Friday, September 15, 2006

ராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்

இசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி? ஒரு யோசனை.

சிந்தனை-- சிமுலேஷன்

சில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் சில இரசிகர்களுக்கு, பாடலின் இராகத்தைக் தாங்களே கண்டுபிடிப்பது ஒரு விதமான இரசனை என்றும் சரியான இராகத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தங்களைத் தாங்களே முதுகில் ஷொட்டுக் கொடுத்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம். இந்த மாதிரி இரசிகர்கள், பாடகர் பாடும் முன்பே, எல்லா விபரங்களையும் போட்டு உடைப்பது, சஸ்பென்ஸை உடைத்து 'சப்'பென்றாக்கும் ஒரு செயல் என்றே எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி, இரண்டு விதமான இரசிகர்களையும் திருப்தி செய்யும் வண்ணம், எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த யோசனையை, கடந்த வருடம் 'முத்ரா" பயிற்சிப் பட்டறையில் தெரிவித்திருந்தேன். அவர்களது 'ஸாமுத்ரா" பத்திரிகையிலும், இது பிரசுரமானது. சில சபாக்களுக்கும் இந்த யோசனையைச் சொன்னேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மட்டும், "இது எங்களுக்கு அதிகப் பளுவைக் கொடுக்கும்; அதனால் ஒத்து வராது!" என்றும் தெரிவித்திருந்தனர். மற்றவர்களிடமிருந்து பதிலொன்றுமில்லை.

அது என்ன அப்பேர்ப்பட்ட யோசனை என்று கேட்கிறீர்களா? அது இதுதான். அதாவது இரசிகர்களுக்கு பாடல் என்ன, இராகம் என்ன, இயற்றியவர் யார் என்பது போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் இரசிக்க முடியும். அதே நேரத்தில், சற்றே விபரம் தெரிந்த இரசிகர்களின் ஆர்வத்தையும் குலைக்கக் கூடாது. பாடகரின் ஓட்டத்தையும் தடுக்கக் கூடாது. நான் கூறும் யோசனை என்னவென்றால், இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையின் ஒர் மூலையில் டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருக்குமே, அது மாதிரியான் இடத்தில் ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே போர்ட் (Digital Display Board) ஒன்று வைக்க வேண்டும். பாடகர் பாடலைத் துவக்கிய ஓரிரு நிமிடங்கள் கழித்து, இந்த போர்டில், என்ன பாடல், என்ன இராகம், என்ன தாளம், யாரது பாடல், போன்ற விபரங்கள் scrolling முறையில் வர வேண்டும். இவை வெளிவருவதற்கு முன்னரே, இசையார்வலர்கள், இந்த விவரங்களைத் தாங்களே கண்டு பிடித்துக் கொள்வதென்றால் அதனைச் செய்து கொள்ளலாம். பாடகர், இந்த விபரங்களை முதலிலேயே, Digital Display Boardஐ இயக்குபரிடம் கொடுத்து விடுவதால் அவரது ஒட்டம் எக்காரணம் கொண்டும் தடை பெறாது.

மேலும், இந்த போர்டில், மேற்கண்ட விபரங்கள் தவிர, பாடல் குறித்த சுவையான பல விபரங்களையும் கொடுக்கலாம். உதாரணமாக, தியாகய்யரின் 'சக்கனி ராஜ" பாடல் பாடப்படும்போது, அவர் வாழ்வில் அந்தப் பாடல் பாடக் காரணமாக இருந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். (சன் டிவியில் "ஒளியும் ஒலியும்" போன்றதொரு நிகழ்ச்சியில் "இந்தப் பாடல் படம் பிடிக்க ஒரு கோடி செலவாயிற்றாம்... இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் காலை ஒடித்துக் கொண்டார்..." என்றெல்லாம் 'விக்கி' என்றொரு கேரக்டர், ஸ்க்ரோலிங் முறையிலே வந்து சொல்லுமே, அதைப் போலவே, இந்த யோசனை)

சிறிது செலவானாலும், இரசிகர்களை இந்த யோசனை கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. முதலில் செயல்படுத்தும் அமைப்புகள் தகவல் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

====

சிரிப்புவெடிகள்-- என். சுவாமிநாதன்

"போடறதுதான் போடறான், கிரிக்கெட் ஸ்கோர் போட்டா என்னா?"

"ந்யூஸ் ஹெட்லைன் போட்டா நல்லா இருக்கும்.."

"செல்வி தொடர்ல இன்னிக்கு என்னாச்சுனு ஒரு வரி போட்டா செளகரியமா இருக்கும்.."
=========
"என்னடா வரிசையா நாலஞ்சு ராகம் போட்டிருக்கானே.."

"அது ராகமாலிகையாம்"
=========
"என்ன வயலின்காரர் கீழ இறங்கி போர்டைப் பார்க்கிறாரே"

"பக்க வாத்தியம் புதிசு.. ஆலாபனையில் ராகம் என்னனு பிடிபடலையாம்.. படிச்சுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்..."
=========
என்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது? பாடகர் பைரவி பாடலியே.."

"ரவி சார் போர்டு செலவை ஸ்பான்சர் செஞ்சிருக்காராம்.. போர்டு உபயம்பை ரவி"னு காட்டறாங்க"
=========
"ஹரிகாம்போதி வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டிவிட்டதுன்னு தலைவர் புகழராரே, பாடகர் ஹரிகாம்போதியே பாடலியே.."

"பாடகர் பாடறதா இருந்தார்.. பாடல்.. தலிவரு கச்சேரிக்கு லேட்டா வந்தாரு.. கையில் கொடுத்த நோட்டீசைப் படிச்சிட்டு பேசிட்டாரு"
=========
"ரெண்டு மணி நேரமா இன்னம் காம்போதியா பாடிட்டு இருக்காரு?"

"பாட்டு மாறிடுச்சு... போர்டுல பிரச்னை.. ராகம் பேரை மாத்த முடியலயாம்..."
=========
மரத்தடியில் முன்பு நான் எழுதிய பதிவையும் அதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் என். சுவாமிநாதன் அவர்கள் அளித்த மறுமொழியும் மீள்பதிகின்றேன்.

- சிமுலேஷன்

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னைப் போன்றோருக் கேற்ற நல்ல யோசனை; நடைமுறைப் படுத்துவார்களா?? இதைபொட்டிய பகிடிகள் கூட ரசிக்கும் படியுள்ளது.
பாரிசில்;தென்னிந்திய வித்துவான்கள் பிரான்சியர் நிறைந்த மண்டபங்களில்;ஆங்கிலத்தில் அறிவித்துவிட்டு;சுரம் கூடச் சொல்லி,தாளம் போட்டுக் காட்டுவோரும் உண்டு. இந்தியத் தூதரகம் நடத்தும் நிகழ்சிகளில்; பிரஞ்;ஆங்கில அறிவிப்பு உதவியாக இருக்கும்.
ஒரு தடவை வீணை ஜெயந்தி; பிரஞ்சில் எழுதி வாசித்தார்(உச்சரிப்பை); அடுத்த முறை ,பிரஞ்சிலே உச்சரிப்பை எழுதாமலே,அறிவிப்பேன். என்று கூறியும் சென்றார்.
இந்த நடைமுறை எனக்கு; இங்கே இசைக்கச்சேரிகள் கேட்க, இசைபற்றி அறிய உதவியாகவே இருக்கிறது.
யோகன் பாரிஸ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது? பாடகர் பைரவி பாடலியே.."

போர்டு உபயம்
பை ரவி"னு காட்டறாங்க//

தூள் கிளப்பிட்டீங்க போங்க!
ஒரு நாள் இல்லை ஒரு நாள், உங்க போர்டு ஐடியாவை நடைமுறைப் படுத்தி, ஐடியா உபயம் சிமுலேஷன் -ன்னு போடறாங்களா இல்லையா பாருங்க :-)

வரும் டிசம்பர் சீஸனில், உங்கள் ஐடியாவை ஆன்லைன் poll நடத்தி, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்ற விவரங்களோடு மீண்டும் தாருங்கள். அப்போது சம்மதிப்பார்கள்! sponsorship கூட கிடைக்கலாம்.

மிகவும் பயனுள்ள idea சிமுலேஷன் அவர்களே. இசை மேலும் இளைஞர்களைச் சென்று அடையும்!

Jawahar said...

ஐடியா நல்லா இருக்கு. அடுத்த லெவல் ஆப்ஷன்ஸ் கொடுத்து செலெக்ட் பண்ணச் சொல்றது. அதில ஒரு ஈகோ சாடிஸ்ஃபேக்‌ஷன் இருக்கும்!

http://kgjawarlal.wordpress.com

RVNATHAN said...

Very good idea.But citing the possiblities as in the " Sirippu Vedigal" section Sabhas may decline to implement!