Saturday, December 24, 2005

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு,
'ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

கர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம்
பாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், டி.கே.தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும்? நன்றாகவே
இருந்தது. நேற்றைய தினம், ஸ்ரீ பார்த்தசாரதி சபா ஆதரவில் நடை பெற்ற, திரு.சூர்யபிரகாஷ்
(ரிசரிவ் வங்கியில் வேலை) அவர்கள் தனது நிகழிச்சியில், ஒரு மணி நேரம் வழக்கமான
பாரம்பரியக் கச்சேரி நிகழ்த்தி விட்டு, அடுத்த ஒன்றரை மணி நேரம் 40-50களில் வெளிவந்த
பழம்பெரும் திரைப்பாடல்களைப் பாடி அசத்தினார்.

திருனீலகண்டர் படத்தில் இடம் பெற்ற, "ஒரு நாள் ஒரு பொழுதாகினும்" என்ற கமாஸ் இராகப்
பாடலுடன் இந்தப் பகுதியைத் துவங்கினார். அடுத்தாக, அஷோக் குமார் படத்திலிருந்து,
ஜோன்புரி இராகத்தில், "ஞானக்கண் ஒன்று" என்ற பாடல். ப்ருகாக்கள் அமர்க்களம். பின்னர்,
ஸ்ரீரஞ்சனி இராகத்தில், நத்தனார் படல் பாடலான, "வீணில் உலகைச் சுற்றி". அதன்பின்,
அனைவரும் அறிந்த, "தீன கருணாகரனே நடராஜா". கூட்டத்தினர் தன்னை மறந்து இரசித்தனர்.

அடுத்ததாக, "கோடையிலே இளைப்பாறி" என்ற ஓர் அருமயான விருத்தம். பி.யூ.சின்னப்பா
பாடல் என்று நினைக்கின்றேன். உச்சஸ்தாயியில் பாடத் துவங்க, கேன்டீன் ஊழியர்கள் உட்பட,
அனவரும் அரங்கில் குவிந்து, ஆவென்று வாய் பிளந்து இரசித்தனர். "பாற்கடல் அலை மேலே,
பாம்பணை மேலெ" என்ற இராக மாலிகையும் நன்றாகவே இருந்தது. ஆனால், சற்றே பெரிய
பாடல். சிவகவியின் புகழ்பெற்ற, "அம்பா மனம் கனிந்து" இரசிகர்கள் மனதைக் கவர்ந்த்தில் ஐயம் இல்லை. மீண்டும் ஒரு ஜோன்புரி, அஷோக் குமாரிலிருந்து, "சத்வ குண போதன்". அருமையான பாடல் என்பதனால், அதே இராகம் மீண்டும் இடல் பெற்றதில் தவறில்லை என்று
நினைத்திருந்திருப்பார்.

மொத்ததில் நிகழ்ச்சி புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. ஆனால் சூர்யப் பிரகாஷே
குறிப்பிட்டபடி, அளவுக்கு மீறினால், பாரம்பரிய இரசிகர்கள், அமிர்தமும் நஞ்சே என்பார்கள்.


- சிமுலேஷன்

0 comments: