Monday, August 22, 2005

மொழிப் பிரச்னை

மொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்
செய்கின்றது.

தாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், "அணுசக்தி நகர் சலோ" என்று புலமையைக் காட்டினேன்.

ஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.

"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை" என்றான் அவன்.

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்
காட்டிக் கொள்ளாமல், நானும் "ஹை.. ஹை..." என்றேன்.

"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா"

"ஹை..ஹை..."

இப்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.

"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ?"

"ஹை..ஹை..."

அவன் சற்று நிதானித்து, "மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ" என்றான்.

சரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, "மை ஹிந்தி நஹி மாலும் ஹை" என்று சரண்டர் ஆனேன்.

அவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, "க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************" என்றான்.

ஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, "ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.

அடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்
கேட்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்
புலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.

ஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, "Excuse me. How to go to Venus Theatre?" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், "I dont know. I am new to this place" என்று
கூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், "எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு" என்றேன்.

அவர்கள் "ஙே" என்று விழித்தனர்.

முதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு
மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.

டெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.

அபிநயப் பிரயோகம் செய்து கொண்டே, "my.. children..abroad... daily.. telphone..bill..." என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக "கொபியான்?...கொபியான்?" என்றாள். (கொபியான் என்றால் எத்தனை, ஹௌ மச், கித்னே..) அந்த வயதான மேனேஜரோ உடனே, "You want to know how much you have spent on the telephone bill. Why dont you ask properly?" என்று நெத்தியடி போட்டாள்.

"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்", என்று பின்னர் வழிந்தாள்.

சரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், "Can you speak English?" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், "Yes. I can speak; But I will get pimples" என்றான்.

அப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, "இண்டிக்கிப் போத்தானு" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, "ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், "இண்டிக்கிப் போத்தானு" என்று அழத் தொடங்கி விட்டான்.

"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே." என்று அதட்டினாள்.

ஆயாம்மா உடனே, "டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்
புரியலையா? 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்." என்றாள்.

'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

0 comments: