09.10.11
திருமதி. சபீதா. இ.ஆ.ப
செயலர்
பள்ளிக் கல்வி இயக்ககம்
பள்ளிக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு அரசு
சென்னை
மதிப்பிற்குரிய கல்வித் துறை செயலருக்கு,
பொருள்: மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச மடிக் கணிணியினை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகள்
இலவச மடிக்கணிணியினைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள மகிழ்திருக்கும் இந்த வேளையில், சமூக ஆர்வலர்கள் பலர் இந்த மடிக்கணிணிகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்று கவலை தெரிவித்துள்ளனர்கள். இவை முறையாகப் பயன்படுத்தப்படாமல் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுமோ என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். தேவைற்ற இணைய தளங்களை அணுகுவது தடுக்கப்பட்டும், மடிக்கணிணியில் தேவையற்ற அம்சங்கள் தடுக்கப்பட்டும் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படும் வாய்ப்புக்களை தடுக்க அரசு ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுத்திருக்குமென்று நம்புகின்றேன்.
மாநிலக் குடிமகன் என்ற முறையில், மாணவர்கள் தங்களது மடிக்கணிணிகளை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகளை வைக்க விரும்புகின்றேன். கீழ்க்காணும் இந்த யோசனைகளை தங்கள் துறை கவனமாக ஆராய்ந்து அமுல்படுத்த வேண்டுகின்றேன்.
1. வலைப்பதிவுகள்:-
யோசனை – ஒவ்வொரு மாணவனோ அல்லது மாணவர்கள் குழுவோ வலைப்பதிவு துவங்க வேண்டும். இந்த வலைப்பதிவில் சமூகக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், சொந்தமாக வரைந்த ஓவியங்கள், வண்ணப் படங்கள், ஒலித் தொகுப்புகள், கவிதைகள் ஆகியவற்றை இடுகையாக இடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகளை பள்ளி அளவில் ஒரு பொது வலைப்பதிவாக உருவாக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறந்த வலைப்பதிவினை தேர்தெடுக்கலாம். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ அரசு சிறந்த வலைப்பதிவுக்கான சுழற்கோப்பை வழங்கலாம். தேவையானால் தனியார் நிறுவனங்களிடமிருந்து இதற்கான நிதியும் பெறலாம். வலையுலகில் சிறந்த பதிவர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு சிறந்த வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்யலாம். இந்த யோசனையை அமுல்படுத்தும் முன்னர் “வலைப்பதிவுகள் இடுவது எப்படி?” மற்றும் “இலக்கியத் திருட்டு ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?” (Plagiarism) குறித்த பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்.
பயன்கள் – மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தவும், மேலும் தங்கள் திறமைகளை வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிப்பதுவது எப்படி என்றும் கற்றுக் கொள்வார்கள்.
2. விக்கிப்பீடியா – கட்டற்ற கலைக் களஞ்சியம்
யோசனை – ஒவ்வோரு பள்ளியிலும் விக்கிப்பீடியா என்ற கட்டற்ற கலைக் களஞ்சியம் குறித்து ஒரு பட்டறை நடத்தப்பட வேண்டும். இதன் பின்னர் ஒவ்வொரு மாணவனையும் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வரைய ஊக்குவிக்க வேண்டும். இந்தக் கட்டுரைகள் மாணவர்கள் வசிக்கும் இடத்திலுள்ள சிறப்பான இடங்கள் அல்லது புகழ்பெற்ற மனிதர்கள் குறித்து இருக்கலாம். ஒவ்வொரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு கட்டுரைகள் படைக்க வேண்டும் என்றும் வரையறை செய்து கொள்ளலாம். விக்கிபீடியா மட்டுறுத்துநர்கள் ஒவ்வொரு கட்டுரைகளையும் மட்டுறுத்தி வெளியிடுவதால் பள்ளி ஆசிரியர்கள் இதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
பயன்கள் - தமிழ்நாட்டில் உள்ள அரிய இடங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து மாணவர்கள் மூலம் அனைத்துலக மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாகும். மாணவர்களுக்கும் வலைப்பதிவில் எழுதுவதற்கும், கலைக் களஞ்சியத்திற்கு எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் புரிந்து கொள்ளலாம்.
3. வினா வங்கி:-
யோசனை – வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடந்து முடிந்தவுடன், மாணவர்களே வினா வங்கி தயாரிக்கச் சொல்ல வேண்டும். இந்த வினா வங்கியினை ஆசிரியர்கள் மட்டுறுத்தலாம். பின்னர் அனைத்து வினா வங்கிகளும் தொகுக்கப்பட்டு ஒரு மாபெரும் வினா வங்கியினை உருவாக்கலாம்.
பயன்கள் – மாணவர்களே ஒவ்வொரு பாடத்தினையும் மாணவர்களே படித்து விட்டு, வினா வங்கி தயாரிப்பதால், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொள்ள முடியும்.
4. டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு:-
யோசனை - ஒவ்வொரு பள்ளியிலும் கலையாற்றல் மிக்க மாணவர்களைக் கணடறிந்து அவர்களுக்கு டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு மென்பொருள்களான போட்டோஷாப், பேஜ்மேக்கர் அல்லது ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்த மூலநிரல் மூலம் கிடைக்கும் மென்பொருள்களில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்தக் குழு பள்ளி மலர், செய்தி மடல், நினைவு மலர், பள்ளிக் கண்காட்சிக்கான சுவரொட்டி ஆகியவை தயாரிப்பதில் உதவி செய்யலாம்.
பயன்கள் – மாணவர்கள் தங்கள கலையாற்றலை வளர்த்துக் கொள்வதுடன், பள்ளிக்குத் தேவையான இதழியல் பொருள்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கலாம்.
5. குவிஸ் க்ளப் என்ற புதிர் மன்றங்கள்:-
யோசனை – ஒவ்வொரு பள்ளியிலும் குவிஸ் க்ளப் எனப்படும் புதிர் மன்றங்களை ஆரம்பிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். பல இலவச கல்வி மென்பொருட்கள் கிடைத்துள்ளதாலும் இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்துள்ளதாலும் மாணவர்கள் புதிர்களைச் சுலபமாய்த் தொகுத்து வாரம் ஒரு முறை புதிர் நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்தப் புதிர்கள் பொது அறிவு சார்ந்ததாகவோ அல்லது ஒரு கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகவோ இருக்கலாம்.
பயன்கள் – புதிர்ப் போட்டிகள் வைப்பதன் மூலம், மாணவர்கள் இலவச மென்பொருட்களையும், இணையத்தினையும் முறையாகப் பயன்படுத்தினார்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.
தங்கள் உண்மையுள்ள
சி.சுந்தரராமன்
2 comments:
இணைய வசதியை பள்ளியில் தனது இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம்.
நல்ல பல அறிய யோசனைகள் நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment