Saturday, August 20, 2005

சூடான் அனுபவங்கள்


 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான் உள்ளது. படம் பார்த்துக் கதை சொல்லும் நண்பர்கள், கொஞ்சம் ஓவராகவே பீலா விட்டிருகிறார்கள் என்று புரிந்தது. சூடான் ஒன்பது நாடுகளால் சூழப்பட்ட பெரிய நாடு. எகிப்துக்குக் கீழே உள்ள நாடு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.


கடந்த நாலு வருஷமாக, கச்சா எண்ணை (க்ரூட் ஆயில்) உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி என்று புஷ்டியாகவே வளர்ந்து வருகிறது சூடான். இந்த எண்ணைப் பணத்தை சூடான் உள் நாட்டுப் போருக்கு உபயோகிப்பதாக மேலை நாடுகள் குற்றச்சாட்டு. அதனால் கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் பல முதலீடுகள் செய்ய இருப்பதால், அடுத்த சில வருடங்களில் பல இந்திய முகங்களை கார்ட்டுமில் பார்க்கலாம். இட்டிலி, வடை, சாம்பார் கிடைக்கக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.


கார்ட்டூமிலுள்ள சூடான் மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள். இந்தியர்கள் பால் அன்பு கொண்டவர்கள். முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் இங்கு வந்து ஒரு பாலம் கட்டியுள்ளார்கள். நிறைய இடங்களில் வேப்ப மரமும் நட்டுள்ளார்கள். ஆனால் வேப்ப மர கல்யாணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. வழக்கம் போல எல்லா நாடுகளிலும் இருப்பது போல, நூறு முதல் இருனூறு குஜராத்திக் குடும்பங்கள் உள்ளன இங்கு. அவ்வப்போது சில ஹிந்தி சினிமா படங்களும் திரையிடப்படுகின்றன. ஓரிரண்டு இந்திய உணவு விடுதிகளும் உள்ளன. வெள்ளை நைல் நதியும்,நீல நைல் நதியும் சங்கமிக்கும் கூடுதுறை கார்ட்டுமாகும். நைல் நதியில்முதலைகள் நீந்திச்செல்வது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்வது சகஜமான காட்சியாகும்.
 
 ஓம்துர்மானில் உள்ள மார்க்கெட்டில் முதலை தோலினால் ஆன ஹாண்ட் பேக் கிடைக்கும். மகா முதலை ஹாண்ட் பேக் ஒன்று வாங்கினால், ஒரு சின்னக் குட்டி முதலை பர்ஸ் இலவசம். முதலை மூஞ்சியுடன் கிடைக்கும் இந்த ஹாண்ட் பேக்குகளை படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுடச் செய்கிறார்களோ என்று ஒரு சந்தேகம்.


இந்த மக்கள் விரும்பி அருந்தும் பாரம்பரிய பானம் கர்கடே ஆகும். சிவப்புக் கலரில் சில்லென்று இருக்கும் இந்த கர்கடே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உ.பா என்று எண்ணி விடாதீர்கள். செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தப் பானம் உடம்புக்கு மிகவும் நல்லதாம். தற்போது கர்கடே டிப் சாஷே ஆகவும் கிடைக்கிறது. அடுத்து அரதேப் என்ற புளியினால் ஆன பானத்தையும், அம்ருத் என்ற் கொய்யாப் பழச் சாறும் குடிக்கிறார்கள்.

ஃபூல் என்ற வேகவைத்த பீன்ஸினால் (mashed beans) ஆன ஒரு கொசப்பலான உணவு. சுமார் இரண்டு இன்ச் எண்ணையால் (கச்சா எண்ணை அல்ல) மூழ்கடிக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு தட்டில் வைத்து ஐந்து அல்லது ஆறு பேர், ப்ரெட்டுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது சம்பிரதாய வழக்கம். நோ எச்சில்; நோ பத்து.

எண்ணை உற்பத்தி நன்றாக இருந்தாலும், தற்போது, மற்ற வளைகுடா நாடுகள் பக்கத்தில் கூட வர முடியாது சூடானால். வசதியானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ப்ரென் ட்ரெய்னால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நான் ரெஸிடெண்ட் சூடானீஸ் ஆடம்பர பங்களாக்கள் கட்டுகிறார்கள். இந்த பங்களாக்களில் காவல் புரியும் மால் ந்யுட்ரிஷியன்கள் சுட்டெரிக்கும் வெயிலில், வெளியிலே உட்கார்ந்திருந்து கருகிக் கொண்டிருப்பார்கள். போதாதென்று, அனேகமாக எல்லா பங்களாக்கள் வாசலிலும், டீசல் ஜெனெரேட்டர்கள் வேறு புகை கக்கியபடி இருக்ககும்.

உள்னாட்டுப் போர் போன்ற அரசியல் விவகாரங்கள் முடிந்து விட்டால், தனக்குள்ள எண்ணை வளத்தினால் வெகு விரைவில் வளைகுடா நாடுகளைப் போல சூடான் வளர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் விஜயம் செய்த போது எப்படி இருந்தது; இப்போ எப்படி ஆகி விட்டது என்று ஒரு நாள் ஓட்டலாமே. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது கீழை நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய எல்லோரும் விரும்பும் எண்ணும் இன்னாளில், எனக்கு இந்த சூடான் பயணம் ஒரு புது வித அனுபவம்தான்.

- சிமுலேஷன்

1 comments:

ஒரு பொடிச்சி said...

//கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு
உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.//
நல்ல (அனுபவப்) பகிர்வு. சூடான் என்றதும் படிக்க ஆரம்பித்தேன்; சுவாரசியமாக இருந்தது.
நன்றி.