Monday, March 15, 2010

யார் எழுத்து? ஒரு புதிர்

தமிழ் எழுத்துக்களை ஆழ்ந்து படிப்பவரா நீங்கள்? உங்களுக்காக ஒரு புதிர். "யார் எழுத்துக்கள் இவை?" என்று கூறுங்கள். ஐந்து விடைகளையும் சரியாகக் கண்டுபிடிக்கிறவர்களே வெற்றி பெற்றவர்கள்.

1. "நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!" என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கிவிட்டான் பரசு. அவனுடைய அக்காவும், அண்ணாவும் குழந்தையாயிருந்தபோது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும், அண்ணாவும் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடங்கி விடுவார்கள். ஆனால், பரசு சரியான கல்லுளி மங்கனாக இருந்தான்."

2. "நூறு ரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலுப் பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிடவேண்டும் என்பது பேச்சு. சுப்பையா ஆசாரி ஒப்புக் கொண்டார். சரியான சான்ஸ் அடித்துவிட்டது. சீதையின் முழு உருவப் படம். முன்பணம் ஐநூறு ரூபாய் வேறு. திருப்தியாக இருந்தால், மேலும் ஒரேடியாக இருபது படத்துக்கு ஆர்டர். மனசில் குதூகலம் பொங்கி வழிந்தது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் தொங்கப் போகின்றது. நாடகத் திரை போல ஒரு படம். கூடிக் கூடிப் பார்க்க மாட்டார்களா ஜனங்கள்? "சீதை மார்க் சீயக்காய் தூள்" என்ற கொட்டை எழுத்துகள் கண்களைக் கவ்வினாலும் படத்தின் அடிப்பக்கம், வலது கோடியில் 'சுப்பையா ஆசாரி' என்ற பெயர் புலப்படாமலா போகிவிடும்?"

3. "அந்த விளக்குக்குப் பக்கத்தில் நிறுத்தடா" என்றார் கந்தசாமிப்பிள்ளை. வண்டி நின்றது, இருவரும் இறங்கினார்கள்.
கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பலபளப்பான் ஒற்றை ரூபாய் நோட்டு  ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.
கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!
"என்னடா, பெரியவரைப் பார்த்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப்பிள்ளை.
"அப்படி சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்."

4. "மழை பெய்யத் துவங்கியதும் சில ஆண்கள் வேட்டியை மடித்துக் கொண்டு தெருவில் இறங்கி வேண்டுமென்றே அலைவதைப் பார்த்திருக்கிறாள். "மழையிலே நனையிற மாதிரி சுகம் உலகத்துல எதுவும் இல்லை" என்று அவர்கள் உரக்க அழுத்தந்திருத்தமாய்ப் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறாள். அப்படி அலைபவர்களை உற்றுப் பார்த்திருக்கிறாள். அவர்கள் மழையை அனுபவிப்பதாய் சொல்லுகிறார்களே தவிர, ஒரு பொழுதும் மழையை அனுபவிக்கவில்லை என்பது வெகு சீக்கிரம் புரிந்து விட்டது. மழைக்கு எதிரே ஒரு முரட்டுத்தனம் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். மழை பூமியில் ஒரு முரட்டுத்தனம் காட்ட, பதிலுக்கு மழையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறார்கள். அதனால்தான் தெருவில் இறங்கி முன்னும் பின்னும் அலைந்து தன் பலத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். மழையை அப்படி வரவேற்கக் கூடாது. எதிர்த்து உரக்கக் கூச்சலிடக் கூடாது. ராஜா வர, அவரரெதிரே கம்பு சுழற்றலாம். அது வரவேற்புதான். ஆனாலும், இரண்டு புறமும் உப்பரிகையில் நின்றுகொண்டு, அரசர் மீது பூ தூவுவது எத்தனை அழகு." 

5. "அப்பா: ஆமா... நீ பேங்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லடிரா நீ!
கிரி: காதல்னு சொல்ல முடியாதுப்பா. இவ பாங்குலே கம்ப்யூட்டரஸேஷன் பண்றாங்க. அதுக்கு ட்ரெயினிங் ஐ.ஐ.டியில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. என் தலையெழுத்து இவளுக்கு கம்ப்யூட்டர்னா என்னன்னு சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இவ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே எங்கேயோ சந்தடி சாக்கில் காத்ல் மாதிரி குன்ஸா ஒண்ணு புறப்பட்டுச்சு."

- சிமுலேஷன்

10 comments:

Anandhi said...

3. புதுமைப்பித்தன்
4. பாலகுமாரன்

Anandhi said...

5.சுஜாதா

Simulation said...

ஆனந்தி,

3,4,5 விடைகள் சரியே. முதல் இரண்டு எழுத்தாளர்களையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

- சிமுலேஷன்

அப்பாதுரை said...

1. தேவன்
2. சுஜாதா? சுப்ரமணிய ராஜூ?
3. புதுமைப்பித்தன்
4., 5 ஊகூம், எதுவும் தோன்றவில்லை.

லேகா said...

2 - JanakiRaman

3 - Puthumaipithan

5 - Sujatha

Simulation said...

அப்பாதுரை,

மூன்றாவது எழுத்தாளரைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். மற்றவற்றில் ஒரு விடை சரி. ஆனால் வரிசை தவறு. மீண்டும் முயற்சிக்கவும்.

- சிமுலேஷன்

Simulation said...

லேகா,

மூன்றும் ஐந்தும் சரி. இரண்டு தவறு. மீண்டும் முயற்சிக்கவும்.

- சிமுலேஷன்

Anandhi said...

1.தி.ஜானகிராமன்
2. சுந்தர ராமசாமி அல்லது நாஞ்சில் நாடன்

Simulation said...

ஆனந்தி,

முதல் விடை தவறு. இரண்டாவ்தற்கு 2 விடைகள் கொடுத்துள்ளீர்கள். அதில் ஒன்று சரி. சரியான இதுவரை பதில்கள் மூணரை கொடுத்துள்ளீர்கள். மீதி ஒண்ணரை விடைகளையும் கொடுங்கள்.

- சிமுலேஷன்

Simulation said...

சரியான விடைகள்:-

1. ஆதவன்

2. சுந்தர ராமசாமி

3. புதுமைப் பித்தன்

4. பால குமாரன்

5. சுஜாதா

போட்டியில் கலந்துகொண்ட பதிவர்களுக்கு நன்றிகள்.

- சிமுலேஷன்