Tuesday, November 24, 2009

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும்.

சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது அவருக்கு இரண்டாவதா ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தோம். குழந்தையைக் காண எங்களுக்கு ரொம்ப ஆர்வம். ஜெயசீலனிடம், "தங்கச்சி பேர் என்ன?", என்று கேட்க, "வெக்கிலா" என்று சொன்னான். வித்தியாசமான பேராக இருக்கே என்று நினைத்த போது, என் அக்கா சொன்னாள். அவங்க எல்லாம் கிரிஸ்டியன்ஸ். இந்த மாதிரியெல்லாம் பேர் வெப்பாங்க என்றாள். நாங்களும் புரிந்து கொண்டு, அந்தப் பச்சைக் குழந்தை அருகே போய், "வெக்கிலா, வெக்கிலா, இங்க பாரு. வெக்கிலா சிரி" என்றெல்லாம் கொஞ்ச ஆரம்பித்தோம்.

அப்போது டாக்டரின் மனைவி வந்தார். அவர் சொன்னார், "அவளுக்கு இன்னமும் பேர் வெக்கலை. அடுத்த மாசம்தான் பேர் வெப்போம்." என்று. அப்போதுதான் உறைத்தது, அந்தப் பையன் தங்கச்சிக்குப் பேர் வெக்கிலை என்று சொல்லியிருக்கான் என்று.

- சிமுலேஷன்

2 comments:

Anonymous said...

நல்ல காமெடி :)

Simulation said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மணி அவர்களே!