Tuesday, November 09, 2010

கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா - நூல் விமர்சனம்

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார். நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ச்சி செய்யும்  பொருட்டு, “திருநிலம்” என்ற கிராமத்திற்கு வருகின்றான் கல்யாணராமன். அங்கு சந்த்திக்கும் வெள்ளி என்ற கிராமத்துப் பெண் மீது அவனுக்கு ஒரு கிரஷ். அவளுக்கோ பரிசம் போட்ட மருத்முத்து மேலே ஒரே பைத்தியம். இதனிடையே ஸ்நேக் எனப்படும் சிநேகலதா என்ற பட்டணத்துப் பெண் வேறு வருகின்றாள். மருதமுத்துவின் கவனம் ‘சிநேகம்மா’வின் மீது விழுகிறது. சிநேகம்மா மருதமுத்துவுடனும் சிநேகமாக இருந்துகொண்டு, கல்யாணராமனுக்கும் ரூட்டுப் போடுகின்றாள். இவர்கள் உறவுகளுக்கிடையே நடக்கும் பல மர்மச் சம்பவங்கள், வாசகர்களின் அடுத்து என்ன எண்ரு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன். நாவலாக இல்லாமல் தொடர்கதையாக இருக்கும்போது இன்னம் கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருந்து அடுத்த வெள்ளி எப்போது வருமோ? என்றெண்ணத் தூண்டியது.

நா.வானமாமலை அவர்கள் அழகாகத் தொகுத்து NCBH நிறுவனம் வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள்” புத்தகத்திலிருந்து பல பாடல்களை சுஜாதா இடத்திற்கேற்றாற் போல கையாண்டிருக்கின்றார். மேலும் “பழையனூர் நீலியம்மன் கதை” கதை வேறு இடம் பெருகின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளன் கதை சொல்லும்போது, முக்கியமாகச் சொல்ல வேண்டியவை, கதை நடக்கும் களன் பற்றிய விவரணைகள், கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனைகள் ஆகியவைதான். அப்போதுதான், வாசகனை அந்தக் களத்திற்குக் கூட்டிச் செல்ல முடியும். அதற்கு எந்தக் குறையும் வைக்காத சுஜாதா, நம்மையெல்லாம் ‘திருநிலத்திற்கே’ கூட்டிச் சென்றுவிடுகின்றார். கல்யாணராமன், வெள்ளி, மருதமுத்து, சிநேகலதா, தங்கராசு ஆகியோர் எப்படி இருப்பார்கள் என்று வாசகர்கள் நன்றாகவே கற்பனை செய்து கொள்ள முடிகின்றது.  ரசித்த சில இடங்கள்:-

“கிராம நாய்களின் பொதுப்பெயர் கொண்ட ‘மணி’ வாலாட்டிக்கொண்டு வந்தது.”

“பயந்து போயிட்டீங்களா? டவுசர் எல்லாம் ஈரமாக இருக்குது?”

“இல்லே! அந்தக் கான் ஒழுகறது” என்றான் எரிச்சலுடன்.

வழக்கம் போல சுஜாதா கதை வெளியாகிக் கொண்டிருக்கும்போதே அதனை படமாக்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்து கடைசியாக ஜி.என்.ரங்கராஜன், பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, சுமலதா, மனோரமா ஆகியோரைப் போட்டுப் படம் எடுத்தார். இந்தப் படம் நான் பார்த்த நினைவில்லை. அபிப்ராயம் சொல்ல முடியவில்லை. சுஜாதா ஓரளவு சந்த்தோஷப்பட்டார் போல. வெள்ளி பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவும், சிநேகலதா பாத்திரத்திற்கு சுமலதாவும், நாட்டுப் பாடல் கிளவிக்கு மனோரமாவும் பொருந்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் பிரதாப் போத்தன் பெரும்பாலான படங்களில் லூஸு கேரக்டர் பண்ணியதாலோ என்னவோ, கல்யாணராமன் பாத்திரத்திற்கு பொருந்தினாராவென்று தெரியவில்லை. மேலும் இந்தக் கதை திரைப்படமாக வந்ததிற்குப் பதிலாக, தொலைக்காட்சிட் தொடராக வந்த்திருந்திருக்கலாம். ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் சஸ்பென்ஸ் வைக்கத் தோதான கதை.

தலைப்பு: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்:சுஜாதா
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு: 1993 (முதல்) 1997 (இரண்டாவது)
பக்கங்கள்: 224
விலை: Rs. 39.00

-       சிமுலேஷன்

1 comments:

GeePee said...

மிக நல்ல அலசல் மற்றும பதிவு.

அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். சுஜாதாவே சொல்லியிருப்பதைப் போல, ஒரு நாவல் படமாவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. கதையாய்ப் படித்து நாம் சில எதிர்பார்ப்புகள் வைத்திருப்போம். அது எதிர்மறையாய் மாறிவிடும். படத்தின் முடிவை சற்றே சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் ப்ரியா, என் இனிய இயந்திரா தொடர் அளவுக்கு மோசம் இல்லை. அது என்னவோ மனசுக்கு அவ்வளவாய் ஒட்டவில்லை.மேலும் சுஜாதாவின் வர்ணனைகளை படமாக்குவது அவ்வளவு சுலபமில்லை.

திருநிலம் டவுன் பற்றிய வர்ணனையை திரையிக் கொண்டு வருவது மிக கஷ்டம்.

"புழுதி நிறைந்த டவுன். புவனேஸ்வரி சினிமாக் கொட்டகை, அண்ணா ஒலி ஒளி என்று லவுட்ஸ்பீக்கர் கடை, சைக்கிள் கடை, வெல்ல மண்டி, மிளகாய் குப்பல்கள், சீட்டித் துணிகள், வசந்தா லாட்ஜ், பஸ் ஸ்டாண்டு சுவரெல்லாம் படை மருந்து விளம்பரம்."

எனவே சற்று compromise செய்து கொண்டு அந்தப் படத்தை ரசிக்க முடிந்தது. கடைசியாக அவர் எழுத்தில் படித்ததை திரையில் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.