Monday, April 02, 2012

சினிமா நிஜமா? - லெனின் - நூல் விமர்சனம்


"என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச் சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே மகனுக்கும் 'சிங்' ஒட்டிக் கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாசாரங்களும் சங்கமித்ததின் 'கரு' நான். இப்போதைக்கு நான் தமிழன்... எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்." இப்படித்தான் தன்னைப் பற்றி "சினிமா நிஜமா" என்ற நூலின் பின்னட்டையில் அறிமுகம் செய்து கொள்கிறார் புகழ் பெற்ற எடிட்டரும் இயக்குநருமான பி.லெனின்.

நக்கீரன் இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகள் "சினிமா நிஜமா?" என்ற் தலைப்பில் நூலாக வந்துள்ளது. சுய அறிமுகத்தில் செய்து கொண்டது போலவே, சினிமா சம்பத்தப்பட்ட சகல தொழிலாளர்கள் குறித்தும், அவர்களது பிரச்னைகள் குறித்தும் பரிவுணர்ச்சியுடன் மிகுந்த கவலையுடன் இந்தக் கட்டுரைகளில் உரத்துச் சிந்திக்கின்றார். இந்தத் தொழிலின் கடைநிலை ஊழியர்களான் டச்சப் பாய்ஸ், லைட் பாய்ஸ், புரடக்ஷன் பாய்ஸ், செட் அஸிஸ்டெண்ட் ஆகியோரைப் பற்றியெல்லாம் அவரது அன்புள்ளம் ஆழ யோசிக்கிறது என்பதற்கு அடையாளமே இந்தக் கட்டுரைகளின் சாரம்.

கனவுத் தொழிற்சாலை மனிதர்களை பற்றிய சுவாரசியமான இந்தக் கட்டுரைகளிலிருந்து சாம்பிளுக்கு ஒரே ஒரு கட்டுரையை மட்டும் இங்கு பார்ப்போம்.

 ---------0--------------

 சினிமா படப்பிடிப்புத் தளத்தை வாசகர்கள் பார்த்திருக்ககூடும். 60 அடி உயரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் ஆன கூரையுடன், காற்று கூடப் புக முடியாத அமைப்புக் கொண்டது. பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இவ்வாறுதான் இருக்கும். இதனுயரத்தில் அதாவது 60 அடி உயரத்தில் நின்று கொண்டுதான் லைட் பாய்ஸ் (பாய்கள் என்றாலும் பெரும்பாலும் வயதானவர்கள்) சினிமா நட்சத்திரங்கள் மேல் வெளிச்சங்கள் அடித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த உயர்ந்த கூரை மீது ஏறிய லைட்பாய்கள் காலை 9 மணி கால்ஷீட் ஆரம்பித்து, மதியம் டைரக்டர் லஞ்ச் பிரேக் அறிவித்தவுடன்தான் கீழே இறங்குவார்கள். அதுவரை இவர்கள் சஞ்சாரமெல்லாம் இந்த இருட்டு மற்றும் புழுக்கமான மேற்கூரையின் மேல்தான். இடையிடயே தங்களுக்குத் தேவையான தண்ணீர், தேனீர் போன்றவைகளை இவர்கள் மேலே இருந்து கம்பிக் கயிறு கட்டி கீழே இருந்து இழுத்துக் கொள்வார்கள். அன்று இரு தெலுங்கு ப்ட ஷூட்டிங்...! அந்தப் படத்தின் கதாநாயகி காணும் கனவுப் பாடலை இயக்குநர் கொஞ்ச்ம் வித்தியாசமாக...? கற்பனை செய்திருந்தார். கதாநாயகன், கதாநாயகியை சுற்றிலும் ஏராளமான இனிப்புப் பலகாரங்கள். படபிடிப்பு தளம் முழுக்க அடுக்கப்பட்டு இருந்தன. ஏராளமான ஜாங்கிரி வகைகள், மைசூர் பாகு, அதிரசம், குலோப் ஜாமூன் என்று ஒரு லாலா கடையே அங்கு பரப்பப்ட்டு இருந்தது. இந்த இனிப்பு வகைகளுக்கு இடையே கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் புரண்டு காதலித்துக் கொண்டு இருந்தார்கள். இது என்ன கனவோ...? இயக்குநர்களுக்கு இந்தக் 'கெட்ட கனவுகள்' எங்கிருந்துதான் வந்ததோ, இந்திய கமர்ஷியல் சினிமா டைரக்டர்களுக்கெல்லாம் ஒரே மாதிரி. நாயகனும், நாயகியும் ஊட்டி மலையின் அடிவாரத்தில் பாடினாலும், மலை மீது இருந்து நீர் வீழ்ச்சி போல ஆப்பிள்களும், ஆரஞ்சு பழங்களும் உருண்டு வரும்.

இப்படிப்போன்ற கனவுக் காட்சிகளள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இத்தைகய இயக்குநர்கள் கவனிக்கிறார்களா? கணக்கில் எடுத்துக் கொள்கின்றார்களா? எனபது ஒரு புரியாத புதிர். நான் விசாரித்த வரையில் மக்கள் இத்தைகய கனவுகளைக் கண்டு அருவருப்பே அடைகிறார்கள். ஆப்பிள் தின்பதற்காக ஆசைப்பட்டு கடையில் விசாரித்த போது, விலை கட்டுபடியாகமல் போன நிகழ்ச்சிகள்தான் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது...! இயக்குநர்களைப் பொறுத்த வரையில் பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தால் லாரி, லாரியா பூக்களைக் கொட்டுவது, அதைவிடப் பெரிய நிறுவனம் கிடைத்தால் லாரி, லாரியாக சாத்துக்குடி, அதற்கும் மேலே ஆப்பிள்களாக கதாநாயகி மேலே வருகிறது. இன்னும் சண்டைக் காட்சி என்றால் ஏராளமான முட்டைகள் உடைய வேண்டும். காய்கறிகள் பறக்க வேண்டும். இது போலத்தான் அந்தத் தெலுங்குப் படப்பிடிப்பிலும் (இதில் தெலுங்கு, தமிழ் வித்தியாசமில்லை)இனிப்பு வகைகள் கலர் கலராக... படப்பிடிப்புத் தளத்தின் மேலே இருந்து பார்த்த லைட் பாய்களுக்கு இது கண்ணண உறுத்தியது. நாக்கில் எச்சில் ஊறியது... விளைவு...! கொஞ்சம் கொஞ்சமாக ஜாங்கிரிகளும், பாதுஷாக்களும் கயிற்றின் வழியாக மேலே ஏறிக் கொண்டு இருந்தன. இதைச் சிறிது நேரத்துக்குள் மேனேஜர் ஒருவர் பார்த்து விட்டார். உடனே பரபரப்பானார். வேக, வேகமாக வெளியேறினார். சிறிது நேரத்திற்குள் இரண்டு, மூன்று வேர் கையில் 'மருந்து தெளிக்கும் பம்புடன்' உள்ளே வந்தார்கள். இருக்கிற இனிப்புப் பலகாரங்கள் அனைத்தின் மேலும் வேக வேகமாகப் 'பூச்சி மருந்து' அடிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வண்ண வண்ணமான் அந்த இனிப்பு வகைகளின் மேல் ஈ கூட மொய்க்காத காரநெடி சூழ்த்து கொள்ள... அவன் பாடினான்... அவள் ஆடினாள்... நீங்கள் பார்த்த திரைப்படங்களில், சாப்பாட்டு அறையின் மேஜைகளில் அடுக்கடுக்காய் இருக்கும் பழ வகைகளிலும், தின்பண்டங்களிலும் உங்களின் புலன்களுக்கு எட்டாத பூச்சி மருந்தின் நெடி பரவியிருக்கிறது. உங்களுக்கு அந்தப் பழங்கள் நிஜம்... எங்களுக்கு அவை பழங்கள் அல்ல, விஷங்கள் என்பது நிஜம்...சில மனிதர்களைப் போலவே!

 நூல் பெயர்" சினிமா நிஜமா? ஆசிரியர்: B.லெனின் பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பு: 2002 பக்கங்கள்: 224 விலை: Rs. 75.00 - சிமுலேஷன்