Monday, May 10, 2010

புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.

கதை இலாகாவில் ஒரு முக்கியப் புள்ளியாகிய சர்மாவும், இவரும் ஒரு நாள் ஸ்டுடியோவில் தனியே அமர்ந்திருக்கும்போதுதான் "டகர் பாயிட் காதர்" வருகின்றான். வெள்ளை என்ற ஏஜெண்ட் சொல்லி அனுப்பியதாகச் சொல்லி வந்து வேலை கேட்கின்றான். அவனுக்குக் கொடுப்பதற்கு தோதாக ஒரு பாத்திரமும் இல்லை என்று திருப்பி அனுப்ப எண்ணுகிறார்கள். ஆனால் அவன் இடத்தைக் காலி பண்ணுவதாக இல்லை.


"டகர் பாய்ட் வரும்க; என் பேரே டகர் பாய்ட் காதர்தானுங்க" என்கிறான் காதர். கதையின் பெயர் "புலிக்க்கலைஞன்" என்றிருப்பதால், "டகர் பாய்ட்" என்றால் "டைகர் ஃபைட்" என்று புரிந்துகொள்ள முடிகின்றது. டகர் பாய்ட்டிலே சுவாரசியம் செலுத்தாமலே இருப்பவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்ய எண்ணுகின்றான் காதர்.


தான் கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து, புலித்தலை ஒன்றினை எடுத்துத் தலையில் மாட்டிக் கொள்கிறான். அதற்கப்புறம் அவன் செய்யும் சாகசங்களை விலாவாரியாக விவரிக்கின்றார் அசோகமித்திரன். அங்கேதான் அ.மி ஒரு கை தேர்ந்த கதை சொல்லி என்று புரிய வைக்கின்றார்.


புலிக்கலைஞனின் சாகசங்களால் கவரப்பட்ட சர்மாவும், மற்றவர்களும் அவனுக்கு ஒர் வாய்ப்பு கொடுப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் கதையில் ஒர் இடைச்செருகல் செய்யத் தீர்மனிக்கிறார்கள்.சில நாட்கள் கழித்து காதர் கொடுத்திருந்த விலாசத்திற்குக் ஒர் கடிதமும் போடுகிறார்கள். ஆனால் கடிதம் திரும்பி வந்து விடுகின்றது. எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. அவன் அகப்பட்டிருந்தாலும் பயன் இருந்திருக்காது. கமர்சியல் சினிமாவின் காரணிகள் அப்படி.


இந்தக் கதையில் புலிக்கலைஞனான டகர் பாய்ட் காதர்தான் கதாநாயகன். அனால் வில்லன்கள் என்று யாருமே இல்லை. சிறுகதைகளின் இலக்கணப்படி முதல் பாராவிலேயே வாசகர்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அதிரடி வாக்கியங்கள் ஏதுமில்ல. ஆனால், வாசகனுக்குத் தனது கூர்ந்த கவனிப்பின் மூலம், புலிக்கலைஞன் என்றால் எப்படி இருப்பானென்றும், இந்த மாதிரி விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்றும் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகின்றார் அசோகமித்திரன்.


- சிமுலேஷன்

8 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு அ.மி. கதைகளிலேயே மிகப் பிடித்த கதை இது. இத்தனைக்கு ஒரே ஒரு முறைதான் - அதுவும் 15 வருடங்களுக்கு முன் - படித்தது. இன்னமும் கதை நினைவில் இருக்கிறது.

Simulation said...

எனது வலைமனைக்கு முதன் முதலாக வருகை தரும் ஜ்யோவ்ராம் சுந்தர்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

- சிமுலேஷன்

RV said...

அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!

ஒரே ஒரு விஷயத்தில் வேறுபடுகிறேன். நாவலுக்கு "ஒற்றன்" என்று சொல்லி இருந்தீர்கள், மானசரோவர், கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்றவை இன்னும் சிறந்தவை என்று நினைக்கிறேன். ஒற்றன் பற்றிய சில பதிவுகள் இங்கே. - பகுதி 1, பகுதி 2

Simulation said...

Hi Simulation,

Congrats!

Your story titled 'புலிக்கலைஞன் - அசோகமித்திரன்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th May 2010 09:00:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/246511

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Simulation said...

அன்புள்ள ஆர்வி,

முதன் முறையாக எனது வலைமனையில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

(மானசரோவர், கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்றவை இன்னும் சிறந்தவை என்று நினைக்கிறேன்.). நிங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இந்த நாவல்கள் நான் படித்து வெகு காலம் ஆகிவிட்டதால் நினைவுக்கு வர மாட்டேங்கிறது.

அடிக்கடி இங்கே வாருங்கள்.

- சிமுலேஷன்

ஜெயமோகன் said...

அன்புள்ள சிமுலேஷன்

ஒரு நல்ல இலக்கியச்சூழலில் இலக்கிய அரட்டை என்பது ரசனையை முன்னெடுக்கும் அம்சம். இணைய அரட்டையின் இடமும் அதுவே

ஆனால் கதையைப்படித்து நன்றாக உள்ளது, இல்லை என்ற அளவிலேயே ஏதேனும் சொல்வது ஒரு நல்ல விஷயம் அல்ல. அருமையாகச்சொல்லியிருக்கிறார், நல்ல சித்தரிப்பு போன்றவற்றை தவிர்த்தே ஆகவேண்டும். மன்னிக்கவும். அந்த வகையான பேச்சுக்களால் எந்தப்பயனும் இல்லை.

அடித்தள மக்களின் துயரத்தைச் சொல்ல எதற்காக அவனை புலிக்கலைஞன் ஆக்கவேண்டும்? எதற்காக புலிக்கலைஞன் என்று தலைப்பு வைக்கவேண்டும்? தலைப்பிலேயே உள்ள கலைஞன் என்ற சொல்லைக்கூட நீங்கள் கவனிக்கவில்லை

தயவுசெய்து ஒன்றை மனதில்கொள்ளுங்கள். வெறுமே ஒரு சித்தரிப்பை வழங்க, கண்ணால் எவரும் பார்க்கத்தக்க ஒரு விஷயத்தை சொல்ல, யதார்த்தத்தைக் காட்ட எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. அதை எழுதிக்கொண்டிருக்கும் அளவுக்கு வீண்வேலைப்பிரியனாக எந்த எழுத்தாளனும் இருக்க மாட்டான்

அவன் அதனூடாக ஒன்றைச் சொல்ல நினைக்கிறான். வரிகளில் நடுவே உள்ள மௌனங்களில், படிமங்களில் அதை அவன் பொதிந்து வைத்திருக்கிறான். அதை வாசகன் ஊகிக்க விரும்புகிறான்.

ஏனென்றால் அந்த ஊகம் மூலம் வாசகனின் கற்பனை தூண்டப்படுகிறது. அந்த அனுபவம் அவனது சொந்த அக அனுபவமாக ஆகிறது. எழுத்தாளன் உணர்த்த நினைப்பதை வாசகனே தன் சொந்த கருத்தாக அடைகிறான்

’புலிக்கலைஞன்’ தமிழில் கொண்டாடப்பட்ட ஒரு பெரும் படைப்பு. அதற்குக் காரணம் அதன் உள்ளுறைதான்

அது ‘கலைஞனின்’ துயரத்தை காட்டுகிறது. கலையின்போது அவன் புலி. கலையை களைந்து நிற்கையில் பிழைப்பு தேடி கூழைக்கும்பிடுபோட்டு நிற்கும் பரிதாப மனிதன்.

சிமுலேஷன், அது அசோகமித்திரனின் தனிவாழ்க்கையேதான் தெரியுமா?

அந்த காதர் புலியாக உருமாறும் மாற்றத்தை கவனியுங்கள். அது கலை

அவ்வாறு கதைக்குள் என்ன வாசித்தீர்கள் கதை வழியாக எங்கு சென்றீர்கள் என எழுத முயலுங்கள் அதுவே விமர்சனம்

அத்தகைய உரையாடல்கள் பிறருக்கு அவர்களின் பார்வையை மேலே கொண்டுசெல்ல பயன்படும். அவ்வாறு நிகழும் உரையாடல்கள் வழியாகவே கலைரசனை வளர்கிறது

Simulation said...

அன்பின் ஜெமோ,

முதன்முறையாக எனது வலைப்பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டதோடு மட்டுமல்லாது, விமர்சனத்தினூடாக கவனிக்க வேண்டியவை என்னென்னவென்று சொல்லித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

தங்களை இங்கு வரவழைத்த காதர் புலிக்கலைஞனுக்கும், அசல் புலிக்கலைஞன் அசோகமித்திரனுக்கும் கூட நன்றிகள்!

- சிமுலேஷன்

வித்யாஷ‌ங்கர் said...

enakku pidicchathu aakyaththamarai novel