Friday, January 20, 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும் புதுமையான போட்டிகளும்

சென்னை நகரில் பலமுறை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. நானும் சில முறை கலந்து கொண்டுள்ளேன். பெரும்பாலான சமயங்களில் இந்தச் சந்திப்பின் போது என்ன பேசுவது, யார் வழி நடத்துவது என்று புரியாமல் ஒரு மொக்கையான நிகழ்வாக இருக்கும். அப்படியில்லாமல் ஒரு பதிவர்கள் சந்திப்பினை  சுவாரஸ்யமான நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஒரு ஆவல். அதன் விளைவே இந்தப் பதிவு. டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சியினை நடத்தலாமாவெனவுள்ளோம்.

நாள் & நேரம்- இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு ஞாயிறுக் கிழமை காலை 9-11 மணியளவிலோ அல்லது 10-12 மணியளவிலோ நடத்த உத்தேசம். பெரும்பாலானோர் மதியம் நடத்த விரூப்பம் தெரிவித்தால் அதற்கேற்ப.

இடம்: இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நிகழ்ச்சி அடையாறிலோ, கோட்டுர்புரத்திலோ அல்லது மயிலாப்பூரிலோ இருக்கும். வருகின்ற உறுப்பினர்களின் பங்களிப்பைப் பொறுத்து வ்சதிய்யான ஹால் புக் செய்யப்படும்.

கட்டணம்: நிகழ்வு நடக்கும் ஹாலின் வாடகை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வாங்க வேண்டிய செலவுகள் இருப்பதனால் பங்கு பெறும் பதிவர்கள் 50-100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பங்கு பெற்றும் பதிவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த்தக் கட்டணம் கூடவோ, குறையவோ செய்யும்.

தமிழ்ப் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் யார் யார் என்னென்ன செய்யப் போகின்றார்கள்?

மேடைப் பேச்சுப் போட்டியில் பங்கு கொள்ளும் மேடைப் பேச்சாளார்கள் 
பல எழுத்தாளர்களுக்கு நன்றாக எழுதத் தெரிந்தாலும், பேச வராது. குறிப்பாக மேடைப்பேச்சில் திணறுவார்கள். உதாரணாமாக, எந்தத் தலைப்பிலும், எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வந்த வாத்யார் சுஜாதாவே மேடையில் பேசும்போது திணறுவார். எழுதிய கருத்துக்களை நாலு பேர் முன்னால் செம்மையாகப் பேசுதல் என்பது ஒரு கலையாகும். இந்தப் பேச்சுக் கலையினை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த மேடைப் பேச்சுப் போட்டி.  முன்னரே தயாரித்து வந்த தலைப்பில் ஒருவர்
4-6 நிமிடங்கள் பேசலாம். மொத்தம் 8 மட்டுமே பேச நேரம் இருக்கும். ஆகையால் பேச விருப்பம் தெரிவித்தவர்களில்  8 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டுப் பேச அழைக்கப்படுவார்கள்.
அரசியல், பாலியல், மதம், ஜாதி ஆகிய தலைப்புகள் தவிர எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம். குறைந்த பட்சம் 3-30 நிமிடங்களோ, அதிக பட்சம் 6.30 நிமிடங்களோ பேச வேண்டும். 3.30 நிமிடங்களுக்குக் குறைவாகப் பேசியவர்களும், 6.30 நிமிடங்களுக்கு மேல் பேசியவர்களும் பரிசுத் தேர்வுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

மேசைப் பேச்ச்சுப் போட்டியில் பங்கு கொள்ளும் மேசைப் பேச்சாளர்கள்
மேசைப்பேச்சு  நடத்துநர் முந்தைய போட்டிகளில் கலந்து கொள்ளாத மற்றவர்களைஒவ்வொருவராக அழைப்பார். மேடைக்கு வந்தவரிடம் ஒரு தலைப்பு (பழமொழி, சொலவடை, பஞ்ச் டயலாக் போன்ற எதுவானாலும்) கொடுப்பார். தலைப்பு கொடுக்கப்பட்ட 30 வினாடிகளுக்குள் மேசைப் பேச்சாளர் பேசத் துவங்க வேண்டும். இந்தப் போட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கால அவாகாசம்
1-2 நிமிடங்கள் மட்டுமே. இங்கு குறைந்தபட்ச கால அளவான  30 வினாடிகளுக்கு குறைவாகவும், அதிகபட்ச கால அளவான 2.30 நிமிடங்களுக்கு அதிகமாகாவும் பேசியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். 8 முதல் 10 பேர் வரை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மேடைப் பேச்சு விமர்சனப் போட்டியில் பங்கு கொள்ளும் மேடைப் பேச்சு மதிப்பீட்டாளர்கள் 
முதல் நிகழ்வாகத் துவங்கிய மேடைப் பேச்சுக்களை மதிப்பீடு செய்யும் போட்டி இது. சுறுக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்க வேண்டும் மதிப்பீடுகள். கொடுக்கப்படும் கால் அளவு 2-3 நிமிடங்கள். இங்கு குறைந்தபட்ச கால அளவான  1.30 வினாடிகளுக்கு குறைவாகவும், அதிகபட்ச கால அளவான 3.30 நிமிடங்களுக்கு அதிகமாகாவும் பேசியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேடைப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 8 பேர் என்பதனால் அந்த 8 பேரின் பேச்சுக்களை மதிப்பீடு செய்ய 8 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். யார் யார் பேச்சை யார் யார் விமர்சனம் செய்வார்கள்  என்பது நிகழ்ச்சிக்கு முன்பாக முடிவு செய்யப்படும்.

கூட்டத்தின் தொகுப்பாளர்
கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர். பல சுவையான கதைகளும், துணுக்குகளும் சொல்லி கூட்டத்தின் சுவாரசியம் கெடாமல் பாதுகாப்பவர். ஒவ்வொருபேச்சாளரையும் அறிமுகப்படுதுபவர் இவரே. மேலும் "கூட்டதிற்குண்டான வார்த்தையையும்" (Word of the Day) அறிமுகம் செய்வது இவரே. இவற்றை பேச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.

பொது மதிப்பீட்டாளர் -  கூட்டம் துவங்கியது முதல் இறுதி வரை கூட்டம் எப்படி நடந்தது என்று கூட்டத்தின் முடிவில் நிறை-குறைகளை அழகுறப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும். இவருக்கு உதவி செய்வதற்கென்று மூவர் அடங்கிய குழு ஒன்று இருக்கும். அவர்களது பணி வருமாறு:-

நேரக் குறிப்பளர் -  ஒவ்வொரு பேச்சாளருக்கும் அவர் பேச வேண்டிய மணித்துளிகள் ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேர வரையறை பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல. மதிப்பீட்டளர்களுக்குமுண்டு. பேச்சாளர்களும், மதிப்பீட்டாளர்களும் குறைந்த பட்ச நேரம் பேசாமலிருந்தாலோ, அதிக பட்ச நேரத்தை மீறிப் பேசினாலோ தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். நேரக் குறிப்பாளரிடம் நேரம் காட்டும் விளக்குகள் அடங்கிய கருவி (Timer Device) ஒன்றும் உண்டு. இதன் துணை கொண்ம்டு பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை முறையே ஒளிர வைத்து பேசுபவருக்கு நேரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். கூட்டத்தின் முடிவில் யார், யார் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்றும், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு யார், யார் தகுதி பெற்றார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவிப்பார்.

இலக்கணவாணர் - ஒவ்வொரு பேச்சாளரும் Word of the Day ஐயையும் எவ்வளவு முறை பயன்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவிப்பார். மேலும் பேச்சின்போது, பயன் படுத்தப்பட்ட அழகிய சொல்லாடல்களையும், இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டுவார். இதன் மூலம் பேச்சாளர் மட்டுமின்றி, அனைவரும், தவறுகளை திருத்திக் கொள்வதும், நல்ல வார்த்தைகளைப் பேச்சின் போது பயன்படுத்தும் எண்ணமும் ஏற்படும்.


அ-உ-எண்ணி - ஒவ்வொரு பேச்சாளரும், சரியான ஒத்திகை செய்து வரவில்லையென்றாலோ, வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதனை மறைப்பதற்காக சில நிரப்பு வார்த்தைகள் கொண்டு சமாளிப்பதுவும் வழக்கம். தமிழிம் சிலர் பேசும் போது "வந்து, வந்து", "கேட்டியா? கேட்டியா?" போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு வாக்கியத்திலும் காரணமின்றிப் பலமுறை பயன்படுத்துவார்கள். பேச்சாளர் எத்தன முறை நிரப்பு வார்த்தைகளப் பயன்படுத்தினார் என்றும், எத்தனை முறை பேசாமல் மவுனம் சாதித்தார் என்றும் அ-உ எண்ணீ தனது அறிக்கையில் கூறுவார்.

கூட்டத்தின் பொது விதிகள்

முதல் விதி: கூட்டத்தில் பங்கு பெருவோரின்  ஆடை (Dress Code) குறித்தது. கூட்டத்திற்ககு வரும் அனைவரும் கண்ணியமான உடையில்  வரவேண்டும்.

இரண்டாம் விதி: கூட்டத்தின் அமைதி (Code of Silence) குறித்தது. கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும். யாராவது மேடையில் பேசிக் கொண்டிருந்தால் இடையிலே எழுந்து செல்லக் கூடாது. ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், துண்டுத் தாளில் எழுதி, அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும்.

மூன்றாம் விதி: தவிர்க்க வேண்டிய தலைப்புகள்  (Taboo Topics) குறித்தது. பாலியல் (Sex), மதம் (Religion), அரசியல் (Politcs) போன்ற பிரச்னை தரும் 3 தலைப்புகளில் யாரும் பேசக் கூடாது.

கூட்டத்தின் முடிவில் பேச்சுப் போட்டி மற்றும் மதிப்பீட்டுப் போட்டியில் கலந்து கொண்டவர்களும், எந்த வித பங்களிப்புப் செய்யாமல் வெறுமனே பார்வையாளர்களாக இருந்த அனவரும் "சிறந்த மேடைப் பேச்சாளர்", "சிறந்த மேசைப் பேச்சாளர்", "சிறந்த மதிப்பீட்டாளர்" என்ற வகையில் மூன்று பேருக்கு வாக்கு அளிக்க வேண்டு. ஒவ்வொரு பிரிவிலும் யார் அதிக வாக்குகள் பெறுகின்றார்களோ அவர்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளரால் பரிசுகள் அளிக்கப்படும். ஆக கூட்டத்தி முடிவில் மூன்று பேர் பரிசுகள் பெறுவார்கள். மற்றவர்களுக்கு என்ன கிடைக்கும்?

- மேடைப் பேச்சுக்கு எப்படி தயார் செய்து பேசுவது/
- மேசைப் பேச்சு எனப்படும் போட்டி மூலம் உடனடியாக ஒரு தலைப்பில் எப்படிக் கோர்வையாகப் பேசுவது?
- எப்படி ஒரு பேச்சின மதிப்பீடு செய்வது?
- குறித்த நேரத்தில் எப்படி பேச்சினை முடித்துக் கொள்வது?
- கண்ணியமாகவும், சூவைய்யாஅக்கவூம் ஒரு நிகழ்ச்சியினை எப்பாடி நடத்துவது? 

 இவை போன்ற பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வது.

இது தவிர கூட்டத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் ஒருவரோடு ஒருவர் அளவளாவது போன்ற வழக்கமான நிகழ்வுகள் இருக்கும். மேற்கண்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்களிக்கும் வண்ணம் ஒரு கூட்டத்தின நடத்திட, கிட்டத்தட்ட 20 முதல் 30 பேர் வரை தேவை. எனவே 30 பேரிடமிருந்து விருப்பம் வந்த பின்பே கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். விரவில்

இந்தச் சந்த்திப்பு நடக்க வேண்டுமென்றால், விரைவில் உங்கள் விருப்பத்தினை மறுமொழியில் தெரிவியுங்கள். என்ன போட்டியில் என்ன பங்களிப்பு செய்ய விருப்புகின்றீர்கள் என்றும் மறக்காமல் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

Tuesday, January 17, 2012

வனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்

"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதாசனின் சுயவாழ்க்கை வரலாறான் "வனவாசம்". வாழ்க்கை வரலாறு என்பதனால், சிறுவயது பள்ளி அனுபங்கள் மற்றும் வீட்டை விட்டுப் பட்டினத்திற்கு ஓடி வந்த அனுபவங்கள் என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில்     இரு(ண்ட)ந்த தன பத்தாண்டு அனுவங்களையே வனவாசம் என்று குறிப்பிடுகின்றார் கண்ணதாசன்.

இதனை கண்ணதாசான் எழுதிய ஆண்டு 1965. வானதி பதிப்பகத்தால் கிட்டத்தட்ட 37 பதிப்புகள் கண்ட இந்தப் புத்தகம், தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரு காலத்தில் குமுதம் பத்திரிகை தனது இதழில் வனவாசத்திலிருந்து குறிப்ப்பிட்ட சில பகுதிகளைப் பிரசுரித்து வந்தது. அதற்கும் காரணம் இல்லாமலில்லை!

சிறு வயது முதலே அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையுடன் படைப்புலகில் நுழையும் கண்ணதாசன் எத்தனையெத்தனையோ பத்திரிகைகளிலும் பணிபுரிகின்றார். அங்குதான் எத்தனை மனிதர்கள், எத்தனை அனுபவங்கள் அவருக்கு.

முதன் முதலாக கோம்புத்தூர் லாட்ஜில் கருணாநிதியைச் சந்த்தித்த போது ஏற்பட்ட பரவசத்தினை அவரால் விவரிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு காதலியைக் காணும் உணர்ச்சி ஏற்ப்பட்டதாகக் கூறுகின்றார். சில சமயங்களில் கருணாநிதியென்று பட்டவர்த்தானமாகாப் பெயர் சொல்லும் கண்ணதாசன், சில சமயங்களில் 'கலை நண்பர்' என்று சொல்லி அடக்கி வாசிக்கின்றார். இருவரும் ஒரு முறை ரயிலில் பசியுடன் பயணம் செய்யும் போது, சக பயணியான ஒரு முதியவரிடம் இருந்து பழம் திருடலாமாவெனா திட்டம் போட்டதாகத் தெரிகின்றது. ஒரு முறை வேசிகளிடம் சென்று காமக்கடலில் எழுந்து, அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வந்தது, சில பெண்களை அனுபவித்து விட்டு, அவர்களிடம் மிரட்டி பணத்தைத் திருப்பி வாங்கியது போன்ற சம்பவங்களைப் போட்டு உடைக்கின்றார். குமுதம் பத்திரிகை ஏன் வனவாசம் பகுதிகளை பிரசுரித்தது என்று இப்போது புரிந்த்திருக்கும்.

கருணாநிதி தான் எழுதிய "வாழ முடியாதவர்கள்" என்ற கதையினைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார். வறுமையின் காரணமாக தந்தையே பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த அந்தக் கதையினைப் படித்து விட்டுக் காறித் துப்புகின்றார் கண்ணதாசன். மேலும் அவரது குமரிக் கோட்டம், ரோமாபுரி ராணிகள், கபோதிபுரத்துக் காதல் போன்ற கதைகளைப் படித்து விட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தினை வெளிப்படுத்துகின்றார். இதற்குப் பிறகு, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதிய எதனையும் படிப்பதில்ல என்றும் முடிவு செய்கின்றார்.

தான் அறிய, மனமறிய தன்னை இயக்கிக் கொள்ளாமல், இழுப்பவர் இழுப்புக்கு வந்து உணர்ச்சி வேகத்தில், "கல்லக்குடி போராட்டத்தில்" ஈடுபடுகின்றார். இதன் காரணமாகக் கிடைத்த சிறை வாசத்தில் படும் அவஸ்தைகளுயும், அந்தச் சமயத்தில் கட்சிப் பிரமுகர்கள் நடந்து கொண்ட விதமும் அவரைத் தீவிர மன உளைச்சலுக்குள்ளாக்குகின்றதூ. குறிப்பாகக்க் "கல்லக்குடி வழக்கு நிதி" என்ற பெயரில் நிதி சேர்த்த சி.பி.சிற்றரசு, அந்த நிதியிலிருந்து காலணா கூட வழக்கு நடத்தவோ, கைதிகளின் பசியினைப் போக்கவோ செலவழிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றார். மேலும் சிறையிலிருக்கும் போது அவர் எழுதிய "இல்லற ஜோதி" படத்தின் வசனத்தின் பெரும்பகுதியினைத் தான் எழுதியதாக "கலை நண்பர்" பத்திரிகையில் எழுதியது கண்டு ஆத்திரம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்.

மேடையில் தமிழர் பண்பாடு என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அரசியல் தலவரைக் குஷிப்படுத்த, அர்த்த சாமத்தில் ஆண் வாடத்தில் வந்த பெண்ணொருத்தி, "சுந்தரகோஷ்" என்று குறிப்ப்பிடப்படுகின்றாள். இந்தத் தலைவர் யார் என்று புரிந்து கொள்வது கடினமல்ல. சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட கண்ணதாசன் ஒரு முறை அண்ணாத்துரையின் பேச்சைக் கேட்டு மயங்கி, திராவிடச் சித்தாந்தத்திலும், பின்னர் தீவிர அரசியால்வாதியாகவும் மாறுகின்றார். அண்ணவை ஒரு தேவதூதன் போலப் பார்க்கின்றார். ஆனால் காலம் செல்லச் செல்ல மதிப்பீடுகள் மாறூகின்றன.

சென்னை மாமான்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்க்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்க்படும் போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, "என்ன அண்ணா! இப்படி சதி செய்து விட்டீர்கள்?" என்று கேட்க, அவரோ, "அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்" என்று சொல்ல, 'இதென்ன தில்லாலங்கடி' என்று திகைத்து நிற்கின்றார்.

பத்தாண்டுகளில் அண்ணாவின் அரசியல் அணுகுமுறை கண்டு வெறுத்துப் போய், அவரை "சாதி வெறியர்" என்ரும், "சந்தர்ப்பவாதி" என்றும் அடையாளப்படுத்துகின்றார். குறிப்பாகக், கட்சியில் பெரும் செல்வாக்குப் பெற்ற்றிருந்த ஈ.வெ.கி.சமபத் எப்படி ஓரங் கட்டப்படுகின்றார் என்று அறிந்த போதும், கட்சிப் பொதுக் குழுவில் வேண்டுமென்றே வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போது மனம் வெறுக்கின்றார். இது நாள் வாரை பட்ட அவமானங்களைப் பற்றி யோசித்து, enough is enough என்ற முடிவுக்கு வந்து, ஒரு வழியாக திமுகவிலிருந்து ராஜினாமாச் செய்கின்றார். அப்போது,

- கண்மூடித்தனமான அரசியல் வனவாசம் முடிந்து விட்டது
- காட்டுக் குரங்குகளிடமிருந்து விடுதலை கிடைத்தது
- சபலத்திற்கும், சலனத்திற்கும் ஆட்பட்ட கோழை மனிதர்களை "தலைவர்கள்" என்று போற்றிப் பாடிய பாட்டு முடிந்து விட்டது

என்றெல்லாம் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகின்றார்.

திமுகவிலிருந்து ராஜினாமா செய்த நாளான 9.4.1961 ஆம் தேதியை மறக்க முடியாத நாளென்றும், அன்றோடு தனது பத்தாணடு வனவாசம் முடிந்து விட்டதாகவும் பராவசப்படுகின்றார்.

நூல்: வனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்
பதிப்பு: கண்ணதாசன் பதிப்பகம் - நாலாம் பதிப்பு - 2011
பக்கங்கள்: 424
விலை: Rs. 120

- சிமுலேஷன்

Friday, January 13, 2012

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 09 - ஹமீர் கல்யாணி

சாரங்கா என்ற கர்நாடக ராகத்தினை போலவே இருக்கும் ஹிந்துஸ்தானி ராகம் ஹமீர் கல்யாணியாகும். இது கல்யாணி ராகத்தின் ஜன்ய ராகமாகும்.  மெல்லிய உணர்வுளை வெளிப்படுத்த அமைந்த அருமையான ராகம் இது. இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் இது வெளிப்படையாகப் புலப்படும்.

ஆரோகணம்: ஸ் ப ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 ம1 க3 ப ம1 ரி2 ஸ்


முதலில் நாம் கேட்க இருப்பாது "சந்திரோதயம்" என்ற படத்தில் அமைந்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" என்ற பாடல். சுத்தமான ஹமீர் கல்யாணியில்   துவங்கும் இந்தப் பாடலில், பின்னர் சில அன்னிய ஸ்வரங்கள் கலக்கின்றது. இருந்த போதும் ஹமீர் கல்யாணியில் அமைந்த ஒரு அருமையான பழைய பாடல் என்பதனால் இத்துடன் துவங்குகின்றோம்.



அடுத்து கேட்க இருப்பது "கர்ணன்" படத்தில் இடம் பெரும் "என்னுயிர் தோழி" என்ற பாடல். எளிதில் பொருள் புரியும் இந்தப் பாடலுக்கு ஒரு அருமையான கோரியோக்ரபி. சிவாஜியும் அசோகனும் ஓரிரு கணங்களே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கின்றார்கள்.



திரையிசைப் பாடல்களுக்கே உரிய சுதந்திரத்துடன் ஒரு ராகத்தில் (ஹமீர் கல்யாணியில்) ஆரம்பித்து மற்ற சில பல ராகங்களுக்குள் சஞ்சாரம் செய்து விட்டு, மீண்டும் அரம்பித்த ராகத்துக்கே வரும் சில பாடல்களை இப்போது பார்போம்.

"காயத்ரி" படத்தில் இடம் பெறும் "காலைப் பனி" என்ற பாடல்.



"கல்யாண அகதிகள்" என்ற படத்தி வரும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்" என்ற பாடல் இங்கே.



அடுத்து "தெனாலி" படத்தில் இடம் பெறும் "ஸ்வாசமே என் ஸ்வாசமே" என்ற பாடல்.



நிறிவாக "லவ் பேர்ட்ஸ்" படத்தில் இடம் பெரும் "மலர்களே, மலர்களே"' என்ற பாடல்.

Thursday, December 29, 2011

சீசன் சபேசன்

"ஹலோ ரவி, எப்படியிருகே" குரல் கேட்டுத் திரும்பினேன்.

கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்ப நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு.

"டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சேன்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?"

"ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன். நிரந்த்தரமா வேலை ஒண்ணும் கெடைக்கல. சீசனுக்க்குத் தகுந்த்தாப் போலே ஒரு தொழில் செய்யறேன்"/

"என்னட  சொல்றே? புரியலையேடா"

"இப்ப பள்ளிக் கூடம் தொறக்கற சீசன் இல்லையா? ஒரு குழந்தை ஸ்கூலுக்கூப் போறதுன்னு தெரிஞ்சவுடனே, அதனோட அம்மா, அப்பாவை சினேகம் புடிச்சு, குழந்தையோட புத்தகங்க்களுக்கு பைண்ட் பண்றது, புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர்றது, இது மாதிரி பண்ணிப் பிழைப்பை நடத்தறேன்.   எதோ காலம் ஓடறது. இப்ப கூட பைண்டிங் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். அவசரமாப் போறேன். அப்புறமாப் பாக்க்கலாமா, வரட்டா" என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான்.

சபேசனை அதன் பின் அவ்வப்போது சந்திப்பதுண்டு. சீசனுக்குத் தகுந்தாற் போல் தொழில் செய்வதாக அவன் சொன்னது உண்மைதான். ஒரு மாம்பழ சீசனில் அதனை ஓரிடத்திலிருந்திலிருந்து வாங்கி மற்றொரு இடத்த்க்கு அனுப்புவதை மேல்பார்வை பார்ப்பது செய்வதாக ஒரு முறை கூறினான். ஓரளவு சுமாராக வண்டி ஓட்ட முடிகிறது என்றும் சொன்னான்.

எங்கள் ஆபிசர் வெங்கடேசன் ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

"என் அக்கா பெண் அமெரிக்காவிலிருந்து வந்து டிசம்பர் சீசனில் சென்னையீல் கச்சேரி செய்கின்றாள்.. நீங்களெல்லாம் குடும்பத்தோடு அவசியம் வர வேண்டும்" என்று  வேண்டுகோள் விடுத்தார்.

சங்கீதக் கச்சேரிகளில் பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூப்பிட்டிருப்பது
ஆபீசராயிற்றே என்று அன்று குறித்த நேரத்திற்கும்  முன்பாகவே அகாடெமி வாசலில் ஆஜாராகி விட்டோம். அங்கே பார்த்தால் படு பிசியாக சபேசன்.  

"என்னடா இது ஆச்சரியமா இருக்கு! உனக்குக் கூட சங்கீதத்லேயெல்லாம் இண்ட்ரஸ்ட் வந்து விட்டதா?"

""ரவி இது என்ன மாசம்? என்ன சீசன்? டிசம்பர் சங்கீத சீசன் இல்லையா? நாந்தான் சொன்னேனே, சீசனை ஒட்டித்தான் நம்ம பிழைப்புன்னு."

"சரி. கொஞ்சம் புரியும்படியா சொல்லு."

"சங்கீத சீசன்லே பாட்டு, டான்ஸ் கச்சேரிகளுக்கு ரசிகர்களைப் பிடிச்சுக் கொண்டு வருவதுதான் என்னோட வேலை இப்ப."

"என்னடா ஒளர்றே? ரசிகர்களை பிடிச்சுக்க் கொண்டு வர்றதா? அது எப்படி முடியும்?

"ஆமாம்பா. எல்லா ரசிகர்காளும் தங்களுக்குப் பிடிச்ச பாடகர்கள் பாடறதைக் கேட்க ஓடீடறாங்க. அதுனால பல சபாக்கள்லே காத்து வாங்குது. அந்த மாதிரி இடத்லே   ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வருவது என் பொறுப்பு."

"யார் உனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்தது?"

"யாரு? வெளி நாட்டிலேர்ந்து வர்ற பாடாகர்கள்தான். அவர்களுக்குப் பணம் பெரிசில்லை. அங்கீகாரம் தான் முக்கியம். எக்கச்சக்கமாக செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலேர்ந்தும், ஆஸ்ட்ரேலியாவிலேர்ந்தும் வந்து பாடும்போது, சபாவிலே ஒரு ஏழெட்டுப் பேர் மாத்திரம் இருந்தாங்கன்னா  எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக் கூடாதுன்னுதான் ரசிகர்களை கொண்டு வந்து சேக்கறதை இந்த சீசன் சமயத்திலே தேர்ந்த்தெடுத்திருக்கேன். "

"முந்தி அரசிய்யல் கூட்டங்களுக்கு ஆள் சப்ளை பண்ணிட்டிருந்தேன். ஆனால் அரசிய்யல்வாதிகள் சமாச்சாரம்தான் தெரியுமே. இந்த வேளியூர்ப் பாடகர்கள் அப்படியில்லே. ப்ராம்டா பணம் கொடுத்துடுவாங்க. நம்ம ரசிகர்களும் உண்மையான ரசிகர்கள் என்பதால், பாடகர், ரசிகர் இரண்டு பேருக்குமே திருப்தி. ரசிகர்கள் எந்த இடத்திலே "பலே" போடணுமோ, எந்த இடத்திலே கை தட்டணுமோ, அதேல்ல்லாம் கரெக்டாச் செய்வாங்க."

சீசன் சபேசன் பிழைக்கத் தெரிந்தவன்தான்.

- சிமுலேஷன்

Tuesday, November 01, 2011

வாடிக்கையாளரே ராஜா

“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க”

ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ்.

“வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்”

“எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய்  கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?”

“ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப் போன போது, நடந்த சம்பவம் மறந்துடுச்சா?”

“ஆமாமா? யாரோ ஒரு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக் அடிச்சுதுன்னு நினைக்கிறேன்!”

“கரெக்ட். நாம கண்ணாடி வாங்கிட்டிருந்தப்போ எலக்ட்ரீஷியன் ஒருத்தன் சீலிங்லே ட்ரில்லிங் மெஷின் வெச்சுட்டு வேலை செஞ்சுட்டிருந்தான். அவனுக்கு திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சுடிச்சு. கிட்டத்தட்ட மயக்கம் போடற நெலமைக்கு வேற போயிட்டான். உடனே கடை ஓனர், கடையிலே பரபரப்பு அதிகமாகி, வியாபாரம் பாதிச்சுருமோன்னு எண்ணி, அவனை ‘அப்புறமா வாப்பா’ன்னு சொல்லிட்டாரு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கவும் இல்ல. ஒரு வாய்த்தண்ணி கூட கொடுக்கவும் இல்லை. ஆனா அதே சமயத்திலே நமக்கெல்லாம் கூல் ட்ரிங்க்ஸ். காபி எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணிட்டிருந்தாரு.

ஒரு பிஸினஸ் செய்பவருக்கு வாடிக்கையாளர்தான் ராஜாவாக இருக்கலாம். வாடிக்கையாளரைக் கவனிப்பது முக்கியமாகவும் இருக்கலாம். ஆனா, அதே சமயம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட வேண்டாமா? அதனாலதான் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத அந்தக் கடையை எனக்குப் பிடிக்கலே. விலை கம்மியாயிருந்தாலும் சரி”

ராஜேஷைப் பெருமையுடன் பார்த்தாள் ரம்யா. 

- சிமுலேஷன்

தேவையா மொபைல்

சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி.  ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது.

இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக  பில் வராமலிருக்காது. அவன் சம்பாதிப்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய் இருக்கலாம். அதில், ஆயிரம் ருபாய்க்கு மொபைலில் பேசினால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படி என்ன அரட்டை வேண்டிக் கிடக்கு? திருந்தாத ஜென்மங்கள்!” என்றெல்லாம் நினத்தபடி வாக்கிங்கை முடித்த சுரேஷுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனுடன் பேசிப் பார்த்தால் என்ன? “இப்படியெல்லாம் காசை வீணாக்காதே அப்பா”, என்று நைசாக எடுத்துரைத்தால்தான் என்னவென்று யோசித்தபடி அந்த லுங்கி வாலாவை நெருங்கினான்.
சுரேஷைப் பார்த்தவுடன் அவன் மையமாகச் சிரித்தான்.

“டெய்லி போன்ல பேசறீங்க போலிருக்கு.”

“ஆமாங்க”

“டெய்லி அரை மணிநேரத்துக்கும் மேலே பேசறீங்களே. நெறையக் காசு ஆவுமே. யார்கூட அப்படிப் பேசறீங்க?”

“என்னோட பொண்ணுகிட்டையும், பையன்கிட்டையும்தாங்க”

“என்னது? பொண்ணு, பையன்கிட்டேயா? அவங்க எங்க இருக்காங்க?”

“அவங்க பெங்களூர்லே படிக்கறாங்க சார். என் சம்சாராம் மூணு மாசம் முன்னாடி தவறிப் போச்சு. அதனால அவங்களைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து நிறுத்திரலாமான்னு நெனைச்சேன். ஆனா அவங்க அம்மா வேலை செஞ்ச எடத்து மொதலாளி அம்மாவோட மக, என் பசங்கள பெங்களூரு கூட்டிட்டுப் போய்ப் படிக்க வெக்கறேன்னு சொன்னாங்க. என்னாலையும் சரி, என் பசங்களாலையும் சரி. தினமும் ஒருத்தருகொருத்தர் தெனமும் பேசாம இருக்க முடியாது. அதுக்காக அவங்களே எனக்கும் எம் பசங்களுக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூலுக்குப் போறத்துக்கு முன்னாடி தெனம் அரை மணிநேரம் என்னோட பேசுவாங்க. ஆனா, அவங்களோட மொபைல் பேசறது இன்னியோடக் கடைசி நாளுங்க.”

“ஏம்ப்பா? என்ன ஆச்சு?”

“மொதலாளியம்மா எனக்கும் பெங்களூர்லே வேலை வாங்கிக் கொடுத்துட்டாங்க. இன்னிக்கி ராத்திரியே நானும் பெங்களூரு போறேன். இனிமே என் பசங்களோடயே நானும் இருப்பேன் சார். போன்ல பேசத் தேவையில்லை”

- சிமுலேஷன்

Sunday, October 30, 2011

பசு வதைத் தடுப்பும் துக்ளக்கும்


- சிமுலேஷன்

குருமூர்த்தியைக் கலாய்த்த துக்ளக்

-சிமுலேஷன்

கடுப்படித்த துக்ளக்கும் கலங்கிய சிதம்பரமும்-02



கடுப்படித்த துக்ளக்கும் கலங்கிய சிதம்பரமும்-01


சிதம்பரம் அவர்களைக் கடுப்படிக்கும் வகையில் 19.10.2011 இதழ் துக்ளக்கில் வெளியான கேள்வி-பதில்தான் என்ன?  மேலும் 27 மற்றும் 35ஆம் பக்கங்களில் வெளியான கேலிச் சித்திரங்கள்தான் என்னென்ன?

அடுத்த பதிவில்.

- சிமுலேஷன்

Friday, October 21, 2011

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா?

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா? அப்புறம் ஏன் இந்தக் கொல வெறி?

Infosys Limited
Plot No: TP 1/1
Central Avenue
Techno Park SEZ
Mahindra world city
Natham sub post
Chengalput - 603 002

Infosys Limited
Special Economic Zone
Survey Nos. 50 (part), 51, 54, 49, 48, 44 & 45 (part), 41 (part), 36 (part)
Pocharam Village
Singapore Township Post Office
Ghatkesar Mandal, Ranga Reddy (Dist)
Hyderabad - 500 088

Tata Consultancy Services
Unit No. 801, 901 & 1001
A-Wing
Kensington Building IT/TES/SEZ
Hiranandani Business Park
Powai, Mumbai 400076

Tata Consultancy Services
Deccan Park 
Plot No.1 
Software Units Layout 
Madhapur 
Hyderabad 500 081

Tata Consultancy Services
Yantra Park Unit No 6  
Voltas Compound 
Opp Voltas HRD Centre 
Subhash Nagar , Pokhran Road 2 
Thane (W) 400601

Tata Consultancy Services
Empire Plaza
Empire Industrial Estate
101, LBS Marg
Vikhroli West
Mumbai 400 083

Cognizant Technology Solutions
Global Delivery Center
Technocomplex
 Plot GN-34/3, Sector-V
 Saltlake Electronic Complex
 Kolkata 700 091
India

HCL Technologies Ltd
ETA- Techno Park” Block I
SPECIAL ECONOMIC ZONE
33, Rajiv Gandhi Salai
Navallur Village and Panchayat
Thiruporur Panchayat Union
Chengalpet Taluk
Kanchipuram dist, Chennai – 603 103

HCL Technologies Ltd
ELCOT – SEZ Unit -I
Special Economic Zone
602/3, 138, Shollinganallur Village
Shollinganallur - Medavakkam High Road
Tambaram Taluk
Kancheepuram (Dist)
Chennai- 600 119. Tamilnadu, India

HCL Technologies BPO Services Ltd(C-5)
Module 1, Tower 1
Floor Nos. 1 & 6
“Chennai One” SEZ Unit
ETL Infrastructure Services Ltd.
200 Ft, Thoraipakkam
Pallavaram Ring Road
Thoraipakkam, Chennai – 600 096 

HCL Technologies Ltd. - SEZ Unit
M/s. Unitech Hi-Tech Structures Limited
Special Economic Zone – IT/ITES
Plot No.1, Block No. A2, 3rd & 4th Floors.
DH Street, 316 New Town
Rajarhat, Dist. North 24 Parganas
Kolkata – 700 156, India

Satyam Computer Services Limited
Chennai Satyam Center
 
Survey No. 478/1A, Door No. 11A and 13
Old Mahabalipuram Road
Tambaram Taluk 
Sholinganallur
Kancheepuram District
TamilNadu

Satyam Computer Services Limited
Registered Office
Info City
Unit-12, Plot No.35 & 36
Hitech City Layout, Sy No.64
Madhapur, Hyderabad-500081

Satyam Computer Services Limited
Satyam Gateway
Block 1 & 2,S.No. 79(P) & 64 ( P)
Madhapur Village
Serilingampally Mandal and Municipality
R R Dist., Hyderabad 500 081

Satyam Computer Services Limited
DLF
Special Economic Zone - Unit
DLF Commercial Developers Ltd.
Special Economic Zone
S.Nos. 129 (P), 130, 131 (P) and 132
Gachibowli Village
Shirlingampalli Mandal,Ranga Reddy District

L&T Infotech
2nd & 3rd floor, IT-6 Building
Flagship Infrastructure Pvt. Ltd.
IT & ITES, SEZ, Survey No.154/6
Rajiv Gandhi Infotech Park
Hinjewadi, Phase-1
Pune 41105

Monday, October 17, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - ப்ருந்தாவன சாரங்கா

22ஆவது மேஎளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகங்களில் ஒன்று ப்ருந்தாவனா சாரங்கா. தேசீய ராகங்களிலும் ஒன்றான இந்த ராக்கம் மயக்கம் தரவல்ல ராகம் என்றால் மிகையாகாது. பக்தி ரசமும் இந்த ராகத்தில் சொட்டுவதனால் பஜன் மற்றும் ஸ்லோகங்கள் பாட இசைந்த ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ் ரி1 ம1 ப் நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ம1 ரி2 ஸ்

இது பிரபலமான் ராகமான மத்யமாவதி போல இருக்கும். ஆனால் ஆரோகணத்தில் கசிக நிஷாததிற்குப் பதிலாக காகலி நிஷாதம் வரும். அதுவே மத்தியமாவதிக்கும் ப்ருந்தாவன சாரங்காவிற்கும் உள்ள வித்தியாசம். வட இந்திய இசையில் உள்ள ப்ருந்த்தாவனி இதை பெரிதும் ஒத்த ராகம். இப்போது ப்ருந்தாவன சாரங்காவில் அமைந்த தமிழ்த் திரைப் படப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' திரைப்படத்தில் வரும் 'சிங்காரக் கண்ணே' என்ற பாடலைப் பார்ப்போம். வாரலட்சுமி அவர்கள் பாடியது. தமிழ்ப் பாடலின் சுட்டி கிடைக்காதலால் இதே பாடலின் தெலுங்கு வர்ஷன் இங்கு கொடுக்கின்றேன்.



அடுத்து 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான 'பொன்னோன்று கண்டேன்' என்ற பாடல்.  சிவாஜிக்கும்,, பாலாஜிக்கும் முறையே டி.எம்.எஸ் அவர்களும் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள்.



ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ' கண்ணன் முகம் காண' என்ற பாடலை பாடியிருப்பவர்கள் ஜெயச்சந்திரன் மற்ற்றும் வாணி ஜெயராம்.



அடுத்து வருவது 'ஒரு தலை ராகம்' படத்தில் வரும் பாடல். இதில் வரும் பாடல்கள் அனைத்துமே பிரபலமானவை. இதில் மிகவும் இனிமையான பாடல் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' ஆகும். முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும் இந்தப் பாடலில்  ப்ருந்தாவன சாரங்கா சொட்டி வழிகின்றது.



'இலக்கணம் மாறுதோ' என்ற இந்தப் பாடல் இடம் பெறும் படம் 'நிழல் நிஜமாகிறது' எஸ்.பி.பியின் இனிய குரலில்.



ஜேசுதாஸ் குரலில் 'மரகதவல்லிக்கு மணக்கோலம்' என்ற பாடல் இடம் பெறுவது 'அன்புள்ள அப்பா' என்ற படம்.



சமீபத்தில் 2005ல் வெளிவந்த பாடல்களில் ப்ருந்தாவன் சாரங்காவில் அமைந்த ஒரு பாடல் 'டீஷ்யூம்' படத்தில் இடம் பெறும் 'நெஞ்சாக் கூட்டில் நீயே நிற்கிறாய்" என்ற பாடல்



- சிமுலேஷன்

கணையாழி கடைசிப் பக்கங்களும் தமிழ்ப் பதிவர்களும்

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் வாசகர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது சுஜாதாவுக்குக் கை வந்த கலை. ஆனால் அந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயமாக இருந்தால் அதே போல பல விஷயங்களை ஒரே குடையின் கீழ் தொகுத்து எழுதி வந்தார். அதுதான் கணையாழி கடைசிப் பக்கங்கள். இதில் என்ன வசதி என்றால் இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த விதக் கட்டாயமும் இல்லாமல் மனதுக்குத் தோன்றிய விஷயங்களை எல்லாம் ஒரு கதம்பமாகத் தொகுத்து வழங்கலாம். ஒரு விஷயத்துக்கும் அடுத்த விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சொல்லுவது மட்டும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.

இந்த 'கணையாழி கடைசிப் பக்கங்கள்' உத்தி வசதியாகத் தோன்றுவதாகத் தெரிவதால் தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் எழுத பெரிதாக ஏதும் இல்லாத் போது ஆனால் தங்களைப் பாதித்த விஷயங்கள சின்னதாக இருந்தாலும் ஒரு மெட்லியாக தொகுத்து இடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் பதிவுகள் இங்கே:-

1. டோண்டு - நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்

2. கேபிள் சங்கர் - கொத்ட்து பரொட்டா

3. டி.வி.ராதாகிருஷ்ணன் - தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்

4. ஜாக்கி சேகர் - சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்

5. ஆர்.வி.எஸ் - திண்ணைக் கச்சேரி

6. சிமுலேஷன் - ஃபலூடா பக்கங்கள் ஹி..ஹி

இந்த மாதிரி கதம்பமாக எழுதும் வேறு ஏதேனும் பதிவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அவற்றையும் இங்கு சேர்க்கின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, October 16, 2011

மெரினா - சுஜாதா - நூல் விமர்சனம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது.

கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா கடற்கறையின் மற்றொரு புறம் பணக்கார இளந்தாரிப் பையன்கள் அடிக்கும் கூத்துடன் ஆரம்பித்து, அதில் ஒரு குறிப்பிட்ட முயற்சி எப்படி 'விவகார'மாய் முடிகின்றது என்று துவங்குகின்றது. போதை மருந்து இன்ன பிற கெட்ட சகவாசங்கள் இருக்கும் ஒரு அயோக்கினாய் இருந்தாலும், நாயகன் திலீப் எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டானா என்று வாசகர்களை ஏங்க வைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம். இதற்கு உதவ கணேஷ், வசந்த்தும் வருகின்றார்கள். இருவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் செய்யாததால் மனதில் நிற்பதில்லை. ஆனால் கணேஷ் அப்சர்வ் பண்ணும் ஒரு சிறிய விஷயமான ஒரு சின்னஞ்சிறு முடிச்சினை வைத்துக் கொண்டு நூறு பக்கங்களுக்கு மேல் சுவாரசியமாக எழுதும் சுஜாதாவும் அவரது நடையும் மனதை விட்டு நீங்குவதில்லை.

கதை: மெரினா - குறுநாவல்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பு: விசா பப்ளிகேஷன்ஸ் - 1999
பக்கங்கள் - 112
விலை - Rs. 35

- சிமுலேஷன்

Wednesday, October 12, 2011

கோயம்புத்தூர்வாசிகளுக்கு டோஸ்ட்மாஸ்டர்ஸ்ஸில் சேர ஒரு வாய்ப்பு


பேச்சுக் கலை (ஆங்கிலத்தில்) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப் பற்றி முன்பு ஒரு முறை எனது இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவினைப் படித்து விட்டு ரமேஷ் என்ற தமிழ் வலைப்பதிவர் என்னைத் தொடர்பு கொண்டு 'மெட்ராஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்பில்' உறுப்பினராகி, உற்சாகமாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.  

சென்னையில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட க்ளப்புகள் கொண்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பு இப்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் காலடி பதித்துள்ளது. இவற்றில் ஒரு சில மட்டுமே கம்யூனிட்டி க்ளப்புகள். அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இங்கு உறுப்பினராக முடியும்.  மற்றவை அந்தந்த நிறுவனத்தில் பணி புரியும் / பயிலும் நபர்களுகு மட்டுமானது 

கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் இந்த அமைப்பில் இதுநாள் வரை ஆர்வம் காட்டாமலிருந்தது ஆச்சரியமே! தற்போது கோயம்பூத்தூரிலிருந்து டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப் ஆரம்பிக்க ஒரு சிலர் ஆர்வம் தெர்ர்வித்துள்ளனர்.  ஆனால் இருபது உறுப்பினர்கள் சேர்ந்த பின்னரே க்ளப் முழுமையாகச் செயல்பட முடியும். எனவே இதில் ஆர்வம் மிக்க கோயம்புத்தூர் வாசிகள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள முகநூல் இணைப்பில் இணைந்து கொண்டு தங்களது விருப்பத்தினத் தெரிவிக்கலாம்.  அல்லது என்னை 9840923764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- சிமுலேஷன்

Sunday, October 09, 2011

மாணவர்களுக்கான இலவச மடிக்கணிணி - மேம்பட்ட பயன்பாட்டிற்கு மேலான சில யோசனைகள்

09.10.11

திருமதி. சபீதா. இ.ஆ.ப
செயலர்
பள்ளிக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு அரசு
சென்னை

மதிப்பிற்குரிய கல்வித் துறை செயலருக்கு,

பொருள்: மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச மடிக் கணிணியினை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகள்

இலவச மடிக்கணிணியினைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள மகிழ்திருக்கும் இந்த வேளையில், சமூக ஆர்வலர்கள் பலர் இந்த மடிக்கணிணிகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்று கவலை தெரிவித்துள்ளனர்கள். இவை முறையாகப் பயன்படுத்தப்படாமல் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுமோ என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். தேவைற்ற இணைய தளங்களை அணுகுவது தடுக்கப்பட்டும், மடிக்கணிணியில் தேவையற்ற அம்சங்கள் தடுக்கப்பட்டும் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படும் வாய்ப்புக்களை தடுக்க அரசு ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுத்திருக்குமென்று நம்புகின்றேன். 

மாநிலக் குடிமகன் என்ற முறையில், மாணவர்கள் தங்களது மடிக்கணிணிகளை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகளை வைக்க விரும்புகின்றேன். கீழ்க்காணும் இந்த யோசனைகளை தங்கள் துறை  கவனமாக ஆராய்ந்து அமுல்படுத்த வேண்டுகின்றேன்.

1.   வலைப்பதிவுகள்:-
யோசனை – ஒவ்வொரு மாணவனோ அல்லது மாணவர்கள் குழுவோ வலைப்பதிவு துவங்க வேண்டும். இந்த வலைப்பதிவில் சமூகக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், சொந்தமாக வரைந்த ஓவியங்கள், வண்ணப் படங்கள், ஒலித் தொகுப்புகள், கவிதைகள் ஆகியவற்றை இடுகையாக இடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகளை பள்ளி அளவில் ஒரு பொது வலைப்பதிவாக உருவாக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறந்த வலைப்பதிவினை தேர்தெடுக்கலாம். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ அரசு சிறந்த வலைப்பதிவுக்கான சுழற்கோப்பை வழங்கலாம். தேவையானால் தனியார் நிறுவனங்களிடமிருந்து  இதற்கான நிதியும் பெறலாம். வலையுலகில் சிறந்த பதிவர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு சிறந்த வலைப்பதிவுகளைத்  தேர்ந்தெடுக்க உதவி செய்யலாம்.  இந்த யோசனையை அமுல்படுத்தும் முன்னர் “வலைப்பதிவுகள் இடுவது எப்படி?” மற்றும் “இலக்கியத் திருட்டு ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?” (Plagiarism) குறித்த பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். 
பயன்கள் – மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தவும், மேலும் தங்கள் திறமைகளை வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிப்பதுவது எப்படி என்றும் கற்றுக் கொள்வார்கள். 

2.   விக்கிப்பீடியா – கட்டற்ற கலைக் களஞ்சியம்
யோசனை – ஒவ்வோரு பள்ளியிலும் விக்கிப்பீடியா என்ற கட்டற்ற கலைக் களஞ்சியம் குறித்து ஒரு பட்டறை நடத்தப்பட வேண்டும். இதன் பின்னர் ஒவ்வொரு மாணவனையும் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வரைய ஊக்குவிக்க வேண்டும். இந்தக் கட்டுரைகள் மாணவர்கள் வசிக்கும் இடத்திலுள்ள சிறப்பான இடங்கள் அல்லது புகழ்பெற்ற மனிதர்கள் குறித்து இருக்கலாம். ஒவ்வொரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு கட்டுரைகள் படைக்க வேண்டும் என்றும் வரையறை செய்து கொள்ளலாம். விக்கிபீடியா மட்டுறுத்துநர்கள் ஒவ்வொரு கட்டுரைகளையும் மட்டுறுத்தி வெளியிடுவதால் பள்ளி ஆசிரியர்கள் இதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
பயன்கள் - தமிழ்நாட்டில் உள்ள  அரிய இடங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து மாணவர்கள் மூலம் அனைத்துலக மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாகும். மாணவர்களுக்கும் வலைப்பதிவில் எழுதுவதற்கும், கலைக் களஞ்சியத்திற்கு எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் புரிந்து கொள்ளலாம்.

3.   வினா வங்கி:-
யோசனை – வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடந்து முடிந்தவுடன், மாணவர்களே வினா வங்கி தயாரிக்கச் சொல்ல வேண்டும். இந்த வினா வங்கியினை ஆசிரியர்கள் மட்டுறுத்தலாம்.  பின்னர் அனைத்து வினா வங்கிகளும் தொகுக்கப்பட்டு ஒரு மாபெரும் வினா வங்கியினை உருவாக்கலாம்.
பயன்கள் – மாணவர்களே ஒவ்வொரு பாடத்தினையும் மாணவர்களே படித்து விட்டு, வினா வங்கி தயாரிப்பதால், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொள்ள முடியும்.  

4.   டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு:-
யோசனை -  ஒவ்வொரு பள்ளியிலும் கலையாற்றல் மிக்க மாணவர்களைக் கணடறிந்து அவர்களுக்கு டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு மென்பொருள்களான போட்டோஷாப், பேஜ்மேக்கர் அல்லது ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்த மூலநிரல் மூலம் கிடைக்கும் மென்பொருள்களில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்தக் குழு பள்ளி மலர், செய்தி மடல், நினைவு மலர், பள்ளிக் கண்காட்சிக்கான சுவரொட்டி ஆகியவை தயாரிப்பதில் உதவி செய்யலாம்.
பயன்கள் – மாணவர்கள் தங்கள கலையாற்றலை வளர்த்துக் கொள்வதுடன், பள்ளிக்குத் தேவையான இதழியல் பொருள்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கலாம்.

5.   குவிஸ் க்ளப் என்ற புதிர் மன்றங்கள்:-
யோசனை – ஒவ்வொரு பள்ளியிலும் குவிஸ் க்ளப் எனப்படும் புதிர் மன்றங்களை ஆரம்பிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். பல இலவச கல்வி மென்பொருட்கள் கிடைத்துள்ளதாலும் இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்துள்ளதாலும் மாணவர்கள் புதிர்களைச் சுலபமாய்த் தொகுத்து வாரம் ஒரு முறை புதிர் நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்தப் புதிர்கள் பொது அறிவு சார்ந்ததாகவோ அல்லது ஒரு கருத்தின்  அடிப்படையில் அமைந்ததாகவோ இருக்கலாம். 
பயன்கள் – புதிர்ப் போட்டிகள் வைப்பதன் மூலம், மாணவர்கள் இலவச மென்பொருட்களையும், இணையத்தினையும் முறையாகப் பயன்படுத்தினார்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.

தங்கள் உண்மையுள்ள

சி.சுந்தரராமன்

Friday, October 07, 2011

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை - மீள்பதிவு



(தீபாவளித் திருநாளன்று திருநெல்வேலி - படம் உதவி - விக்கிபீடியா)
மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்:
  • குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும்.
  • நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம்.
  • மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியணிவது பலரின் வழக்கம்.
  • பல ஊர்களில் இருந்தாலும், தீபாவளியன்று குடும்பத்தினர் அனவரும் ஒன்று சேருவது  ஒரு குதூகலம்.
  • வீட்டிலுள்ள பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ தலைதீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட தீபாவளித் திருநாள், மற்ற பண்டிகைகள் போல அல்லாமல் விடிய,விடிய கொண்டாடப்படும் பண்டிகை இது ஒன்றே.  தீபாவளியின் முதல் தினமும், மறுநாள் விடியற்காலையிலும், தீபாவளியன்ரின் இரவும் பெருத்த குதூகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களையொட்டி அமைந்துவிட்டால், இந்தக் கொண்டாட்டங்களை குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும். அப்படியில்லாமல் வாரத்தின் மைய நாட்களில் வந்து விட்டால், உற்சாகம் சற்றே குறைந்து விடும். இதற்குப் பெரிய காரணம், வெளியூரில் இருக்கும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினருக்குக் கிடைக்கும் 'ஒரே ஒரு நாள்' விடுமுறையேயாகும். இந்த ஒரு நாள் விடுமுறையின் காரணமாக வெளியூரில் இரு்க்கும் நபர், தீபாவளியின் முதல் நாள் மட்டுமல்லாது, தீபாவளி தினத்தின் இரவிலும், அவர் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக்கு இரண்டி தினங்கள விடுமுறை அளித்தாலென்ன? உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்மஸ், தேங்ஸ் கிவ்விங் டே போன்ற பல முக்கிய தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஏன்? தமிழ்நாட்டிலேயே பொங்கல் திருநாளையொட்டி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று தினங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தீபாவளிக்கு ஒரு நாளைக்கும் மேல் விடுமுறை வேண்டும் என்று எனக்குத் தெரிந்து எந்த ஊடகத்திலும் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்து அல்லாத Vincent Desouza of Mylapore Times மட்டுமே ஓரிரு வருடங்கள் முன்பு இது குறித்து மயிலாப்பூர் டைம்ஸில் கட்டுரை எழுதியதாக நினைவு.  இந்த இடுகை எழுதும் முன்னர் சற்றே கூகிள் செய்தபோது, முஸ்லிம்கள் பெரிதும் வாழும் மலேசியா நாட்டில்கூட தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.


நாத்திகம் பேசும் நண்பர்கள்கூட தனது மனைவி வீட்டாருகாகவும், தமது குழந்தைகளின் குதூகலத்திற்காகவும், தமது கொள்கைகளத் தியாகம் செய்துகொண்டு தீபாவளித் திருநாளைக் குதூகலத்துடன் கொண்டாடி வரும் இந்த நாட்களில், "இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை"என்ற கோஷம் தவறாக ஒலிக்கவில்லை.

எங்க வீட்டு கொலு - 2011















- சிமுலேஷன்

Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே.

முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்