Thursday, December 21, 2006

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி?

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி? (How to identify Ragas?) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசுதா ஹாலில் நடைபெற்றது, நடத்தியவர்கள் டாக்டர்.சுந்தர் மற்றும் சூரியபிரகாஷ். டாக்டர்.சுந்தர் ஒர் எலும்புச் சிகிச்சை மருத்துவர். சூர்யப் ப்ரகாஷ் அவர்கள் ரிசர்வ் வங்கிகியிலே பணி புரிபவர். காதுக்கினிய இசைக் கச்சேரிகள் பல தந்து, வளர்ந்து வரும் ஒரு இசைக் கலைஞர். டாகடர்.சுந்தரும் தனது ஒய்வு நேரங்களில் இசைக் கச்சேரிகள் செய்வதனுடன், சூர்யப்ரகஷுடன் சேர்ந்து இசை குறித்தான விழிப்பு நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகின்றார். சரி. மேலே குறிப்பிட்ட இந்தப் பட்டறையிலிருந்த்து சில துளிகளைப் பார்ப்போம்.

இராகம் என்பது கேட்பவருக்கு இனிமையான ஒலியெழுப்பக் கூடிய ஸ்வரங்களின் வரிசையாகும். மேலும் இராகம் என்பது இந்திய இசையின் ஒரு தனித்தன்மையுமாகும். ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்த ராகங்கள் என்ற பெயர் உண்டு. இந்த மேளகர்த்தா இராகங்களிலிருந்து ஸ்வரங்களை சிறிது மாற்றக் கிடைக்கும் எண்ண்ற்ற இராகங்கள் ஜன்ய இராகங்கள் எனப்படும்.


"இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட இராகங்களை ஒரு கச்சேரியில் இனங் கண்டு கொள்ள வேண்டிய தேவை என்ன? பின்னர் எப்படி இனங் கண்டு கொள்ளுவது?" என்பது பற்றிய இந்தப் பட்டறை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. சென்னையெங்கும் பல்வேறு இசைக் கச்சேரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு விவாதப் பட்டறைக்கு, கிட்டத் தட்ட 200 பேர் கொள்ளக் கூடிய ஒரு அரங்கம், நிரம்பி வழிந்ததென்றால், இரசிகர்கள் வெறும் பாட்டை மட்டும் இரசிக்க விரும்புவதில்லை. மென்மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.

முதன் முதலில் இசை நிகழ்ச்சி செல்லும் ஒருவர், அங்கு பாடப்படும் பாடல்களைச் சும்மா கேட்டுவிட்டு வருகின்றார். இரண்டு மூன்று முறை ஒரே பாடலைக் கேட்ட அவருக்கு, அந்தப் பாடல் மனதில் பதிகின்றது. பின்னர் அந்தப் பாடலின் அழகை இரசிக்க ஆரம்பிக்கிறார். புரிந்த மொழியாக இருந்தால், பொருளழகை இரசிக்கின்றார். அடுத்ததாகப் பொருள் புரிந்தாலும், புரியாவிட்டாலும், இராகத்தின் அழகினை இரசிக்கவும் செய்கின்றார்.

அடுத்த கட்டமாக, "இது என்ன இராகம்?', என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆவல் ஏற்படுவது மனித இயல்பு. பின்னர் அந்த இரகத்தினை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கின்றார். அடுத்த முறை, வேறொரு நிகழ்ச்சியில், அதே இராகத்தில் வேறொரு பாடல் பாடப்படும்போது, "இது நமக்குத் தெரிந்த இந்த இராகம்தானே. சரியாகக் கண்டு பிடித்து விட்டோமே", என்று தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக, தனக்குத் தெரிந்த நண்பர்களுடன், இதனை அலசி, விவாதம் செய்யும் அளவுக்கு, தேறி விடுகின்றார். ஆக மொத்தம், இது ஒரு தேடுதல் பயணத்தில் ஒரு கட்டமாகும். இந்தக் கண்டு பிடித்தலை எப்படிச் செய்யலாமென்றால், வழிகள் வருமாறு:-

1.தெரிந்ததிலிருந்து தெரியாதற்கு: தெரிந்த பாடல்களின் இராகங்களை, மனதிலிருத்திப் , பின்னர் அதனைக் குறிப்பாக வைத்து, மற்ற பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிப்பது. இதனைப் பெரும்பாலோனோர் செய்கின்றனர். உதாரணமாக, "என்ன தவம் செய்தனை யசோதா" என்ற எளிமையான பாடல் "காப்பி" இராகத்தில் அமைந்தது என்று மனதில் பதியவைத்துக் கொண்டால், அடுத்த முறை, "ஜகதோதாரணா" என்று யாராவது ஆரம்பிக்க, உடனே, காப்பி மனதில் பளிச்சிட்டுப் "பேஷ், பேஷ், இந்தக் காப்பியும் ரொம்ப நன்னாயிருக்கே" என்று சொல்லத் தோன்றும்.

2. திரைப்படப் பாடல்கள் மூலம் ***: அடுத்தபடியாக, திரைப்படப் பாடல்களை ரெஃபரன்ஸாக எடுத்துக் கொள்வது. இதுவும் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு நுட்பம்தான். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நமது காதுகளில் விழுவது, திரைப்படப் பாடல்கள்தான். அவற்றின் தரத்தினைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதனை விட்டு, அந்தப் பாடல்களிலுள்ள, இராகங்களை மனதில் பிடிக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே", "பூமாலை வாங்கி வந்தான், பூக்கள் இல்லையே", பாடல்கள், "கானடா" இரகத்தில் அமைந்தவை", என்று நண்பர் சொல்வதை மனதில் இருத்திப் பதிய வைத்துக் கொண்டால், அடுத்த முறை, யாரேனும், "மாமாவசதா" என்று ஆரம்பிக்க, "ஆஹா, நமக்குத் தெரிந்த கானடாதானே இது" என்று ஒரு உற்சாகம் பிறக்கும்.

3. ஸ்வரஸ்தானங்கள் மற்றும் 'பிடி'களிலிருந்து: ஒவ்வொரு இராகங்களுக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்வரங்கள் உள்ளன. இதில் சில ஸ்வரங்கள், ஜீவஸ்வரஙள் எனப்படும் ஆதார ஸ்வரங்களாகும். அதே போல, ஒவ்வொரு புகழ் பெற்ற இராகங்களுக்கும், பாரம்பரியமாகப் பாடும் ஒரு 'பிடி' என்றுண்டு. ஒவ்வொரு இராகத்திற்கும் இந்த ஜீவஸ்வரங்கள் என்னென்னவென்றும், சரியான பிடி என்னவென்றும் தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த ஸ்வரங்களை, குறிப்பிட்ட பிடியில் பாடகர் உச்சரித்த மறு நிமிடமே, அல்லது இசைக் கலைஞர் தனது, இசைக் கருவியில் இசைத்த மறு நிமிடமே, இது இன்ன இராகம் என்றுணர முடியும். உதாரணமாக, "கரி கா ஸா நி ரி கா" என்ற ஸவரங்களில் 'நி" யை அசைத்து கமகத்துடன் பாடத் துவங்க, இது கல்யாணி என்று புரியும். கல்யாணியை இந்த ஸ்வரங்களை வைத்து மாற்றி மாற்றிப் பாடினாலும், ஆரம்பத்தில் "கரி கா ஸா நி ரி கா" என்று குறிப்பிட்டுப் பிடிப்பது அதற்கே உண்டான சிறப்பு (Charecteristics of Kalynani). ஒவ்வொரு இரகத்துக்குமுண்டான இந்த சிறப்புப் பிடிகளை மனதிற் கொள்வதும், இராகங்களைக் கண்டு பிடிக்கும் வழிகளில் ஒன்றாகும். இந்த நுட்பம் சிறிது கடினமேயென்றாலும், அனுபவத்தில் கொள்ள எளிதாகும்.

4. இராக முத்திரைகள் மூலம்: பெரும்பாலான வாக்கேயக்காரர்கள், தங்களது பாடல்களில், அவரவர் முத்திரைகள் வைத்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக, முத்துஸ்வாமி தீட்சிதர், தனது பாடல்களில், எதேனும் ஒரு இடத்திலாவது, "குருகுஹ" என்ற பதம் வருமாறு பார்த்துக் கொள்வார். பாபநாசம் சிவன் அவர்கள், "இராமதாச" என்ற முத்திரை வத்திருப்பார். இதே போல, பல பாடல்களில், இராகத்தின் பெயர்கூட முத்திரையாக வைக்கப்பட்டிடுருக்கும். பாடலைக் கூர்ந்து கவனித்தால், இந்த இராக முத்திரையினைக் கண்டு பிடித்து, இந்தப் பாடல் இன்ன இராகம் என்று கூறி விடலாம். உதாரணமாக, "மஹா கணபதிம்" என்ற பாடலில் வரும், "மஹா காவ்ய நாடகாதிப்ரியம்" என்ற தொடரில் வரும் "நாட" என்ற பதத்தினைக் கொண்டு, இது "நாட்டை" என்று கண்டு பிடிக்கலாம். இந்த நுட்பமும் அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் எல்லாப் பாடல்களிலும், இராக முத்திரை நிச்சயம் இருக்குமென்று சொல்லிவ்ட்ட முடியாது.

5. அனுபவபூர்வமாக: எந்த ஒரு கலைக்கும், குறுக்கு வழி கிடையாது. மேற்கண்ட வழிகள் பல இருந்தாலும், அனுபவபூர்வமாக இராகங்களைக் கண்டுணர்தலுக்கு இணையாக எதுவும் கிடையாது. கேட்கக் கேட்கக் கேள்வி ஞானம் பிறக்கும். கேள்வி ஞானம் பிறக்க, எந்தவொரு முயற்சியுமின்றி, இராகங்களை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

இந்த உரைகளுக்குப் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.சுந்தரும், சூர்யப்ரகாஷும் மாறி மாறி விடையளித்தனர். "ஸ்வரங்களின் பெர்முடேஷன் காம்பினேஷங்களின் அடிப்படையிலே பிறப்பது எண்ணற்ற இராகம் என்றால், எல்லா இராகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவா, அல்லது கண்டு பிடிக்கப்படாத்த இராகங்களும் உள்ளனவா? வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இராகங்களை உருவாக்குவது (Invention) என்பது முடியுமா? அல்லது கண்டு பிடித்தலே (Discovery)சாத்தியமா?" என்று கேள்வி கேட்டென். ஸ்வர்ங்களைக் கலக்கி ஒரு இராகத்தினை உருவாக்கி அதற்கு நமது பெயரை வைத்து அழைத்தல் சாத்தியமே என்றும், ஆனால், அந்த இராகம் நிலைத்து இருப்பது என்பது, பாடுபவர் மற்றும் கேட்பவரின் மனதைக் கவர்ந்தால் மட்டுமே என்றும் பதிலளிக்கப்பட்டது.

"அடுத்த்படியாக, இராகங்களுக்கு மருத்துவ குணம் உண்டா?" என்ற கேள்விக்கு, சூர்யப் ப்ரகாஷ், உண்டு என்ற தொனியில் பதிலளித்தார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து. "தனக்கு ஒரு கச்சேரியில், கரகரப்ரியா இராகம் கேட்டவுடன், ஸ்பாண்டிலிடிஸ் என்ற நோய் குண்மாகிவிட்டது," என்று டுமீல் விட்டார். ஆனால், டாக்டர்.சுந்தர் அவர்கள், இந்தகைய முடிவுகள் எந்த முறையில் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியது" என்றார். சூரியப்ரகாஷ், "பாடுபவர் தான் பாடும் பாடலினால் ஒருவருக்கு நோயினைக் குண்மாக்க முடுகின்றதோ இல்லையோ, இரத்தக் கொதிப்பு எளிதில் வர வைக்க முடியும்", என்று கூற, கூட்டத்தினர் அந்த நகைச்சுவையினை இரசித்தனர்.

*** திரையிசையின் மூலம் இராகங்களைக் கண்டுபிடிப்பது குறித்த எனது முந்தைய பதிவுகள்:

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

- சிமுலேஷன்

6 comments:

இலவசக்கொத்தனார் said...

மிக நல்ல பதிவு சிமுலேஷன். அந்த பட்டறையின் சாரம்சத்தைத் தந்துவிட்டீர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளின் ஒலிநாடா கிடைக்குமா? தாங்கள் ரெகார்ட் செய்திருந்தால் அதனை வலையேற்ற முடியுமா?

Simulation said...

இலவசம். நன்றி.

நான் ஒலிப்பதிவு ஏது செய்யவில்லை. வேறு யாரும் செய்தார்களாவெனத் தெரியவில்லை.

- சிமுலேஷன்

Anonymous said...

//பாடுபவர் தான் பாடும் பாடலினால் ஒருவருக்கு நோயினைக் குண்மாக்க முடுகின்றதோ இல்லையோ, இரத்தக் கொதிப்பு எளிதில் வர வைக்க முடியும்", என்று கூற, கூட்டத்தினர் அந்த நகைச்சுவையினை இரசித்தனர்.//
சிமுலேசன்!
இதை நானும் மிக ரசித்தேன். பயனான பதிவு!!!
எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது;ஆனால் மணிக் கணக்கில் கேட்டுரசிப்பேன்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

நல்ல பதிவு சிமுலேஷன்....நன்றி....

Anonymous said...

பதிவுக்கு மிக்க நன்றி சிமுலேஷன் சார்.

மொத்தத்தில் ராகங்களை கண்டுபிடிப்பது அனுபவத்தினால் மட்டுமே என தெரிகிறது!

அவ்வாறு ராகங்களை திரைப்படப் பாடல்கள் வழியாக உங்கள் பதிவுகளில் கற்றுத் தருகிறீர், தொடரட்டும் அந்த நற்பணி.

Valli G said...

மிக ந்ல்ல பதிவு. நிகழ்ச்சிக்கு செல்லாதவர்கலுக்கு ஒரு வரப்ரசாதம்.நன்றி.