Monday, August 22, 2005

அறிவுரை

"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா"

"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்."

எனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது

மூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா?.

"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்?"

"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல.."

"என்னாச்சு அவனுக்கு? ஏன் வேலைக்கு வரலை?"

"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்."

"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்"

திங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.

"என்னப்பா, என்ன ஆச்சு? வெள்ளிக்கிழமை வரலை.."

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான்.

"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா?

நீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்? இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா?" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா?)

அரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.

"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத"

குமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.

"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்"

"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்."

"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்"

0 comments: