Saturday, March 28, 2020

ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம்





ஜெயலலிதா  மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் 
--------------------------------------------------------------------------------------------------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் ஒரு முழு நீளப் புத்தகம் எழுதியிருக்கின்றார் என்ற சேதி வந்தே போதே, அதனைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டேன்.... ஜெயலலிதா, உயிருடன் இருக்கும் போதே இந்த புத்தகம் கொண்டு வர முயற்சி எடுத்து, கோர்ட்டில் தடை வாங்கப்பட்டப் புத்தகம்..... அதனாலேயே இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்ற ஆவல் இன்னமும் மிகுந்தது....  அவர் மறைவுக்குப் பின்னர் 2018 ல்  வெளியான இந்தப் புத்தகத்தை எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை.... இப்போதுதான் கரோனா வைரஸ் புண்ணியத்தில் ஓரிரு நாட்கள் முன்பு படித்து முடித்தேன்..... இந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க முடிவதில்லை,,,,. சோசியல் மீடியா அந்தளவுக்கு  பாதிப்பு ஏற்படுத்துகின்றது..... ஆனால் இந்த முறை எடுத்த புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு வெறியுடன் படித்து முடித்தேன். 

இந்தப் புத்தகத்தில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்று சொன்னால், அவை ஒரு மிகப் பெரிய பட்டியலாக இருக்கும்..... ஜெயலலிதாவின் அப்பழுக்கற்ற ஆங்கிலம், அவரது நிறைவேறாத காதல், எம்.ஜி.ஆருடன் அவருக்கு இருந்த சிக்கலான உறவு, சசிகலாவுடனான அவரது தோழமை இவையெல்லாம் இங்கே பேசப்பட்டிருக்கின்றன....... அது தவிர, அவரது ஆணவம், மூர்க்கமான கோபம், எதிரிப்பை மன்னிக்காத பழி வாங்கும் குணம், அவரது தனிமை உறவு, அடிமனத்தின் கோபம்,  பட்ட அவமானங்கள் ஆகியவையும் விரிவாக்கப் பேசப்பட்டிருக்கின்றன...... ஆண் சார்ந்த அரசியலில் ஒரு பெண் உயர்நிலைக்கு வருவது எத்தனை சிரமம் என்பது இந்த நூலை வாசித்த பின்னர் அனைவரும் உணர முடியும்..... ஜெயலலிதாவின் முன்னாள் தோழிகள் சாந்தினி, ஸ்ரீமதி ஆகியோர், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவுக்குப் பல காலஅந்தரங்க காரியதரிசியாக இருந்த சோலை, பத்திரிகையாளர் சோ ராமசாமி போன்ற பலரை மேற்கோள் காட்டி பல சுவாரசியமான விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  

இருபது வயது முதல் முப்பது வயதுக்குள்ள ஒவ்வொரு வாசகரும் ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்று இந்த நூலின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்..... ஆனால், எழுபதுகளிருந்து அரசியலில் ஆர்வம் காட்டி  வரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட என்னைப் போன்ற கூட்டாளிகளுக்கு இந்தப் புத்தகம், அவ்வளவு நிறைவு அளிக்காது என்றே நம்புகின்றேன்..... காரணங்கள் பல....  இதற்கு ஆசிரியர் வாஸந்தி என்ன செய்திருக்கலாம்?

- ஆசிரியர் வாஸந்தி அவர்கள் ஜெயலலிதாவின் பால்ய கால நண்பர்களிடமிருந்து பல விபரங்கள் கேட்டுப் பெற்றதாக எழுதியுள்ளார்..... அவர்கள் பெயர்களையும் எழுதியுள்ளார்... ஆனால் அரசியல்வாதிகளின் பெயரைக் கூரும்போது, அவர்களிடம் பேட்டி எடுத்தாரா அல்லது அந்த அரசியல்வாதிகள் சொன்ன பத்திரிகைகள் வழி வந்த விஷயங்களை ஆதாரமாக எடுக்கொண்டாரா என்று தெரியவில்லை.... உதாரணமாக ஆர்.ஏ.ம்.வீரப்பன், சோலை போன்றவர்களிடமிருந்து பர்ஸ்ட் ஹேண்ட் இன்பர்மேஷன் பெற்றாரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. 

- அடுத்தகாக ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணம் 1989 ல் ஆரம்பித்து 2016  வரை என நீண்ட நெடிய வரலாறு கொண்டது......  இதில் ஆறு  முறை (1991, 2001, 2002, 2011, 2015, 2016) முதலமைச்சராக இருந்திருக்கிறார்..... இதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டிருந்தால் (Chapterization) படிக்க இலகுவாக இருந்திக்கும்..... இப்படி செய்யாத காரணத்தினால், நாம் படிக்கும்போது இப்போது ஜெயலலிதா முதல்வரா? அல்லது எதிர்க்கட்சியா என்று புரியாமல் குழம்பிவிடுகின்றோம்..... குறிப்பாக இறுதி அத்தியாயங்களில் என்ன வழக்கு, எப்போது வருகிறது, எதில் ஜெயிக்கிறார், எதில் தோற்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாதபடி அப்படி ஒரு குழப்பம் ஏற்படுகின்றது. 

- மற்ற அல்ல அரசியல்வாதிகளையும் போலவே, ஜெயலலிதா எல்லா எதிர்க்கட்சிகளுடனும் கூட்டு வைத்திருக்கின்றார்.... எந்தக் கால கட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருந்தார் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை....  அதனை ஆசிரியர் இன்னமும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

- இரண்டு பாகங்கள் கொண்ட இந்த வரலாறை காலச்சுவடு ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறது..... மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள்...... ஆனால் எந்த ஒரு அத்தியாயத்திற்கும் தலைப்பே இல்லை..... தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான விஷயம் என்னெவென்று பிடிபட்டிருக்கும்.

- ஜெயலலிதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த உறவு, சோபன் பாபுக்கும் இடையே இருந்த உறவு பற்றியெல்லாம் (ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால்) ஓரளவு வெளிப்படையாகவே எழுதிய ஆசிரியர் சில விஷயங்களையெல்லாம் அவசர கதியில் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது..... சில இடங்களில் ஆழ்ந்து எழுதவில்லையே என்று தெரிகின்றது.... இல்லை இது எடிட்டரின் குறையோ... அறியேன்...... உதாரணமாக, கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாயாக எண்ணிக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனை மீண்டும் ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்ற விளக்கம் கொடுக்க முடியவில்லை. நெடுந் செழியன் உள்ளிட்ட நால்வர் அணி மேல் இருந்த சினம், வெறுப்புக் கருத்துக்கள் பற்றிய விபரங்கள் போன்ற இல்லை.  திருநாவுக்கரசு அவ்வப்போது மட்டுமே வந்து போகின்றார். அவரது பங்களிப்பு என்ன, ஏன் பிறகு விரோதம் போராடினார் இவையெல்லாம் தெரிவதில்லை. 

- பத்திரிகை உலகம் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த வன்மம் பற்றி பத்திரிகையாளரான வாஸந்திக்கு பெருத்த கோபம் இருந்ததை பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு கூட ஆதரவு தெரிவிக்கின்றாரே என்ற அசூயை  வராமலில்லை. 

- அடுத்த பதிப்பு என்று ஒன்று காலச்சுவடு கொண்டு வந்தால் கண்டிப்பாக ஒரு பிற்சேர்க்கை அகராதி என்ற ஒண்றினைச் சேர்க்க வேண்டும். இதில் காலவரிசைப்படி (Chronological  order) வாழ்க்கை நிகழ்வுகள் பட்டியலிடப்பட வேண்டும். எந்தெந்த ஆண்டுகளில் முதலைவராக இருந்தார், எந்தெந்த ஆண்டுகளில் எதிரிக்கட்சித் தலைவராக இருந்தார், எப்போது யாருடன் கூடு வைத்தார் போன்ற விபரங்கள் பட்டியலாக இட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.  

எடிட்டிங்கில் பல குறைகள் இருந்தாலும் எழுத்தாளர் வாஸந்தியின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. அதிலும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு ஆளுமையின் வரலாற்றினை, அதுவும் பல்வேறு சென்சிடிவ் விஷயங்களை இணைத்து, அவர் உயிரோடு இருந்த கால கட்டத்திலேயே எழுவது என்பது ஒரு மாபெரும் தீரச் செயல் என்றே கூற வேண்டும்..... வாழ்க்கை வரலாறு என்றாலே காக்காய் பிடித்தல், ஜால்றா அடித்தல், என்று படித்து பழகி விட்ட தமிழ் வாசகர்களுக்கும் வாஸந்தி அவர்கள் எழுதியுள்ள "ஜெயலலிதா - மனமும் மாயையும்" ஒரு வித்தியாசமான அனுபவத்தினைத் தரும்.                 
  
நூல்                                     - ஜெயலலிதா மனமும் மாயையும்
ஆசிரியர்                           - வாஸந்தி   
பதிப்பகம்                         - காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் 
முதல் பதிப்பு                   - ஜனவரி 2018 
திருத்தப்பட்ட பதிப்பு    - ஜுலை 2018 
பக்கங்கள்                        - 342  

- சிமுலேஷன் 




2 comments:

ஸ்ரீராம். said...

புத்தக அச்சில் குறைகளை சொல்லி யோசனைகள் சொல்லி இருப்பது கவர்ந்தது.  வாஸந்தி அரசியல்வாதி இல்லை என்பதால் சில விஷயங்களை அவரால் புரிந்து கொள்ள, அலலது ஜீரணித்துக்கொள்ள முடிந்திருக்காது.

சிவக்குமார் said...

நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை வசந்தி வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர். குறிப்பாய் தமிழில் வெளிவந்த முக்கிய இந்திய பத்திரிக்கையின் தமிழ்ப்பதிப்பின் பொறுப்பாசிரியர்க இருந்தார். ஆகவே ஒரு அரசியல்வாதியாக பிரச்சனை மற்றும் சார்பு அல்லது எதிர்ப்பு நிலையில் கட்சியின் ஆதரவு நிலைப்பாடு போன்ற நிறைய சிக்கல்கள் உண்டு. ஆனால் பத்ரிக்கையாளர்களில் பெரும்பான்மை செவிவழி அல்லது எதிர் தரப்பு சொல்லும் கால சம்பவங்கள் படி யாரும் சொல்வதில்லை. அதுவே நியாய தர்மத்தில் பல விஷயங்கள் நெருக்கம் காரணமாய் உண்மையை வெளியிட சொல்லவோ வாய்ப்புகள் குறைவு. நீண்ட காலம் கழித்து நூல் மூலம் தரவகள் சொல்லும் போது உண்மையின் போக்கு நீர்த்து போய் பலர் கருத்தில் பிரண்டு போகவும் வாய்ப்புண்டு. பல உண்மை சம்பவங்கள் மரணம் ஆதிக்கம் செல்வாக்கு காரணமாய் உ மைகள் வெளியே வராது. அதை நீண்ட காலம் கழித்து ஒருவர் எழுதும் போது சொல்லும் போது அதன் உண்மை தன்மை குறித்து கேள்விகளும் நியாங்களும் எழுப்படும் என்பதே நிதர்சனம். உண்மை உறங்காது எனினும் முழு உண்மை வெளி வராது.