Friday, December 30, 2005

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்
-------------------------------------------------

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும்.

னேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. னாட்டை. கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் அடங்கிய பஞ்சராக மாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் துவங்கிய இந்த வர்ணத்தை இயற்றியவர் குமரேஷாம். இரண்டாவதாக சிந்துனாமக்ரியாவில் 'தே
வாதி தே சதாசிவா' என்ற பாடலும், அதனையடுத்து சுப்பராய ஸாஸ்திரியின் முகாரி இராகப் பாடலும் தொடர்ந்தது.

மூன்றாவது பாடலுக்குப் பிறகு, முப்பது பேர் கலையத் துவங்க, கணேஷ், Good night to all the friends who are leaving என்று சிரித்துக் கொண்டே சொன்னது இரசிக்கும்படி இருந்தது. அடுத்ததாக வந்தது 'இராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி' என்ற பூர்ணசந்த்திரிகா இராகப் பாடல்.

ஐந்தாவதாக இவர்கள் வாசித்தது ஒரு புதுமையான உருப்படியாகும். ஸாஹித்யம் ஏதுமின்றி, இராகம் மட்டுமே வாசித்தனர். எடுத்துக் கொண்ட இராகம் தர்மவதி. தாளம் கண்டசாபு. இதற்கு 'இராக ப்ரவாகம்' என்று பெயரிட்டிருந்தனர். தர்மவதியின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்திருந்தது இது. மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும் ஒ
வ்வொன்றாக, கை கோர்த்து வந்த அமைப்பு அமர்க்களமாக அமைந்திருந்தது. சபையில் நிலவிய பரிபூரண அமைதி, இரசிகர்கள் தர்மவதியில் ஒன்றிவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாய் இருந்தது.

பின்னர் வாகதீஸ்வரியில் பாடிய ஒர் பாடலுக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்பட்டது. அடுத்தாக அகிலமும் அறிந்த, 'அகில¡ண்டேஸ்வரி ரட்சமாம்". ஜுஜாவந்தியில். ரேவதி, சிவரஞ்சனி, நாட்டை, வாஸந்தி, குந்தளவராளி அடங்கிய இராக மாலிகாவின் வித்தியாசமான பிடிப்புகள் கணேஷ், குமரேஷ் அவர்களுக்கே உரித்தானது.

கணேஷ் அவர்களிடம் ஒர் குணம். திடீரென்று வயலினை ஓரம் கட்டி விட்டு, பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார். இரசிகர்களுக்கும் இது ஓர் எதிபாராத விருந்தாகவே அமைந்து விடுகின்றது. 'பள்ளி பள்ளி இராமா' என்ற பாடலை அவர் முழுமையாகப் பாடியதை சபை இரசிக்கவே செய்தது.

பெஹாக்கில் ஒரு அருமையான பாடல். அருமையான வாசிப்பு. நடனம் தெரிந்த எவரேனும் இருந்திருந்தால் அவர்கள் வாசித்த பெஹாக்கிற்கு நடனமாடத் துடித்திருப்பர்கள். சிந்து பைரவியில் ஒரு வித்தியாசமான வாசிப்புடன் வாசித்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் கணேஷ்,குமரேஷ் சகோதரர்கள்.

இரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு முடிந்த இரட்டை வயலின் நிகழ்ச்சியில், இளைஞர்கள் பலர் இறுதி வரை இருந்து இரசித்தது ஓர் ஆரோக்கியமான விஷயம்.

நடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க

கர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது.
குழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது.

இடம்: சென்னை ம்யூசிக் அக்கடெமி
னேரம்: 11 pm. - 1 am
மேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013

இது ஒரு ALL AR WELCOME நிகழ்ச்சி

Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன்.

1. பச்சை மாமலை போல் மேனி - பூபாளம் - சாருலதா மணி
2. ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி - ரதி பதிப்ரியா - தர்ஷினி
3. கண்ணா வா - மதுவந்தி - டாக்டர்.ராதா பாஸ்கர்
4. ஆறுமுகம் (திருப்புகழ்) - folk tune - ஸ்ரீகாந்த்
5. ஸ்திரதா நஹி நஹி - சாருகேசி - சைந்தவி
6. தந்¨தை தாய் - ஷண்முகப் ப்ரியா - கீதா ராஜா
7. அமைதியில் - பௌளி - சுபிக்ஷா
8. வந்தேஹம் - யமன் கல்யாணி - டாக்டர்.கணேஷ்
9. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மாண்டு - சாருலதா மணி
10. திக்கெட்டும் - ராகேஸ்ரீ - தர்ஷினி
11. ஸர்வம் ப்ரம்ஹ மயம் - பஸந்த் பஹார் - டாக்டர்.ராதா பாஸ்கர்
12. விட்டு விடுதலை - கீரவாணி - ஸ்ரீகாந்த்
13. ராமநாம - சாலக பைரவி - சுபிக்ஷா
14. கனிகள் கொண்டு வரும் - மத்யமாவதி - சைந்தவி
15. நாதவிந்து கலாதி - நாத நாமகிரியா - கீதா ராஜா
16. துன்பம் நேர்கையில் - தேஷ் - டாக்டர்.கணேஷ்
17. எத்தனை இன்பங்கள் - தர்ஷினி
18. கூவி அழைத்தால் - வலஜி - டாக்டர்.ராதா பாஸ்கர்
19. ரகுவர தும்கோ - காபி - ஸ்ரீகாந்த்
20. கேலதி மம ஹ்ருதயே - சைந்தவி
21. கலியுக வரதன் - ப்ருந்தாவன் சாரங்கா - கீதா ராஜா
22. சந்தன சர்ச்சித - பஹாடி - சுபிக்ஷா
23. போ சம்போ - ரேவதி - டாக்டர்.கணேஷ்
24. சாந்தி நிலவ வேண்டும் - திலங் - கோரஸ்

எல்.கிருஷணன் அவர்களை உன்னிக் கிருஷ்ணண் மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார். விழாவிற்கு வந்த மற்ற முக்கியமானவர்கள் பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜ்குமார் பாரதி.

வழக்கம் போலவே டாக்டர்.ராதா பாஸ்கர் அவர்களும், முத்ரா பாஸ்கர் அவர்களும், நிறைவான ஒர் நிகழ்ச்சி வழங்கி, பார்வையாளர்களப் பரவசப்படுத்தினர். மதுசூதனன் தபேலாவில் பூந்து விளையாடி விட்டார். ராமானுஜம் புல்லாங்குழலில் கானடா மற்றும் ப்ருந்தாவன சாரங்காவில் கலக்கினார். கீ போர்ட் சத்யா ஒரிரு பாடல்களுக்கு மட்டுமே முழுமையாக வாசித்தாலும், கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார். ஆண்களில் டாக்டர்.கணேஷ¤க்கும் பெண்களில் சைந்தவிக்கும் மானசீகமாக முதல் பரிசைத் தாராளமாகத் தந்தோம். சம்பிரதாயக் கச்சேரி அல்ல என்றாலும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தது னிகழ்ச்சி.

சங்கீத நிகழ்ச்சிகளில் பாரம்பரியம் கெடாமல் புதுமை புகுத்தி வரும், முத்ரா தம்பதியினருக்கு, 'சங்கீத நவீன கலா போஷகா' போன்ற விருதுகள் யாரேனும் தந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை

- சிமுலேஷன்

Sunday, December 25, 2005

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.

"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.

எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.

னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.

மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.

பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-

டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.

சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?

-சிமுலேஷன்

Saturday, December 24, 2005

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு,
'ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

கர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம்
பாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், டி.கே.தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும்? நன்றாகவே
இருந்தது. நேற்றைய தினம், ஸ்ரீ பார்த்தசாரதி சபா ஆதரவில் நடை பெற்ற, திரு.சூர்யபிரகாஷ்
(ரிசரிவ் வங்கியில் வேலை) அவர்கள் தனது நிகழிச்சியில், ஒரு மணி நேரம் வழக்கமான
பாரம்பரியக் கச்சேரி நிகழ்த்தி விட்டு, அடுத்த ஒன்றரை மணி நேரம் 40-50களில் வெளிவந்த
பழம்பெரும் திரைப்பாடல்களைப் பாடி அசத்தினார்.

திருனீலகண்டர் படத்தில் இடம் பெற்ற, "ஒரு நாள் ஒரு பொழுதாகினும்" என்ற கமாஸ் இராகப்
பாடலுடன் இந்தப் பகுதியைத் துவங்கினார். அடுத்தாக, அஷோக் குமார் படத்திலிருந்து,
ஜோன்புரி இராகத்தில், "ஞானக்கண் ஒன்று" என்ற பாடல். ப்ருகாக்கள் அமர்க்களம். பின்னர்,
ஸ்ரீரஞ்சனி இராகத்தில், நத்தனார் படல் பாடலான, "வீணில் உலகைச் சுற்றி". அதன்பின்,
அனைவரும் அறிந்த, "தீன கருணாகரனே நடராஜா". கூட்டத்தினர் தன்னை மறந்து இரசித்தனர்.

அடுத்ததாக, "கோடையிலே இளைப்பாறி" என்ற ஓர் அருமயான விருத்தம். பி.யூ.சின்னப்பா
பாடல் என்று நினைக்கின்றேன். உச்சஸ்தாயியில் பாடத் துவங்க, கேன்டீன் ஊழியர்கள் உட்பட,
அனவரும் அரங்கில் குவிந்து, ஆவென்று வாய் பிளந்து இரசித்தனர். "பாற்கடல் அலை மேலே,
பாம்பணை மேலெ" என்ற இராக மாலிகையும் நன்றாகவே இருந்தது. ஆனால், சற்றே பெரிய
பாடல். சிவகவியின் புகழ்பெற்ற, "அம்பா மனம் கனிந்து" இரசிகர்கள் மனதைக் கவர்ந்த்தில் ஐயம் இல்லை. மீண்டும் ஒரு ஜோன்புரி, அஷோக் குமாரிலிருந்து, "சத்வ குண போதன்". அருமையான பாடல் என்பதனால், அதே இராகம் மீண்டும் இடல் பெற்றதில் தவறில்லை என்று
நினைத்திருந்திருப்பார்.

மொத்ததில் நிகழ்ச்சி புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. ஆனால் சூர்யப் பிரகாஷே
குறிப்பிட்டபடி, அளவுக்கு மீறினால், பாரம்பரிய இரசிகர்கள், அமிர்தமும் நஞ்சே என்பார்கள்.


- சிமுலேஷன்

Friday, December 09, 2005

புயலுக்குப் என்ன பெயர்?

புயலுக்குப் என்ன பெயர்?

மேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன? (What is in a name?) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு.

அமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு பெயர் வைக்கவே கூடாது. அடித்த முறை புயலுக்குப் பெயர் வைக்கும் போது அடியேனிடம் ஒரு யோசனை கேட்டுவிட்டு வையுங்கள்.