Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம்.

அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம் விஸ்வநாதன் இந்த நாடகத்தை ஏற்று நடித்தாரா, இல்லை, பூர்ணத்தை மனதில் வைத்து, சுஜாதா நாடகம் எழுதினாரா என்று தெரியாது. அவ்வளவு நல்ல பாத்திரப் பொருத்தம்.

ஐம்பத்தெட்டு வயதுடைய வரதராஜன்தான் கதையின் நாயகர். அவருடைய மகள் கல்யாணியின் சம்பளத்தில் ஜீவனம் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவியிடம் அவ்வப்போது பாட்டு வாங்கிக் கொண்டிருகின்றார். தற்காலத்தால் உதானீசப்படுத்தபடும் ஒரு பழங்காலத்து மனிதர் அவர். தனது புரோட்டோடைப் ஒருநாள் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கனவுலக மனிதர். ஆனால், கையில் காசில்லை. கால் பாக்கட் சிகரெட்டுக்குக் கூட, கல்யாணியின் கையை எதிர்பார்த்திருப்பவர். இந்த லட்சணத்தில் மகளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்? தன்னிடம் கை கட்டி  வேலை பார்த்த மதிவதனம் அவருக்கென்று ஒரு வேலை போட்டுக் கொடுத்தவுடன், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நிம்மதி ஏற்படுகின்றது. ஆனால் அந்த நிம்மதி அதிக நேரம் நீடிப்பதில்லை.  

எப்போதும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு பழமைக்கால நினவுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த ஊஞ்சலும் அவரும் ஒன்றுதான் என்பது சுஜாதா இறுதிக் காட்சியில் தெரியப்ப்டுத்துகின்றார்.

சிறுகதைகளிலேயே பேச்சுத் தமிழைப் பயன்படுத்துபவர், நாடகம் என்றால் கேட்கவே வேண்டாம்.

"அப்பா: ஆமா...நீ பாங்க்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லாடிரா நீ!"


"நேரா வந்து வுயுந்தான்யா..."

"பாவம் டைவரு. எவ்வளளோ சாலாக்காத்தான் ப்ரேக் போட்டாரு."

பேச்சுத் தமிழ் தவிர, பங்க்சுவேஷன்ஸும் அங்கங்கே தேவையான அளவில் இருந்து, படிப்பவர்களுக்கு என்ன சூழ்நிலை என்பதனை எளிதில் புரிய வைக்கும். மேலும் அடைப்புக் குறிக்குள் காட்சியில்  என்ன நடக்கின்றது என்பதனையும் விளக்குகிறார். இந்த அடைப்புக்குறிக் குறிப்புகளைப் படிக்கும்போது, மேடையிலே ஏற்ற வேண்டிய நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட்தான் இது என்று தெரிகின்றது. 

வரதாராஜன், அவரது மனைவி, மகள் கல்யாணி, கிரி, மதிவதனன், என்று கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களுமே, நாடகம் தானே இது என்றுப் பேசிப் பேசி அறுக்காமல், சொல்லின் செல்வர்களாக அளவாகப் பேசுகின்றார்கள். எனவே சுஜாதாவின் சிறுகதையினை எப்படி ரசிக்கின்றோமோ அப்படியே, இந்த ஊஞ்சல் நாடகத்தினையும் ரசிக்க முடிகின்றது. வரதராஜன் தற்கால நிலைமையும், முடிவும் படிப்பவர்ககள் மனதை அசைக்கும் என்பது உண்மை. அதுவே சுஜாதாவின் வெற்றி.


தலைப்பு:    ஊஞ்சல்  / உங்களில் ஒரு கணேஷ் 
பதிப்பாண்டு: 1989 
வெளியீடு:   விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை:      Rs.55

- சிமுலேஷன்
     

2 comments:

BalHanuman said...

ஊஞ்சல் நாடகம் பற்றி பூர்ணம் விஸ்வநாதன் கூறுகிறார்....

"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன்.

அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன்.

ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க ‘அந்த பதினைந்தாயிரம் செக்’ என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".

"ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.

Simulation said...

பால்ஹனுமான்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நல்ல சுவையான தகவைல்கள் கொடுத்துள்ளீர்கள்.

- சிமுலேஷன்