Sunday, October 24, 2010

பாரதி இருந்த வீடு - சுஜாதா- நாடகம் - நூல் விமர்சனம்

தலைமுறை இடைவெளி கொண்ட தாத்தாக்களின் கதையென்றால் சுஜாதாவுக்கு அல்வா. அதில் ஒன்றுதான் "பாரதி இருந்த வீடு்". இதில் ஓய்வு பெற்ற சுப்ரமண்ய அய்யர்தான் கதாநாயகர். இரண்டு மருமகள்களிடமிருந்தும், 'அம்மா, தாயே!' என்று அவர்கள் பின்னே செல்லும் பையன்களிடமிருந்தும்  படாதபாடுபடுகின்றார். திருவல்லி்க்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஒரு வீடு மட்டுமதான் அவருக்குச் சொந்தம். அதில் ஒரு டைலர் 22 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு 22 வருடமாகக் குடியிருந்துகொண்டிருக்கின்றான். பாரதியார் கூட இந்த வீட்டில் ஒரு மாசம் இருந்திருக்கின்றாராம்.

பேரன் பேத்திகளின் நடவடிக்கைகள் கூட தாத்தாவுக்குப் பிடிக்கவில்லை. அத்னை அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்கின்றார். ஒரு பைசாவுக்கும் வக்கிலாமல், ஆனால் சதா காலமும் தனது குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டேயிருப்பது மருமகளுக்க்குப் பிடிக்காத காரணத்தால் அவரை டில்லியிலிருக்கும் இன்னொரு பையன் வீட்டிற்கு அனுப்பத் திட்டம் போடுகின்றாள். இரண்டு பையன்கள் வீடுமே நரகமாக இருப்பதாக எண்ணுவதால், வேறு என்ன செய்யாலாமென்று திகைத்துக் கொண்டிருக்கும் சுப்ரமண்ய அய்யருக்கு நண்பர் மணி உதவுகின்றார்.

இதற்கிடையில் 'பாரதி' தங்கியிருந்த காரணத்தால் தாத்தாவின் வீடு நினௌச் சின்னமாக அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகத் தகவல் வருகின்றது. அதற்குப் பிறகு அவருக்குக் கிடக்கும் ராஜ மரியாதைதான், தற்கால சமூகத்தின் மேல்  சுஜாதா வைக்கும் பார்வை. மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்ப்ட்ட இந்த நாடகத்தை அரங்கேற்றினால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் போல. அவ்வளவு சிறிய கதை. ஆனால் அவ்வளவு சிறிய கதைக்குள்ளாக, சமூகத்தின் மேலே உள்ள எள்ளல், அங்கதம், சின்னச் சின்ன நகைச்சுவை ஆகியவற்றை வெளிப்படுத்த்துகின்றார். கதை எண்பதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஜுனூன் (பிடிவாதம்) போன்ற தமிழாக்கக்கத் தொடர்கள் மீது சுஜாதவுள்ள கடுப்பு பல இடங்களில் வெளிப்படுகின்றது. மனமுதிர்ச்சி சற்றே குன்றியுள்ள சுவேதாவை கட்டாயத்தின் பேரில் பெண்பார்க்க வந்த ரவியிடம், "ப்ரபவ, விபவ" என்று தமிழ் வருடப் பெயர்கள அடுக்கும் போதும், தொண்ணூதொம்பது, தொண்ணூத்தெட்டு என்று நூறிலிருந்து தலைகீழாக எண்ணும்போது, ரவி பிடிக்கின்றான் ஒரு ஓட்டம். நாடக அரங்கினில் பார்வையாளர்களிடமிருந்து பலத்த சிரிப்பைப் கட்டாயம் பெற்றிருக்கும் இந்தக் காட்சி.

கருத்து பொதிந்துள்ள 60 பக்கங்களுக்கும் குறைவான "பாரதி இருந்த வீடு" சுஜாதாவின் ஒரு சுவையான நாடகம்.

குமரிப்பதிப்பகத்தின் இந்த வெளிய்யீட்டில், "ஆகாயம்" என்ற விஞ்ஞானக் கதையும், உலகப் பிரசித்தி பெற்ற டெலிவிஷன் நாடகங்களில் ஒன்றான "Rabbit Trap" என்கிற ஜே.பி.மில்லரின் நாடகத்தை ஒட்டி எழுத்தப்பட்ட "முயல்" என்கின்ற மத்யமர் ரகக் கதையும் அடக்கம். "ஆகாயம்" அவ்வளவாக என்னைக் கவரவில்லை. ஆனால்,  "முயல்" என்னை பெரிதும் கவர்ந்தது. பின்னர் ஒரு நாளில அதனைப்பற்றி எழுதுகின்றேன்.

தலைப்பு: பாரதி இருந்த வீடு  (நாடகம்)
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: குமரிப் பதிப்பகம்

5 comments:

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

On a related note --

பூர்ணம் விஸ்வநாதனிடம் ஒரு கேள்வி....

அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது ?

"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும்.

அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி ‘நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்’ என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.

Simulation said...

பால்ஹனுமான்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

- சிமுலேஷன்

Simulation said...

எழுத்தில் பேத்தி ‘நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்’ என்று கேட்கும்போது, "மெந்தியக் குழம்பு நன்னா இருந்தது" என்று தாத்தா சொல்கிறார்.

நாடகத்தில் பூர்ணம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

- சிமுலேஷன்

BalHanuman said...

சுஜாதா கூறுகிறார்.... (கற்றதும் பெற்றதும் -- பாகம் II )

'பாரதி இருந்த வீடு' என்கிற என் நாடகத்தில் ஒரு காட்சி. பார்க்கில் உட்கார்ந்திருக்கும் பெரியவரிடம் ஒரு ஜோல்னாப்பை இளைஞன் அணுகி, "ஸார்...நான் ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கிறேன். வெச்சிக்கிட்டு பத்து ரூபா கொடுங்க..." என்பான்.

"என்ன கவிதைப்பா ?" என்று பரிவுடன் கேட்பார் பெரியவர்.

"நெஞ்சு பொறுக்குதில்லையே.... இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால்...."

"ஏம்பா, இது சுப்ரமணிய பாரதி எழுதினது போலிருக்கே !"

"அட, ஏற்கனவே எழுதிட்டாரா ?' என்பான், கஞ்சாவுக்குக் காசு கேட்க வந்த இளைஞன்.

Simulation said...

பால்ஹனுமான்,

நன்றி!

- சிமுலேஷன்