Tuesday, November 01, 2005

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:

ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள்.

பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள்.

உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.

சிறிது நேரம் சென்றது.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார்.

உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த
அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார்.

கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.

இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை...

பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று.

சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.

கதை இன்னமும் முடியவில்லை...

உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?",

கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.

கதையை இன்னமும் முடிக்க மனமில்லை.

ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".

கதை போதிக்கும் நீதி யாது?

முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.