Friday, November 26, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

ராகசிந்தாமணி கிளப்பில் முன்பு ஒரு முறை "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி" ராகங்களுக்கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது தமிழ்த் திரையிசையில் 'தர்மவதி' ராகத்தில் அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால், தர்மவதி ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்னெவென்று பார்ப்போம்.

இராகம்:               மாயாமாளவ கௌளை
59ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்:     ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ

தர்மவதி ராகத்தினை தீக்ஷிதர் வழி வந்தவர்கள் 'தம்மவதி' என்றும் அழைப்பதுண்டு. ஆனால் "தர்மவதி வேறு; தம்மவதி வேறு", என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

முதலில் நாம் கேட்க வேண்டியது "உத்தரவின்றி உள்ளெ வா" படத்தில் எம்.எஸ்.வி இசையில் அமைந்த "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ" என்ற பாடல். ஆனால் இந்த அருமையான பாடலுக்கு இணையத்தில் சுட்டி கிடக்கவில்லை. (யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). எனவே மேலே செல்வோம்.

"அவன் ஒரு சரித்திரம்" என்ற படத்தில் வரும் "அம்மானை, அழகு மிகு அம்மானை" என்ற பாடல். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். நல்ல பாவத்துடன் பாடியுள்ளவர்கள், டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.  வாணி ஜெயராம் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் பாடிய பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜியும். மஞ்சுளாவும் மிகுந்த ரொமான்ஸுடன் நடித்திருப்பார்கள்.


எம்.எஸ்.வி அவர்களுக்கு தர்மவதி ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கிறது. மீண்டும் இதே ராகத்தில், 'மன்மத லீலை' படத்தில், 'ஹலோ, மை டியர் ராங் நம்பர்" என்ற பாடல்.



அடுத்தாக எஸ்.பி.பியின் தேன் சிந்தும் குரலில் "இளஞ்சோலை பூத்ததா" என்ற பாடல். இடல் பெற்ற படம் "உனக்காகவே வாழ்கிறேன்". முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல 'கோரியோகிராபி' மிகவும் சுமாராக இருந்தாலும், தர்மவதி ராகம் சொட்டி வரும் இந்தப் பாடலில்,  இடையிடையே வரும் புல்லாங்குழல், வேணை, வயலின் இசை, மிருதங்க ஒலி மற்றும் சலங்கை ஒலிகளும் அமர்க்களமாக இருக்கும்.



"இளஞ்சோலையில்' சிவகுமாரும், நதியாவும் சொதப்பியிருக்கும்போது, மம்முட்டியும், மதுபாலாவும் "அழகன்' படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நளினமாக ஆடியிருப்பர்கள். அது தர்மவதி ராகத்தில் அமைந்த "தத்திதோம்" என்ற பாடல்தான். பார்க்கலாமா?



அடுத்து நாம் பார்க்க இருப்பது, 'ரமணா" படத்தில் இடம் பெற்ற "வானவில்லே, வானவில்லே" என்ற பாடல். ஹரிஹரனும், சாதனா சர்கமும் பாடியது. சந்தோஷமும், குஷியும் குதித்து நடை போடும் அதே வேளையில், ஒரு வித மெல்லிய சோகமும் இழையோடுவது தர்மவதி ராகத்திற்குரிய சிறப்பு என்று நினைக்கின்றேன். அந்த உணர்ச்சிகளை இந்தப் பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.



நிறைவாகப் பார்க்க இருப்பது "ஜென்டில்மேன்" படத்தில் இடம் பெற்ற "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" என்ற பாடல். ஏ.ஆர்.ரகமான் இசையில் அமைந்த 'ரிதம்முடன்' கூடிய தர்மவதி ராகத்தில் அமைந்த ஒரு அழகான் பாடல். இயக்குநர் சங்கரின் பிரம்மாண்டம், ரசிக்கத்தக்க நடனம், ஒப்பனை, இசை என்று ஒவ்வொருவரின் திறமைகளையும் ஒருங்கே கொண்டு வந்த பாடல்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

Tuesday, November 09, 2010

கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா - நூல் விமர்சனம்





இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார். 



நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ச்சி செய்யும்  பொருட்டு, “திருநிலம்” என்ற கிராமத்திற்கு வருகின்றான் கல்யாணராமன். அங்கு சந்த்திக்கும் வெள்ளி என்ற கிராமத்துப் பெண் மீது அவனுக்கு ஒரு கிரஷ். அவளுக்கோ பரிசம் போட்ட மருத்முத்து மேலே ஒரே பைத்தியம். இதனிடையே ஸ்நேக் எனப்படும் சிநேகலதா என்ற பட்டணத்துப் பெண் வேறு வருகின்றாள். மருதமுத்துவின் கவனம் ‘சிநேகம்மா’வின் மீது விழுகிறது. சிநேகம்மா மருதமுத்துவுடனும் சிநேகமாக இருந்துகொண்டு, கல்யாணராமனுக்கும் ரூட்டுப் போடுகின்றாள். இவர்கள் உறவுகளுக்கிடையே நடக்கும் பல மர்மச் சம்பவங்கள், வாசகர்களின் அடுத்து என்ன எண்ரு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன். நாவலாக இல்லாமல் தொடர்கதையாக இருக்கும்போது இன்னம் கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருந்து அடுத்த வெள்ளி எப்போது வருமோ? என்றெண்ணத் தூண்டியது.

நா.வானமாமலை அவர்கள் அழகாகத் தொகுத்து NCBH நிறுவனம் வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள்” புத்தகத்திலிருந்து பல பாடல்களை சுஜாதா இடத்திற்கேற்றாற் போல கையாண்டிருக்கின்றார். மேலும் “பழையனூர் நீலியம்மன் கதை” கதை வேறு இடம் பெருகின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளன் கதை சொல்லும்போது, முக்கியமாகச் சொல்ல வேண்டியவை, கதை நடக்கும் களன் பற்றிய விவரணைகள், கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனைகள் ஆகியவைதான். அப்போதுதான், வாசகனை அந்தக் களத்திற்குக் கூட்டிச் செல்ல முடியும். அதற்கு எந்தக் குறையும் வைக்காத சுஜாதா, நம்மையெல்லாம் ‘திருநிலத்திற்கே’ கூட்டிச் சென்றுவிடுகின்றார். கல்யாணராமன், வெள்ளி, மருதமுத்து, சிநேகலதா, தங்கராசு ஆகியோர் எப்படி இருப்பார்கள் என்று வாசகர்கள் நன்றாகவே கற்பனை செய்து கொள்ள முடிகின்றது.  ரசித்த சில இடங்கள்:-

“கிராம நாய்களின் பொதுப்பெயர் கொண்ட ‘மணி’ வாலாட்டிக்கொண்டு வந்தது.”

“பயந்து போயிட்டீங்களா? டவுசர் எல்லாம் ஈரமாக இருக்குது?”

“இல்லே! அந்தக் கான் ஒழுகறது” என்றான் எரிச்சலுடன்.

வழக்கம் போல சுஜாதா கதை வெளியாகிக் கொண்டிருக்கும்போதே அதனை படமாக்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்து கடைசியாக ஜி.என்.ரங்கராஜன், பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, சுமலதா, மனோரமா ஆகியோரைப் போட்டுப் படம் எடுத்தார். இந்தப் படம் நான் பார்த்த நினைவில்லை. அபிப்ராயம் சொல்ல முடியவில்லை. சுஜாதா ஓரளவு சந்த்தோஷப்பட்டார் போல. வெள்ளி பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவும், சிநேகலதா பாத்திரத்திற்கு சுமலதாவும், நாட்டுப் பாடல் கிளவிக்கு மனோரமாவும் பொருந்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் பிரதாப் போத்தன் பெரும்பாலான படங்களில் லூஸு கேரக்டர் பண்ணியதாலோ என்னவோ, கல்யாணராமன் பாத்திரத்திற்கு பொருந்தினாராவென்று தெரியவில்லை. மேலும் இந்தக் கதை திரைப்படமாக வந்ததிற்குப் பதிலாக, தொலைக்காட்சிட் தொடராக வந்த்திருந்திருக்கலாம். ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் சஸ்பென்ஸ் வைக்கத் தோதான கதை.

தலைப்பு: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்:சுஜாதா
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு: 1993 (முதல்) 1997 (இரண்டாவது)
பக்கங்கள்: 224
விலை: Rs. 39.00

-       சிமுலேஷன்

Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்


சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம்.

திடீரென புதிதாக வாங்கிய நோக்கியா E71ல் GPS இருப்பது ஞாபகம் வந்தது. நேவிகேட்டர் துணை கொண்டு விக்ஞான் பவனைத் தேட அதுவோ, மீண்டும் மீண்டும் இந்தியா கேட்டையே சுற்றி வந்தது. வழியில் எங்கும் நிறு்த்த அனுமதி இல்லாத அதிகாரவர்க்கம் நிறைந்த மையப்பகுதி. டிரைவர் வண்டியை கூலாக நிறுத்தி வழி கேட்கப் போக, புது டில்லியில் ஏ.கே7 கையால்தான் இறுதி மூச்சோ என்று எனக்குப் பதைபதைப்பு. ஒருவழியாக வழி கண்டுபிடித்து, விக்ஞான்  பவனுக்கு என்னை கொண்டு சேர்த்தார்.

E71ல் GPS எனது கவனத்தை ஈர்த்த ஒரு இடம் த்யாகராஜ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Thyagaraj Sports Complex). த்யாகராஜ் என்றால் தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என்று யோசித்தேன். ஹாக்கியில் தன்ராஜ் பிள்ளையின் பெயர் தெரியும். ஆனால் த்யாகராஜ் என்பது யார் என்று யோ்சித்தேன், யோசித்தேன். யார் அவர் என்று என் சிற்றறிவுக்குச் சிறிதும் எட்டவில்லை. சரி கூகுளார் உதவியை நாட விடை கிடத்துவிட்டது. விடை தெரிந்தவுடன் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

இந்த ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் சமீபத்தில்தான் காமன்வெல்த் கேம்ஸுக்காக கட்டப்படதாம். யார் பெயரில் கட்டப்பட்டது என்றால், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு த்யாகராஜ ஸ்வாமிகளின் பெயரிலாம். அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்னய்யா சம்பந்தம்? பந்துவராளியிலும், கௌளிபந்துவிலும் பாடினது தவிர. சரி பெயரை வைத்ததுதான் வைத்தார்கள். ஒரு அடைமொழி? வேண்டாம். த்யாகராஜர் என்ற முழுப் பெயரையாவது வைத்திருக்கலாமே? அதென்னெ ஸ்டைலாக சத்யராஜ், சிபிராஜ் மாதிரி த்யாகராஜ். யார் இப்படி ரூம் போட்டு யோசிச்சது?

உங்களில் யாருக்கேனும் காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த் திரையிசையிலும் பெரிதும் இடம் பெற ஆரம்பித்தது.

இந்த இராகத்தின் விபரங்கள் வருமாறு:-

இராகம்:சாருகேசி
26ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

மேலே உள்ள 26ஆவது மேளகர்த்தா ராகமாகிய இந்த சாருகேசி ராகத்தின் ஆரோகணத்தினையும், அவரோகணத்தினையும் கூர்ந்து பார்த்தால்,  பூர்வாங்கம் சங்கராபரணத்தினைப் போலவும், உத்தராங்கம் தோடியினைப் போலவும் இருப்பதனைக் கவனிக்கலாம்.

இப்போது சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பார்ப்போமா?

பாடல் - திரைப்படம்

01. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
02. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
03. அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
04. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
05. அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன்
06. சின்னத் தாயவள் - தளபதி
07. எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
08. காதலி காதலி - அவ்வை ஷண்முகி
09. மலரே குறிஞ்சி மலரே - Dr.சிவா
10. மணமாலையும் மஞ்சளும் - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
11. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
12. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
13. மாறன் அவதாரம் - ராஜகுமாரி
14. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
15. மொட்டு விட்ட முல்லக் கொடி - அறுவடை நாள்
16. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
17. நாடு பார்த்ததுண்டா - காமராஜ்
18. நடு ரோடு - எச்சில் இரவுகள்
19. நீயே கதி ஈஸ்வரி - அன்னையின் ஆணை
20. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
21. நோயற்றே வாழ்வே - வேலைக்காரி
22. ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - தேனிலவு
23. பெத்த மனசு - என்னப் பெத்த ராசா
24. ரத்தினகிரி வாழும் சத்தியமே - பாட்டும் பரதமும்
25. சக்கர கட்டி சக்கர கட்டி - உள்ளே வெளியே
26. செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடி - செந்தூரப்பாண்டி  
27. சிறிய பறவை உலகை - அந்த ஒரு நிமிடம்
28. தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
29. தூங்காத கண்ணின்று ஒன்று - குங்குமம்
30. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
31. உயிரே உயிரின் ஒலியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
32 வசந்த முல்லைப் போலே வந்து - சாரங்கதாரா


ஜி.ராமநாதன் அமைத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிப் பெரும் புகழ் பெற்ற "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்) பாடலை முதலில் கேட்போம்.


"இந்தப் புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன் துவங்கும் "வசந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என்ற பாடல் சாருகேசியில் அமைந்த புகழ்பெற்ற பாடலாகும். இடம் பெற்ற படம் 1957ல் வந்த சிவாஜி கணேசன் நடித்த 'சாரங்கதாரா".


மீண்டும் சிவாஜி கணேசன் மற்றும் சாரதா நடித்த "குங்கு்மம்" படத்திலிருந்து மற்றுமொரு பாடல், சாருகேசி ராகத்தில்.


ரஜனி நடித்த ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஜேஸு்தாஸ் குரலில் வந்த "ஆடல் கலையே தேவன் தந்தது" சாருகேசி ராகத்தில் அமையப்பெற்ற ஒரு அழகான பாடலாகும்.


சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.


சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் "உதயா உதயா உளருகிறேன்" என்ற பாடலாகும். இந்தப் பாடலை முதன்முறையாக "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" இறுதிச் சுற்றில் ரோஷன் என்ற சிறுவன் ஆண்-பெண் குரலில் பாடியபோது அது நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஆனால் இந்தப் பாட்டு எந்தப் படப் பாடல் என்று தேடிப்பார்த்த போது, எப்படி ஒரு அழகான பாடலைக்கூட திரையுலகில் கேவலமான ஒரு கோரியாகிரபி மூலம் கொல்லமுடியும் (விஜய், சிம்ரன் குத்து) என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.இதே பாடலை ரூபா என்பவர் பாடியுள்ளதைக் கேளுங்கள்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

Thursday, November 04, 2010

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை

மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்:

  • குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும்.
  • நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம்.
  • மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியணிவது பலரின் வழக்கம்.
  • பல ஊர்களில் இருந்தாலும், தீபாவளியன்று குடும்பத்தினர் அனவரும் ஒன்று சேருவது  ஒரு குதூகலம்.
  • வீட்டிலுள்ள பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ தலைதீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட தீபாவளித் திருநாள், மற்ற பண்டிகைகள் போல அல்லாமல் விடிய,விடிய கொண்டாடப்படும் பண்டிகை இது ஒன்றே.  தீபாவளியின் முதல் தினமும், மறுநாள் விடியற்காலையிலும், தீபாவளியன்ரின் இரவும் பெருத்த குதூகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களையொட்டி அமைந்துவிட்டால், இந்தக் கொண்டாட்டங்களை குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும். அப்படியில்லாமல் வாரத்தின் மைய நாட்களில் வந்து விட்டால், உற்சாகம் சற்றே குறைந்து விடும். இதற்குப் பெரிய காரணம், வெளியூரில் இருக்கும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினருக்குக் கிடைக்கும் 'ஒரே ஒரு நாள்' விடுமுறையேயாகும். இந்த ஒரு நாள் விடுமுறையின் காரணமாக வெளியூரில் இரு்க்கும் நபர், தீபாவளியின் முதல் நாள் மட்டுமல்லாது, தீபாவளி தினத்தின் இரவிலும், அவர் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக்கு இரண்டி தினங்கள விடுமுறை அளித்தாலென்ன? உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்மஸ், தேங்ஸ் கிவ்விங் டே போன்ற பல முக்கிய தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஏன்? தமிழ்நாட்டிலேயே பொங்கல் திருநாளையொட்டி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று தினங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தீபாவளிக்கு ஒரு நாளைக்கும் மேல் விடுமுறை வேண்டும் என்று எனக்குத் தெரிந்து எந்த ஊடகத்திலும் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்து அல்லாத Vincent Desouza of Mylapore Times மட்டுமே ஓரிரு வருடங்கள் முன்பு இது குறித்து மயிலாப்பூர் டைம்ஸில் கட்டுரை எழுதியதாக நினைவு.  இந்த இடுகை எழுதும் முன்னர் சற்றே கூகிள் செய்தபோது, முஸ்லிம்கள் பெரிதும் வாழும் மலேசியா நாட்டில்கூட தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.


நாத்திகம் பேசும் நண்பர்கள்கூட தனது மனைவி வீட்டாருகாகவும், தமது குழந்தைகளின் குதூகலத்திற்காகவும், தமது கொள்கைகளத் தியாகம் செய்துகொண்டு தீபாவளித் திருநாளைக் குதூகலத்துடன் கொண்டாடி வரும் இந்த நாட்களில், "இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை" என்ற கோஷம் தவறாக ஒலிக்கவில்லை.


- சிமுலேஷன்