Showing posts with label இராகம். Show all posts
Showing posts with label இராகம். Show all posts

Saturday, November 06, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த் திரையிசையிலும் பெரிதும் இடம் பெற ஆரம்பித்தது.

இந்த இராகத்தின் விபரங்கள் வருமாறு:-

இராகம்:சாருகேசி
26ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

மேலே உள்ள 26ஆவது மேளகர்த்தா ராகமாகிய இந்த சாருகேசி ராகத்தின் ஆரோகணத்தினையும், அவரோகணத்தினையும் கூர்ந்து பார்த்தால்,  பூர்வாங்கம் சங்கராபரணத்தினைப் போலவும், உத்தராங்கம் தோடியினைப் போலவும் இருப்பதனைக் கவனிக்கலாம்.

இப்போது சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பார்ப்போமா?

பாடல் - திரைப்படம்

01. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
02. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
03. அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
04. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
05. அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன்
06. சின்னத் தாயவள் - தளபதி
07. எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
08. காதலி காதலி - அவ்வை ஷண்முகி
09. மலரே குறிஞ்சி மலரே - Dr.சிவா
10. மணமாலையும் மஞ்சளும் - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
11. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
12. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
13. மாறன் அவதாரம் - ராஜகுமாரி
14. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
15. மொட்டு விட்ட முல்லக் கொடி - அறுவடை நாள்
16. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
17. நாடு பார்த்ததுண்டா - காமராஜ்
18. நடு ரோடு - எச்சில் இரவுகள்
19. நீயே கதி ஈஸ்வரி - அன்னையின் ஆணை
20. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
21. நோயற்றே வாழ்வே - வேலைக்காரி
22. ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - தேனிலவு
23. பெத்த மனசு - என்னப் பெத்த ராசா
24. ரத்தினகிரி வாழும் சத்தியமே - பாட்டும் பரதமும்
25. சக்கர கட்டி சக்கர கட்டி - உள்ளே வெளியே
26. செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடி - செந்தூரப்பாண்டி  
27. சிறிய பறவை உலகை - அந்த ஒரு நிமிடம்
28. தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
29. தூங்காத கண்ணின்று ஒன்று - குங்குமம்
30. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
31. உயிரே உயிரின் ஒலியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
32 வசந்த முல்லைப் போலே வந்து - சாரங்கதாரா


ஜி.ராமநாதன் அமைத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிப் பெரும் புகழ் பெற்ற "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்) பாடலை முதலில் கேட்போம்.


"இந்தப் புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன் துவங்கும் "வசந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என்ற பாடல் சாருகேசியில் அமைந்த புகழ்பெற்ற பாடலாகும். இடம் பெற்ற படம் 1957ல் வந்த சிவாஜி கணேசன் நடித்த 'சாரங்கதாரா".


மீண்டும் சிவாஜி கணேசன் மற்றும் சாரதா நடித்த "குங்கு்மம்" படத்திலிருந்து மற்றுமொரு பாடல், சாருகேசி ராகத்தில்.


ரஜனி நடித்த ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஜேஸு்தாஸ் குரலில் வந்த "ஆடல் கலையே தேவன் தந்தது" சாருகேசி ராகத்தில் அமையப்பெற்ற ஒரு அழகான பாடலாகும்.


சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.


சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் "உதயா உதயா உளருகிறேன்" என்ற பாடலாகும். இந்தப் பாடலை முதன்முறையாக "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" இறுதிச் சுற்றில் ரோஷன் என்ற சிறுவன் ஆண்-பெண் குரலில் பாடியபோது அது நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஆனால் இந்தப் பாட்டு எந்தப் படப் பாடல் என்று தேடிப்பார்த்த போது, எப்படி ஒரு அழகான பாடலைக்கூட திரையுலகில் கேவலமான ஒரு கோரியாகிரபி மூலம் கொல்லமுடியும் (விஜய், சிம்ரன் குத்து) என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.இதே பாடலை ரூபா என்பவர் பாடியுள்ளதைக் கேளுங்கள்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

Saturday, April 12, 2008

ராகசிந்தாமணி கிளப் - ஹேமவதி - தர்மவதி - நீதிமதி

"எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்னாடிக் ம்யூசிலே ஒங்களுக்கெல்லாம் இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுண்டு, இன்னிக்கி "ராகசிந்தாமணி ம்யூசிக் க்ளப்"போட இந்த மொதல் மீட்டிங்குக்கு வந்திருக்கிற, ஒங்க எல்லாருக்கும் நன்றி. ஏற்கெனவே சொன்னபடி இந்த விவாதக் களம், ஒரு இன்ஃபார்மல் 'கெட்-டு-கெதர்'தான். அதனால, யார் வேணும்னாலும், எந்த ஆர்டர்ல வேணும்னாலும் பேசலாம்."

"ஆனா தலைப்பு மட்டும் என்னென்னு நாங்க ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம்."

"ஹேமவதி-தர்மவதி-நீதிமதி". இதுதான் இன்னிக்கித் தலைப்பு."

"பாலா!, நீங்க வேணும்னா மொதல்ல ஆரம்பியுங்கோ"

"தேங்ஸ், சிமுலேஷன். இன்னிக்கி நான் ஹேமவதி ராகத்தைப்பத்திப் பேசப் போறேன். ஹேமவதி ராகம். இது 58ஆவது மேளகர்த்தா ராகம்."

"சாரி பாலா சார், இன்ட்ரப்ட் பண்றதுக்கு. இந்த ராகம்பத்தி அவ்வளவா கேள்விப்பட்டதேயில்ல. தியரியெல்லாம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பாடித்தான் காட்டுங்களேன்."

"மொதல்லே நான் தியரியெல்லாம் எதுவும் சொல்லப் போறதிலே. இரண்டாவது நான் பாடவும் போறதில்லே. பேசத்தான் தெரியும். வேணும்னா, நம்ம நூக்கல சின்ன சத்யநாராயணாவைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஆரோகணம், அவரோகணம் எல்லாம் பாடி, ஒரு அஷ்டபதியும் பாடுவார். கேளுங்கோ."

"நல்ல இன்ட்ரொடக்ஷன். பாலா, ஹேமவதி ராகத்லே என்னென்ன பாட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"முத்துஸ்வாமி தீட்சிதரோட "ஸ்ரீகாந்திமதிம்" அப்படீங்கற பாட்டுத்தான் ரொம்பப் பாப்புலர். இப்ப கணேஷ் குமரேஷ் வயலின்லே இந்தப் பாட்டைக் கேப்போமா?"

"அட்டகாசம். அடுத்து வேறென்னென்ன பாட்டெல்லாம் இருக்கு?"

"பாபநாசம் சிவன் நெறையப் பண்ணியிருக்கார். "சிவனுக்கிளைய சேயே", "என்னைக் காத்தருள்" அப்படீன்னு"

"வெயிட்...வெயிட்...தமிழ்னாலே சிவன்தானா? "சிவனுக்கிளைய சேயே" அவரோட பாட்டா? கெடையவே கெடையாது."

"ஆஹா ருக்மிணி மாமி, கண்டு பிடிச்சிட்டேளா? சரி...சரி... அது யாரோட பாட்டுன்னு சொல்றவாளுக்கு, ஒரு பரிசு. (ஒங்களைத் தவிர)"

"XXXX XXXX XXXX தானே?"

"அடடா. சூரஜா கண்டுபிடிச்சது. இந்தாடா பிடி. ஒரு கேட்பரி சாக்லேட்"

"சிமுலேஷன் ஆன்ஸரை சத்தமாச் சொல்லதீங்கோ. இப்ப இந்த வலைப்பதிவர்களெல்லாம் கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கலாம்."

"சரி, இப்ப அடுத்ததா, தர்மவதியப் பத்தி யார் பேசப் போறா?"

"தாமு மாமா. தர்மவதி ஒங்களோட ஃபேவரைட்டாச்சே. நாலு வார்த்தை சொல்லுங்கோ"

"ஆமாம். நாந்தான் தர்மவதியப்பத்திப் பேசப் போறேன். சூப்பரான ராகமாச்சே. இது மேளகர்த்தாவில் 59ஆவது ராகமாகும். இதனோட ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸா, அவரோகணம்: ஸா நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ"

"பாடிக் காண்பியுங்கோ....பாடிக் காண்பியுங்கோ...."

"பாலா சார் மாதிரியே நானும் நூக்கல அண்ணாவக் கூப்பிட்டுடறேன். அவரே ஆரோகணம், அவரோகண்ம் எல்லாம் பாடிக் காண்பிப்பார். வாங்கோ. கேட்டுடலாமா?. "

"சிமுலேஷன். "இளஞ்சோலை பூத்ததா", தர்மவதி ராகம்தானே?"

"ஆமாமாம். கரெக்ட். என்ன படம்னு யாருக்காவது தெரியுமா?"

"ரொம்பவே அழகான பாட்டுத்தான். என்ன படம்னுதான் தெரியலே"

"உனக்காகவே வாழ்கிறேன்" இதுதான் படத்தோட பேரு. இந்தப் பாட்ட எஸ்.பி.பி, யாருக்காகப் பாடினாருன்னு தெரியாம நானும் இத்தன நாள் முழிச்சிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியும், சிவகுமாருக்காகவும், நதியாவுக்காகவும்தான் இந்தப் பாட்டுன்னு. சிவகுமார் நடிப்பையும், நதியா டான்சையும் கொஞ்சம் பொறுத்துண்டு இந்தப்பாட்டைக் கேட்டால் ரொம்பவுமே எஞ்ஜாய் பண்ணலாம்."

"ராமூ, அதே மாதிரி, "உத்தரவின்றி உள்ளே வா?" படத்லே ஒரு நல்ல பாட்டு வருமே அது என்னடா?"

"அதுவா? நம்ம ரவிச்சந்திரன் நடிச்ச படம்தானே?, "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?"இந்தப் பாட்டைத்தானே சொல்றே?"

"கொஞ்சம் சைலன்ஸ் ப்ளீஸ். இந்தப் பாட்டையும் இப்பக் கேக்கப் போறோம்."

"மாமா, ரெண்டு தர்மவதியுமே சூப்பர். போறதுகுள்ளே, அந்த ரெண்டு பாட்டையும் என்னோட ஐ.பாட்லே காபி பண்ணிக் கொடுத்துடறீங்களா?"

"ஆஹா. கர்னாடிக்னா காத தூரம் ஓடறது. சினிமாப் பாட்டுன்னா என்னமா இன்ட்ரஸ்ட்?"

"மாமி. அதுனால ஒண்ணும் தப்பே இல்ல. அவங்களுக்காகத்தான் இந்த க்ளப்பே. சினிமாப் பாட்டைக் காம்பிச்சி, ஸ்லோவா, கர்னாடிக் ம்யூசிக்லே ஆர்வத்த உண்டுபண்றதுதான் நம்ம கோலே"

"ஆஹா. சிமுலேஷன், அப்படீன்னா, இன்னோரு சினிமாப் பாட்டுப் போடுங்கோ"

"ஜெண்டில் மேன்"ல் வர்ற "ஒட்டகத்தக் கட்டிக்கோ"கூட தர்மவதிதான். இன்னிக்கிப் போடலாம்னு நெனச்சுண்டிருந்தேன். ஆனா, You Tubeலேர்ந்து தூக்கிட்டாங்களே!"

"தாமு மாமா, கர்னாடிக் ம்யூசிக்லே என்னென்ன பாட்டுன்னு சொல்லுங்கோ"

"மைசூர் வாசுதேவாசாரியார் எழுதின "பஜனசேய ராதா", அப்புறம் முத்துசாமி தீட்சிதரின் "பரந்தாமவதீ" இதெல்லாமும்கூட தர்மவதியில இருக்ற பிரபலமான பாடல்களாகும். அப்புறம் பெரியசாமி தூரன் எழுதின "ஒரு நாள் வாழ்வே", கோடீஸ்வர ஐயர் எழுதின "கந்தா பக்த" இந்த கிருதிகளெல்லாம் கூட இந்த ராகத்திலேதான் இருக்கு."

"இப்ப நாம கேக்கப் போறது அம்புஜம் கிருஷ்ணா எழுதி, சுதா ரகுநாதன் பாடின "ஓடோடி வந்தேன் கண்ணா"

"ஏன்னா. ஒங்களைத்தான். அதுக்குள்ளே கொட்டாவியா? கோவிந்தான்னு சொன்னாப் போதுமே. முழிச்சுங்கோ. ஜூனியர் சிமுலேஷன் வேற வந்து போட்டோவெல்லம் எடுத்துண்ட்றக்கன்."

"இன்னிக்கிக் கடோசி ராகம் நீதிமதி. இதப்பத்திப் பேசப் போறது நீலா மாமி."

"இது 60ஆவது மேளகர்த்தான்னு உங்க எல்லார்க்கும் தெரிஞ்சுருக்கும். மொதல்லே கேக்கப் போறது, நூக்கல சின்னசத்யநாராயணாவோட, இன்ட்ரொடக்ஷன்."

"மாமி. இது ஒரு விவாதி ராகம்தானே?"

"கரெக்ட். செல்வன் எப்டிக் கண்டுபிடிச்சே? எப்டிடா முடியறது உன்னாலே?"

"மாமி, செல்வன் பயங்கரமாத் தேறிட்டான். எல்லாம் ஆர்வம்+உழைப்புதான். ஆனா, இன்னிக்கி விவாதி ராகத்தப்பத்திப் பேசத்தான் டைம் இல்லை. அடுத்த் க்ளப் மீட்டிங்லே, செல்வன் விவாதி ராகத்தப்பத்தி ஒரு தனி லெக்சரே கொடுக்கப் போறான்."

"சரி. நான் இப்ப வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன் பாடின, "மோகனகர முத்துக்குமரா", இந்தப் பாட்டைப் போடறேன். கேளுங்கோ."

"கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைதானே. லிரிக்ஸ் கெடைக்குமா சிமுலேஷன்?"

"எஸ்.ராஜம் புக் போட்டுருக்காரே. இப்ப இம்மீடியட்டா வேணும்னா, இங்க போய்ப் பாக்கலாம்."

"ஆஹா. கிட்டதட்ட ஒண்ற மணி நேரம் போனதே தெரியல. அடுத்த க்ளப் மீட்டிங்க்காக ஆர்வமாக் காத்திண்ட்ருக்கோம்."

"மொதல் மீட்டிங்க நல்லபடியா நடத்திக் கொடுத்த எல்லார்க்கும் நன்றி. இதே மாதிரி எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கணும். இப்போ ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், காபி வருது. மெதுவா சாப்பிட்டுட்டுப் போகணும். மறுபடியும் எல்லார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!".

- சிமுலேஷன்

Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி"

"என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?"

"டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்."

"அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?"

"அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்."

"குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு வெரைட்டி இருக்றாப்ல, காபி ராகத்லேயும் வெரைட்டி இருக்கா?"

"நிச்யமா. கர்நாடக காபி, உபாங்க காபி, ஹிந்துஸ்தானி காபின்னு பலவகை இருக்கு. அதைத் தவிர வடநாட்ல வேற எந்த ப்ளெண்ட் போட்டாலும் அதை, 'மிஸ்ர காபி'ன்னு சொல்லிடுவாங்க.நாம பெரும்பாலும் பாடறது ஹிந்துஸ்தானி காபிதான். இந்தக் காபி ராகம் கரஹரப்ரியாங்ற 22ஆவது மேள்கர்த்தாவின் ஜன்ய ராக்ம். அப்படீன்னா, இதனோட ஆரோகணம், அவரோகணம் சொல்லு பார்ப்போம்."

"கரஹரப்ரியாவுக்கு, ஸ,ரி2,க2,ம1,ப,த2,நி2,ஸா - ஸா,நி2,த2,ப,ம1,க2,ரி2,ஸ .



காபிக்கு,

ஆரோகண்ம்; ஸ,ரி2,ம1,ப,நி3,ஸா
அவரோகண்ம்: ஸ்,நி2,த2,நி2,ப,ப1,க2,ம1,ட2,ப்,க2,ரி2,ஸ,ந்3,ஸ

சரியா, அத்திம்பேர்?"

"ஆஹா. கலக்றியே. ஆரோகணம் எவ்வளவு சிம்பிளா இருக்கோ, அவரோகணம் அவ்வளவுக்கவ்வளவு காம்ளெஸா இருக்கு பார்த்தியா. ஆனா, நான் ஏற்கெனவே சொன்னா மாதிரி வெறும் ஆரோகணம், அவரோகணங்றது ஒரு ஸ்கேல் மட்டும்தாண்டா.

இந்திய இசைன்னாலே, கமகம் முக்கியம். சரி. சரி. கமகத்தைப் பத்தி அப்புறமா வெளக்கிச் சொல்றேன். ஒனக்கு, காபில்லே என்னென்ன பாட்டு தெரியும் சொல்லு?"

"நான் சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கவா? நம்ம கர்நாடிக், "என்ன தவம் செய்தனை யசோதாவையே, பார்த்திபன் கனவுலே, வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருக்கார் பாருங்கோ. கேட்கறேளா?"

"ஆஹா. வீடியோ ஐபாடெல்லாம் வாங்கிட்டியா? பார்ததிபன் கனவு-ஆலங்குயில் பாட்டுதானே. போடு, போடு. பாக்கறேன்."



"ரோஜா படத்லே வந்த, 'காதல் ரோஜாவே'காபிதான். அப்புறம், ரஜனி ஸ்ரீதேவி நடிச்சு, "ப்ரியா"ன்னு ஒரு படம் வந்ததே எய்ட்டிஸ்லே. இளையராஜாவோட "ஹேய் பாடல் ஒன்று. ஜேஸுதாஸும், ஜானகியும் பாடினது. அதுவும் ஒரூ நல்ல காபிதான்."

"சரி. அதையும் கேட்டுடலாம்"



பாலபாஸ்கர்ங்றவரோட ஃப்யூஷன் ஒண்ணு இங்க இருக்கு. பாருங்கோ.



"சரிடா. ஒரேடியா சினிமாப் பாட்டு, ஃப்யூஷன்னு போட்டுண்டிருக்கியே. கர்நாடிக்லே என்ன தெரியும். ஒரு கர்நாடிக் பாட்டுப் போடேண்டா. "

"'என்ன தவம் செய்தனை' சொல்லிட்டேன். த்யாகராஜரோட, 'இந்த சௌக்ய', 'மீ வல்ல குணதோஷமேமி, அப்புறம், 'பருலன்ன மாட'ன்னு ஒரு ஜாவளி உண்டு.

இப்ப புரந்தரதாசரோட 'ஜகதோதாரணா' எம்.எஸ் பாடிக் கேட்கலாமா? இல்ல. பாக்கலாமா?"



ஒரு நிமிஷம் அத்திம்பேர். பாட்டைக் கேட்டுண்டுருங்கோ. இத வந்துடறேன். ஆபீஸ் கலீக் ஒருந்தன் வந்திருக்கான். அவனைப் பாத்துட்டு வந்துடறேன். காபி சாப்பிடத்தான் கூப்பிடறான் போலயிருக்கு.

Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.






Thursday, December 21, 2006

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி?

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி? (How to identify Ragas?) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசுதா ஹாலில் நடைபெற்றது, நடத்தியவர்கள் டாக்டர்.சுந்தர் மற்றும் சூரியபிரகாஷ். டாக்டர்.சுந்தர் ஒர் எலும்புச் சிகிச்சை மருத்துவர். சூர்யப் ப்ரகாஷ் அவர்கள் ரிசர்வ் வங்கிகியிலே பணி புரிபவர். காதுக்கினிய இசைக் கச்சேரிகள் பல தந்து, வளர்ந்து வரும் ஒரு இசைக் கலைஞர். டாகடர்.சுந்தரும் தனது ஒய்வு நேரங்களில் இசைக் கச்சேரிகள் செய்வதனுடன், சூர்யப்ரகஷுடன் சேர்ந்து இசை குறித்தான விழிப்பு நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகின்றார். சரி. மேலே குறிப்பிட்ட இந்தப் பட்டறையிலிருந்த்து சில துளிகளைப் பார்ப்போம்.

இராகம் என்பது கேட்பவருக்கு இனிமையான ஒலியெழுப்பக் கூடிய ஸ்வரங்களின் வரிசையாகும். மேலும் இராகம் என்பது இந்திய இசையின் ஒரு தனித்தன்மையுமாகும். ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்த ராகங்கள் என்ற பெயர் உண்டு. இந்த மேளகர்த்தா இராகங்களிலிருந்து ஸ்வரங்களை சிறிது மாற்றக் கிடைக்கும் எண்ண்ற்ற இராகங்கள் ஜன்ய இராகங்கள் எனப்படும்.


"இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட இராகங்களை ஒரு கச்சேரியில் இனங் கண்டு கொள்ள வேண்டிய தேவை என்ன? பின்னர் எப்படி இனங் கண்டு கொள்ளுவது?" என்பது பற்றிய இந்தப் பட்டறை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. சென்னையெங்கும் பல்வேறு இசைக் கச்சேரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு விவாதப் பட்டறைக்கு, கிட்டத் தட்ட 200 பேர் கொள்ளக் கூடிய ஒரு அரங்கம், நிரம்பி வழிந்ததென்றால், இரசிகர்கள் வெறும் பாட்டை மட்டும் இரசிக்க விரும்புவதில்லை. மென்மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.

முதன் முதலில் இசை நிகழ்ச்சி செல்லும் ஒருவர், அங்கு பாடப்படும் பாடல்களைச் சும்மா கேட்டுவிட்டு வருகின்றார். இரண்டு மூன்று முறை ஒரே பாடலைக் கேட்ட அவருக்கு, அந்தப் பாடல் மனதில் பதிகின்றது. பின்னர் அந்தப் பாடலின் அழகை இரசிக்க ஆரம்பிக்கிறார். புரிந்த மொழியாக இருந்தால், பொருளழகை இரசிக்கின்றார். அடுத்ததாகப் பொருள் புரிந்தாலும், புரியாவிட்டாலும், இராகத்தின் அழகினை இரசிக்கவும் செய்கின்றார்.

அடுத்த கட்டமாக, "இது என்ன இராகம்?', என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆவல் ஏற்படுவது மனித இயல்பு. பின்னர் அந்த இரகத்தினை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கின்றார். அடுத்த முறை, வேறொரு நிகழ்ச்சியில், அதே இராகத்தில் வேறொரு பாடல் பாடப்படும்போது, "இது நமக்குத் தெரிந்த இந்த இராகம்தானே. சரியாகக் கண்டு பிடித்து விட்டோமே", என்று தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக, தனக்குத் தெரிந்த நண்பர்களுடன், இதனை அலசி, விவாதம் செய்யும் அளவுக்கு, தேறி விடுகின்றார். ஆக மொத்தம், இது ஒரு தேடுதல் பயணத்தில் ஒரு கட்டமாகும். இந்தக் கண்டு பிடித்தலை எப்படிச் செய்யலாமென்றால், வழிகள் வருமாறு:-

1.தெரிந்ததிலிருந்து தெரியாதற்கு: தெரிந்த பாடல்களின் இராகங்களை, மனதிலிருத்திப் , பின்னர் அதனைக் குறிப்பாக வைத்து, மற்ற பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிப்பது. இதனைப் பெரும்பாலோனோர் செய்கின்றனர். உதாரணமாக, "என்ன தவம் செய்தனை யசோதா" என்ற எளிமையான பாடல் "காப்பி" இராகத்தில் அமைந்தது என்று மனதில் பதியவைத்துக் கொண்டால், அடுத்த முறை, "ஜகதோதாரணா" என்று யாராவது ஆரம்பிக்க, உடனே, காப்பி மனதில் பளிச்சிட்டுப் "பேஷ், பேஷ், இந்தக் காப்பியும் ரொம்ப நன்னாயிருக்கே" என்று சொல்லத் தோன்றும்.

2. திரைப்படப் பாடல்கள் மூலம் ***: அடுத்தபடியாக, திரைப்படப் பாடல்களை ரெஃபரன்ஸாக எடுத்துக் கொள்வது. இதுவும் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு நுட்பம்தான். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நமது காதுகளில் விழுவது, திரைப்படப் பாடல்கள்தான். அவற்றின் தரத்தினைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதனை விட்டு, அந்தப் பாடல்களிலுள்ள, இராகங்களை மனதில் பிடிக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே", "பூமாலை வாங்கி வந்தான், பூக்கள் இல்லையே", பாடல்கள், "கானடா" இரகத்தில் அமைந்தவை", என்று நண்பர் சொல்வதை மனதில் இருத்திப் பதிய வைத்துக் கொண்டால், அடுத்த முறை, யாரேனும், "மாமாவசதா" என்று ஆரம்பிக்க, "ஆஹா, நமக்குத் தெரிந்த கானடாதானே இது" என்று ஒரு உற்சாகம் பிறக்கும்.

3. ஸ்வரஸ்தானங்கள் மற்றும் 'பிடி'களிலிருந்து: ஒவ்வொரு இராகங்களுக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்வரங்கள் உள்ளன. இதில் சில ஸ்வரங்கள், ஜீவஸ்வரஙள் எனப்படும் ஆதார ஸ்வரங்களாகும். அதே போல, ஒவ்வொரு புகழ் பெற்ற இராகங்களுக்கும், பாரம்பரியமாகப் பாடும் ஒரு 'பிடி' என்றுண்டு. ஒவ்வொரு இராகத்திற்கும் இந்த ஜீவஸ்வரங்கள் என்னென்னவென்றும், சரியான பிடி என்னவென்றும் தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த ஸ்வரங்களை, குறிப்பிட்ட பிடியில் பாடகர் உச்சரித்த மறு நிமிடமே, அல்லது இசைக் கலைஞர் தனது, இசைக் கருவியில் இசைத்த மறு நிமிடமே, இது இன்ன இராகம் என்றுணர முடியும். உதாரணமாக, "கரி கா ஸா நி ரி கா" என்ற ஸவரங்களில் 'நி" யை அசைத்து கமகத்துடன் பாடத் துவங்க, இது கல்யாணி என்று புரியும். கல்யாணியை இந்த ஸ்வரங்களை வைத்து மாற்றி மாற்றிப் பாடினாலும், ஆரம்பத்தில் "கரி கா ஸா நி ரி கா" என்று குறிப்பிட்டுப் பிடிப்பது அதற்கே உண்டான சிறப்பு (Charecteristics of Kalynani). ஒவ்வொரு இரகத்துக்குமுண்டான இந்த சிறப்புப் பிடிகளை மனதிற் கொள்வதும், இராகங்களைக் கண்டு பிடிக்கும் வழிகளில் ஒன்றாகும். இந்த நுட்பம் சிறிது கடினமேயென்றாலும், அனுபவத்தில் கொள்ள எளிதாகும்.

4. இராக முத்திரைகள் மூலம்: பெரும்பாலான வாக்கேயக்காரர்கள், தங்களது பாடல்களில், அவரவர் முத்திரைகள் வைத்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக, முத்துஸ்வாமி தீட்சிதர், தனது பாடல்களில், எதேனும் ஒரு இடத்திலாவது, "குருகுஹ" என்ற பதம் வருமாறு பார்த்துக் கொள்வார். பாபநாசம் சிவன் அவர்கள், "இராமதாச" என்ற முத்திரை வத்திருப்பார். இதே போல, பல பாடல்களில், இராகத்தின் பெயர்கூட முத்திரையாக வைக்கப்பட்டிடுருக்கும். பாடலைக் கூர்ந்து கவனித்தால், இந்த இராக முத்திரையினைக் கண்டு பிடித்து, இந்தப் பாடல் இன்ன இராகம் என்று கூறி விடலாம். உதாரணமாக, "மஹா கணபதிம்" என்ற பாடலில் வரும், "மஹா காவ்ய நாடகாதிப்ரியம்" என்ற தொடரில் வரும் "நாட" என்ற பதத்தினைக் கொண்டு, இது "நாட்டை" என்று கண்டு பிடிக்கலாம். இந்த நுட்பமும் அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் எல்லாப் பாடல்களிலும், இராக முத்திரை நிச்சயம் இருக்குமென்று சொல்லிவ்ட்ட முடியாது.

5. அனுபவபூர்வமாக: எந்த ஒரு கலைக்கும், குறுக்கு வழி கிடையாது. மேற்கண்ட வழிகள் பல இருந்தாலும், அனுபவபூர்வமாக இராகங்களைக் கண்டுணர்தலுக்கு இணையாக எதுவும் கிடையாது. கேட்கக் கேட்கக் கேள்வி ஞானம் பிறக்கும். கேள்வி ஞானம் பிறக்க, எந்தவொரு முயற்சியுமின்றி, இராகங்களை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

இந்த உரைகளுக்குப் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.சுந்தரும், சூர்யப்ரகாஷும் மாறி மாறி விடையளித்தனர். "ஸ்வரங்களின் பெர்முடேஷன் காம்பினேஷங்களின் அடிப்படையிலே பிறப்பது எண்ணற்ற இராகம் என்றால், எல்லா இராகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவா, அல்லது கண்டு பிடிக்கப்படாத்த இராகங்களும் உள்ளனவா? வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இராகங்களை உருவாக்குவது (Invention) என்பது முடியுமா? அல்லது கண்டு பிடித்தலே (Discovery)சாத்தியமா?" என்று கேள்வி கேட்டென். ஸ்வர்ங்களைக் கலக்கி ஒரு இராகத்தினை உருவாக்கி அதற்கு நமது பெயரை வைத்து அழைத்தல் சாத்தியமே என்றும், ஆனால், அந்த இராகம் நிலைத்து இருப்பது என்பது, பாடுபவர் மற்றும் கேட்பவரின் மனதைக் கவர்ந்தால் மட்டுமே என்றும் பதிலளிக்கப்பட்டது.

"அடுத்த்படியாக, இராகங்களுக்கு மருத்துவ குணம் உண்டா?" என்ற கேள்விக்கு, சூர்யப் ப்ரகாஷ், உண்டு என்ற தொனியில் பதிலளித்தார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து. "தனக்கு ஒரு கச்சேரியில், கரகரப்ரியா இராகம் கேட்டவுடன், ஸ்பாண்டிலிடிஸ் என்ற நோய் குண்மாகிவிட்டது," என்று டுமீல் விட்டார். ஆனால், டாக்டர்.சுந்தர் அவர்கள், இந்தகைய முடிவுகள் எந்த முறையில் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியது" என்றார். சூரியப்ரகாஷ், "பாடுபவர் தான் பாடும் பாடலினால் ஒருவருக்கு நோயினைக் குண்மாக்க முடுகின்றதோ இல்லையோ, இரத்தக் கொதிப்பு எளிதில் வர வைக்க முடியும்", என்று கூற, கூட்டத்தினர் அந்த நகைச்சுவையினை இரசித்தனர்.

*** திரையிசையின் மூலம் இராகங்களைக் கண்டுபிடிப்பது குறித்த எனது முந்தைய பதிவுகள்:

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

- சிமுலேஷன்

Wednesday, October 04, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். அதனாலேயே சங்கீதப் பிதாமகர் எனப்படும், ஸ்ரீ புரந்தர தாசர் இந்த எளிய இராகத்தில், ஆரம்பப் பாடங்களான சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை முதன் முதலாக அமைத்தார்.

உண்மையிலேயே மாளவ கௌளை எனப்படும், இந்த இராகத்திற்கு, 'மாயா' என்ற ப்ரி·பிக்ஸ் சேர்க்கப்பட்டது, மேளகர்த்தா இராகப் பட்டியலில், வரிசை எண் கண்டுபிடிக்கப் பயன்படும் 'கடபயாதி' சூத்திரத்திற்காகத்தான். அப்படியானால் இது ஒரு மேளகர்த்தா இராகம் என்று இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்.

பரஸ், நாதநாமக்ரியா என்ற இராகங்கள் மாயாமாளவ கௌளையின் ஒன்றுவிட்ட சகோதரிகள்தான். இந்த முக்கிய இராகத்திலிருந்து கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட ஜன்ய இராகங்கள் பிறந்திருப்பதாக அறிகின்றோம். அவற்றில் சில, கௌளை, மலஹரி, பௌளி, லலிதா, வசந்தா, பிந்து மாலினி, ஜகன் மோகினி, சாவேரி ஆகியவையாகும். ஹிந்துஸ்தானியில் 'பைரவ்' எனப்படும் இராகம்கூட மாயாமாளவ கௌளையினை ஒத்ததாகும்.

திருத்தணி முருகன் அருள் பெற்று, முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய, 'ஸ்ரீநாதாதி குருகுஹோ' என்ற கீர்த்தனை, மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு நல்ல பாடலாகும். மேலும், தியாகையரின், 'மேரு ஸமான', 'துளசி தள' மற்றும் ஸ்வாதி திருநாளின் 'தேவ தேவ கலயாமிதே' ஆகியவையும் மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகும்.

இளையராஜா அவர்கள் பல பாடல்களில் இந்த இராகத்தினைப் பயன்படுத்தியுள்ளார். அது சோக ரசமாகட்டும், அல்லது மகிழ்ச்சியான தருணமாகட்டும். 'மஞ்சள் நிலாவுக்கு இன்று முதலிரவு', 'அந்திவரும் நேரம்'. 'மதுர மரிக்கொழுந்து வாசம்', 'பூவ எடுத்து ஒரு மால' என்று தொடரும் இந்தப் பட்டியல், இதற்கு எடுத்துக்காட்டாகும். 'மஞ்சள் நிலாவுக்கு' என்ற இந்தப் பாடலின் பின்னணி இசையில் வரும் புகைவண்டியின் ஓசை, மிகவும் இயற்கையாக இழைந்து வரும். 'சிவசம்போ' என்று இளமை ததும்பப் பாடிய எம்.எஸ்.வி அவர்களுக்கு 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு மாணிக்கமாகும். முகாரி இராகம் என்று பாடலில் வந்தாலும், டி.ஆரின் 'கடவுள் வாழும் கோவிலிலே' என்ற பாடலும் மாயாமாளவ கௌளைக்கு சிறந்த உதாரணமாகும்.

இராகம்: மாயாமாளவ கௌளை
15ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. அலைமகள் மலைமகள் - நவராத்திரி*
02. அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா
03. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு*
04. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்*
05. ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
06. அரும்பு அரும்பா சரம் தொடுத்து - சின்னத் தாயி
07. அழகான பொண்ணு நான் - அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
08. சின்னச் குயிலே குயிலே - மனசெல்லாம்
09. என் இதயம் இதயம் நீயே நீயே ராசாத்தி - இளையவன்
10. என் தாயெனும் கோயிலில் - அரண்மணைக் கிளி
11. எனக்கென யாரிங்கே - இவன்
12. எங்கே நான் காண்பேன் - சாதனை
13. என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட - சக்களத்தி*
14. கோவிந்தா வரதா ஸ்ரீஹரி கோபாலா - துக்காராம்
15. இதோ இதோ என் நெஞ்சிலே - வட்டத்துக்குள் சதுரம்*
16. இளம் காதல் வீணை - வெள்ளைப் புறா ஒன்று
17. இள மனதினில் - மஞ்சள் நிலா
18. கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம்*
19. காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே
20. காதல் மகராணி - காதல் பரிசு
21. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலய மணி*
22. கண் பாரும் தேவி - கொக்கரக்கோ
23. கனவா இது உண்மையா - அறுவடை நாள்
24. கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்
25. காட்டுக் குயிலே - இதயத்தைத் திருடாதே
26. கொட்டு களி கொட்டு - சின்னவர்
27. குயிலப் புடிச்சி கூண்டிலடிச்சி - சின்னத் தம்பி*
28. மச்சி மன்னாரு - என்னுயிர்த் தோழன்
29. மதுர மரிக் கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்*
30. மனதில் உறுதி வேண்டும் - மனதில் உறுதி வேண்டும்
31. மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை
32. மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு*
33. மாரியம்மா மாரியம்மா - கரகாட்டக்காரன்
34. மாசறு பொன்னே வருக - தேவர் மகன்
35. மூக்குத்திப் பூ மேலே காத்து - மௌன கீதங்கள்*
36. நண்டூருது நரியூருது - பைரவி*
37. நன்றி சொல்லவே எனக்கு - உடன் பிறப்பு
38. நீ நினைத்த நேரமெல்லாம் - பெண்ணை நம்புங்கள்
39. நீயே கதியம்மா - சின்ன துரை
40. நிலவே நீயொரு சேதி சொல்லாயோ - பட்டினத்தார்
41. நீயான தங்கமே - ராஜ கோபுரம்
42. ஓணபுத்தட்டு புல்லாக்கு வாங்கித் தாரேன் - சின்ன ஜமீன்
43. பூப்போலே ஒன் புன்னகையில் - கவரி மான்*
44. பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழககாலே*
45. ராம நாமன் ஒரு வேதமே - ஸ்ரீ ராகவெந்திரர்*
46. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
47. ராசாத்தி ராசாத்தி - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
48. சாமிகளே சாமிகளே சொந்தக் கதை - என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்
49. சரிகமபதனி என்னும் - ராக பந்தங்கள்
50. சிவ சம்போ - நினைத்தாலே இனிக்கும்
51. சிவகாமி நினைப்பினிலே - கிளி பேச்சு கேட்கவா
52. சொல்லடி அபிராமி - ஆதி பராசக்தி
53. சொல்லால் அடித்த சுந்தரி - சின்னக் கவுண்டர்
54. சொர்க்கத்தில் நிக்க நிக்க - ராஜஸ்தான்
55. தாயுண்டு தந்தையுண்டு - கோவில் காளை
56. தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம்*
57. துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்
58. உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி - பணக்காரன்
59. உன் எண்ணம் எங்கே எங்கே - தம்பி பொண்டாட்டி
60. உயிரே உயிரே உருகுதே - ஒருவர் வாழும் ஆலயம்
61. வானம் இடி இடிக்க - உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
62. வத்திக் குச்சி பத்திகாதுடா - தீனா
63. வயசு வந்த வாலிபனுக்கு - என் மன வானில்
64. விழிகளில் கோடி அபிநயம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

வழக்கம் போல, நட்சத்திரக் குறியிட்ட பாடல்களைப் பதிவு செய்து கேட்டு வருகிறீர்களென்று நம்புகின்றேன். இப்போது இந்தப் பதிவுக்குண்டான கேள்வி.

"கௌளை" என்று முடியும் இராகங்களின் (குறைந்தபட்சம் நான்கு) பெயர்களைக் கூறவும்.

- சிமுலேஷன்

Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.

மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)

இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பல நல்ல
பழைய பாடல்கள் மோகனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்.

பாடல் - திரைப்படம்

01. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
02. ஆதரவார் ஆதரவார் - ஞான சௌந்தரி
03. அடி எளச்சி எளச்சி கொழைச்சி கொழைச்சி - மகாராசன்
04. அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா - எதிர் நீச்சல்
05. ஆடுவரென்பதினால் ஆடவர் என்பார் - பாட்டும் பரதமும்
06. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் **
07. அமுதைப் பொழியும் நிலவினிலே - தங்கமலை ரகசியம் **
08. அத்தான் வருவாக முத்தம் கொடுப்பாக - டும் டும் டும்
09. ஆத்தோரம் காத்தாட - எங்கேயோ கேட்ட குரல்
10. பன்சாயீ... காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
11. எனக்கொரு மகன் பிறப்பான் - அண்ணனுக்கு ஜே
12. எங்க மகராணிக்கு - தலைமுறை
13. என்ன பார்வை - காதலிக்க நேரமில்லை *
14. என்ன சமையலோ - உன்னால் முடியும் தம்பி * (இராக மாலிகை)
15. என்னை முதன்முதலாக பார்த்த - பூம்புகார்
16. எண்ணத்தில் - கல்லுக்குள் ஈரம்
17. கீதம் சங்கீதம் நீதானே - கொக்கரக்கோ *
18. கிரிதரா கோபாலா - மீரா **
19. குண்டுமல்லி குண்டுமல்லி - சொல்ல மறந்த கதை
20. ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி
21. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில் *
22. இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு
23. இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் **
24. இந்தப் பூவுக்கொரு அரசன் - பூவரசன்
25. இறைவன் வருவான் - சாந்தி நிலையம் *
26. இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள் *
27. காலை - மேல் நாட்டு மருமகள்
28. கலையாத கனவொன்று கண்டேன் - நாயக்கரின் மகள்
29. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
30. கண்மணியே காதல் என்பது கற்பனையோ - ஆறிலிருந்து அறுபது வரை *
31. கண்மணியே உன் இதய - மனிதன் மாறவில்லை
32. கஸ்தூரி மானே - புதுமைப் பெண்
33. காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
34. கேளடா - பாரதி
35. கேட்குதடி கூ கூ - கட்டுமரக்காரன்
36. கிருஷ்ணா ஹரி கோவிந்த முராரி - கிருஷ்ண பக்தி
37. குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - வள்ளி
38. குறிஞ்சி மலரின் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் *
39. குழந்தையும் தெய்வமும் - குழந்தையும் தெய்வமும் *
40. மதியா விதியா - பாரிஜாதம்
41. மலரே பேசு - கீதாஞ்சலி
42. மலர்கள் நனைந்தன - இதயக் கமலம் **
43. மல்லிகை மாலை கட்டி - புதிய ராகம்
44. மீன்கொடி தேரில் - கரும்பு வில் *
45. முப்பது பைசா மூணு முழம் - போக்கிரி
46. நாடுதே என் மனம் நாதமே - மாயாவதி
47. நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
48. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் *
49. நான் தங்க ரோஜா - டைம்
50. நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
51. நாராயணாய நமோ - திருமழிசை ஆழ்வார்
52. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
53. நிலவும் மலரும் - தேன் நிலவு *
54. நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்
55. ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடித் தென்றல்
56. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
57. ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம் *
58. பாடும்போது நான் தென்றல் காற்று - சுமதி என் சுந்தரி *
59. பாக்காதே பாக்காதே - ஜென்டில்மேன்
60. பால் போலே - பாய்ஸ்
61. பருவம் பார்த்தருகில் வந்து வெட்கமா - மருத நாட்டு வீரன்
62. பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா *
63. பெற்ற தாயினும் பிறந்த - விஜயகுமாரி
64. பொன்னழகுப் பெருமை - ரிக்ஷாக்காரன்
65. பொன்னுல பொன்னுல - சிட்டுக்குருவி *
66. பூவா தலையா - பூவா தலையா
67. பூவில் வண்டு கூடும் கண்டு - காதல் ஓவியம் *
68. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
69. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
70. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் *
71. செந்தமிழ் நாடென்னும்போதினிலே - வேதாள உலகம்
72. தாமதம் செய்யலாமோ - முத்துக்குள் முத்து
73. தாம்த தீம்த - பகலில் ஒரு நிலவு
74. தேன்மல்லிப் பூவே - தியாகம் *
75. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன் *
76. உன் அழகைக் காண இரு கண்கள் போதாது - திரு நீலகண்டர்
77. உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
78. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் *
79. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் - சலங்கை ஒலி *
80. வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் *
81. வந்த நாள் முதல் இந்த நாள் வரை - பாவ மன்னிப்பு
82. வாராயோ தோழி - ஜீன்ஸ்
83. வரும் பகைவரைக் கண்டு - அம்பிகாபதி
84. வாழிய வாழியவே பல்லாண்டு - ஆடிப் பெருக்கு
85. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்ரி
86. வாழ்வோம் வாழ்வோம் மாதர்காள் - ராஜகுமாரி
87. வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு - புயல் பாடும் பாட்டு
88. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை **
89. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே - நாம் இருவர் *
90. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் - தேடி வந்த மாப்பிள்ளை *
91. விதியின் விளையாடல் மதியினால் மாற்றும் - நவஜீவனம்

மோகனத்தின் மொத்த உருவம் என்று பார்த்தால் இந்த நட்சத்திரக் (*) குறியிட்ட பாடல்களைச் சொல்லலாம். இதில் ஒரு சில பாடல்களுக்கு இரட்டை நட்சத்திரங்கள்கூட வழங்கியுள்ளேன். முன்னமே கூறியபடி நட்சத்திரப் பாடல்களை ஒருங்கே பதிவு செய்துக் கேட்டு வர, மோகன இராகம் மனதில் நன்கு பதிந்துவிடும். அடுத்தபடியாக, இசையார்வலர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்தால் (அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்) இந்த நட்சத்திரப் பட்டியலிலுள்ள பாடல்களை ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அசை போட்டுச் சும்மா பாடிப் பார்த்தால், மோகனமென்ன, 'மோகனக் கல்யாணி'யைக்கூடக் கண்டு பிடித்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள்தான் ஏற்கெனவே முந்தைய பதிவின் மூலம் கல்யாணியைக் கண்டுணரத் தொடங்கிவிட்டீர்களே!

மூன்று பதிவுகள் முடிந்ததன் விளைவாக, இனிமேலிருந்து உங்களுக்கு ஒர் 'குவிஸ்' வைக்கலாமென்றிருக்கின்றேன். அதற்கு சரியான விடையை யாரேனும் முதலில் தர, விடை தருவதற்கான நேரக்கெடு முடிவடைந்துவிடும் பதிவுத தொடரின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு பரிசு வழங்கவிருக்கின்றேன். வெளிநாடுகளில் இருப்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரக் கேள்வி:

மோகனம் 'அவுடவ' இராகங்களில் ஒரு சிறந்த இராகமாகும். 'அவுடவ' இராகம் என்றால் என்ன?

- சிமுலேஷன்

Thursday, August 31, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை, கீரவாணியில் அமைந்ததாகும்.

ஜனரஞ்சகமான கீரவாணி இராகத்தினை, எந்த ஒரு சூழ்நிலைக்கும் அழகாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, சின்னத் தம்பியின், 'போவோமா ஊர்கோலம்', ஒரு மகிழ்ச்சியான பாடலாகும். ஆனால், இதே இராகத்தினை, அபூர்வ சகோதரர்கள் படத்தில், 'ஒன்னை நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்' என்ற பாடலில் சோகம் ததும்பும் விதத்தில் வடித்திருப்பார்கள். கேளடி கண்மணியில், எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்திய. 'மண்ணில் இந்தக் காதல் அன்றியும்' கீரவாணிதான். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கீரவாணியை உடனே இனம் கண்டு கொள்ள ஒரு பாடல் வேண்டுமென்று யாராவது கேட்டால் இருக்கவே இருக்கிறது, பொன்னு மணியின், 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு'. பாடல் படமாக்கப்பட்ட விதமும், பாடலின் மெலடியும், கீரவாணியைத் தூக்கி நிறுத்துகின்றன.

இராகம்: கீரவாணி
21ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ
அவரோகணம்: ஸ நி3 த1ப ம1 க2 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்

01. ஆடாத மனமும் - மகாதேவி
02. ஆகாயத் தாமரை - நாடோடிப் பாட்டுக்காரன்
03. ஆலமரம் வேலமரம் - செந்தூரம்
04. ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது - பொன் மேகலை
05. அந்த வானத்தப் போல - சின்னக் கவுண்டர்
06. அரிதாரத்தப் பூசிக்கொள்ள - அவதாரம்
07. ஆயிரம் கோடி சூரியன் போலே - கரிசக்காட்டுப் பூவே
08. பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
09. சந்தா ஓ சந்தா - கண்ணெதிரே தோன்றினாள்
10. சின்ன மணிக் குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
11. தெய்வம் தந்த வீடு - அவள் ஓரு தொடர்கதை
12. எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13. எங்கே சென்று தேடுவேன் - ஞான சௌந்தரி
14. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - க்ஷத்ரியன்
15. என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
16. என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
17. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
18. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
19. கூட்ஸ் வண்டியிலே - குங்குமச் சிமிழ்
20. ஹைவேஸ்ஸிலே ஸ்பீட் பிரேக்கில்லே - மனசெல்லாம்
21. இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்
22. இதயமே இதயமே என்னை மறந்தது - ஜூலி கணபதி
23. இளவேனில் இது வைகாசி மாசம் - காதல் ரோஜாவே
24. இன்னிசை - துள்ளாத மனமும் துள்ளும்
25. கத போலத் தோணும் இது கதையும் அல்ல - வீரத் தாலாட்டு
26. கண்ணே இன்று கல்யாண - ஆணழகன்
27. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
28. கீரவாணி கீரவாணி - பாடும் பறவைகள்
29. குங்குமக் கோலம் - அண்ணன் ஒரு கோயில்
30. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் - காதல் ஓவியம்
31. குயிலுக்கு கூ கூ கூவிட - ·ப்ரண்ட்ஸ்
32. மால கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
33. மலரே தென்றல் பாடும் ஞானம் - வீட்டுல் விசேஷங்க
34. மலர்களிலே ஆராதனை - கரும்பு வில்
35. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
36. மாமனோட மனசு - உத்தம ராசா
37. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
38. மனிதா மனிதா இனி உன் விழிகள் - கண் சிவந்தால் மண் சிவக்கும்
39. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே
40. மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்
41. மண்ணில் இந்தக் காதல் - கேளடி கண்மணி
42. முன் பனியா - நந்தா
43. முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா
44. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
45. நான் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி
46. நான் தேடிய - எங்கே எனது கவிதை
47. நீ எங்கே என் அன்பே - சின்னத் தம்பி
48. நீதானே நீதானே - தாலாட்டுப் பாடவா
49. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
50. நேரமிதே நேசன் குணவிலாசன் - ராஜகுமாரி
51. நிலா அது வானத்து மேலே - நாயகன்
52. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
53. நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோக்ரா·ப்
54. ஓ ஊர்வலம் - மாநகரக் காவல்
55. ஒ பாப்பா லாலி - இதயத்தைத் திருடாதே
56. ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்கா முடி
57. ஒன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
58. ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
59. ஒரிடந்தனிலே நிலை இலா உலகினிலே - வேலைக்காரி
60. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
61. ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
62. ஒரு முத்துக்கிளி - தாயம்மா
63. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது - தொடரும்
64. பாடிப் பறந்த கிளி - கிழக்கு வாசல்
65. பாடும் வானம்பாடி - நான் பாடும் பாடல்
66. பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா - தேன் நிலவு
67. பெண்ணொருத்தி - ஜெமினி
68. பூ முடியும் - வெள்ளிக் கிழமை விரதம்
69. பூங்காற்றே இனி போதும் - படிச்ச புள்ள
70. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
71. பூங்கொடிதான் பூத்தாடாதாம்மா - இதயம்
72. பூப்பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
73. போவோமா ஊர்கோலம் - சின்னத் தம்பி
74. ராஜராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
75. ராசாத்தி மனசிலே - ராசாவே உன்னை நம்பி
76. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் - என் மன வானில்
77. சலாம் குலாமு - ஹலோ
78. சிறு சிறு சிறகுகளில் - கொஞ்சிப் பேசலாம்
79. சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் - நிலவே முகம் காட்டு
80. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
81. சுத்தாதே பூமித்தாயே நில் - நிலவே முகம் காட்டு
82. தளுக்கி தளுக்கி - கிழக்கு வாசல்
83. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
84. துளியோ துளி முத்துத் துளி - காதலிக்க நேரமில்லை
85. உன் குத்தமா என் குத்தமா - அழகி
86. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
87. உன்னை நான் அறிவேன் - குணா
88. உன்னை நினைக்கவே - ஜே ஜே89. உரு மாறி வந்து - விஜயகுமாரி
90. வானம் அதிரவே - ரமணா
91. வானத்திலிருந்த்து குதிச்சி வந்தேனா - பூந்தோட்டம்
92. வெண்ணிலவுக்கு வானத்த - தாலாட்டு பாடவா
93. வெற்றிக் கொடி கட்டு - படையப்பா
94. எவனோ ஒருவன் - அலை பாயுதே

கீரவாணி இராகம் ரொம்பப் பிடித்துப் போயிற்றோ என்னமோ தெரியவில்லை. மரகதமணி என்ற இசையமப்பாளர், கீரவாணி என்ற பெயரிலும் வலம் வந்தார். அழகன் படத்தின் அழகான பாடல்களைக் கொடுத்தவர் இவரே. அம்சலேகா என்பவரும் இவரா என்று தெரியவில்லை.

ஜீவா வெங்கட்ராமன் என்பவரும் இந்த இராகத்தைப் பற்றி வலையில் பதிந்துள்ளார். http://jeevagv.blogspot.com/2005/05/blog-post.html

கிரணாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த இராகத்தைச் சிலர் ஸ்டலாக, கிர்வானி என்றும் அழைப்பதுண்டு.

By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

- சிமுலேஷன்.

Thursday, August 24, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி



கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்ய¡ணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே இராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். பாடற் பட்டியலுக்குப் பே¡கு முன்பு சின்ன விளக்கங்கள்.

இராகம்: கல்யாணி65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

கர்னாடக இசையிலே ஸப்தஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களின் permutation and combinationகளில் கிடைப்பது 72 தாய் இராகங்களாகும். இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயருமுண்டு. இந்த 72 இராகங்களையும் மேலும், மேலும் கலக்கக் கிடைப்பது, ஆயிரக்கணக்கான ஜன்ய(சேய்) இராகங்களாகும். 72 மேளகர்த்தா இராகங்களும் ஒரு வரிசைப்படி அ¨மந்துள்ளன. இந்த அமைப்பு ஒரு சக்கரம் போல அமைந்திருப்பது, அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கும். இந்தத் தொடரிலே, அப்படி இப்படி இந்த சமாச்சாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து விடலாம் என்றுதான் இருக்கின்றேன்.

இந்த மேளகர்த்தா இராகங்களின் துவக்கப் பெயரைக் கொண்டு, அவற்றின் வரிசை எண் என்னவென்று கூற முடியும். வெங்கடமகி என்பவர், இந்த வரிசை எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதற்காக 'கடபயாதி என்ற சூத்திரம் ஒன்றினை வடித்துள்ளார். இந்த சூத்திரத்தினைப் பயன்படுத்துவதற்காக, சில இராகங்களுக்கு மட்டும் சிற்சில பெயர் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி கல்யாணியை, 'மேச' என்ற prefix சேர்த்து, மேசகல்யாணி என்றழைத்தார். மற்றபடி நேமாலஜி/நியூமராலஜி சமாச்சாரம் ஏதும் இதில் கிடையாது. இப்போது மேளகர்த்தா சக்கரத்தைப் பற்றியும், "கடபயாதி" சூத்திரத்தினைப் பற்றியும் §மலும் அறுக்காமல், பின்னாளில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி

இவ்வளவு பெரிய பட்டியலில், ஒரு சில பாடல்களில்* மட்டும், கல்யாணி இராகத்தினை, 'டபக்'கென்று கண்டுபிடிக்க முடிகின்றது. மற்ற சில பாடல்களில் முடிவதில்லையே! காரணம் என்னவென்றால், இந்த இசையமப்பாளர்கள், பாரம்பரிய இசைவாணர்கள் போலல்லாமல், தமது பாடல்களில் சில அன்னிய ஸ்வரங்களையும், 'சாப்பிடு', என்று சேர்த்து விடுவதுதான். எனவேதான் அவை 100% ஒரே இராகத்தில் இல்லாமல் இருந்து, இராகம் கண்டுபிடிக்கச் சில சமயம் படுத்துகின்றன.

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், தப்பித் தவறி விபரீத ஆசை ஏற்பட்டு, ஏதெனும் ஒரு கச்சேரிக்குப் போய், பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் என்று பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணியாக்கம் இது", என்று அசத்தத் தோன்றும்.

- சிமுலேஷன்.

Saturday, August 19, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெரும்பாலும், மனதிற்கு இனிமையான ஒரு கர்னாடக இராகங்களில் அமைந்திருப்பதனைக் கவனிக்கலாம். இப்படி இராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பு நோக்கும் முயற்சியாக, "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்" என்ற தலைப்பிலே, ஒரு தொடர் எழுத எண்ணியுள்ளேன். இராகங்களைப் பற்றிய புரிதல், எந்தவொரு இசையினையும் மேலும் இரசிக்கத் தூண்டுமென்பதே, இதன் நோக்கம்.

இராகம்: கானடா
இது கரஹரப்ரியா என்ற மேளகர்த்தா (72 தாய் இராகங்களில் ஒன்று) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமகும்

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை):
ஸ ரி2 க2 ம1 த2 நி2 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை):
ஸ நி2 ஸ த1 ப ம1 ப க2 ம1 ரி2 ஸ

கானடா இராகம், எந்த ஒரு நேரத்திற்கும் பாட இசைந்தது. பக்தி இரசனையினைத் தூண்டக்கூடியது. ஆலாபனைக்கு உகந்த இந்த இராகம், இராகமாலிகைகளில் பெரிதும் கையாளப்படுகின்றது. 'தர்பாரி கானடா' எனப்படும் வட இந்திய இராகத்திற்கும்,கானடா இராகத்திற்கும் தொடர்பு உண்டு. தொடரின் நோக்கம் கருதி இந்த இசை இலக்கணங்களுக்குள்,
தற்போது மேலும் இறங்கப் போவதில்லை,

பாடல் - திரைப்படம்
01. அலை பாயுதே கண்ணா - அலை பாயுதே
02. அந்தோ புவி மேல் அடிமையாக - மச்ச ரேகை
03. அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்
04. கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்குத் தலை வணங்கு
05. கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
06. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு - கொஞ்சும் சலங்கை
07. மனக்கோவில் தன்னில் வாழும் - காவேரி
08. மன்னவா மன்னவா, மன்னாதி மன்னன் - வால்டேர் வெற்றிவேல்
09. மோகனாங்க வதனி உன்னைக் காணும் - மனோன்மணி
10. முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே - உத்தம புத்திரன்
11. நாணிச் சிவந்தன கண்கள் - கர்ணன் (இந்தப் பகுதி மட்டும்)
12. நடராஜனா இல்லை சிவகாமியா - பாட்டும் பரதமும்
13. பெண்ணின் பெருமையே பெருமை - மிஸ்ஸியம்மா
14. பொன்னென்பேன் - போலீஸ்காரன் மகள்
15. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
16. புது வெள்ளை மழை பொழிகின்றது - ரோஜா
17. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
18. வானம்பாடிகள் போலே - கள்வனின் காதலி

சிந்துபைரவியின் "பூமாலை வாங்கி வந்தான்" பாடலை இங்கே கேட்கலாம்.



இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கே பதிவு செய்து கேட்டுக் கொண்டேயிருந்தால், கானடா இராகம் உங்களுக்கு எளிதில் பிடிபட்டுவிடும்.

விரைவில் அடுத்த இராகத்துடன்...

- சிமுலேஷன்