Tuesday, June 15, 2010

அபூர்வ ராகங்கள்

நாம் அன்றாடம் கேள்விப்ப்டும் கல்யாணி, காம்போதி போன்ற ராகங்கள தவிர, சில் ராகங்கள் வெகு அரிதாக பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை அபூர்வ ராகங்கள் என்று சொல்லலாம். இந்த அபூர்வ ராகங்களில் சிலவற்றினைப்பற்றி முன்பு எனது பதிவிகளில் எழுதியிருக்கின்றேன். இந்த நட்சத்திர வாரத்தில் அவற்றை மீள் பதிவாக இடுவதற்குப் பதிலாக, ஒரு பதிவின் கீழ் இற்றைப்படுத்தினாலென்னவென்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை. இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரோதஸ்வினி ராகத்தினைப் பற்றிய எனது பதிவு இங்கே.

சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. சாவித்ரி ராகம் குறித்து இங்கே எழுதியுள்ளேன்.

மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு. மஹதி ராகத்தினப் பற்றிய எனது பதிவு இங்கே.

ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். இந்தப் பதிவினில் ஜோ ராகத்தினைபற்றி எழுதியுள்ளேன்.

பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். பட்தீப் ராகம் குறித்தான எனது பதிவு இங்கே.

சல்லாபம் என்ற ராகம் சூர்யா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும். சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபம் ராகம் பற்றி இந்தப் பதிவினில் எழுதியுள்ளேன்.

அபூர்வ ராகங்களைக் கேட்டு மகிழுங்கள்.
- சிமுலேஷன்