Saturday, February 19, 2011

கண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" மற்றும் "திராவிட மாயை - ஒரு பார்வை" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் எழுத்தப்பட்ட புத்தகங்கள். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். திராவிடக் கட்சிகளின் மூதாதையர் வரலாறு, அக்கட்சிகளின் நிலையில்லாத கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் போலித்தனம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன இரண்டுமே.




"கண்டு கொள்ளுவோம் கழகங்களை"

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" என்ற கட்டுரைத் தொடர் மூலம் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் எண்பதுகளில் துக்ளக் இதழில் எழுதி வந்தார். அவரது மகனும், 'அகடவிகட அக்கப்போர்' என்ற அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான ஜெ.மோகன்ராஜ் அவர்கள் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பல புதிய விஷயங்களைத் தரும் விதமாகவும், எண்பதுகளில் துக்ளக் இதழில் ஜெபமணியின் கட்டுரைகள் படித்து வந்த எம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்.

இந்தத் தொகுப்பிலிருந்து சில சுவாரசியமான விஷயங்கள்:

- 1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டப் போராட்டமாக,"இனி போராட்டமே கிடையாது... வெள்ளையனே வெளியேறு... மக்களே... செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள்" என்று அறிவிக்க,, அண்ணாதுரை அவர்கள் கிண்டலாக த்ம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம். "தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?"

- நீதி கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் மதச்சின்னங்களை அணிவார்கள். சர்.ராமசாமி முதலியார், சர்.பி.டி.ராஜன் போன்ற நீதிக்கட்சியின் தலைவர்கள்,, நெற்றியில் மதக்குறி இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள்.

- தூத்துக்குடியில் புதுக் கிராமக் கொடுமைகள் பற்றி குறிப்பிடுகின்ற்றார் ஜெபமணி. ஆனால் விபரங்கள் தரவில்லை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமைகள் போலும்.

- நீதிக் கட்சியில் இருந்த அமைச்சர்கள் பெற்ற மாதச் சம்பளம் 5333 ரூபாய், 5 அணா, 4 பைசா. அவர்கள் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ரூபாய் 8 அணா. அரிசி ரூபாய்க்கு 18 படி கிடைத்து வந்தது. நீதிக் கட்சியின் அமைச்சர்கள், அன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 395 சவரன்களை வாங்கிக் கொள்ளலாம்.

- ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அண்ணாதுரை எழுதியது பற்றிக் குறிப்பிட்ட ஜெபமணி, "ஜஸ்டிஸ்" என்பதில் மூன்று வட எழுத்துக்கள். ஒன்றுதான் தமிழ் எழுத்து. அதை மூன்று வடமொழி எழுத்துக்களுடன் அப்படியே எழுத அண்ணாதுரைக்குத் தயக்கமில்லை. ஆனால் இராஜாஜி என்பதை "இராசாசி" என்று மட்டும் எழுதுகிறார்", என்கிறார்.

- "டால்மியாபுரம் (கல்லக்குடி) என்ற ஊரின் பயரை மாற்ற வேண்டுமென்று புறப்பட்டவர்கள். மதுரையிலுள்ள "ஹார்விபட்டி"யினை ஏன் எதிர்க்கவில்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையினை ஏன் எதிர்க்கவில்லை" என்று கேட்கின்றார் ஜெபமணி.

- தேசிகாச்சாரி சாலை, தேசிகா சாலை ஆனது. ஆனால், தியாகராய நகரிலுள்ள டி.எம்.நாயர் சாலை மட்டும் மாறாமல் இருக்கிறது. முரணைச் சுட்டிக் காட்டுகின்றார்.

- பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் வீட்டில் திருமணம் நடந்ததாம். அவர். "பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்?" என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தார்ராம். அவர் இப்போது சட்ட சபை உறுப்பினராகத்தான் இருக்கிறார். (யார் இதுவெனத் தெரியவில்லை.) அன்னார் அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கைப்பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை. பகுத்தறிவுக்கு இது விரோதமாச்சே என்று அவர் அதனை அணிக்கவும் இல்லை.

- ஹிந்தி போராட்டத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றின் முடிவில், "மதுவைக் குடிக்கச் உதவியவர்கள், மொழியைப் படிக்க உதவ மறுத்ததேன்? மதுவை விட மொழி கொடியதா"" என்று வினவுகின்றார் ஜெபமணி.

- தியாகிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும்தான் அரசு நிலங்கள் கொடுக்கப்படும். இதுதான் அரசின் கொள்கை. அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வருக்கு, சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள, பல இலட்சங்கள் பெறுமானமுள்ள, அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்தார். "என் சொத்து பூராவும் மக்களுக்குச் சொந்தம்" என்று சொல்லிக் கொள்ளும், இந்நாள் முதமைச்சர் தாம் இலவசமாகப் பெற்ற அரசு நிலத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை" என்று சாடுகின்றார் ஜெபமணி. (அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் படமும் சேர்த்திருப்பதால், இது அவரைப் பற்றிய செய்தியாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.)

பெயர்: கண்டு கொள்ளுவோம் கழகங்களை
ஆசிரியர்: தியாகி நெல்லை ஜெபமணி
பதிப்பு: முத்துமாலையம்மன் பதிப்பகம், கிழக்கு அபிராமபுரம், சென்னை-4
பதிப்பசிரியர்: ஜெ.மோகன்ராஜ்
கிடைக்குமிடம்: அகடவிகட அக்கப்போர் அலுவலகம், தணிகாசலம் தெரு, ஹிந்தி பிரச்சார சபா எதிரில். தி.நகர், சென்னை-17
பக்கங்கள்: 254
விலை: Rs.100




திராவிட மாயை - ஒரு ஆய்வு

"திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு என்ற கேட்டபோது, கம்யூனிஸ்ட், காங்க்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளில் 'எம்.எல்.ஏ'வாக இருந்த சுப்புவோ என்றுதான் எண்ணியிருந்தேன். பிறகுதான் தெரிந்தது. இவர் வேறு ஒருவரென்று. 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்று தெரிந்தது. தமிழ் ஹிந்து இணைய இதழில், "போகப் போகத் தெரியும்" என்ற பெயரில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே "திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற இந்நூல்.

வலைப்பதிவர்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் படிப்பவர்களை இழுக்கும் வண்ணம் பல கட்டுரைகளுக்குத் தலைப்புகள் வைத்திருக்கின்றார். உதாரணாமாக, "கால்டுவெல்லின் தாயாதிகள்", "புறநானூற்றுப் பூனைகள்" போன்றவை.

நெல்லை ஜெபமணியின் புத்தகத்தை போலவே, சுப்புவின் இந்தப் புத்தகத்தை படிக்கும்போதும் பல பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

- திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர், சர்.பி.டி.தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க்கின்றார்.

- ஜெபமணி கூறியது போலவே, சுப்புவும், நீதிக்கட்சியின் த்லவர்கள் மாதச் சம்பளம் Rs.4333 (ஜெபமணி சொன்னதூ Rs.5333)) பெற்றது குறித்துச் சொல்லுகிறார். ஜெபமணி இந்த்தப் பணத்தில் மாதம் 395 சவரன்கள் வாங்க முடியும் என்று சொல்லும் போது, சுப்பு இந்தப் பணத்தில் எத்தனை இட்லிக்கள் வாங்காலாமென்று கேட்கின்றார். அந்தக் காலகட்டத்தில் ரூபாய்க்கு 64 இட்லிக்களாம்.

- குமு.அண்ணல் தங்கோ என்பவர் எழுதிய வரிகளை மேற்க்கோள் காட்டி, இது "காவிய தண்டனை" என்கின்றார் சுப்பு.

- "திரைப்படங்களில் பாரதி பாடல்களைத் தடை செய்த நீதிக் கட்சியினரின் அரசு, திரைப்படங்களில் வெளியிடப்பட்ட ஆபாசம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. நாராயணன் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கிய "லைலா எஸ்ரெல்ல நட்சத்திரம்" (1931) என்ற படத்தில் வந்த நடிகைகள் மறைக்க வேண்டியதெல்லாம் காட்டிவிட்டார்கள். கமலஹாசன் பொறாமைப்படும் அளவுக்கு முத்தக் காட்சிகளும் இருந்தன. அதாவது, கவர்ச்சிக்குத் தடையில்லை. கருத்துக்குத் தடையுண்டு என்பது அந்த அரசின் கொள்கையாக இருந்தது" என்கிறார்.

- "வாழ முடியாதாவர்கள்" என்ற தலைப்பில் வெளியான (ஆபாசம்)கதை குறித்து கண்ணதாசன் நொந்து போய்த் தன் கருத்துக்களைத் (வனவாசம்) தெரிவித்திருக்கின்றாராம்.

- திருப்பதி சென்று வந்ததற்காக சிவாஜி கணேசனைக் குறிவைத்து, அவரது போஸ்டரில் சாணி அடித்தும். அவரது கார் மீது கல்லெறிந்த்தும் அவமானப்படுதியவர்கள், "தனிப்பிறவி" என்ற திரைப்படத்தில் "முருகனாக" நடித்த எம்.ஜி.ஆர் மீது ஒரு முணுமுணூப்பும் தெரிவிக்கவில்லையாம்.

- திராவிடக் கட்சிகளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், அடிக்கடி கிறிஸ்தவ, முஸ்லீம் பிரச்சாகர்களைப்பற்றிக் கூற ஆரம்பித்து விடுவதேன் என்று புரியவில்லை. ஒருவேளை திராவிட இயக்கங்களின் ஒருதலைப்பட்சமான மத இணக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கோ?

சுப்பு அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகள் புதுமையாக இருந்தாலூம் அத்தலைப்புகள் மூலம் சொல்ல வரும் சேதி என்னெவென்று புரியவில்லை. உதாரணமாக, "ஐய்யப்பமாரின் அதிர்வேட்டு", "எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏன் வரவில்லை", "எருமைத் தலையனுக்கு எக்ஸ்டிரா டைம்" போன்றவை. இவை ஒருவேளை வலையுலக மேதவிகளுக்குப் புரியுமோ என்னவோ, சாமானிய வாசகனுக்குக் கண்டிப்பாகப் புரியாது.   வலைப்பதிவுக் கட்டுரைகளைத் புத்தகமாக வெளியிடும்போது, அவற்றை அப்படியே பதிப்பிக்காமல். அதீத அக்கறை எடுத்து தொகுத்து வெளியிட வேண்டியது பதிப்பகத்தின் கடமை. அந்த வகையில், விறுவிறுப்பாக இல்லாமல் "என்ன சொல்ல வர்றே" என்று எண்ணும் வண்ணம், படிப்பவருக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு.

பெயர்: திராவிட மாயை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125

திராவிட இயக்கங்களின் கொள்கைக் குழப்பங்கள் என்ற ஒரே விஷயத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம், இரு வேறு காலங்களைச் சேர்ந்த, இரு வேறு நபர்கள் எழுதும் போது அது எப்படி வேறுபடுகின்றது என்று அறிய ஒரே மூச்சில் இந்த இரண்டு புத்தகங்களையும் படித்து அறியலாம்.  இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் கூட, எதிர்க் கருத்துக் கூறவேனும் இவற்றை ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

- சிமுலேஷன்