அந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது.
இன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப்படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த வேலையை, 'சி' பிரிவு மாணவர்கள், 'பி' பிரிவு மாணவர்களுக்கு 'அவுட் ஸோர்ஸிங்' செய்வதும் உண்டு. பொதுவாக மாணவர்கள் தாங்களே குழுக்களாக பிரிந்து கொண்டு, ஒவ்வொரு குழுவும்
ஒவ்வொரு வேலையச் செய்யும். ஒரு கோஷ்டி சார்ட் தயார் செய்யும். அடுத்த கோஷ்டி, மண்ணைப் பிசைந்து, தங்கள் திறமைகளைக் காட்டும். சட்டி, பானை, அம்மி, ஆட்டுக்கல், வீடு, போன்ற மினியேச்சர் மாடல்கள் செய்து அசத்துவார்கள். இவை வகுப்பிலுள்ள உத்தரத்தின்
மீதோ, கட்டுரை அலமாரியின் மீதோ வைக்கப்பட்டிருக்கும்.
இது தவிர, பல்வேறு மாலைகள் செய்யப்படும். இதற்கான் முக்கிய மூலப்பொருள் சிகரெட் பாக்கெட் அட்டையும், அதிலுள்ள வெள்ளிக் காகிதமுமேயாகும் (aluminium foil). குறிப்பிட்ட மாணவர்கள் இதனை ஒரே நாளில் மொபலைஸ் பண்ணிக் கொண்டு சேர்க்கும் திறனுள்ளவர்கள். மாணவர்கள் சரிகை காகிதத்தைச் உருட்டிக் கொடுக்க, மாணவிகள் ஊசி நூல் கொண்டு கோர்க்க, மாலைகள் உருவாகும் காட்சி பார்க்க நன்றாக இருக்கும்.
அடுத்தபடியாக சிகரெட் பாக்கெட் அட்டையக் குறுக்காக, சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை இரண்டாக மடக்கி, ஜிக்ஸா முறையில் கோர்க்கப்படும் மாலைகள் விஷேசமானவை. சிறிய வகுப்பு மாணவர்கள், ஸிஸர்ஸ், சார்மினார் பாக்கெட்டில் மாலைகள் பண்ண, எட்டாம்ப்பு மாணவர்கள் மட்டும் பாஸிங் ஷோ, னார்த் போல் அட்டைகளில் கலக்குவார்கள். சிகரெட் பாக்கெட் அட்டை மாலைகள், காந்தி, யேசு, புத்தர் படங்களுக்கு நேர்த்தியாக மாட்டப்படும். அரிசிப்பொரியிலும் மாலைகள் செய்யும் வழக்கமும் உண்டு. சில மாணவர்கள், வார்னிஷ் காகிதம்
கொண்டு, காற்றினால் இயங்கும் விசிறி, தவளை, பந்து, ஆகாய விமானம், ராக்கெட் போன்ற ஒரிகாமி ஐட்டங்களும் செய்வார்கள்.
இன்ஸ்பெக்டர் வரும்போது யாரிடம் கேள்வி கேட்கப்படும் என்றும், யார், யார் கையைத் தூக்கவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டு, செவ்வனே அமல்படுத்தப்படும். சொதப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்வாரோ என்றெண்ணியும், சொதப்பிய ஆசிரியர்கள், தலைமயசிரியர் என்ன சொல்வாரோ என்றெண்ணியும் அஞ்சி அஞ்சி சாவர். ஒவ்வொரு இடைவேளையின் போதும், 'உங்களுக்கு முடிசிருச்சாப்பா', கேட்கப்படும்.
இந்த காலத்தில் பள்ளிகளில் இன்ஸ்பெக்ஷன் நடக்கின்றதா என்று தெரியவில்லை. அல்லது கவனிக்கப்பட்டு விடுகின்றனரா என்றும் புரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்ஷன் நடக்காவிட்டால், ஒரு பரபரப்பான விஷயத்தை இழக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
Sunday, August 21, 2005
இன்ஸ்பெக்டர் வர்றாருங்கோ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment