குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய். அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.
மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா? "அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே.... "கடம்பாடவியிடை " "குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்... "இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.
அபிராமி அந்தாதி - பாடல் - 99
பாடலுக்கு மெட்டுப் போட்டவர் - திரு. அலெப்பி வெங்கடேசன்.
ராகம் - ஜனசம்ஹோதினி
- சிமுலேஷன்
0 comments:
Post a Comment