Monday, September 19, 2011

கொலு வைப்பது எப்படி? - 06

தீமாட்டிக் கொலு
பல வருடங்களாக ஒரே மாதிரி கொலு வைத்து வந்து அலுப்பு ஏற்பட, புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் படைப்புத்தான் தீமாட்டிக் கொலு (Thematic Kolu). அதாவது ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல பொம்மைகளைத் தேர்வு செய்து அழகுற அதற்கான சூழலை ஏற்படுத்தி வைப்பது தீமாட்டிக் கொலுவாகும். இதில் கொலு வைப்பரின் படைபாற்றல் வெளிப்படுவது மட்டுமின்றி கொலுவினைப் பார்ப்பவர்களுக்கும் நன்கு பொழுது போகும். இன்றைய தினம் பலரும் பலவிதமான கருத்துக்களில் தீமாட்டிக் கொலு வைக்கின்றார்கள்.  இவற்றில் சில.

பெண்கள் – இதில் முப்பெருந் தேவியர், ஆண்டாள், மீரா, ஔவையார், நடன மாது, பாடகி ஆகிய பொம்மைகளை வைக்கலாம்.

எண்கள் - 1. ஒரே சூரியன், 2.பிள்ளையார்-முருகர், 3. மும்மூர்த்திகள், 4.நான்முகன், 5.பஞ்ச பூதங்கள், 6.ஆறுமுகன் – கார்த்திகைப் பெண்டிர், 7.ஏழு குதிரை பூட்டிய தேர், 8.அஷ்ட லஷ்மி, 9.நவக்ரகங்கள், 10.தசாவதாரம்

தீமாட்டிக் கொலு வைக்க செட்டு செட்டாக பொம்மகைள் இருந்தால் நல்லது. பாரம்பரியமாக பொம்மை விற்கும் இடங்களில் செட் பொம்மைகள் கிடைக்கும். உதாரணமாக, தசாவதார செட், ஆழ்வார்கள் செட், சமயக் குரவர்கள் நால்வர் செட், அஷ்ட லஷ்மி செட், இராவணன் தர்பார் செட், கல்யாண செட், ஊர்வலம் செட் ஆகியவை புகழ் பெற்றவை. இப்படி செட் பொம்மைகள் இல்லாத் பட்சத்தில் இருக்கும் பொம்மைகளைக் கொண்டு சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், சர்வம் கிருஷ்ணமயம் போன்ற பரந்த தலைப்புகளில் தீமாட்டிக் கொலு வைக்கலாம்.

தீமாட்டிக் கொலு வைக்கும் போது சிலர் ஆர்வக் கோளாறால், சமீபத்திய சம்பவங்களில் அடிப்படையில் தீமாட்டிக் கொலு வைப்பதும் உண்டு. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவை சுனாமி, பூகம்பம், தீவிபத்து போன்ற எதிர்மறையான கருத்துக்களின் மீது அமையக் கூடாது. ராஜீவ் காந்தி மரணித்த போது அந்த சம்பவத்தினைக் கூட அடிப்படையாக வைத்து ஒரு வீட்டில் கொலு வைத்திருந்தாக ஞாபகம்! அதே போல சிலர் பள்ளிகளில் நடைபெறும் விஞ்ஞானக் கண்காட்சி போல அமைப்பது கூட உண்டு. தீமாடிக் கொலுவுக்கும் விஞ்ஞானக் கண்காட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்யும் ஆர்வக் கோளாறில் இதுவும் ஒன்று. தீமாட்டிக் கொலுக்கள், இந்தியப் பாரம்பரியத்தினையும், கலாச்சாரத்தினையும் விளக்கும் வண்ணமோ அல்லது ஒரு பாஸிட்டிவான கருத்தினை விளக்கும் வண்ணமோ அமைவது நல்லது.

தீமாட்டிக் கொலு வைத்த பின்னர், அதனை வந்திருப்பவர்களிடம் நல்ல முறையில் எடுத்து விளக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கூறுவது இயலாத பட்சத்தில், யாவருக்கும் புரியும் வண்ணம் சிறு விளக்க அட்டைகளைக் கூட செய்து வைக்கலாம். ஒரு வீட்டில் ஒரு பெண்மணி தனது வீட்டில் வைக்கப்பட்ட தீமாட்டிக் கொலு பற்றி   10 நிமிடங்களுக்கு கேசட்டில் ஆடியோ ரிகார்டிங் செய்து வைத்து அவ்வப்போது அதனை இயக்கி எல்லொருக்கும் விளக்கம்  கொடுத்து வந்தார்.

எங்கள் வீட்டில் ஒரிரு வருடங்கள் முன்பாக வைத்த ஒரு தீமாட்டிக் கொலு பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். நாங்கள் எடுத்து கொண்ட தலைப்பு, “அறம் வளர்த்த ஆன்றோர்கள்”. இந்தத் தலைப்பினில் சமயக் குரவர்கள் நால்வர், பனிரெண்டு ஆழ்வார்கள், மீரா, இராமலிங்க வள்ளலார், புத்தர், திருவள்ளுவர்,  சங்கீத மும்மூர்த்திகள், விவேகானந்தர் ஆகீயோர் பொம்மைகளை வைத்தோம். இதில் ஒவ்வொரு பொம்மைக்கும் கவித்துவமான தலைப்புக்கள் வைத்து அதனை அச்சடித்து பொம்மை பக்கத்தில் ஒட்டியும் வைத்தோம்.





தொடரும்…

- சிமுலேஷன்

0 comments: