(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)
"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.
இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.
இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.
இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.
- சிமுலேஷன்
1 comments:
எனக்கு 1940-களிலிருந்தே செம்மங்குடி மாமாவை, அவர் திருவனந்தபுரம் ஸ்வாதி திருநாள் ம்யூசிக் அக்காடெமி பொறுப்பேற்றதிலிருந்து தெரியும். அவர் மகன் கோபால்சாமி என்னோடு ஒன்றாவது, இரண்டாவது வகுப்பு படித்தவன். அவரைப்பற்றிய பலவிஷயங்கள் இப்போது சொல்லலாமா என்று தெரியவில்லை. சிலது காண்ட்ரவெர்ஸியலாகவும் இருக்கும். சரி....சமயம் வரும்!
Post a Comment