுஜாதாவினுடைய எந்தக் கதை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதுதான் அதே கதையான "வாய்மையே சிலசமயம் வெல்லும்" குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. (தூர்தர்ஷனில் "மறக்க முடியுமா" என்ற டைட்டிலில்)

முதல் அத்தியாயத்திலேயே சுஜாதாவின் தீவிர விவரிக்கும் பாணி துவங்கிவிடுகின்றது.

"கதை ஆரம்பிக்கும் ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி கெட்ட காரியங்கள் பண்ணிய சென்னை நகரத்தைப் பவுன் கலர் சூரியன் எழுப்பியது. தூக்கம் நனைந்த கண்களுடன் தொண்ணூறு சதமானம் பதிவிரதா ஸ்தீகள் ப்ளாஸ்டிக் பால் வாங்கப் போனார்கள். தேர்தல் எழுதிய சுவரொட்டிகளை வாக்காளர்கள் நின்றபடி நனைத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணம்மாப்பேட்டை பெண்கள் இரவில் குடித்த கணவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். மெயின் ரோடின் விளிம்பில் வயதானவர்கள் நீண்ட ஆயுளை வேண்டி கான்வாஸ் கால்களில் ஓடினார்கள். பிள்ளையார் கோயில் தாண்டி மூசாசேட் தெருவில் நுழைந்து, கேபி பிக்சர்ஸ் போர்டைக் கடந்து மத்தியதர மொட்டை வீடுகள் சிலவற்றில் மஞ்சள் வர்ணம் அடித்த பழைய காலத்து வீடு தெரிகிறதே, அதன் கேட்டுக் கதவைக் திறந்துகொண்டு உள் நுழையுமுன் நாய் குரைக்கிறது. பாதகமில்லை. அந்த நாய் அப்பிராணி. ஏதோ சாஸ்திரத்துக்குக் குரைக்கும்; மோர்க் குழம்பு நக்கும். அப்பளம் தின்னும். பெயர் சீனு. ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஒரு நாள் வந்து ஒட்டிக்கொண்டு விட்ட நாய். ஒரு ஜம் பிஸ்கட் போட்டால் பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் காட்டிக் கொடுக்கும். பார்த்தீர்களா...! குரைத்துவிட்டு, உடனே பரிபூரண அந்நியரான உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது. அதைக் கடந்து இடது பக்கம் வந்தால் அறை வாசலில் ஏவி.விஜயகுமார் என்று போர்ட் போட்டிருக்கிரதே. அங்கேதான் நமக்கு ஜோலி. கதவைத் தட்ட வேண்டாம். திறந்தே இருககிறது. ஏவி.வி முகச்சவரம் செய்து முடிக்கும் வரை அறையைப் பார்க்கலாம்."     

கதாநாயகன் விஜயகுமாரைப் பற்றி அறிமுகம் செய்ய இவ்வளவு விவரங்கள் தருகின்றார். ஆனால் எதுவுமே போரடிக்கவில்லை. கதைச் சுருக்கம் என்னவென்றால் ஏவி.வி குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பதின்மவயது மகளை ஒரு தடியன் டூரின் போது பொய் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் ஆபாசப் படங்கள் எடுத்துவிடுகின்றான். ஏண்டா எடுத்தான் என்றால் அவனுக்குள் ஒரு 'சிவப்பு ரோஜாக்கள்' கதை. கதாநாயகன் உதவியால் விஷயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. ஆனால் சமூக சேவகர்களும், ஊடகங்களும் சும்மா இருக்க மாட்டேங்கிறார்கள், தங்கள் தேவைக்காக விஷயத்தைப் பெரிது பண்ணுகின்றன. நாயகி விஜியின் எதிர்காலம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. 

கதையின் ஆரம்பத்தில் ஓரிரு சம்பவங்கள் நகைச்சுவையுடன் துவங்குகின்றது. இந்தப் பத்தியைப் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

ரங்கசாமி அய்யங்கார் தனது மகள் சூர்யாவுக்கு கணக்குப் பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருகின்றார். சூர்யா மழலையுடன், "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரு வேலையை ஒரு மணிநேரத்தில் செய்தால், இரண்டு ஆணும், இரண்டு பெண்ணும் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்வார்கள்?" என்று அப்பாவைப் பார்த்தாள். அய்யங்கார் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செய்யறதை 'எக்ஸ்' னு வெச்சுக்கோ..." என்றார். உள்ளே நுழைந்த மனைவி, "இதெல்லாம்தான் குழந்தைக்குச் சொல்லித் தரதா?" என்றாள். 'என்னடி பண்றது. பொஸ்தகத்தில் போட்டிருக்கே...?"

மேற்படி நகைச்சுவை சமாச்சாரங்களுக்குப் பிறகு எடுக்கிறது எக்ஸ்பிரஸ் வேகம்.  டூர் போகும் விஜியை வினோத் திட்டம் போட்டு அழைத்துப் போகும் நேரத்தில் படிக்கும் அனைவருக்கும் பதைபதைக்கும். சமூக சேவகர்களும், ஊடகங்களும் எப்படிப் பொறுப்பற்று இயங்கி, விஜியின் கையறு நிலைக்குக் காரணமாகின்றன என்று தெரியும்போது சுஜாதா எப்படி வாசகர்களைப் பாதிக்கிறார் என்று புரிகின்றது.

சிறுகதை என்றால் மட்டும்தான் நச்சென்ற முடிவு அவசியமா? குறு நாவல்களிலும் இது சாத்தியமே என்று இறுதி அத்தியாயத்தில் சுஜாதா தனது முத்திரையைப் பதித்து  தலைப்பை நியாப்படுத்துகின்றார்.

பை தி வே, இந்தத் தொடருக்கு மாதர் சங்கங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்று சுஜாதா போலவே நாமும் குழம்பிப் போகின்றோம். ஒரு பெண்ணை ஆபாசப் படம் எடுத்ததற்கா? இல்லை தகாத உறவு வைத்திருக்கும் சில பாத்திரங்களுக்காகவா? புரியவில்லை. புரியாதுதான். ஆசிட் முட்டை, அருவருக்கத்தக்க உறவுகள் இல்லாத டி.வி. சீரியல்களே இல்லை என்னும் இந்தக் காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருபது வருடங்கள் பின்னோக்கிப் பயணிப்பது கடினம்தான்.

- சிமுலேஷன்

Saturday, July 05, 2008

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்

Friday, April 04, 2008

ஓர் உத்தம தினம்

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள வாத்யாரின் "ஓர் உத்தம தினம்" (சுஜாதா சுவடுகள்) என்ற சிறுகதையின் முடிவினை யாரேனும் விளக்க முடியுமா?

(ஹி...ஹி... நான் நினைச்ச முடிவேதான் நீங்களும் நினைச்சிருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்).

- சிமுலேஷன்

Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு - நூல் விமர்சனம்


சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம்.

நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு பொது மருத்துவமனையில், டெபுடி டைரக்டராக இருக்கும் டாக்டர் நரேந்த்திரன், தற்போது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறார்.

அவர் மீது, மூன்று முக்கியக் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார் பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் நாகராஜன். பெரியவர் சரவணனுக்குச் சென்று கொண்டிருந்த குளூக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கிவிட்டு, அவரைச் சாகடித்தது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தான் வேலை செய்யும் பொது மருத்துவமனையிலேயே, தனது காரியதரிசி மஞ்சுளாவிற்குக் கருக்கலைப்பிற்கு ஏற்பாடு செய்தார் என்பது. லூக்கேமியா என்ற இரத்தப்புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கும், ரவி என்ற சிறுவனுக்குத் தவறான மருந்தைக் கொடுத்து, அவன் சாவதற்கும் காரணமாயிருந்தார் என்பது மூன்றாம் குற்றச்சாட்டு.

"எனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, நானே எனக்காக வாதாடிக் கொள்கிறேன்," என்று சொல்லி, குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, தண்டனை வேண்டும் என்று கூறிக் கோர்ட்டாரைக் குழப்புகிறார் வினோதமான டாக்டர் நரேந்திரன். இதனை ஒப்புக் கொள்ளாத ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், கணேஷும், வசந்தும் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். வழக்கமான டிடெக்டிவ்களாக வரும் இருவருக்கும், துப்பறியும் வேலை என்று ஒன்றும் பெரியதாக இல்லை. இவர்கள் நடத்தும் இந்தக் கேஸில் நியாயம் வென்றதா? அரசியல் வென்றதா? யதார்த்தம் என்ன? என்பதே கதை.

குருகுலம் குழுவினர் திறம்பட நடித்துள்ளனர். "பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் தனது வாதங்களைச் சொல்லலாம்," என்ற வழமையான கோர்ட் வசனங்களையே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு, ஜட்ஜ் வழக்கறிஞர்களைப் பெயர் சொல்லி அழைப்பது (நாகராஜன், உங்க க்ராஸ் எக்ஸாமினேஷனை ஆரம்பியுங்க...) புதுமையாகவும், உண்மையிலேயே கோர்ட் விவாதங்கள் இப்படித்தான் யதார்த்தமாகவும் இருக்குமோ என்றும் யூகிக்கத் தோன்றுகின்றது. ஜட்ஜ் பாத்திரம் ஏற்ற குருகுலம் M.B.மூர்த்தி முதல், "எளவு" எனப்படும் இளவழகன் வரை அனைவரும் அளவாகவே நடித்திருக்கிறார்கள் எனலாம். ஓவ்வொரு வசனங்களிலும் தோன்றும், அங்கதத்திலும் சுஜாதா எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பாத்திரங்களின் வேடப் பொருத்தங்கள் அருமை. டாக்டர் நரேந்திரனின் உயரமான ஆளுமை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றது. ஒரு நேரத்தில், கோர்ட்டிலேயே, "போடா" என்று சொல்லுவது அவரது கேரக்டரைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. முதிர்வான கணேஷும், நடிகர் சூர்யா போன்ற இளமையான வசந்த்தும் பாத்திரப் பொருத்தத்தில் நிச்சியமாக ஏமாற்றவில்லை. ஆனால் குறுந்தாடியுடன் கூடிய கணேஷையும், ஜொள்ளுவிட வாய்ப்பில்லா வசந்த்தையும் யாரும அவ்வளவாக எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ரவி, பார்வையாளர்கள் பெரும்பான்மையோரை அழ வைத்திருப்பான். பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிட்டு, வகுப்பாசிரியரிடம் பாடம்(!) வாங்கிப் பின்னர், அப்பாவிடமும் பெல்ட்டால் அடி வாங்கும்போது, ஏனோ "தாரே ஜமீன் பர்" ஞாபகத்திற்கு வந்தது.

"அன்னியன்", "இந்தியன்" போன்ற கதைகளையெழுதி வந்த வாத்தியாருக்குப் பல ஆண்டுகளாகவே, இந்தியச் சமூகத்தின் மேல் இருந்து வந்த ஒரு சினிசிசத்தினை டாக்டர் நரேந்திரன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் "அறிவாளியாகவும், மனிதாபிமானமும் மிக்க ஒரு மனிதன், மதியூகத்துடனும் செயல்பட முடியாதா?," என்ற கேள்வி மனதினில் எழாமலில்லை. மஞ்சுளாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே! ரவியின் பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வைத்திருக்கலாமே," என்றெல்லாம் யோசித்தால் கதையாவது, நாடகமாவது.

இடைவேளை ஏதுமில்லாமல், காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு கூட்டிக்கொண்டே சென்று பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் பரவசப்படுத்தினாலும், தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு, அவர் எழுத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை, அவரது சினிமாவோ, நாடகங்களோ தரவில்லை; தரவும் இயலாது," என்பதே உண்மை.

- சிமுலேஷன்

Saturday, August 20, 2005

என்றான் முருகன்

சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்
வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.

வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-

1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.

2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.

3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.

4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.

5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன் குழம்பியபடி.

6. ஸம்மர் வருது; வீடு முழுவதும் ஏ.ஸி பண்ண வேண்டும் என்றான் முருகன் கூலாக.

7. இந்த நாத்தம் பிடிச்ச ஊது பத்தியை யார் இங்கு வைச்சது என்றான் முருகன் காட்டமாக.

8. என்னமோ குடிக்கக் கொடுத்தான்; வயிற்று வலி தாங்க முடியிலை என்றான் முருகன் கடுப்பாக.

9. நாமே தோய்க்கறதை விட, வண்ணானுக்குப் போட்டால் துணிகள் நன்றாக வெளுக்குமே என்றான் முருகன் பளிச்சென்று.

10. உனக்கு எத்தனை சல்லடைதான் வாங்கித் தருவது என்றான் முருகன் சலிப்பாக.