Saturday, October 17, 2009

சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்

கர்நாடக இசையை மக்கள் இசை ஆக்கிய சங்கீத மேதையின் அரிய சரித்திரம்திரை இசையை படைத்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரைப் பற்றி, "திரை இசை அலைகள்" என்ற ஒரு முழுமையான படைப்பைத் தந்த கலைமாமணி வாமனன் எழுதிய இன்னமொரு சரித்திரப் புத்தகம் இது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற இறவாத படங்களுக்கு சிறந்த முறையிலே இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களது சரித்திரத்தினை 300 பக்கக்களில் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் வாமனன்.

ராமநாதன் அவர்களது குடும்பத்தில் அவருடைய அண்ணா சுந்தர பாகவதர் எப்படி தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர பாடுபடுகின்றார் என்றும் எப்படி இந்தச் சகோதரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை அழகாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் விவரிகின்றார் வாமனன்.

டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர்களின் திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்தவர் ஜி.ராமநாதந்தான் என்பதை விறுவிறுப்போடு எழுதிருக்கின்றார்.

1940 ஒல் துவங்கிய ராமநாதனது திரையிச வாழ்க்கையில் கிட்டத்தட்ட 85 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை:-
 • ஆர்ய மாலா
 • சிவகவி
 • ஹரிதாஸ்
 • ஜகதலப்ரதாபன்
 • ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
 • மந்திரி குமாரி
 • தூக்குத் தூக்கி
 • நான் பெற்ற செல்வம்
 • மதுரை வீரன்
 • அம்பிகாபதி
 • ஆரவல்லி
 • வணங்காமுடி
 • உத்தமபுத்திரன்
 • காதவராயன்
 • சாரங்கதாரா
 • வீரபாண்டிய கட்டபொம்மன்
 • கப்பலோட்டிய தமிழன்
 • அரசிளங்குமரி
 • பட்டினத்தார்
இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கபெற்ற சில சுவையான துக்கடாக்கள் (Trivia)

 • தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ் பெற்ற "சிவகவி" என்ற திரைப்படத்தின் கதையினை எழுதியவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

 • அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில் ஜி.ராமனாதன் அமைத்த அழகான பாடல் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும்.

 • ஒரு குறிப்பிட்ட பாடல், படத்தின் உச்சக்கட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை என்று யாரோ கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பாடலைக் கத்தரித்து விடலாம் என்று எண்ணத் தொடங்கினார். இசை அமைப்பாளரான ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டதாம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் இசை அமைத்த் பாடல் அது. "படம் வெளியானதும் முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்" என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பார்த்துவிட்டுச் சென்ற ரசிகர்கள் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே சென்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மந்திரி குமாரி". பாடல் "வாராய்...நீ வாராய்.. போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்" திருச்சி லோகனாதனின் அருமையான் குரலிலே வந்த அந்தப் பாடல் கத்திரியிட்மிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.


 • கைரோ ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு சிறைந்த நடிகருக்கான் பதக்கம் கிடைத்ததென்றால், சிறந்த இசை அமைப்பாளர்ருக்கான விருது ஜி.ராமநாதனுக்கு வழங்கப்பட்டது (படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்). எகிப்து அதிபர் நாஸர் இந்தியா வந்த போது, ராமநாதன் அவர்களைப் பாராட்டும் வகையில், ஒரு வெள்ளி வீணையை அளித்து மகிழந்தாராம்.

 • சிவாஜி. எம்.ஜி.ஆர் போல பாடகர்களில் அந்தக் காலகட்டத்தில் புகழ் அடைந்தவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். இந்த இருவரின் திரையிசை வாழக்கைக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ஜி.ராமநாதன் அவர்களே.

 • ராமநாதனின் மகள் சாயிதேவியின் மகள் உமாமகேஸ்வரியை மணந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

 • இந்தப் புததகத்தில் ராமநாதன் அவர்களது வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்தம் சம்பந்தப்பட்ட பலரது வாழ்க்கைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பெரிதும் அடிபட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர். இவை தவிர பல அரிய அந்தக் காலத்துப் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

புத்தக ஆசிரியர்: வாமனன்
பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம், மதுரை
வெளியீடு: 2006
விலை: Rs.100.00