Wednesday, December 22, 2010

சபாஷ் சரியான போட்டி!

யதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா!

"வஞ்சிகோட்டை வாலிபன்" படத்தில் இடம் பெற்ற "கண்ணும் கண்ணும் கலந்து" என்ற நடனப் போட்டி மிகவும் புகழ் பெற்றது. பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா அவர்களின் நடனப் போட்டி மிகவும் சுவாரசியமானது.போட்டியின் இடையே வரும் பி.எஸ்.வீரப்பவின் "சபாஷ்! சரியான போட்டி!" என்ற வசனம் காலத்தால் அழிக்க முடியாதது. பத்மினி, வைஜயந்தி மாலா இருவருமே புகழ் பெற்ற கலைஞர்கள் என்பதானால், யாருமே தோல்வி அடையாதபடியாக காட்சி அமைக்கப் பெற்றிருக்கும்.மீண்டும் பத்மினி ஒரு போட்டிப் பாடலில். இந்த முறை எம்.ஜி.ஆருடன் "மன்னாதி மன்னன்" படத்திற்காக. எம்.ஜி.ஆரின் நடனம் நல்லதொரு முயற்சி! இறுதியில் சிங்கம் படம் வேறு வரைந்து ஜெயித்தும் விடுகின்றார்."திருவிளையாடல்" படத்தில் இடம் பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "ஒரு நாள் போதுமா?" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல்லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய "கௌரி மனோகரி" ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு "ஒரு நாள் போதுமா?" என்ற ராகமாலிகா பாடியவர் பயந்து ஓடிவிட்டார் என்பதை சங்கீதம் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

அடுத்தாக "அகத்தியர்" படத்தில் இடம் பெரும் "வென்றிடுவேன்; எந்த நாட்டையும் வென்றிடுவேன்" என்ற பாடல். அகத்தியருக்கும், ராவணனுக்கும் நடக்கும் இந்தப் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள். நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோஹனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கல்யாணி, சரஸ்வதி போன்ற எக்கச்சக்க ராகங்கள் இந்தப் பாடலில் இடம் பெரும். ஆனால் 'ஒருநாள் போதுமா?' பாடல் போல இயல்பாக இல்லாமல் வலிந்து புகுத்தப்பட்டது போல இருக்கும்."பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு நிகரானவன்" என்ற சுத்தமான சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைந்திருக்கும். இருவதுமே ஓவர் ஆக்டிங் செய்தாலும், எல்லோராலும் ரசிக்கபடும்படியாக இருக்கும். குறிப்பாக, ஸ்வரம் பாடும் க்ளைமாக்ஸ் காட்சி."தாய் மூகம்பிகை" என்ற படத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி மற்றும் ராஜேஷ்வரி குரலில் "இசையரசி என்னாளும்" என்ற பாடல் 'சூர்யா' எனப்படும் 'சல்லாபம்' என்ற ராகப் பாடல். தாய் மூகாமிபிகையாக கேயார் விஜயா நடிக்க மனோரமா அவருடன் போட்டி போடுவதாக் அமைந்த பாடல். மூகாம்பிகையின் பக்தையான வாய் பேச முடியாத சரிதா, க்ளளைமேக்ஸில் எண்ட்ரீ கொடுப்பது நல்ல திருப்பம்."சிந்து பைரவி" படத்தில் பாடகரான சிவக்குமார் "மரி மரி நின்னே" என்ற தியாகராஜரின் பாடலை சாரமதி ராகத்தில் பாட (ஒரிஜினல் ராகம் தோடி), அதற்குப் பதிலடியாக, சுஹாசினி, அதே ராகத்தில் "பாடறியேன்.. படிப்பறியேன்" என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி, இறுதியில், மரி மரி நின்னேவையும் கலந்து பாடி கைதட்டலை அள்ளிச் செல்வார். இந்தப் பாடலில் சுஹாசினியின் முகபாவங்கள் குறிப்பிடும்படி இருக்கும்.

கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ அவர்கள் தமிழ்த் திரையில் பாடிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தது "படையப்பா" படத்தில் இடம் பெற்ற "மின்சாரப்பூவே" என்ற பாடல். இது வெறும் பாட்டுப் போட்டியாக இல்லாமல், ரஜினி பாட, ரம்யா கிருஷ்ணன் ஆடும்படியாக அமைந்திருக்கும். ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்துள்ளது இது.இவை தவிர, "இது நம்ம ஆளு" படத்தில் ஷோபனா, பாக்யராஜ் இருவரும் பாடும் "சங்கீதம் பாட ஞானம் உள்ளவர் வேண்டும்" என்ற பாடலில் பாடத் தெரியாத பாக்யராஜ் நன்றாகவே சமாளிப்பார். சுட்டி கிடக்கவில்லை.

மேற்கண்ட பாடல்களைத் தவிர, வேறேதும் பாடல்கள் விடுபட்டுப் போயிருந்தால், சுட்டியுடன் குறிப்பிடுங்கள். அவற்றையும் இணைக்கின்றேன்.

- சிமுலேஷன்

4 comments:

அம்பிகா said...

`பாட்டும் பரதமும்’ படத்தில் வரும் `சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வார்’ பாட்டும் போட்டி நடன பாடல் தான். டி.எம்.எஸ், பி.சுசீலா இருவரும் பாடியது. சிவாஜி, ஜெயலலிதா இருவரும் ஆடுவார்கள்.

bala said...

Manythanks. it was a fantastic colletion sent on the internet dealing with the interface between silver screen and Carnatic music that made 1950-1970 a golden priod of Tamil Cinema .

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

அருமையான தொகுப்பு முயற்சி. வாழ்த்துக்கள்.

எனக்கு உடனே நினைவுக்கு வரும் பாடல்கள்...

தங்கமகன் படத்தில் வரும் 'பூமாலை' பாடல். நடனமே தெரியாத ரஜினிகாந்துக்கும் பூர்ணிமா ஜெயராமனுக்கும் போட்டி. படு தமாஷாக இருக்கும்.
http://www.youtube.com/watch?v=KzwoBGQ_KQw

பஞ்சதந்திரம் படத்தில் வரும் 'வந்தேன் வந்தேன்' பாடல். சிம்ரனுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் போட்டி.
http://www.youtube.com/watch?v=ju3a_U7n0mA

Venkatesh1984quiz.com said...

Superstar's Ragavendra....Aadum kalaiye thevan thandhathu!!!!