Tuesday, September 13, 2011

கொலு வைப்பது எப்படி? - 04

கொலு வைத்தல்

இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட்டட் ஆங்கிளைக் கொண்டு எளிதில் படிகள் அமைக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப 5,7,9 என்று ஒற்றை படையில் படிகள் அமைக் வேண்டும். கொலுவானது அமாவாசை அன்று வைப்பதுதான் சம்பிரதாயம். ஆனால் அமாவசையன்று கலசம் வைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு, மற்ற பொம்மைகளை ஓரிரு நாட்கள் முன்பாகவே வைக்கலாம்.



படிகள் அமைத்த பின்னர், அதனை மறைக்கும் வண்ணம், இரண்டு பக்கங்களிலும் வேஷ்டியோ அல்லது அங்கவஸ்திரங்களோ கொண்டு மறைக்க வேண்டும். ஜம்ப் க்ளிப் துணை கொண்டு, துணிகள் கொச கொசவென்று தெரியாதபடி பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள டைனிங் டேபிளைப் போல நல்ல முறையில் டக் செய்ய வேண்டும். பிறகு படிகளின் மீது ஒரு நல்ல வேஷ்டியினையோ அல்லது புடவையினையோ விரிக்க வேண்டும்.


படிகளின் இரண்டு பக்கங்களிலும் ஜரிகை பார்டர் வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விரிக்கும் துணி பருத்தியினால் ஆனது நல்லது. அப்படியில்லாமல் நைலக்ஸ் அல்லது பாலியெஸ்டர் போன்றவற்றால் இருந்தால் வழுக்கி விழுந்து விடும். ஜரிகை பார்டர்ருக்கு விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் அல்லது கடைகளில் கிடைக்கும் பார்டர் ஜரிகையினைக் கூடப் பயன்படுத்தலாம்.



இப்போது கொலுப்படி அமைத்து அதன் மேல் துணியையும் போட்டு பொம்மைகள் வைக்கத் தயாராக உள்ளது  கொலுப்படியில் பொம்மைகள் வைப்பதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும். அது என்னவென்று என்று அறிந்து கொள்வோம். முதல் படியில் கலசம் வைக்க வேண்டும். ஒரு வெள்ளி அல்லது தாமிர சொம்பில் அரிசி, வெற்றிலை, பாக்கு, நாணயம் ஆகியவற்றை இட்டு மாவிலைக் கொத்து, தேங்காய் கொண்டு மூட வேண்டும். அம்மன் முகம் இருப்பவர்கள் சொம்பில் அதனையும் வைத்து அலங்காரம் செய்யலாம். 

அடுத்தபடியாக மரப்பாச்சி பொம்மைகளை வைக்கலாம். மரப்பாச்சி பொம்மைகள என்பவை திருப்பதி போன்ற தலங்களில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆண், பெண் ஜோடி பொம்மைகள். இந்த மரப்பாச்சி பொம்மைகளுக்கென்று தனியாக ஆடை. அலங்காரங்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி அணிவிக்கலாம். அல்லது நாமே வீட்டில் செய்து மாட்டலாம். இதே படியில் முப்பெருந்தேவியர்களான லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி பொம்மைகளை வைக்கலாம். நவராத்திரியே அவர்கள் பண்டிகைதானே!. பிள்ளையார் பொம்மைக்கும் முதல் படியில் இடமுண்டு.

அடுத்த படியில் மற்றைய கடவுளர்களான சிவன், விஷ்ணு, முருகன் போன்றவர்களின் சிலைகளை வைக்கலாம். அடுத்ததாக அடியார்களான, நாயன்மார்கள், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள், மீரா, இராமலிங்க அடிகளார் போன்ற ஆன்றோர்களின் பொம்மைகளையும், அதற்கடுத்தாற்போல போலீஸ்காரர், செட்டியார் போன்ற மனித பொம்மைகளையும் வைக்கலாம்.
 அதற்கும் கீழ் படியில் விலங்குகள், பறப்பன மற்றும் ஊர்வன பொம்மைகளை வைக்க வேண்டும். பிறகு கடைசிப் படியில் சங்கு, சிப்பி, மாக்கல் பொம்மைகள், பழுக்காச் சொப்பு பொன்ற பொருட்களை வைக்கலாம்.



இப்படி நாம் எந்தப் பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்க வேண்டுமென்று பார்த்ததில், ஒரு ஒழுங்கினைக் கண்டு பிடித்திருக்கலாம். அதாவது கடைமட்டப் படியில்  அஃறிணை பொருட்களையும், அதற்கு அடுத்ததில் ஓரறிவு, ஈரறிவு கொண்ட  உயிரினங்களையும், அதற்கு அடுத்ததாக ஆறறிவு பெற்ற மாந்தர்களையும், பின்னர் அடியார்களையும், பிறகு தேவர்கள் முதலானோரையும், முதல் படிகளில் கடவுளர் பொம்மைகளையும் பரிணாம வளர்ச்சிக்கேற்ப வைந்திருக்கும் ஒழுங்கு புலப்பட்டிருக்கும்.


பொம்மகைளைப் படியில் வைக்கும் போது சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார், போன்ற ஜோடிகளைப் பிரித்து வைக்காமல் சேர்த்தே வைக்க வேண்டும். மற்றபடி இரண்டு புறாக்கள், இரண்டு பூனைகள, இரண்டு நாய்கள் என்றபடி பொம்மைகள் இருந்தால் ஒரே படியின் இந்த ஓரத்தில் ஒன்றும், அந்த ஓரத்தில் ஒன்றுமாக சிம்மெட்டிரிக்கலாக அமர்த்தலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்

1 comments:

ADHI VENKAT said...

வரப்போகும் நவராத்திரி கொலுவுக்கு ஏற்ற தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.