Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி



பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி ---------------------------------------------------------------------------------------------
அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது. அதனை பொதுவாகப் பூனை என்று சொல்லுவதைவிட, புஸ்ஸி என்று சொல்லுவதையே எல்லோரும் விரும்பினர். அனுதினமும் வந்து போகும் புஸ்ஸியின் போக்கில், சிறிது மாற்றங்கள் தென்படலாயின. அது 'மாதமா'யிருக்கிறதோ என்னமோ என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னது சரியாய்த்தான் போயிற்று. அன்று அதிகாலை வாசலிலுள்ள நெல் ரூமிலிருந்து, புஸ்ஸியிடமிருந்து பலமான சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில், 'ம்மியாவ், ம்மியாவ்', என்று காதைக் கிழிக்கும் ஒரே சப்தம். புஸ்ஸி குட்டி போட்டு விட்டாள் போல உள்ளது என்று அம்மா போய்ப் பார்த்தாள். ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டு, அப்பா நெல் மூட்டைகளுக்கிடையே எட்டிப் பார்த்து, புஸ்ஸி குட்டி போட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். அம்மா ஒரு கொட்டங்கச்சியில் பால் எடுத்து வந்து நெல் ரூமில் வைத்தாள். நாங்கள் அத்தனை பேரும் ஒடி வந்து, குட்டிகளைப் பார்க்க வந்தோம். மூட்டைகளின் பின்னால், எதோ கொசகொசவென்று தெரிந்தது. மொத்தம் ஆறு குட்டிகள், இல்லை, இல்லை ஏழு என்றான் அண்ணா. இத்தனை நாட்கள் சாதுவாக இருந்த புஸ்ஸி, ஆக்ரோஷமாக, பல்லைக் காட்டியபடி "பர்ர். பர்ர்ர்" என்று சப்தம் இட்டபோது, ஏதோ புலியைப் பார்ப்பது போல, நாங்களெல்லோரும் பயந்தே போய்விட்டோம். அப்பா எல்லோரையும் கவனமாக இருக்கும்படி மீண்டும் எச்சரித்தார். பூனைக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் சாப்பிடாமலேயே, எல்லோரும் பள்ளிக்கு ஓடினோம்.

மாலை வேகவேகமாக வந்து, டிபன் முடித்து, பூனைக்குட்டிகளைப் பார்க்க ஓடினோம். இப்போது புஸ்ஸி அங்கு இல்லை. குட்டிகளைச் சற்றுக் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது ஏண்ணிப் பார்த்தால், மொத்தம் ஐந்து தான்.

"அம்மா, அம்மா, இங்கே வாங்கோளேன், பூனைக்குட்டி ரெண்டைக் காணோம்".

"அம்மாப்பூனைதான் சாப்பிட்டிட்டுருக்கும்", என்றாள் கீரைக்காரப் பட்டம்மா.

"என்னது அம்மாப்பூனை சாப்பிட்டுருக்குமா? என்று ஒரே நேரத்தில் கேட்டொம்.

"ஆமாங்கண்ணு. குட்டி போட்ட பூனைக்கு சத்தி வேணுமில்லே. அதனாலே ஒண்ணு, ரெண்டு குட்டிகளை சாப்பிட்ரும்"

எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. புஸ்ஸி வந்தாலே அதனைத் துரத்தி அடிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.

இப்போது குட்டிகள், மூட்டையின் மேல் தமது கூரான நகங்களைக்கொண்டு ஏற முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தன. ஏற முயற்சி செய்வதும், சறுக்கி விழுவதும் பார்க்க முகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த விளையாட்டில், ஐந்தில், இரண்டு மட்டும் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தன.

"பங்கஜம் சித்தி மாதிரியே தூங்கிண்டுருக்கு பாரு" என்றான் அண்ணா.

"நீ மொதல்ல பங்கஜம் சித்தியப் பாத்திருக்கியாடா?" என்றாள் பத்மினி.

"தெரியாது. அம்மாதான் சொல்லுவா; பங்கஜம் சித்தி மாதிரி தூங்காதேன்னு."

கரெக்ட். அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு. மைசூரிலுள்ள பங்கஜம் சித்தி, ஒரு தூங்குமூஞ்சியென்று. எப்போது பார்த்தாலும் தூங்கிண்டே இருப்பாளாம்.

இந்த இரண்டு தூங்குமூஞ்சிப் பூனைகளுக்கும், பங்கஜம் சித்தி போலெவே மூஞ்சியும் இருந்தன. என்ன, ஒண்ணு சின்னது; இண்ணோண்ணு கொஞ்சம் பெரிசு. எனவே, சின்னதுக்கு, 'சின்னப் பங்கஜம்' என்றும், பெரியதுக்குப் 'பெரிய பங்கஜம்' என்றும் பெயர் வைத்தோம்.

ஒரு பூனைக்குட்டி மட்டும், மூட்டை மீது பாதிவரை ஏறிவிட்டான். அங்கிருந்து மற்ற குட்டிகள் மீது ஒரே பாய்ச்சல். அப்பப்ப, நகங்களை வேறூ விரித்துக் காட்டுதல், பற்களை வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்துதல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தான். வீரதீர பராக்கிரமசாலியானஇந்தப் பூனைக்குட்டிக்கு, 'சூரப்புலி' என்று பேர் வைத்தோம்.

அடுத்தவனும் கிட்டத்தட்ட சூரப்புலியாவே இருந்தான். ஆனால், உருவம் மட்டும் சற்றே வித்தியாசம். கொஞ்சம் கட்டி முட்டியாக இருந்தான். மிருதுவான உடம்பில், வயிற்றுப் பாகத்தில் எலும்புகள் கட்டியாகத் தெரியும். அதற்கு என்னமோ, அண்ணா 'ஆழ்வார்ப் பேட்டை' என்று பெயர் வைத்தான், அவனுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் தமிழ்ப் பாடத்தில் வந்த, "குடை" என்று வந்த பாடலில், வந்த ஆழ்வார்ப் பேட்டை என்ற வந்த பெயர் பிடித்திருந்தது. அதனையே இரண்டு நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பூனைக்குட்டிக்குப் பேராக வத்து விட்டான். அவன் எப்போது அப்படித்தான். பாடத்தில் ஏதேனும், புதுமையாகப் பேர் ஒன்று கிடைத்து விட்டால் போதும், அதனையே அலப்பிக்கொண்டிருப்பான். 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', என்று அக்காவின் நண்பர் வீட்டுக்குச் சென்று உளறிக் கொண்டிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது ஒரு தனிக் கதை.

நாங்கள் எல்லோருமே கடைசியாகப் பார்த்தது ஒரு கலக்கலான கரும்பூனைக்குட்டி. இந்தக் கரும்பூனக்குட்டி ரொம்ப ரொம்பவே அழகாக இருந்தது. ஸாஃப்டாக, அப்போதுதான் குளித்துவிட்டு வத்த கைக்குழந்தையைப் போல இருந்தது. அதனைத் தொட்டுப் பார்க்க எல்லொருக்கும் ஆசை. அண்ணா, தான் ஒரு தைரியசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று, அந்தக் கரும்பூனைக்குட்டியைக் கையால் தூக்கினான், "ம்மியாவ். மீயாவ்" எண்று கத்தத் தொடங்கின அடுத்த நிமிடம், எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் வந்தது புஸ்ஸி. அண்ணா கையில் இருந்த குட்டியைப் பாய்த்து வந்து தனது வாயால் கவ்வி எடுத்து சென்றது.

"போதும் பூனையோட விளையாடினது. போய்த் தூங்குங்கோ" என்று அப்பா சப்தம் போட்டார்.

மறுநாள் நெல் ரூமில் போய்ப் பார்த்தால், புஸ்ஸியையும் காணவில்லை. குட்டிகளையும் காணவில்லை. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறும்தான் ஆஃபீஸ் ரூமுலிருந்து, குட்டிகளின் சப்தம் வருவதைப் பார்த்தோம். 'தாய்ப் பூனை, குட்டிகளை, இப்படி அடிக்கடி இடம் மாற்றி கொண்டேயிருக்கும்', என்று பட்டம்மாவிடம் சொல்லத் தெரிந்து கொண்டோம். புஸ்ஸி வந்து அந்தக் கரும்பூனைக்குட்டியை நாக்கால் நக்கிக் கொண்டேயிருந்தது. இந்தப் பூனைக் குட்டியிடம், ஒரு வெள்ளை முடி கூடக் கிடையாது. அத்தனையும் கருப்பு முடி. புஸு, புஸுவெனெ பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த, இந்தக் குட்டியை மட்டும் புஸ்ஸி, தனியாகக் கவனிப்பது போலத் தோன்றியது. 'அழகான குட்டி என்று அதிகப் பெருமையா? இல்லை, கறுப்பாக இருக்கும் குட்டிக்கு தனிக் கவனிப்பா', என்று புரியவில்லை. ஆனால், புஸ்ஸிக்கு, இந்தக் கறுப்பன் மட்டும் செல்லம் என்று புரிந்தது. எங்களுக்கும் செல்லமாகி விட்ட, இந்த கரும்பூனக்குட்டிக்கு 'செல்லம்' என்றே பெயர் வைத்தோம். எப்படியோ, ஐந்து குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் அன்று முடிந்தது.

வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டு, ஓடோடி வருவோம். அம்மாவிடம் கேட்டு, கொட்டாங்கச்சியில் பால் வைப்போம். சின்னப் பங்கஜமும், பெரிய பங்கஜமும் பல நாட்கள் பால் குடிக்கக்கூட எழுந்து வராமல், தூங்கிக் கொண்டேயிருக்கும். சூரப்புலிக்கும், ஆழ்வார்ப் பேட்டைக்கும் பால் குடிப்பதிலே, பலத்த சண்டை நடக்கும். செல்லம் மட்டும் தனியாக ஒய்யாரமாக வந்து பால் குடிக்கும் அழகே தனிதான். குட்டிகள் பெரிதாகப் பெரிதாகப் புஸ்ஸியின் வருகை குறைந்து கொண்டே வரத் தொடங்கியது.

ஐந்து பூனைக்குட்டிகளுக்கும் விளையாட்டுகள் பல காண்பிப்போம். சோடா மூடிகளை, ஹாலின் இந்தப் பக்கதிலிருந்து அந்தப் பக்கத்திற்கு, முன்னங்கால்களால், ட்ரிபிள் பண்ணிக் கொண்டு செல்வது பார்க்க, மிகவும் நன்றாக இருக்கும்.அப்புறம் சணல் உருண்டைகளைப் போட்டு அவற்றைக் குதறிக், குதறி விளயாடும் அழகு இருக்கிறதே. அதனைப் பார்த்தால்தான் புரியும். சொன்னால் புரியாது. உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் செல்லத்தைக் காட்டி, அதன் புகழ் பாடாமல் இருக்கவே மாட்டோம்.

அன்றைக்குச் சாப்பிடும்போது, சித்தப்பா கல்யாணம் குறித்து அப்பா சொன்னார், மெட்ராஸில் நடக்கவிருக்கும் வேணுச் சித்தப்பா கல்யாணம் என்றதுமே எல்லோரும் துள்ளிக் குதித்தோம். வெள்ளியன்று மாலை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று, அக்கா பூனைக்குட்டிகளை என்ன செய்வது என்று கேட்டாள். அவள் எங்களுடைய எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளமாட்டாள். ஆனால், இன்று அவள் எங்கள் பூனைக்குட்டிகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, ஒரு முக்கியமான சமயத்தில் விவாதப் பொருளாக எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

"அப்பா, அப்பா, பூனையெல்லாம் ஒரு கூடையில் போட்டு, மெட்ராஸுக்கு எடுத்துக் கொண்டு போலாம் அப்பா" என்றான் அண்ணா.

"பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போலாமே", என்றாள் அக்கா.

"ஆமா, அவாதான் ரொம்பப் பாத்துக் கிழிச்சுடப் போறா. பால்காரியிடம் கொடுத்துட்டுப் போலாம்", என்றாள் அம்மா.

"கோவாப்ரேடிவ் சூப்பர் மார்க்கெட்டில் விட்டாலென்ன? ராஜேந்திரன் அன்னிக்கே கேட்டார். கடையில் எலித் தொந்தரவு ரொம்ப இருக்குன்னு" என்றார் அப்பா.

"அது கூட நல்ல ஐடியாதான்; நாமளும் நாலு நாள் கழிச்சி வந்து அவன்கிட்டேயிருந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அம்மா, முடிவாகச் சொன்னாள்.

சாயந்தரம் சூப்பர் மார்க்கெட் போய் அப்பா ராஜேந்திரனிடம் பேசிவிட்டு வந்த்தார். அவர் இரண்டு பூனைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாராம். பியூன் பழனியப்பன் துணை கொண்டு, சின்னப் பங்கஜத்தையும், பெரிய பங்கஜத்தையும் கொண்டு போய் சூப்பர் மார்க்கட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தோம். எங்களுக்கு என்னாவோ போல இருந்தது. ஆனாலும், செல்லம், ஆழ்வார்ப்பேட்டை, சூரப்புலி இன்னமும் எங்களிடமே இருந்ததால் ரொம்பப் பெரியதாக ஃபீல் செய்யவில்லை.

மறுநாள் காலை பூனைகளின் சப்தம் கேட்டு எழுந்தோம். கீரைக்காரப் பட்டம்மாவிடம் அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்த்துப் பத்திரமா எடுத்துட்டுப் போ பட்டம்மா"

தனது காலிக் கூடையில், சும்மாட்டுத் துணியை வாகாக வைத்து, ஆழ்வார்ப்பேட்டையையும், சூரப் புலியையும் வைத்துத் தூக்கிச் சென்றாள். இப்போது செல்லம் மட்டும் தனியாக, மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுருந்தது. சுமார் எட்டு மணியிருக்கும். பால்காரி தனம் வந்து செல்லத்தையும் தூக்கிச் சென்றாள். எப்படித்தான் நாலு நாட்கள் இவர்களைப் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதே, வெள்ளோட்டிலிருந்து, பாட்டியுடன் ராஜன் சித்தப்பாவின் பையன்கள் கண்ணனும் கோபியும் வந்தார்கள். மாலையில் நீலகிரி எக்ஸ்பிரசில், எல்லொரும் மெட்ராஸ் கிளம்பினோம். சித்தப்பா கல்யாணம் படு ஜோராக நடை பெற்றாலும் என்னவோ போல, சுரத்தில்லாமல் இருந்தோம்.

பாட்டி கூடக் கேட்டாள், ஏண்டி, ராஜம், கொழந்தைங்க ரொம்ப டல்லா இருக்காளே. உடம்புக்கு ஒண்ணுமில்லேயே"

"நேத்திக்குத்தான் சொன்னேனே அம்மா. பூனைக்குட்டிகளப்பத்தி. அதுகள விட்டுட்டு வந்தது, இதுகளுக்குத் தாங்கலே. வேற ஒண்ணுமில்லே"

"வேற வேலை இல்லாயாக்கும்? நாலுக்கும் பாட்டு படிப்புண்ணு ஒண்ணுமில்லாம, பூனையோடயே வெளயாடிண்டுருக்கணுமாமா?". கேட்ட பாட்டியை நாங்கள் முறைத்துப் பார்த்தோம்.

சித்தப்பா கல்யாணம் முடிந்து, திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ப்ளூவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம். காலையில் கோயமுத்தூரிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டதால், வந்தவுடன் குளித்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பினோம். மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன், சூப்பர் மார்க்கெட்டுக்குப் படையெடுத்தோம். ராஜேந்திரன் இல்லை அங்கே. சூபர்வைசர்தான் இருந்தார். பூனை எங்கே என்றோம். 'அங்கேதான் எங்கியாவது இருக்கும்', என்றும் 'எனக்கு தெரியாது' என்றும் மாற்றி மாற்றிக் குழப்பிச் சொன்னார். அந்த மார்க்கெட்டுக்குள் எங்களால் ஒன்றும் தேட முடியவில்ல்லை. காய்கறி மார்க்கெட்டுக்குப் போய், பட்டம்மா இருக்கிறாளா என்று பார்த்தால், அவளும் ஊருக்குப் போய் விட்டாளாம்.

பால் கொடுக்க, தனம் ராத்திரி எட்டு மணி சுமாருக்கு வந்தாள். செல்லத்தைத்தான் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று ஆவலாக ஓடினோம். அவள்பாட்டுக்கு பழைய பாக்கி பால் ஊத்திவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள். "பூனை எங்கே" பூனை எங்கே", என்று மூணு பேரும் கத்தினோம். அதுவா, முந்தா நேத்திக்கு செட்டியாரோட லாரிக்கு அடிலே மாட்டிகிச்சி. அங்கேயே ஒடனே செத்து போச்சு" என்றபடி நடையைக் கட்டினாள்.

"என்னது அம்மா; இப்படி சொல்றா. எல்லோரும் பாத்துண்டேயிருக்கோம்"

"சரிடா; நம்ம கையிலே என்ன இருக்கு? நாம இப்ப என்ன பண்ண முடியும்? எல்லாரும் சாப்பிட வாங்கோ"

தனக்கு சாப்பாடு வேண்டாமென்று கூறி அண்ணா போய்ப் படுத்துக் கொண்டான். பத்மினியோ, தனக்கு வயித்தை வலிக்கிறது; மோர் மட்டும் போதுமென்று கூறிவிட்டாள் எனக்கும்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால், சாப்பிட மாட்டேனென்றால் அம்மா அடிப்பாள். அடியைவிட திட்டுதான் பயங்கரமாக இருக்கும்.

ராத்திரி இரண்டு மணியிருக்கும் அண்ணா என்னவோ அனத்திக் கொண்டேயிருந்தான். "செல்லம்,...செல்லம்" அப்டீன்னு சொன்னது போலத் தோன்றியது. அம்மா தொட்டுப் பார்த்தாள்.

"நரேஷுக்கு ஜொரம் அடிக்கறது பாருங்கோ. அந்தக் குரோசின் பாட்டில எடுத்துக் கொடுக்கிறேளா?", என்று அம்மா,அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது சன்னமாகக் காதில் விழுந்தது.

-------0-------

14 comments:

வல்லிசிம்ஹன் said...

சிமுலேஷன், அற்புதமான கதை.
நேரிலியே பார்ப்பது போல இருக்கு.

உறவுகள் தொடர்ந்து வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

Simulation said...

பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, வள்ளி அவர்களே,

-சிமுலேஷன்

Simulation said...

http://etamil.blogspot.com/2006/08/tk-to-contest-19-27-snap-reviews.html

பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, பாபா அவர்களே,

-சிமுலேஷன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உறவுகள் என்றால் மனித உறவுகள் மட்டும் அல்ல என்று நல்ல நடையில் சொல்லியிருக்கிறீர்கள். நல்லா இருந்தது

Jazeela said...

சூப்பர் கதை. கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்கு உண்டு.

Simulation said...

குமரன் மற்றும் ஜெஸிலா,

தங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

-சிமுலேஷன்

கதிர் said...

பொதுவா பூனைகள் என்றால் எனக்கும் பிடிக்கும். பின்னாளில் பூனையை கண்டாலே ஒதுங்கி போயிடுவேன் காரணம் ஒரு சின்ன விபத்து நடந்ததினால. அதை பற்றி ஒரு பதிவு கூட இட்டிருக்கிறேன்.
http://umakathir.blogspot.com/2006/06/blog-post_114969068905750148.html

நேரமிருந்தால் பார்க்கவும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி

Simulation said...

வாசிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் தம்பி.

- சிமுலேஷன்

Unknown said...

நாங்க வளர்த்தப் பூனைக்குட்டி ஞாபகத்துக்கு வந்துடுச்சுப் போங்க...

(அது பேரும் புஸ்ஸி தான் :)) )

போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Simulation said...

வாசிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் அருட்பெருங்கோ.

- சிமுலேஷன்

துளசி கோபால் said...

கறுப்புப் பூனை வண்டியிலே மாட்டி.........

மனம் கஷ்டமாப் போச்சு. அதுதான் முந்தி வந்து படிச்சுட்டுப் பின்னூட்டாம போயிட்டேன்(-:

துளசி கோபால் said...

கறுப்புப் பூனை வண்டியிலே மாட்டி.........

மனம் கஷ்டமாப் போச்சு. அதுதான் முந்தி வந்து படிச்சுட்டுப் பின்னூட்டாம போயிட்டேன்(-:

Maraboor J Chandrasekaran said...

சிமுலேஷன், சிசுவேஷன் சூப்பர்; ஆனால் கருப்புக்குட்டியை சாகடிச்சது அநியாயம்!

Simulation said...

மரபூர். கருப்புக் குட்டியை நான் எங்கே சாகடிச்சேன்? லாரியில் அல்லவா அடிபட்டான்.

யதார்த்தத்தை ஏற்க மனம் மறுக்கின்றது.

- சிமுலேஷன்