இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை
தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு?
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு? அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா? மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
வெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.
என் பையன் கேட்டான், "அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும்? "அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்" என்று சொன்னேன்.
ரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே? சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ?
மயிலாப்பூர் காக்கைகள்
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--
இந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும்? மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா? அல்லது மாங்காடு வரைசெல்லுமா? ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா? அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா? தினமும் இரை கிடக்குமா? இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா? பட்டினி கிடந்து சாகவும் நேரிடுமா?
- சிமுலேஷன்
0 comments:
Post a Comment