Wednesday, September 02, 2015

உய்விக்க வந்த உயவு எண்ணெய்

"க்ரீச்...க்ரீச்...க்ரீச்...", என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்த சைக்கிளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தினேன்.

"சுந்தர், அந்த ஆயில் கேனை எடுத்து ரெண்டு சொட்டு எண்ணெய் விடப்பா. ரொம்ப சத்தம் வருது."

அப்பா சொன்னபடியே, ரெண்டு சொட்டு எண்ணேய் விட்டேன். க்ரீச் சத்தம் மாயமாய் மறைந்து விட்டது. சிறுவனாக இருந்த எனக்கு 'இது என்ன மேஜிக்?" என்று புரியவில்லை. பிறகு பெரியவனான பின்னர்தான் புரிந்தது அது Lubricating Oil எனப்படும் உயவு எண்ணேய் என்றும், அது உராய்வினைக் குறைக்கப் பயன்படுவது என்றும்.

இரண்டு பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்கும்போதும், உரசும் போதும், உராய்வு ஏற்படுகின்றது. அதன் விளைவாக வெப்பம் ஏற்படுகின்றது. நீங்கள் உங்கள் கைகளைக் குவித்து வைத்துக் கொண்டு வேகமாக உரசிப்  பாருங்கள். அப்போது வெப்பம் உண்டாவதை உணருவீர்கள். ஒரு எஞ்சினிலோ, பலவித பாகங்கள் வெகு வேகமாக இயங்குகின்றன. ஒரு சிலிண்டரில் ஒரு பிஸ்டன் இயங்குவதாக இருக்கட்டும். அல்லது இரண்டு பற்சக்கரங்கள் ஒன்று கூடி இயங்குவதாக இருக்கட்டும். அல்லது இரு பற்சக்கரங்கள் ஒரு செயின் மூலம் இயங்குவதாக இருக்கட்டும். அப்போது உண்டாகும் வெப்பம் வெகு அதிகமாக இருக்கும். உராய்வின் காராணமாக வெப்பம் மட்டும் உண்டாவதில்லை. சப்தமும் உண்டாகின்றது. மிக முக்கியமாக உரசும் பொருட்களின் தேய்மானமும் ஏற்படுகின்றது.

இப்படிப்பட்ட தேய்மானம், வெப்பம், சப்தம் ஆகிய பாதிப்புகளிலிருந்து பொருட்களை, குறிப்பாக வெகு வேகத்தில் இயங்கும் என்ஜின்களை உய்விக்க வந்த பொருளே Lubricating Oil எனப்படும் உயவு எண்ணெய் ஆகும். ஆகவே உயவு எண்ணெயின் தலையாய நோக்கம் உராய்வினைக் குறைத்து பொருட்சேதத்தினையும் குறைப்பதாகும். அடுத்த நோக்கம் உராயும் போருட்களுகிடையே ஏற்படும் வெப்பத்தையும், சப்தத்ததையும் குறைப்பதாகும். சில சமயம் தேய்மானத்தினால் எற்படும் கசடுகளை அகற்றுவதும் கூட உயவு எண்ணெயின் பயனாகும்.

உயவு எண்ணெய் பல்வேறு குணங்களிலும், பல்வேறு ரகங்களிலும் கிடைக்கின்றனஉதாரணமாக உங்களது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலுடன் சேர்த்துப் போடும் எஞ்சின் ஆயில் என்பது வேறு. கியர் பாக்ஸிற்குப் போடும் ஆயில் என்பது வேறு. பயன்படுத்தப்படும் தேவைக்கேற்ப இந்த எண்ணெய்களின் விஸ்காசிடி எனப்படும் பாகுத்தன்மை வேறுபடும். கனரக என்ஜின்களுக்கு அதிகமான பாகுத்தன்மை கொண்ட எண்ணெய் தேவைப்படும்.

நீங்கள்  பெட்ரோல் பங்க்கிற்கோ அல்லது பராமரிப்புப் பணிமனைக்கோ சென்று, உயவு எண்ணெய் வாங்கும்போது அதன் விலையினைக் கவனித்திருப்பிர்கள். “இது என்ன பெட்ரோலின் விலையினை விட உயவு எண்ணெயின்   விலை அதிகமாக இருக்கின்றதே!”  என்று வியந்திருப்பீர்கள். பெட்ரோல், டீசல், கெரசின், உயவு எண்ணெய் எல்லாமே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணேயினை வடித்தெடுத்து, சுத்திகரிப்பு செய்யும் போது கிடைக்கும் பொருட்கள்தான். ஆனால் உயவு எண்ணெயின் விலை மட்டும் அதிகம். அது ஏன்? அரசாங்கத்தின் கொள்கை முடிவின் காரணமாக டீசல், கெரசின் போன்ற பொருட்கள் சற்று விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால் உயவு எண்ணெயின் விலை மார்க்கெட்டிங் கம்பெனிகளினால், உற்பத்திச் செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுபவைஆலையில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு கிடைப்பதாலும், அதில் அடிடிவ்ஸ்எனப்படும் பல்வெறு சிறப்பு வேதிப் பொருட்கள்  சேர்க்கப்படுவதாலும் உயவு எண்ணெயின் உற்பத்திச் செலவு மிக அதிகம். அதனால்தான் அது அதிக விலைக்கு விற்கப்படுகின்றது

ஆனால் உயவு எண்ணெயின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியரோ அல்லது கெமிகல் எஞ்சினியரோ  அதன் பயன்பாட்டில் எந்த வித சமரசம் செய்து கொள்ள மாட்டர்கள். குறிப்பிட்ட கால அளவுகளில், என்ஜினில் இருக்கும் உயவு எண்ணெயின் அளவினையும், தரத்தினையும் சோதனை செய்து, தேவைப்பட்ட அளவு நிரப்பிக் கொள்வார்கள். அல்லது பழைய எண்ணேயினை முழுவதுமாக வடித்து விட்டு, புதிய உயவு எண்ணெயினை மாற்றிக் கொள்வார்கள். சரியான அளவில் நிரப்படும் தரமான உயவு எண்ணெய் எஞ்சினது வாழ்நாளை அதிகரிக்கும்.


நீங்கள் இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வைத்திருக்கின்றீர்களா? வாகனம் வாங்கிய பின்னர் பணிமனையில் இலவசப் பராமரிப்பு முடித்து வெகு நாட்களாகி விட்டதா? உங்களது வாகனத்தின் உயவு எண்ணெயின் அளவு, அதன் தரம் ஆகியவை குறைந்திருக்கலாம். நேரம் கிடைக்கும்போது பணிமனைக்குச் சென்று அவற்றைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எஞ்ஜின்களில், உராய்வினக் குறைத்து அவற்றினை உய்விக்க வந்தவை உயவு எண்ணெயாகும்.

ஜூன் மாதம் 18ஆம் தேதி ஆல் இண்டியா ரேடியோ சென்னை வானொலியில் ஒளிபரப்பான எனது அறிவியல் பேச்சு

- சிமுலேஷன்

0 comments: