Saturday, July 16, 2011

பாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்



ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை.  வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது. கல்கியில் தொடர்கதையாக வந்த "பாப்கார்ன் கனவுகள்' கதையினை, பூர்ணம் விசூவநாதன் அவர்கள் குழுவில் இருந்த குருகுலம் தியேட்டர்ஸ் எம்.பி.மூர்த்தி 95ல் நாடகமாக போட்டார்.

வங்கியில் வேலை பார்க்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் மாதவனான லட்சுமிநாராயணன்தான் கதாநாயகன். வங்கியில் நாடகம் போட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் நாயகன், அடுத்த கட்டமாக சினிமா உலகிற்குள் கதாநாயகனாக நுழைய முயற்சிக்கின்றான். பொறுப்பில்ல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை சுற்றதார் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இவனை   ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்து கரை சேர்க்கவேண்டுமென்று, "பாங்க் எக்ஸாம்" புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பிரம்மப் பிரயத்தனம் எடுக்கும் மாமனாரை "தட்சன்" ரேஞ்சுக்குப் பார்க்கின்றான். ஆனால் மனைவி விஜயலக்ஷுமிக்குக் கணவனது நடவடிக்கைகள் எதுவுமே தப்பாகத் தெரியவில்லை.  அதுவே லக்ஷ்மி நாரயணனுக்குத் தெம்பு தருகின்றது. நாடகம்,சினிமா என்று பைத்தியமாகவே அலைகின்றான்.

பாங்க் உத்தியோகத்தில் இருந்து, நாடகம், சீரியல், சினிமா என்று உயிரை விடத் தயாராயிருந்த ம.வே.சிவக்குமாரின் சொந்த அனுபங்களே, பாப்கார்ன் கனவுகளில்  பாதிக்கு மேலே இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவரது மற்றைய கதைகள் போலவே நிகழ்காலத்திலேயே (லக்ஷ்மிநாரயணன் பதில் சொல்கின்றான்; பைக்கில் ஏறி செல்லுகின்றான் போன்று) எழுதப்பட்ட  கதை முதல்முறை அவரது கதையினை வாசிப்பவருக்குப் புதிராக இருக்கலாம்.

வேலை வெட்டி இல்லாமல், பொறுப்பிலாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரேனும் பார்த்தால், "ஏதேனும் ஒரு இடத்தில் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டானா?" என்று எல்லோரும் எரிச்சலடைவது இயற்கை. ஆனால், அப்படியெல்லாம், ஓவர் பில்டப் கொடுத்து, கிளிஷேயாக ஆக்காமல், நல்ல அரசாங்க வங்கியில், பொறுப்பான  வேலையில் இருக்கும் ஒருவன்கூட தனது நடவடிக்கைகளால், படிப்பவரது எரிச்சலைச் சம்பாதிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் மவேசியின் வெற்றி.

'பாப்கார்ன் கனவுகள்" - கொறித்துப் பார்க்கலாம்.

கதை - பாப்கார்ன் கனவுகள்
ஆசிரியர் - ம.வே.சிவக்குமார்
பதிப்பு - அல்லையன்ஸ் கம்பெனி - 2007
பக்கங்கள் - 176
விலை - Rs. 55/-

- சிமுலேஷன்

1 comments:

ரிஷபன் said...

நிகழ்காலத்தில் சொல்லும் அவரது கதைப்பாங்கு பழகி விட்டால் அங்கதமும் சுவாரசியமும் கலந்த ஒரு அனுபவத்திற்கு நம்மை அழைத்து போய் விடுவார் கியாரண்டியாய்..