Saturday, July 02, 2011

வாக்கிங் செல்லும் வயதானவர்களே! ஜாக்கிரதை!

முந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் (!) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, போன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது? என்ன முடிவு எடுப்பது? அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்ததில் அவர் மகன பெங்களூரில் இருக்கின்றான் என்றும், பெண் கனடா நாட்டில் இருக்கின்றாள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து விட்டேன். அடுத்த பத்து நிமடங்களில் மாமி, தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து சேர்ந்ததாலும், எனக்கும் அலவலகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்ததாலும், நான் விடை பெற்றுக் கொண்டேன். மாமி கைகளைப் பற்றி கொண்டு அழுதே விட்டார். “தெய்வம் போல வந்தீர்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.அன்று மாலை மாமியிடமிருந்து போன் வந்தது. தங்களது குடும்ப இருதய நிபுணர் வந்து பார்த்து, அவரது அனுமதியின் பேரில் மாமாவை விஜயா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், அவர் அபாய நிலயில் தற்போது இல்லையென்று, ஆனால் ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்வதற்காக ஒரிரு நாட்கள் அங்கே இருக்கப் போவதாகவும் கூறினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அனுபவ்த்திற்குப் பிறகு விடியற்காலையில் வாக்கிங் செல்வபர்களுக்குக், குறிப்பாக வயதானவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக் ஒரிரு அறிவுரைகள் சொல்ல விரும்புகின்றேன்.- ஆள் நடமாட்டம் உள்ள தெருக்களிலேயே வாக்கிங் செல்லுங்கள். ஆள் அரவமற்ற தெருக்களில் செல்லாதீர்கள். ஒரு வேளை உங்களுக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் வரும்போது, உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

- “வீட்டுக்குப் பக்கத்தில்தானே வாக்கிங் செல்கிறோம், எதற்கு சுமை?” என்றெண்ணி, மொபைல் போன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதிலும் ICE (In Case of Emergency) என்ற பெயரில்) அவசர, ஆபத்துக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயரை கட்டாயம் சேமித்து வையுங்கள்.

- அருகில் சென்றாலும் நூறு ரூபாயேனும் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டி வரலாம்.

- ஆபத்துக்கு உதவ எத்தனையோ பேர் இருந்தாலும், வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலோனோர் அதனை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியினை ஏற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.

- சர்க்கரை வியாதி உள்ளவர்ளுக்கு, சர்க்கரையின் அளவு குறையும் போது தலை சுற்றல், மயக்கம் வரலாம். ஒரு சாக்லேட்டோ, கேண்டியே பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்.

- இருதய நோயாளியாக இருக்கும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் என்ன மருந்து குடிக்க வேண்டுமென்றும், வீட்டு முகவரியும் கொண்ட ஒரு அட்டையினை மேல் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவிம் நல்லது.

- சிமுலேஷன்

4 comments:

RVS said...

உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள். ;-)

rajasundararajan said...

அவசியமான பதிவு, ஐயா. உதவி மனப்பான்மை உள்ள உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு குறையும் வராமல் வாழ்வு வழிநடத்தும். ந்ல்லா இருங்க!

DrPKandaswamyPhD said...

நல்ல தகவல்.

கந்தசாமி (வயது: 77)

துளசி கோபால் said...

ஆபத்துதவியா ஆண்டவந்தான் அந்த நேரத்துக்கு உங்களை அனுப்பி இருக்கான்.

சட்ன்னு முடிவு செஞ்சு மருத்துவமனைக்குப் போனது படிச்சு, மனசுக்கு நெகிழ்ச்சியா இருந்துச்சு.

பதிவு அருமை. எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்கிட்டேன் மனசில்.

நல்லா இருங்க.