Saturday, August 07, 2010

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்







தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்சியாக இருக்கட்டும். பல்வேறு தளங்களில் திரையுலகம் தனது பங்கையளித்துள்ளது என்றால் உண்மையில்லாமலில்லை. ஆனால் அது ஆற்றிய நன்மைகளை விட ஆற்றிய சீரழிவுகள்தான் அதிகம் என்று பொங்கியெழுந்து தைரியமாகத் தன் கருத்துக்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தவர் ஜெயகாந்தன்.  சினிமாவுலகத்தின் மீதான பெருங்கோபத்தினை தனது "சினிமாவுக்குப் போன சித்தாளு" கதையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

செல்லமுத்து சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ரிக்சாக்காரன். சிங்காரம் போல 'திருக்கூஸ்' எல்லாம் பண்ணும் கெட்டிக்காரன் அல்ல. ரிக்சா ஓட்டுவதும் சினிமா பார்ப்பதுவும் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. சினிமா பார்த்தே வந்த 'பசி'யால் கிராமத்துக்கு ஓடிப் போய் அவனுக்காகவே வளர்ந்திருந்த கம்சலையைக் கட்டிக்கொண்டு, பட்டணம் வருகின்றான். தனக்குத் தெரிந்திருந்த ஒரே பொழுதுபோக்கான சினிமாவுக்குப் கூட்டிச் சென்று அவளையும் சினிமாப் பைத்தியமாக்க்கி விடுகின்றான். கம்சலையோ சினிமாப் பைத்தியம் மட்டுமல்லாது, வாத்தியார் பைத்தியமுமாகவும் ஆகிவிடுகின்றாள். வாத்தியாரையே இருபத்து நாலு மணி நேரமும் நினக்கும் அளவுக்கு. அது எந்த அளவுக்கு முத்தி விடுகின்றது என்று தெரியும்போது செல்லமுத்து மட்டுமல்ல, வாசகர்களும் அதிர்ச்சிகுள்ளாகின்றனர். வாத்தியார் படமாயிரு்ந்தாலும் சரி, வேறு எந்தப் படமாயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்று கண்டிசனாச் சொல்லிவிடுகின்றான் செல்லமுத்து. ஒரு மாதம் பொறுத்திருந்த கம்சலைக்கு வாத்தியாரின் புதுப்படம் வெளியானவுடன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "கோடியில் ஒருவர்" படம் பார்க்கச் சென்ற அனுபவம் அவளது வாழ்க்கையை எப்படி சீரழித்து விடுகின்றது என்பதுதான் மீதிக்கதை.

மெட்ராஸ் பாஷை ஆகட்டும், அக்ரஹாரத்து பாஷையாகட்டும். சிறந்த நேட்டிவிட்டியுடன் எழுதுவதில் ஜெயகாந்தனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. விறுவிறுபான நடையில் எழுதப்பட்ட நடை. விளிம்பு நிலை மாந்தர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன்னை மறந்து ஏதோவொரு கதாநாயகன் பின்னாலோ அல்லது கட்சிக்காரன் பின்னாலோ வாழ்க்கையத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை கம்சலை மூலமாகத் தெரிவிக்கும் அதே ஜெயகாந்தன், 'எல்லை தாண்டுவது முறையல்ல; நமக்கும் வாழ்க்கை நெறிமுறைகள் உண்டு', என்பதனை செல்லமுத்து மூலம் தெரிவிக்கத் தவறவில்லை.    

இருவர் படம் எடுத்த மணிரத்தினம் அந்த இருவர்களைப் பற்றிப் பெரிதாக எதிர்மறைக் கருத்துக்கள் ஏதும் வைக்காவிடாலும், அந்தப் படம் குறிப்பிட்ட இருவரைப் பற்றிய படம் அல்ல என்று தற்காப்பாகக் கூறியிருந்ததாக ஞாபகம். ஆனால் ஜெயகாந்தன் எம்.ஜி.ஆர் என்ற பெயரை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும், வாய்க்கு ஒரு முறை வாத்தியார், வாத்தியார் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்தில் இப்படி தைரியமாக அவரை எதிர்மறையாகக் குறிப்பிட்டு ஒரு கதை எழுத பெரும் தைரியம்தான் வேண்டும்.எம்.ஜி.ஆர் இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? ஒருவேளை அனாவசியப் பப்ளிசிட்டி கொடுக்காமல் அடக்கி வாசிக்கலாமென்று வாத்தியார் நினைத்திருக்கக் கூடும்.

முன்னுரையில் இந்தக் கதைக்கு வெளி வந்த எதிர்ப்புக்களையும்,அந்த எதிர்ப்புக்கள் இலக்கிய சம்பந்தமுடைய கருத்துக்கள் அல்ல என்பதால் அவற்றுக்குச் சமாதனமோ, பதிலோ கூற வேண்டுவது தன் பொறுப்பல்ல என்று ஜெயகாந்தன் கூறுகின்றார்.

முடிவாக இந்தக் கதையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஜெயகாந்தன் முன்னுரையில் கூறியிருக்கும் மேலும் சில கருத்துக்களைப் இங்கு பதிய வேண்டியிருக்கின்றது.

"அறியாமையும், பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுயாபிமானமிழந்து திரிகிறார்கள். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமு சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பாளர்களும் பெஉம் பொறுப்பு வகிக்கிறார்கள். "பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்" என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய "பொழுதுபோக்கும்", "கொஞ்சம் நேரம் மக்ழ்ந்திருந்தலும்" ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும், இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா? என்கிற பதைப்புதான் என்னை இக்கதையை எழுதத் தூண்டியது".  

"இந்தக் கேவலமான் சினிமாத்தனம் பதிரிகைகளையும், எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரத்து இளைஞர்களையும் சமூகத்தின் மேல் தரத்து மனிதர்களையும் முற்றாகப் பிடித்திருக்கிறது. என்ற காரணத்தினாலேயே, குறைவான நாசத்துக்கு ஆளாயிருக்கும் நகரத்துக் கூலிக்கார வர்க்கத்திலிருந்து  ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்தேன்."

பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

பதிப்பாண்டு : முதற் பதிப்பு 1972 - ஏழாம் பதிப்பு - 2002
விலை: Rs.35

10 comments:

a said...

பகிர்விற்க்கு நன்றி... ஊருக்கு வரும்போது வாங்கி படிக்க வேண்டும்.

Ramki said...

மிகவும் நல்ல நூல்.நான் என் சிறு வயதில் இந்த புத்தகத்தை படித்துள்ளேன் .மிகவும் அருமையான படைப்பு.நீங்கள் குறிப்பிட்டதுப் போல் ஜெயகாந்தன் அக்கிரகாரமாகட்டும் சேறியாகட்டும் மனிதர் அப்படியே மாறிவிடுவார் அந்தக் காலக்கட்டத்தில் அதை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன் (ஏன் இப்பொழுதும் எனக்குப பிடிக்கும்).அந்த காலத்தில் சினிமாவை பார்த்துச் சீரழிந்தவர்களை பார்த்திருக்கிறேன் .ஏன் இந்த காலத்திலும் எந்த வகையிலும் குறையவில்லை .குறிப்பாக திராவிட கட்சிகள் சினிமாவால் மக்களை சீரழித்தன என்பதில் எனக்கு எள்ளளவிலும் ஐயமில்லை .அது எந்த அளவுக்கு சென்றது என்றால் எம்.ஜி.ஆர்.நடித்த ரிக்ஷாக்காரனுக்கு தேசிய விருது கிடைத்தது .அரசியல் நிர்பந்தம் காரணமாக அது நிகழ்ந்தது .அந்த படத்தைத் தவிர்த்துப் பார்த்தால் .அது போல மோசமான நடிப்புக்கு விருது வழங்கப்படவில்லை

Ramki said...

மிகவும் நல்ல நூல்.நான் என் சிறு வயதில் இந்த புத்தகத்தை படித்துள்ளேன் .மிகவும் அருமையான படைப்பு.நீங்கள் குறிப்பிட்டதுப் போல் ஜெயகாந்தன் அக்கிரகாரமாகட்டும் சேறியாகட்டும் மனிதர் அப்படியே மாறிவிடுவார் அந்தக் காலக்கட்டத்தில் அதை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன் (ஏன் இப்பொழுதும் எனக்குப பிடிக்கும்).அந்த காலத்தில் சினிமாவை பார்த்துச் சீரழிந்தவர்களை பார்த்திருக்கிறேன் .ஏன் இந்த காலத்திலும் எந்த வகையிலும் குறையவில்லை .குறிப்பாக திராவிட கட்சிகள் சினிமாவால் மக்களை சீரழித்தன என்பதில் எனக்கு எள்ளளவிலும் ஐயமில்லை .அது எந்த அளவுக்கு சென்றது என்றால் எம்.ஜி.ஆர்.நடித்த ரிக்ஷாக்காரனுக்கு தேசிய விருது கிடைத்தது .அரசியல் நிர்பந்தம் காரணமாக அது நிகழ்ந்தது .அந்த படத்தைத் தவிர்த்துப் பார்த்தால் .அது போல மோசமான நடிப்புக்கு விருது வழங்கப்படவில்லை

Simulation said...

வழிப்போக்கன்,

வருகைக்கு நன்றி.

- சிமுலேஷன்

Simulation said...

ராமகிருஷ்ணன்,

வருககைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

இந்தக் காலத்திலும், வாழ்க்கையில் ஓரளவுக்குக் கூடத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளாதவர்கள் ஒவ்வொரு புதுப் படத்தையும் (டிக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்கு மேல்) பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் என்ற பெயரில் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றார்களே என்று ஆதங்கமாகத்தான் இருக்கின்றது.

புதுப்படம் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள் பார்க்காவிட்டால் இவர்களுக்குத் தலையே வெடித்துவிடும்!

- சிமுலேஷன்

BalHanuman said...

சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972) எனக்கும் பிடித்த நாவல்...

சித்தாளு வாத்தியார் ரசிகை.அவளுடைய கணவன்
ரிக் ஷாக்காரனும் வாத்தியார் ரசிகன்...அவன் எப்பவும் வாத்தியார் படம் போட்ட பனியன் போட்டிருப்பான் அவள் சித்தாளு வெத்திலை பாக்கு போட்டு வாய் எப்பவும் சிவப்பாக இருக்கும்

அழகாக "சினிமாவுக்குப் போன சித்தாளு"வில் ஜெயகாந்தன் சொல்லியிருப்பார். தன் மனைவி தன்னுடனா, அல்லது எம்.ஜி.ஆருடன் படுத்துக் கொண்டிருக்கிறாளா என்கிற தவிப்பில் அவன் படும் பாடு அவனுக்கு மட்டுமானதல்ல.

கணவன் கண்ணீர்சிந்திக்கொண்டு சொல்வான்....

வாத்தியாரே...எல்லாருக்கும் hero வாக இருந்திட்டு எனக்கு மட்டும் வில்லனாயிட்டியேன்னு...

இந்த நாவல் பின்னர் தலைவாசல் விஜய் நடித்து திரைப்படமாகவும் வந்தது என்று நினைக்கிறேன்....

இந்தப் படத்தின் இயக்குனர் கௌதமன் கூறுகிறார்...

ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா?

உரையாடல்களின் மூலம் பாத்திரங்களைக் காட்டுவதில் ஜெயகாந்தன் பெரிய வெற்றி பெற்றுள்ளார் எனலாம். சான்றாக அவரது சினிமாவுக்குப் போன சித்தாளு என்னும் புதினத்தில் ஒருவர் பேசுவதைக் காண்போம்:

‘ராத்திரி ஒன்பது மணி எப்படா வரும்னு நெனைச்சிகினு வௌக்கு வெக்கிற நேரம் வரைக்கும் காத்துகினு இருந்த கம்சலை கொஞ்சம் பொயுது இருட்டினப்ப குளிக்கிறதுக்குப் போனா. பழுப்பாண்ட தான் பொம்பளைங்க எல்லாம் ராத்திரியிலே பொயுது இருட்டினத்துக்கப்புறம் வந்து குளிப்பாங்க.'

பாத்திரங்களின் தரத்திற்கேற்ப உரையாடலை அமைப்பதில், அதிலும் குப்பத்துப் பேச்சு,
ரிக் ஷாக்காரன் பேச்சு, அக்கிரகாரத்துப் பேச்சு இவற்றைப் படைப்பதில் கைதேர்ந்தவர் ஜெயகாந்தன்.

Ramki said...

ஆமாம் .எனக்கு வசனம் தெளிவாக நினைவில்லை.கம்சலை சொல்லுவாள் வாத்யாருடன் உல்லாசமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு கணவனுடன் உறவு கொள்வதாக கூறுவாள் ..
அப்படித்தான் அந்த காலக்கட்டத்தில் கீழ் மட்டத்துப் பெண்கள் கனவுலகத்தில் வாழ்ந்து வந்தார்கள் .வாத்யாரின் எச்சல் ஜூசை குடிக்க ஒரு கூட்டமே கூடியது .அந்த அளவிற்கு சினிமா மோகத்தால் தன்மானத்தை முற்றும் துறந்தார்கள் .அவர்களின் இழப்பு எம் ஜி ஆர் போன்ற நடிகர்களின் கல்லாவை நிரப்ப உதவியது .என்னவோ திரையில்நல்லவராக வருபவர் நிஜ வாழ்வில் தங்கள் துயரங்களைத் தீர்க்கப் போவதாக நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுப்பாட்டை புரிந்துக்கொள்ளாமல் ஏமாறுகிறார்கள் .

BalHanuman said...

ஜெயகாந்தன் கூறுகிறார்....

கண்ணதாசன் இலக்கிய இதழில் "சினிமாவைக்குப் போன சித்தாளு" என்று ஒரு தொடர்கதை எழுதினேன். அந்தக் கதை எம்.ஜி.ஆரை மையமாக வைத்து எழுதப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எம்.ஜி.ஆர். கோபம் கொள்வார். விபரீத விளைவுகள் வரும் என்றெல்லாம் பூச்சசாண்டி காட்டினார்கள். தமிழகத் தாய்க்குலத்தின் சினிமா ரசனை கீழ்த்தரமாக இருக்கிறது என்று சித்தரிப்பதே அந்த கதையாகும். ஆனால் "சினிமாவுக்குப் போன சித்தாளு"வைத் தொடர்ந்து படித்தார் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தைச் சித்தரித்திருக்கிறார். தவறில்லை என்று பின்னர் அவரே பாராட்டியதாக அறிந்தேன்.

--http://www.koodal.com

BalHanuman said...

R P ராஜநாயஹம் கூறுகிறார்....
http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_14.html

எம்ஜியார் படங்கள் எப்படி கலாச்சார சீரழிவுக்கு வழி வகுத்தன என்பதை பேசிய நாவல் '. சினிமாவுக்கு போன சித்தாளு '.

தமிழ் வர்த்தக சினிமாவையும் எம்ஜியாரையும் கடுமையாக விமர்சித்த நாவல்.

Simulation said...

ராஜநாயஹகத்தின் சுட்டிக்கு நன்றி பால்ஹனுமான்.

- சிமுலேஷன்