Sunday, September 24, 2006

புகைப்படப் புதிர்-03


01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன? (லல்லுவின் சினனமொன்று உண்டிங்கு)


02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?
(இசைக் கலைஞனுக்கு ஏனோ திரையில் பாடல்கள் என்றால் அலர்ஜி)

03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்? (மதுரை முதல் மருத வரை)


04. இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? (கூவி அழைத்தால் குரல் கொடுப்பாள்)


05. இந்தப் பிரபலம் யார்? (காதறந்த ஊசியும் வாராது கடைவழி காண்)

Saturday, September 23, 2006

புகைப்படப் புதிர்-02

அடுத்த புகைப்படப் புதிருக்குத் த்யாராக இருப்பீர்களென்று நினைக்கின்றேன்.

01. ஒரு பிரபலத்தை மணந்த இந்தப் பிரபலம் யார்?02. கருப்புக் கண்ணாடி சகிதம் கலக்கும் இவர் யார்?


03. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் இடையில் நிற்பவர் யார்? அவ்ருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?04.இந்த இரண்டு பிரபல்ங்களுக்ளிடையே இருந்த உறவு முறை என்ன?

05. ஆல்த்தூர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களின் பெயர் தெரியுமா? பெயர் தெரியாதென்றால் இவர்களில் அண்ணா யார்? தம்பி யார்? (வலதா? இடதா?

Friday, September 22, 2006

புகைப்படப் புதிர்-01

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.


01. இந்தப் பிரபலங்கள் யார் யார்?

02. யாருடைய சிலை இது? எங்குள்ளது?

03. இவர் யார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார்


04. இந்த நாதசுரக் கலைஞர் யார்?


05. பசுப் பையன் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கலைஞர் யார்?

Sunday, September 17, 2006

போண்டா வடை போயாச்சு

நேற்றைய தினம் பூர்ணம் விசுவநாதன் நாடகக் குழுவில் பணியாற்றும், மெலட்டூர் நடராஜன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மயிலையில் படைப்பாளிகளின் ஒர் சந்திப்புக்குச் செல்வதாகக் கூறியவர், என்னையும் வரச் சொன்னார். அப்புசாமி, சீதப்பாட்டி புகழ் பாக்கியம் ராமஸ்வாமி அவர்கள் மயிலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஒவ்வொரு மாத்ம் மூன்றாம் சனிக்கிழமையன்று ஒத்த கருத்துடைய படைப்பாளிகளின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்து வருகின்றார்.

இந்தக் கூட்டத்தில் கிழக்குப் பதிப்பக பத்ரி த்ங்களது அப்புசாமி படைப்புகளை பற்றிப் பேசினார். இந்தச் சந்திப்பில் மற்ற பிரபலங்கள் சிலரையும் நான் சந்த்திது உரையாட முடிந்த்தது. முதலில் ராணி மைந்தன். இவர் பலருடைய வரலாற்றுச் சரிதைகளைப் புத்தகமாக எழுதியுள்ளவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார். பிறகு, கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன். சமீபத்தில் 1981ல் கல்கி மற்றும் தினமணிக்கதிரில் வரும் இவரது கேள்வி-பதில் பகுதிக்கு கேள்விகள் கேட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு, தேவன் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் தேவன் நினைவுப் பதக்கம் வென்றவரில் இவரும் ஒருவர். (மற்றவர் துக்ளக் சத்யா.) அடுத்தபடியாக வாதூலன் என்ற் பெயரில் எழுதி வந்த லக்ஷ்மணன். இவர் 'பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதியுள்ளார்.

வெளிநாட்டுத் தோழர்களே. உங்கள் மனம் குளிர ஒரு விஷயம் கிட்டத்தட்ட ஒரு தொண்ணூறு நிமிடங்கள நல்ல பொழுதாகப் போன இந்தச் சந்திப்பில் போண்டாவோ, வடையோ கொடுக்கப்படவில்லை. கேக்தான் தரப்பட்டது

Friday, September 15, 2006

ராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்

இசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி? ஒரு யோசனை.

சிந்தனை-- சிமுலேஷன்

சில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் சில இரசிகர்களுக்கு, பாடலின் இராகத்தைக் தாங்களே கண்டுபிடிப்பது ஒரு விதமான இரசனை என்றும் சரியான இராகத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தங்களைத் தாங்களே முதுகில் ஷொட்டுக் கொடுத்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம். இந்த மாதிரி இரசிகர்கள், பாடகர் பாடும் முன்பே, எல்லா விபரங்களையும் போட்டு உடைப்பது, சஸ்பென்ஸை உடைத்து 'சப்'பென்றாக்கும் ஒரு செயல் என்றே எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி, இரண்டு விதமான இரசிகர்களையும் திருப்தி செய்யும் வண்ணம், எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த யோசனையை, கடந்த வருடம் 'முத்ரா" பயிற்சிப் பட்டறையில் தெரிவித்திருந்தேன். அவர்களது 'ஸாமுத்ரா" பத்திரிகையிலும், இது பிரசுரமானது. சில சபாக்களுக்கும் இந்த யோசனையைச் சொன்னேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மட்டும், "இது எங்களுக்கு அதிகப் பளுவைக் கொடுக்கும்; அதனால் ஒத்து வராது!" என்றும் தெரிவித்திருந்தனர். மற்றவர்களிடமிருந்து பதிலொன்றுமில்லை.

அது என்ன அப்பேர்ப்பட்ட யோசனை என்று கேட்கிறீர்களா? அது இதுதான். அதாவது இரசிகர்களுக்கு பாடல் என்ன, இராகம் என்ன, இயற்றியவர் யார் என்பது போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் இரசிக்க முடியும். அதே நேரத்தில், சற்றே விபரம் தெரிந்த இரசிகர்களின் ஆர்வத்தையும் குலைக்கக் கூடாது. பாடகரின் ஓட்டத்தையும் தடுக்கக் கூடாது. நான் கூறும் யோசனை என்னவென்றால், இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையின் ஒர் மூலையில் டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருக்குமே, அது மாதிரியான் இடத்தில் ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே போர்ட் (Digital Display Board) ஒன்று வைக்க வேண்டும். பாடகர் பாடலைத் துவக்கிய ஓரிரு நிமிடங்கள் கழித்து, இந்த போர்டில், என்ன பாடல், என்ன இராகம், என்ன தாளம், யாரது பாடல், போன்ற விபரங்கள் scrolling முறையில் வர வேண்டும். இவை வெளிவருவதற்கு முன்னரே, இசையார்வலர்கள், இந்த விவரங்களைத் தாங்களே கண்டு பிடித்துக் கொள்வதென்றால் அதனைச் செய்து கொள்ளலாம். பாடகர், இந்த விபரங்களை முதலிலேயே, Digital Display Boardஐ இயக்குபரிடம் கொடுத்து விடுவதால் அவரது ஒட்டம் எக்காரணம் கொண்டும் தடை பெறாது.

மேலும், இந்த போர்டில், மேற்கண்ட விபரங்கள் தவிர, பாடல் குறித்த சுவையான பல விபரங்களையும் கொடுக்கலாம். உதாரணமாக, தியாகய்யரின் 'சக்கனி ராஜ" பாடல் பாடப்படும்போது, அவர் வாழ்வில் அந்தப் பாடல் பாடக் காரணமாக இருந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். (சன் டிவியில் "ஒளியும் ஒலியும்" போன்றதொரு நிகழ்ச்சியில் "இந்தப் பாடல் படம் பிடிக்க ஒரு கோடி செலவாயிற்றாம்... இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் காலை ஒடித்துக் கொண்டார்..." என்றெல்லாம் 'விக்கி' என்றொரு கேரக்டர், ஸ்க்ரோலிங் முறையிலே வந்து சொல்லுமே, அதைப் போலவே, இந்த யோசனை)

சிறிது செலவானாலும், இரசிகர்களை இந்த யோசனை கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. முதலில் செயல்படுத்தும் அமைப்புகள் தகவல் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

====

சிரிப்புவெடிகள்-- என். சுவாமிநாதன்

"போடறதுதான் போடறான், கிரிக்கெட் ஸ்கோர் போட்டா என்னா?"

"ந்யூஸ் ஹெட்லைன் போட்டா நல்லா இருக்கும்.."

"செல்வி தொடர்ல இன்னிக்கு என்னாச்சுனு ஒரு வரி போட்டா செளகரியமா இருக்கும்.."
=========
"என்னடா வரிசையா நாலஞ்சு ராகம் போட்டிருக்கானே.."

"அது ராகமாலிகையாம்"
=========
"என்ன வயலின்காரர் கீழ இறங்கி போர்டைப் பார்க்கிறாரே"

"பக்க வாத்தியம் புதிசு.. ஆலாபனையில் ராகம் என்னனு பிடிபடலையாம்.. படிச்சுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்..."
=========
என்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது? பாடகர் பைரவி பாடலியே.."

"ரவி சார் போர்டு செலவை ஸ்பான்சர் செஞ்சிருக்காராம்.. போர்டு உபயம்பை ரவி"னு காட்டறாங்க"
=========
"ஹரிகாம்போதி வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டிவிட்டதுன்னு தலைவர் புகழராரே, பாடகர் ஹரிகாம்போதியே பாடலியே.."

"பாடகர் பாடறதா இருந்தார்.. பாடல்.. தலிவரு கச்சேரிக்கு லேட்டா வந்தாரு.. கையில் கொடுத்த நோட்டீசைப் படிச்சிட்டு பேசிட்டாரு"
=========
"ரெண்டு மணி நேரமா இன்னம் காம்போதியா பாடிட்டு இருக்காரு?"

"பாட்டு மாறிடுச்சு... போர்டுல பிரச்னை.. ராகம் பேரை மாத்த முடியலயாம்..."
=========
மரத்தடியில் முன்பு நான் எழுதிய பதிவையும் அதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் என். சுவாமிநாதன் அவர்கள் அளித்த மறுமொழியும் மீள்பதிகின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.

மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)

இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பல நல்ல
பழைய பாடல்கள் மோகனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்.

பாடல் - திரைப்படம்

01. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
02. ஆதரவார் ஆதரவார் - ஞான சௌந்தரி
03. அடி எளச்சி எளச்சி கொழைச்சி கொழைச்சி - மகாராசன்
04. அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா - எதிர் நீச்சல்
05. ஆடுவரென்பதினால் ஆடவர் என்பார் - பாட்டும் பரதமும்
06. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் **
07. அமுதைப் பொழியும் நிலவினிலே - தங்கமலை ரகசியம் **
08. அத்தான் வருவாக முத்தம் கொடுப்பாக - டும் டும் டும்
09. ஆத்தோரம் காத்தாட - எங்கேயோ கேட்ட குரல்
10. பன்சாயீ... காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
11. எனக்கொரு மகன் பிறப்பான் - அண்ணனுக்கு ஜே
12. எங்க மகராணிக்கு - தலைமுறை
13. என்ன பார்வை - காதலிக்க நேரமில்லை *
14. என்ன சமையலோ - உன்னால் முடியும் தம்பி * (இராக மாலிகை)
15. என்னை முதன்முதலாக பார்த்த - பூம்புகார்
16. எண்ணத்தில் - கல்லுக்குள் ஈரம்
17. கீதம் சங்கீதம் நீதானே - கொக்கரக்கோ *
18. கிரிதரா கோபாலா - மீரா **
19. குண்டுமல்லி குண்டுமல்லி - சொல்ல மறந்த கதை
20. ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி
21. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில் *
22. இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு
23. இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் **
24. இந்தப் பூவுக்கொரு அரசன் - பூவரசன்
25. இறைவன் வருவான் - சாந்தி நிலையம் *
26. இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள் *
27. காலை - மேல் நாட்டு மருமகள்
28. கலையாத கனவொன்று கண்டேன் - நாயக்கரின் மகள்
29. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
30. கண்மணியே காதல் என்பது கற்பனையோ - ஆறிலிருந்து அறுபது வரை *
31. கண்மணியே உன் இதய - மனிதன் மாறவில்லை
32. கஸ்தூரி மானே - புதுமைப் பெண்
33. காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
34. கேளடா - பாரதி
35. கேட்குதடி கூ கூ - கட்டுமரக்காரன்
36. கிருஷ்ணா ஹரி கோவிந்த முராரி - கிருஷ்ண பக்தி
37. குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - வள்ளி
38. குறிஞ்சி மலரின் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் *
39. குழந்தையும் தெய்வமும் - குழந்தையும் தெய்வமும் *
40. மதியா விதியா - பாரிஜாதம்
41. மலரே பேசு - கீதாஞ்சலி
42. மலர்கள் நனைந்தன - இதயக் கமலம் **
43. மல்லிகை மாலை கட்டி - புதிய ராகம்
44. மீன்கொடி தேரில் - கரும்பு வில் *
45. முப்பது பைசா மூணு முழம் - போக்கிரி
46. நாடுதே என் மனம் நாதமே - மாயாவதி
47. நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
48. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் *
49. நான் தங்க ரோஜா - டைம்
50. நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
51. நாராயணாய நமோ - திருமழிசை ஆழ்வார்
52. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
53. நிலவும் மலரும் - தேன் நிலவு *
54. நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்
55. ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடித் தென்றல்
56. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
57. ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம் *
58. பாடும்போது நான் தென்றல் காற்று - சுமதி என் சுந்தரி *
59. பாக்காதே பாக்காதே - ஜென்டில்மேன்
60. பால் போலே - பாய்ஸ்
61. பருவம் பார்த்தருகில் வந்து வெட்கமா - மருத நாட்டு வீரன்
62. பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா *
63. பெற்ற தாயினும் பிறந்த - விஜயகுமாரி
64. பொன்னழகுப் பெருமை - ரிக்ஷாக்காரன்
65. பொன்னுல பொன்னுல - சிட்டுக்குருவி *
66. பூவா தலையா - பூவா தலையா
67. பூவில் வண்டு கூடும் கண்டு - காதல் ஓவியம் *
68. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
69. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
70. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் *
71. செந்தமிழ் நாடென்னும்போதினிலே - வேதாள உலகம்
72. தாமதம் செய்யலாமோ - முத்துக்குள் முத்து
73. தாம்த தீம்த - பகலில் ஒரு நிலவு
74. தேன்மல்லிப் பூவே - தியாகம் *
75. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன் *
76. உன் அழகைக் காண இரு கண்கள் போதாது - திரு நீலகண்டர்
77. உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
78. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் *
79. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் - சலங்கை ஒலி *
80. வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் *
81. வந்த நாள் முதல் இந்த நாள் வரை - பாவ மன்னிப்பு
82. வாராயோ தோழி - ஜீன்ஸ்
83. வரும் பகைவரைக் கண்டு - அம்பிகாபதி
84. வாழிய வாழியவே பல்லாண்டு - ஆடிப் பெருக்கு
85. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்ரி
86. வாழ்வோம் வாழ்வோம் மாதர்காள் - ராஜகுமாரி
87. வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு - புயல் பாடும் பாட்டு
88. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை **
89. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே - நாம் இருவர் *
90. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் - தேடி வந்த மாப்பிள்ளை *
91. விதியின் விளையாடல் மதியினால் மாற்றும் - நவஜீவனம்

மோகனத்தின் மொத்த உருவம் என்று பார்த்தால் இந்த நட்சத்திரக் (*) குறியிட்ட பாடல்களைச் சொல்லலாம். இதில் ஒரு சில பாடல்களுக்கு இரட்டை நட்சத்திரங்கள்கூட வழங்கியுள்ளேன். முன்னமே கூறியபடி நட்சத்திரப் பாடல்களை ஒருங்கே பதிவு செய்துக் கேட்டு வர, மோகன இராகம் மனதில் நன்கு பதிந்துவிடும். அடுத்தபடியாக, இசையார்வலர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்தால் (அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்) இந்த நட்சத்திரப் பட்டியலிலுள்ள பாடல்களை ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அசை போட்டுச் சும்மா பாடிப் பார்த்தால், மோகனமென்ன, 'மோகனக் கல்யாணி'யைக்கூடக் கண்டு பிடித்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள்தான் ஏற்கெனவே முந்தைய பதிவின் மூலம் கல்யாணியைக் கண்டுணரத் தொடங்கிவிட்டீர்களே!

மூன்று பதிவுகள் முடிந்ததன் விளைவாக, இனிமேலிருந்து உங்களுக்கு ஒர் 'குவிஸ்' வைக்கலாமென்றிருக்கின்றேன். அதற்கு சரியான விடையை யாரேனும் முதலில் தர, விடை தருவதற்கான நேரக்கெடு முடிவடைந்துவிடும் பதிவுத தொடரின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு பரிசு வழங்கவிருக்கின்றேன். வெளிநாடுகளில் இருப்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரக் கேள்வி:

மோகனம் 'அவுடவ' இராகங்களில் ஒரு சிறந்த இராகமாகும். 'அவுடவ' இராகம் என்றால் என்ன?

- சிமுலேஷன்

Thursday, September 07, 2006

புத்திசாலிப் பன்றிகளும்...பராமரிப்புப் பணிகளும்...

உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பதிவு பிடிக்குமோ அல்லது புரியுமோ தெரியாது. விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் பேர்வழி என்ற பெயரில் கட்டுரை எழுத வேண்டுமென்ற அல்ப ஆசை ஏற்படுவது அனவருக்கும் இயற்கையே. அந்த வகையில் இதுவும் ஒரு பதிவுதான்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் முதலீட்டில் சுமார் 40-45% பங்கு, அங்குள்ள பைப்லைன் எனப்படும் குழாய்களிலேயெ செலவழிக்கப்படுகின்றது. இந்தக் குழாய்கள் அரை அங்குல விட்டத்திலிருந்து, ஐம்பது அங்குல விட்டம் (diameter) வரை இருக்கும். இவை திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள பெட்ரோலியப் பொருட்களை, ஆலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன. மேலும் ஆலையின் இறுதி விளை பொருட்களான (finished products) எல்.பி.ஜி, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை ஆலையிலிருந்து சந்தைக்கு எடுத்து செல்வதிலும் இந்தக் குழாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலநேரம், நாடு விட்டு நாடு செல்லும் (cross country) குழாய்களையும் நீங்கள் நேரில் பார்த்திருக்காவிட்டாலும், சில ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், நரம்பு மண்டலம் போன்று இந்த எண்ணெய்க் குழாய் வலை (pipeline network) செயல்படுகின்றது என்றால் மிகையாகாது.

மிகுந்த முதலீட்டில் பதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் இந்தக் குழாய்கள், கணிசமான காலம் உழைக்க வேண்டும். அப்படி இல்லாமல், ஏதேனும், பாதிப்பு ஏற்பட்டு, கசிவும் ஏற்பட்டாலோ, எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்படும். மேலும் பாதுகாப்பு (safety) மற்றும் சுற்றுச் சூழல் (environment) குறித்த பிரச்னைகளும் ஏற்படும். எனவே, இந்தக் குழாய்கள், சேதம் ஏதேனும் ஏற்படாமல், அவற்றிகென வரையறுக்கப்பட்ட அளவுகளுக்குள் (specifications) இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளும் வகையில் பராமரிப்புப் பணிகளை (maintenance) இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஒன்றுதான், பன்றிகளைப் (pig) பயன்படுத்தும் பணியாகும்.


பன்றி என்றால் உண்மையான உயிருள்ள பன்றி என்று நினைத்துவிட வேண்டாம். பன்றி எனப்படுவது குழாய்களுக்குள் பயணம் செய்யும் ஒரு வகை சாதனம் அல்லது கருவியாகும். இதில் பல வகைகள் உண்டு. முதலாவதாக சாதாரணமாக குழாய்க்குள் இடைவெளி இல்லாமல் பயணம் செய்யும் சரியான விட்டம் கொண்ட ஒரு ரப்பர் பந்து. இது குழாயின் அளவிற்கேற்ப பல அளவுகளில் இருக்கும். இவை பெரும்பாலும், ஒரு குழாயில் வெவ்வேறு திரவங்களை கடத்தப் பயபடுகின்றன. உதாரணமாக, கெரசினுக்கும், டீசலுக்கும் ஒரே குழாய் இருக்கும். ஒரே குழாயில் முதலில், கெரசினும், அடுத்ததாக பன்றி எனப்படும் இந்த ரப்பர் பந்தும், அதனையடுத்து, டீசலும் பயணம் செய்யும். இந்தப் பன்றியினைச் செலுத்துவதற்கும், முடிவில் சேகரிப்பதற்கும் ஏதுவாக, குழாய் வடிவங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

வெகுகாலம் மெற்கண்டபடி, ஒரு பிரித்தாளும் ஊடகமாகவே (interface medium) இருந்த பன்றியில் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களினால், புத்திசாலிப் பன்றிகள் (intelligent pigs) வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிசாலிப் பன்றிகளில் குழாய்களின் விட்டத்தை அளக்கவும், குழாயின் சுற்றுச் சுவரின் தடிமன் (wall thickness) போன்ற பல்வேறு பரிணாமங்களை அளக்கும் சென்ஸர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை குழாயின் ஒரு முனையிலிருந்து ஏவி விட்டால் (pig launch), மறு முனை சென்றடவதற்குள், குழாயின் பல்வேறு பரிணாமம் குறித்த தகவல்களையும், பராமரிப்பு பொறியாளருக்கு தந்து விடுகின்றது. இந்தத் தகவலுக்கேற்ப, முன்னெச்செரிப் பராமரிப்புப் பணிகள் (preventive maintenance) மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கணிசமான சேதங்கள் தவிர்க்கப்படலாம்.

அடுத்த முறை, சென்னை தண்டயார்பேட்டை, கொருக்குப் பேட்டை அல்லது மும்பை செம்பூர் போன்ற பகுதிகளில் செல்லும்போது, பெட்ரோலியக் குழாய்களின் அருகில் மேய்ந்து அசிங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் பன்றிக்கூட்டம் ஒன்றினைப் பார்க்கும்போது, அந்தக் குழாய்க்குள்ளே ஒரு புத்திசாலிப் பன்றி ஒன்றும் சென்று பராமரிப்பு செய்துகொண்டிருக்கலாம் எனபதனையும் நினைவில் வையுங்கள்.

(ப்ளாகரில் உள்ள பிரச்னை காரண்மாக இதற்குண்டான் படங்களை வலையேற்ற முடியவில்லை)

- சிமுலேஷன்

Friday, September 01, 2006

சென்னையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு

மதுமிதா அவர்களின் புத்தகத்திற்கு ஒரு வலைபதிவர் என்ற முறையில் சுய அறிமுகம் செய்துகொண்ட போது "வலைப்பதிவர் சந்த்திப்புகள் மூலம் நண்பர்கள் சிலர், பலராகக் கூடும்" என்று எழுதியிருந்தேன். ஏற்கெனவே போண்டா புகழ் உட்லேண்ட்ஸ் சந்திப்புகளின் மூலம் டோண்டு ராகவன், ஜயராமன், டி.பி.ஆர்.ஜோசப், சிவஞானம்ஜி, மரபூர் சந்திரசேகரன், ஜி.ராகவன், மா.சிவகுமார், கிருஷ்ணா, ரவிச்சந்திரன், மதன், ஜயகமல், சரவணன் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம், மயிலை நாகேஸ்வரராவ் பூங்காவில் மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனைவருடனும், நேரம் செலவழிக்க முடியாவிடினும், அறிமுகமும், யார் யார் என்ற விவரங்களும் அறிந்து கொள்ள முடிந்தது. வந்தவர்கள் பட்டியல் வருமாறு:- முத்து தமிழினி, பால பாரதி, ஜி.கௌதம், வரவணையான், ரோசா வசந்த், ப்ரியன், அருள், சிவஞானம்ஜி, ஜீவ், பாலகிருஷ்ணன் கீதா, பொன்ஸ், லக்கி லுக், பரஞ்சோதி, ஜெய்சங்கர், மா.சிவக்குமார், மற்றும் செந்தில். பலரது பெயர் விடுபட்டிருக்கலாம். பெயர் விடுபட்டவர்கள் தவறாக எண்ண வேண்டாம்.

இவ்வாறு சந்த்திப்புகள் அவ்வப்போது (அடிக்கடி அல்ல) நடப்பது ஆரோக்கியமான விஷயம். முடிந்தவரையில் அனைவரும் கலந்து கொள்வதும் குழு மனப்பான்மையையும் குறைக்க உதவும் என்று நம்புகின்றேன்.

மற்றபடி, சந்திப்பு விவரங்களை அவரவர்கள் தங்களுகே உரித்தான பாணியில் பதிவார்களென்று எண்ணுகின்றேன்.

-சிமுலேஷன்