Tuesday, January 06, 2009

இசை விழா - 2008-09

1. ரசித்த அரங்கம்: பார்க்கிங் தொந்திரவு பெரிதும் இல்லாத, ஓங்கி வளர்ந்த மரங்கள் நடுவே அமைந்த அமைதியான சிவகாமி பெத்தாச்சி அரங்கம். குத்தகை எடுத்திருந்தது ப்ரும்மகான சபா.
2. அசத்தும் அரங்கம்: அன்றும், இன்றும் கலைஞர்களையும் ரசிகர்களையும் கவரும் மியூசிக் அகாடெமியின் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் ஹால். மேலும் வேலட் பார்ர்க்கிங், மற்றும் வயதான ரசிகர்களைக் கையைப் பிடித்து இருக்கையில் அமர வைக்கத் தொண்டர்களை அமைத்துக் கொடுத்தது போன்ற value added service செய்து கொடுத்த மியூசிக் அகாடெமி.
3. ஹோம்லியான அரங்கம்: மயிலை லஸ்ஸில் தாத்தா கடையில் புத்தகங்கள் வாங்கிய பின், சட்டென்று நுழையத் தோதாக அமைந்த எளிமையான ஸ்ரீனிவாஸ ஸாஸ்திரி ஹால். போரடித்தால் கீழ்தளத்திலுள்ள ரானடே லைப்ரரி சென்று பேப்பர் படிக்கலாம்.
4. மீண்டும் வரத் தூண்டிய இடம்: மியூசிக் அகாடெமி வளாகத்தில் அமைக்கப் பெற்றுள்ள டிஜிட்டல் ஆடியோ லைப்ரரி. அமைத்துக் கொடுத்த் TAG நிறுவனத்திற்கு நன்றி.
5. மிஸ் பண்ணியது: நாரதகான சபாவின் வழமையான "ஞானாம்பிகா" கேண்டீன் மற்றும் அவர்களது கனிவான உபசரிப்புக்கள்.
6. ரசித்த கேண்டீன்: பார்த்தசாரதி சபாவின் கேண்டீன் மற்றும் அவர்களது சூடான போண்டா.
7. புதுமையான சேவை: சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு "ஜோக்"காக எழுதியதை, இன்று நடைமுறையில் இலவச சேவையாக வழங்கிய Fortune நிறுவனத்தின் "கர்னாடிகா எக்ஸ்பிரஸ்" என்ற அரங்கங்களுக்கிடையேயான ஷட்டில் ஸர்வீஸ்.
8. மார்கழி பஜனை: மயிலாப்பூர் கபாலி கோவிலின் மாடவீதிகளில், மார்கழி மாத அதிகாலை வேளைகளில், அரைமணி இடைவெளிகளில் கிட்டத்தட்ட அரை டஜன் பஜனை கோஷ்டிகளைக் காணலாம். பாபநாசம் சிவன் அவர்களது புதல்வி ருக்மிணி ரமணி அவர்களின் குழுவில் கலந்து கொண்டது ஒரு் நாள் மட்டுமே.

9. ரசித்த இளம் ஆண் பாடகர்: கிட்டத்தட்ட மூன்று கச்சேரிகள் கேட்ட பின்னும் அலுக்காத அபிஷேக் ரகுராம். அகாடமியில் பாடிய 'காபி' ஏ க்ளாஸ். "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது" என்று சொல்லத் தோன்றியது. ஒரு பாடலின் நடுவே,"பெங்களூரிலிருந்து நேற்றைய தினம் வந்திருக்கும் எனது நண்பருக்காக இந்தப் பாடலை டெடிகேட் செய்கின்றேன்" என்று அகாடெமி மேடையில் தைரியமாகச் சொன்னது மட்டும் கொஞ்சம் ஓவர்தான்.

10. ரசித்த இளம் பெண் பாடகர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் புதல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் ரசிகர்களை மகிழ்வித்தார்.

11. ரசித்த இரட்டையர்கள்: திருச்சூர் சகோதரர்கள் வாசிக்கும் எல்லாக் கச்சேரிகளுக்கும் மோகன் என்ற வித்வான் மட்டுமே மிருதங்கம் வாசிக்கின்றாரே என்று வியந்து நின்றபோது, அவரே இந்த இரட்டையரின் தந்தை என்று புரிந்தது. இருவரும் மாறி, மாறி ராகம் பாடுவதுவும், ஒருவர் ராகம் பாடும்போது, மற்றவர் கார்வை பிடிப்பவதுவும் சுகமாக இருந்தது.இளமையான இந்த இரட்டையரிடம், "எக்ஸ்க்யூஸ் மீ, எந்தக் காலேஜ்லே படிக்கறீங்க?" என்று கேட்கக் போக, இருவரும் C.A படித்து முடித்து ப்ராக்டீஸ் செய்வதாக அறிந்து அதிர்ச்சி. மூத்தவருக்குத் திருமணமும் ஆகிவிட்டதாம். பார்தசாரதி சபா, ப்ரும்மகான சபா, கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் என்று அவர்கள் பாடும் அரங்கிற்கெல்லாம் துரத்தித் துரத்திப் போய்க் கேட்டேன். பெத்தாச்சி அரங்கில், 6 மணிக்குத் துவங்க வேண்டிய கதக் நாட்டிய நிகழ்ச்சி தாமதமாக, ப்ரும்மகான சபாவின் பாலு, மேலும் நேரம் ஒதுக்கித் தந்தார். கிடைத்த வாய்ப்பினை நழுவ விடாமல் திருச்சூர் சகோதரர்கள் அடித்து ஆடிய, " ஜோக் (JOG)" ராகத்தில் அமைந்த RTP, ரசிகர்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசாகும்.


12. ரசித்த லெக்-டெம்: அகாடெமியில் நடைபெற்ற, ஸ்ரீராம் பரசுராம் அவர்களின் "கர்நாடக இசையில் ஹிந்துஸ்தானி ராகங்களின் பங்கு" குறித்த விரிவுரையும் விளக்கமும். Shriram, What a vocabulary, man!

(மேலே இஞ்சிக்குடி குழுவினர்: கீழே: ரசிகப்ரியா/சங்கீதப்ரியா அமைப்பபளர்கள்; சில பதிவர்களும் படத்தில் உண்டு. கண்டுபிடியுங்கள்)
13. ரசித்த லெக்-கான்: தினமும் 80000 ஹிட்ஸ்க்கு மேல் பெறும் sangeethapriya.com அமைப்பின் விருது வழங்கும் விழாவின் முடிவினிலே இடம் பெற்ற "மல்லாரி" குறித்த விரிவுரையும், நாதசுர இசை நிகழ்ச்சியும். வழங்கியது இஞ்சிக்குடி எம். சுப்பிரமணியன் குழுவினர், ராகசுதா அரங்கினில். சுபபந்துவராளியில் பிஸ்மில்லாகானனக் கண்டோம்.
14. ரசித்த நாட்டிய நாடகம்: Three Musketeers என்ற ஃப்ரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு "Man with Iron Mask" என்ற தலைப்பில் கலாக்ஷேத்ரா புகழ் ஸ்ரீஜித் க்ருஷ்ணா குழுவினர் நடத்திய நாட்டிய நாடகம். ஃப்ரெஞ்சு உடைகள் அணிந்து வந்த ஆண் கலைஞர்கள் ஆடிய பரதம் பிரமாதம். ஒப்பனை, அரங்க அமைப்பு, கோரியோக்ராபி, வேடப் பொருத்தம் என்ற வகையில் கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், மேத் என்று எல்லாமே வேலை செய்தது. நாரத கான சபாவில் இருந்த அனவைரையும் கட்டிப் போட்ட இந்த நாட்டிய நாடகம் முடிந்தபின் மணி பார்த்தபோது, இரவு மணி பத்தரை. ஸ்ரீஜித்தின் எந்த நிகழ்ச்சியும் ஏமாற்றுவதில்லை.
15. ரசித்த மியூசிகல் என்ஸெம்பிள்: வயலின் எம்பார் கண்ணனைத் தளபதியாகக் கொண்ட, கடம் கார்த்திக்கின் "Heart பீட்" என்ற வாத்ய விருந்தா. எம்பாரின் "ஜோக்" இராக வாசிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பாரதீய வித்யாபவன் மெயின் ஹாலில் ஒரு முறையும், பார்த்தசாரதி சபாவில் ஒரு முறையும் கேட்டேன். வடமொழியில் ஆராய்ச்சி செய்துள்ள Dr.கார்த்திக் பாடியது பெரும்பாலும் தமிழில். கீ போர்ட் சத்யா வழக்கமான அசத்தல். அதே போல் ரிதம் பேடில் அருண்குமார் அபாரம். குறிப்பாக சந்தூர் ஒலிகளைக் கொணர்ந்தற்கு. கஞ்சிரா புருஷோத்தமன் சொல்லவே தெவையில்லை. இன்று கஞ்சிரா உலகில் அவரே ஆட்சி.
16. சமீபத்திய பிரசுரம்: "Do away with Thematic Concerts!" என்ற தலைப்பில் எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது Kutcherybuzz Newsletter மற்றும் Kutcherybuzzonline.comல்.




(இந்த வருடப் படம் கிடைக்காததால் போன வருடப் படம். ஞாநியும் ஒரு நடுவர்.)
17. சமீபத்திய மகிழ்ச்சி: போன வருடம் மூத்த மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்டு "முத்ரா குவிஸ்"ஸில் பெற்றது இரண்டாம் பரிசு. இந்த முறை முதல் பரிசு பெற்றே தீர வேண்டும் என்று வந்த இடத்தில், தகுதிச் சுற்றில் பங்கு கொள்ள வந்தோர் மட்டுமே 50க்கும் மேல். தகுதிச் சுற்றில் தேறிய 12 பேர்களில் பெயரைக் குலுக்கிப் போட மனைவியும், நானும் ஒரே குழுவில் அமைந்தது எதிர்பாராத அதிசயம். இசைக் கலைஞர் Dr.ராதா பாஸ்கர், நடனக் கலைஞர் ரோஜா கண்ணன், தூர்தர்ஷன் புகழ் குவிஸ் மாஸ்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வாய்ப்புகளை நழுவ விடாமல் பதிலளித்துத் தட்டிச் சென்றது முதல் பரிசு தலா ஆயிரம் ரூபாய்.
18. வெறுப்பேத்திய விஷயம்: Lec-dem என்ற பெயரில் மூத்த இசைவாணர்கள் (Musicologists, not Musicians) தங்களது சொந்தக் குரலில் பாடி எரிச்சல் மூட்டியது. பல பேருக்கு சிஷ்யர்கள் இருந்தும் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள மனம் வரவில்லை.
19. வியந்த நபர்: அகிரா என்ற ஜப்பானிய இளைஞர். நாரத கான சபாவினருகில் வசிக்கும் அகிராவை எல்லா சபாக்களிலுல் பார்க்கலாம். ஆம். இவர் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர். இந்திய இசைக் கலைஞர்களைப் புகைப்படம் பிடிப்பதே இவருக்குப் பிடித்த விஷயம். முத்ரா குவிஸ்ஸில், ஆடியன்ஸ் ரவுண்டில் கேட்ட கேள்விக்கு "கரகரப்ரியா" என்று தவறான விடையைச் சொன்னாலும், தனது மழலைச் சொல்லால் மனங்கவர்ந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

20. சமீபத்திய நட்பு: நாரதகான சபாவில் நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்த சாருஹாசனிடம் சும்மாப் பேச்சுக் கொடுக்க, அப்போது வந்த என் மாமனார் சந்திரஹாசன் அவர்களுடன் தான் பரமக்குடியில் ஒன்றாகப் பணிபுரிந்த நினைவலைகளைக் கூற, எளிமையாகப் பழகும் அவரின் நட்பு கிடைத்தது. வீட்டிற்குச் செல்ல கார் வரத் தாமதமானபடியால். எல்டாம்ஸ் ரோடிலுள்ள மணிரத்னம்-சுஹாசினி வீட்டில் சாருஹாசனை drop செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டி.டி.கே சாலையிலிருந்து எல்டம்ஸ சாலைக்கிச் செல்ல இருந்த 5-10 நிமிடங்களில் பேசிய பேச்சுக்களில் அவர்தம் இசையார்வம் வெளிப்பட்டது. "பூச்சி ஸ்ரீநிவாசய்யரின் காபி ராகத் தில்லானாவை ஏன் யாரும் பாடுவதில்லை?" என்றெல்லாம் எளிமயாகப் பேசிக் கொண்டே வந்தார். மெயிலில் தொடர்பு கொண்டால் உடனடி பதில் உத்தரவாதம்.

- சிமுலேஷன்

6 comments:

Boston Bala said...

கலக்கல் தொகுப்பு. நன்றி

Simulation said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பாபா.

- சிமுலேஷன்

Erode Nagaraj... said...

நல்ல தொகுப்பு... :)

Erode Nagaraj... said...

http://rasikas.org/forum/topic11751-concert-of-mohan-santhanam-on-151109.html

Simulation said...

ஆகா, ஈரோடு நாகராஜ் அவர்களே, வருக, வருக.

எனது வலைப்பூவிற்கு முதன் முறையாக வந்துள்ளீர்கள். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

BTW எனது மகன் ஆதித்யா, (உங்கள் சிஷ்யன் 'சரணின்' தோழன்) ஆர்க்குட்டில் உங்களுடன் பழக்கமாம்.

- சிமுலேஷன்

Erode Nagaraj... said...

charan is uks sir's sishya... nice to know you are adhithya's dad...