Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு



"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|"

பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி.

"போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா".

இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும் உடனே கத்த ஆரம்பித்து விடுவாள். அது என்னவோ, சத்தமாக சொல்வதே அவருக்குத் திருப்தி அளிக்கும் விஷயம். மாலினிக்கோ, "பிரார்த்தனை என்பது மனதுக்குள்ளே சொல்ல வேண்டிய விஷயம்; அதனை எதற்காக இப்படி உரக்கச் சொல்ல வேண்டும்" என்பது அவள் வாதம்.

"இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம புக்கை யார் எடுத்தது? எதெதுதான் காணமப் போறதுங்குற வெவஸ்தையே இல்லாமப் போச்சு" என்று அலுத்துக் கொண்டார் பார்த்தா.

"கிட்டத்தட்ட இரண்டு வருஷமா, இந்தச் ஸ்லோகத்தை சொல்றேள்; இன்னிக்கி ஒரு நாள்
புக் இல்லாம சொல்ல முடியாதா?"

"ஒன்னால முடிஞ்சா எடுத்துக் கொடு; ப்ரீ அட்வைஸை யாரும் கேட்கலை"

சரி. வேற வழியில்லை. புக் இல்லாமலேயே சொல்லுவோம் என்று ஆரம்பித்தார், பார்த்தா. சரளமாக வாயிலிருந்து தட தடவென்று வந்து விழுந்தது. பரவயில்லையே, கலக்குகிறோமே என்று எண்ணிய அடுத்த வினாடியே, சறுக்கல்.

"பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத...பகவான் பகஜ்ஹாநந்தீ... பகவான்..."

"என்ன ஆச்சு? அடுத்த வரி மனதிற்குள் வர மேட்டேங்கிறதே. என்ன செய்ய? நா¨ளைக்குப் புக் கெடச்ச உடனே இரண்டு தரம் சொல்லிவிட வேண்டியதுதான்" என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே,

"ஆதித்யோ ஜ்யோத்ரதிய..." என்ற அடுத்த அடி உரக்கக் கேட்டது.

தனது பக்தியை மெச்சி, ஸாட்சாத் பகவானே அசரீரியாய் அடுத்த வரி எடுத்துக் கொடுத்து விட்டாரோ என்று ஆடிப் போய்விட்டார், பார்த்தா.

ஆனால், குரல் எதுவோ பரிச்சயமான குரலாக இருக்கின்றதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாலினி,

"என்னது, பட்டம்மா; நீயா விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொன்னது" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமாம்மா. ஐயா தெனைக்கும் பூஜை செய்யும் போது, ஒரக்க இது சொல்றாரில்லையாம்மா. நானும் பாத்திரம் தேய்க்கும்பாது, இத்தெ கேட்டுக்கிகினே இருப்பேன். அப்படியே மனசிலே பதிஞ்சி போயிருச்சு. அம்மா தப்பா எடுத்துக்காதீங்க"

----------0----------

6 comments:

குமரன் (Kumaran) said...

ஏதோ சஹஸ்ர நாமத்தைக் கிண்டல் செய்யும் பதிவு என்று எண்ணி, சரி படித்துப் பார்ப்போம்; கிண்டல் பதிவென்றால் பின்னூட்டம் இடாமல் சென்று விடுவோம், என்று எண்ணித் தான் படிக்கத் தொடங்கினேன். முடிவு நன்றாக இருந்தது. இது நடக்குமா என்று தெரியவில்லை. தமிழ் பாடல்களை ஒருவர் படிக்கக் கேட்டு இன்னொருவர் சொல்வது நடக்கலாம்; வடமொழி சுலோகங்களுக்கு இது நடக்குமா என்று தெரியவில்லை. கற்பனையா? நடந்ததா?

மதுமிதா said...

சஹஸ்ர நாமம் பிடித்து இழுக்க வந்தேன்.
நல்லாயிருக்கு
வாஸ்தவம் கேட்டுட்டே இருந்தா அதுவும் ரெண்டு வருஷம்-னா இது சாத்தியமே

Simulation said...

மதுமிதா, குமரன்,

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

இது நடந்த விஷயம் அல்ல.ஒர் சுவாரசியமான கற்பனையே.

Simulation said...

மரத்தடியில் வந்த மறுமொழி மற்றும் அதற்கு எனது மறுமொழியும்...

> சிமுலேஷன்! இது குமுதத்தில் ஒருபக்கக் கதை படித்தமாதிரி இருக்கு . பட்டம்மா மன்னிப்பு கேக்கறமாதிரி எதுக்கு? ஐய்யா சொல்றதைகேட்டு அப்படியே மனப்பாடம் ஆயிடிச்சி எனக்கும்
என பெருமையாய் சொல்வதுபோலவேமுடித்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
அன்புடன்
ஷைலஜா<

ஷைலஜா, உங்கள் மறுமொழிக்கு நன்றி. பட்டம்மா பெருமையாகத்தான் நினைக்கிறாள். பெரியவர் ஸ்லோகம் சொல்லும்போது, தான் குறுக்கிகிட்டு விட்டொமோ என்றுதான் மன்னிப்பு கேட்டாள்.

- சிமுலேஷன்

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

Geetha Sambasivam said...

ithu antha manitharin egovirku viluntha adiyaga kooda parkkalam.En mamanar oorill oru American returned Thuravi (Tamilkararthan) angu ulla ella community kulanthaikalukkum ithu mathirithan ella slogamum solli kodukkirar.