Wednesday, May 11, 2016

ஆரஞ்சு மிட்டாய் ஆராவமுதன்

எம்.எல்.ஏவாக இருந்த ஆராவமுதன் ஆடி அமாவாசையன்று அதிர்ஷ்டம் அடித்து, அமைச்சரானார். கவர்னர் மாளிகையில் பதவியேற்ற மறு நாளே குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்தார். ஆராவமுதன் அமைச்சராகி விட்டார் என்றதுமே பாரியூர் பரபரப்பாகி விட்டது. அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழாவுக்கு எற்பாடு செய்து விட்டார்கள். 

பள்ளியின் ப்யூன் முதல் தலைமை ஆசிரியர் வரை பாராட்டு விழாவில் பரவசமாய் இருந்தார்கள். அதிலும் தமிழ் ஆசிரியர் தங்கதுரைக்கு ஒரே மகிழ்ச்சி.  ஆம். அவர்தான் மூன்றண்டுகள் ஆராவமுதனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர். அவர் பத்தாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி, நினைவுக்கு வந்தது. அதனைப் பற்றி மேடையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமென்று எண்ணினார்.

"ஆசிரியர்களே! மாணவர்களே! இங்கே நம்மிடையே அமர்ந்துள்ள அமைச்சர் ஆராவமுதன் நம் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்புகள் நிரம்பியவராக இருந்தவர். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு நாள், நான் ஒரு கண்ணாடி பாட்டில் முழுவதும் மிட்டாய் நிரப்பி வகுப்புக்குக் கொண்டு வந்து அலமாரியில் வைத்தேன். மாணவர்களிடம் "இந்த சீல் செய்த பாட்டிலில் எத்தனை மிட்டாய் இருக்கின்றது என்று நாளைக்குள் சரியாக கணித்துச் சொல்பவர்தான் மாணவர் தலைவர். மற்றபடி மாணவர் தலைவர் பதவிக்கு தேர்தல் எதுவும் கிடையாதுஎன்றேன். மாணவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டு ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்ணைச் சொன்னர்கள். ஆனால் ஆராவமுதன் மட்டுமே மிகச் சரியாக 135 என்று சொன்னார். அவனுடைய ஊகத்தையும், மிகச் சரியாக கணிக்கும் திறனையும் கண்டு வியந்து போனேன். அன்று வகுப்புக்கு மாணவர் தலைவரான ஆராவமுதன், பள்ளிக்கும் மாணவர் தலைவரானார்."

பாராட்டு விழாவில் தமிழ் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என ஒவ்வொருவராகப் புகழ்ந்து கொண்டே போனார்கள்.

சென்னை வரும் வழியில் ஆராவமுதன் மனைவி கேட்டார்.

"அது எப்படிங்க, ஸ்கூல்ல இருக்கும் போதுபாட்டில்ல இருக்கிற மிட்டாய கரெக்டா கண்டு பிடிச்சீங்க? தமிழ் வாத்யார் கேட்ட கேள்விங்கரதுனால  திருக்குறள் அதிகாரம் 135ன்னு கெஸ்பண்ணீங்களா?"


"அடியே! திருக்குறள்ல 133 அதிக்கரம் தானடி! 135 அதிகாரம் கிடையாது! நான் கண்டு பிடிச்சது ரொம்ப சிம்பிள். தமிழ் வாத்யார் வாங்கிட்டு வந்த பாட்டில் மாதிரியே ஒண்ணு புதுசா வாங்கி, அவர் வாங்கின அதே ஆரஞ்சு மிட்டாயப் போட்டு ரொப்பி, சீல் பண்ணி, கிளாசுக்கு எடுத்துகிட்டு போனேன். யாரும் பாக்காதப்ப  பாட்டிலை மாத்திட்டேன். நான் ரொப்பின பாட்டில்ல எவ்வளவு மிட்டாய் இருக்கும்னு எனக்குத் தெரியாதா?"


- சிமுலேஷன்

Wednesday, May 04, 2016

யாருக்கு ஓட்டுப்போடலாம்? - சுஜாதா சொன்ன யோசனைகள் சரிதானா?


ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப் போடலாம்... போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

·         இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள்.
//படித்த மற்றும் இளைய அரசியல்வாதிகள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததற்கு சமீபத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. படிப்புக்கும், வயதுக்கும் ஊழல் செய்வதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.//
·         சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள். 
//வெளியிலிருந்து விதைக்கப்பட்டவர் தொகுதிக்கு எதுவும் செய்ய மாட்டார். உள்ளூர்க்காரர்தான் விழுந்து, விழுந்து வேலை செய்வார் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.//
·         உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம். 

//அரசியல் பேசுவது என்றாலே அலர்ஜியாக ஓடும் குடும்பத்தாரும் சுற்றுப்பட்டவர்களிடமும் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்று சொல்லக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.//
·         உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்... பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

//சொர்ணாக்காவாக இருந்தாலும் பரவாயில்லையா?//
·        
சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

//வேஸ்ட் என்றால் என்ன? வெற்றி வாய்ப்புக் குறைவானவர்களா? தகுதியான வேட்பாளர்களாக இருந்து வெற்றி வாய்ப்புக் குறைவாக இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வோட்டுப் போடக் கூடாதா?//

http://www.vikatan.com/news/miscellaneous/63527-for-whom-do-we-vote-writer-sujathas-suggestion.art

சிமுலேஷன்